முகிலே!! உன் முகவரி என்ன-35

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 13/Aug/2026 ◷ 11 min read

“இப்போவாவது நான் சொன்னது உண்மை என்று நம்புறீங்களா…? இவர் மேல என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க…?” என்று தென்றல் துடிக்கும் இதழ்களைக் கடித்துக் கொண்டு…

தன்னிடமிருந்து சான்றுகளைக் காட்டி விஜயேந்திரன் தான் குற்றவாளி எனத் தென்றல் கூறியதும்…

அனைவருமே ஏன் அவனைப் பெற்ற சகுந்தலாவிற்குமே விஜய் என் மேல் சிறு தடம் பதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை…

ஆனால் முகிலைத் தவிர ஆம்… அவளுக்கு எள்ளளவும் தன் கணவன் விஜயேந்திரன் மேல் சந்தேகம் என்பதே இல்லை… ஆனால் அவள் குழப்பம் எல்லாம் தன் அக்கா ஏன் இப்படி ஒரு பொய்யைக் கூற வேண்டும் என்பதைத்தான் அவள் ஆரம்பத்தில் இருந்தே சிந்தித்துக் கொண்டிருக்க… தென்றல் அந்தச் சான்றுகளைக் காட்டி கூறிய மறு நிமிடமே…

“பொய்… இஇஇ எல்லாம் பொய்… அக்கா யாரைப் பார்த்து என்ன சொல்ற நீ…? உனக்கு என்னக்கா ஆச்சு? இவ்ளோ பெரிய அபாண்டத்தை தூக்கி அவர் மேல சுமத்துற…?” எனத் தன் தமக்கையிடம் நியாயம் கேட்ட முகிலினி, அன்று சிலம்பைத் தூக்கி நியாயம் கேட்ட கோவலனின் கண்ணகியின் கோபத்திற்குச் சமமாகத் தெரிந்தால்…

“என்னை நம்ப மாட்டியா முகிலா… சரி என் மேல நம்பிக்கை இல்லாம போனாலும் பரவால்ல, ஆனா அந்த ரிப்போர்ட்…?? அந்த டிஎன்ஏ ரிப்போர்ட் கூட பொய் சொல்லுமா முகிலா…??” என முயன்று வரவழைத்த குரலில் கேட்டாள் தென்றல்…

“அக்கா என்ன பேசுற நீ… என் புருஷனைப் பற்றி நீ சொல்லியோ இல்ல அந்த காகிதம் சொல்லியோ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை…?? எனக்கு அவர் மேல முழு நம்பிக்கை இருக்கு. ஏன், இங்க இருக்கிற யார் சொன்னாலும் சரி, அந்த கடவுளே இறங்கி வந்து சொன்னாலும் நான் அவங்கள நம்ப மாட்டேன்… என் புருஷனைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்..!!” என அடித்து கூறியவளின் உறுதியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனது விஜயேந்திரனின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தென்றலுக்கும்…

“இதுக்கு மேல இங்க பேச வேண்டியது நீயும் நானும் இல்ல, முகிலினி, இந்த ரிப்போர்ட்டும் பஞ்சாயத்தார்தான்…!!” என்றவள், அதற்கு மேல் பேச முடியாது என சிலையாக நின்று கொண்டாள்…

“இங்க பாருங்க ரத்தினவேல் பூபதி ஐயா… இவ்வளவு நேரம் இங்க நடந்ததை நீங்களும் பார்த்தீங்க… குற்றம் யார் மேலன்னு தெள்ளத் தெளிவா இந்த ரிப்போர்ட் மூலமா வெளிச்சத்துக்கு வந்துருச்சு… நம்மள நம்பி நியாயம் கேட்டு இருந்த பொண்ணு வந்துருக்கு… நியாயம் அது பக்கம் இருக்கும் போது தண்டனையை விஜயேந்திரன் தம்பி தான் அனுபவிச்சு ஆகணும்…!!” என பெரியவர்கள் விஜயேந்திரன் தான் குற்றவாளி என முடிவாகப் பேசுவதைக் கேட்ட முகில் துடித்தாள்…

“இல்லை இல்லை நான் ஒத்துக்கிறேன்… அக்கா ப்ளீஸ் அக்கா, உனக்கு என் மேல எதுவும் கோபம் இருந்தா என்னை அடிச்சு கொன்னுடு, உனக்கு அதுக்கு உரிமை இருக்கு; ஆனால் வீணா அவர் மேல பழி சுமத்தாத அக்கா ப்ளீஸ், உன்னை கெஞ்சி கேக்குறேன், அவர் மேல தப்பு இல்லைனு சொல்லு, அவர் குற்றவாளி இல்லைனு சொல்லு…!!” என தென்றலின் தோள்களைப் பிடித்து கெஞ்சியவள் இறுதியாக அவள் காலிலே விழவும்… துடித்துப் போனாள் தென்றல்… பயத்தின் பாரம் இதயத்தை அழுத்தவும் மூச்சு எடுக்கவே சிரமப்பட்டவள் முகிலினியை விலக்க முடியாமல் தவித்தாள்…

தாவி வந்த விஜயேந்திரன் முகிலினியை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டவன்… “நீ எதுக்குடி தேவை இல்லாம எனக்காக போய் அவங்க கால்ல விழுறே… அவங்களுக்கு இதயம் இறந்து போய் ரொம்ப நாளாச்சு… சுயநலமா யோசிக்கிறவங்க கிட்ட போய் நீ எதுக்காக கெஞ்சுற…!!” என விஜயேந்திரன் தென்றலைப் பார்த்து கூறுவதைக் கேட்ட தென்றல், அடிபட்ட பார்வையைத் தவிர பதில் தர வேறு மொழி தெரியாமல் தவித்தாள்…

இந்தக் கலவரத்தின் நடுவே வெளியே சென்றிருந்த வீரேந்திரனும் மகேந்திரனும் வந்து சேர்ந்திட, விஜயேந்திரன் அவர்களைப் பார்த்து அர்த்தம் பொதிந்த பார்வையைச் செலுத்திட… அவர்கள் வேலை முடிந்ததற்கான சமிக்ஞை செய்திடவும் உடல் விரைப்புற

முகிலினிடம் திரும்பி, “நீ என்னை நம்புறியா…?” என அவள் கண்களை ஆழமாகப் பார்த்துக் கொண்டே கேட்க…

“இந்த உலகத்துல மத்தவங்களை விடவும் ஏன் என்னை விடவும் உங்களை மட்டும் தான் நம்புறேன்…!!” என்றவள் நெற்றியில் லேசாக ஒரு முத்தம் வைத்து நகர்ந்தவன், “இங்க என்ன நடந்தாலும் நல்லா கேளு, இங்க என்ன நடந்தாலும் நீ வாயாவே திறக்க கூடாது…!!” என அவளிடம் கூறியவன்…

முன்னே வந்து, “ஐயா, நீங்க சொல்ற மாதிரியே தப்புக்கு தண்டனையை நான் ஏத்துக்குறேன்… அதேசமயம் இந்த பொண்ணுக்கும் நான் உரிய உரிமையை கொடுக்க நினைக்கிறேன், அதுனால இந்த பெண் கழுத்துல இப்போவே நான் தாலி கட்டுறேன்…!” என்றவன் வீரை பார்க்க, அவன் கோவிலின் அரச மரத்தில் வேண்டுதலுக்காக கட்டி வைத்திருந்த மஞ்சள் கிழங்கு தாலியை கொண்டு வந்து விஜயேந்திரனின் கையில் கொடுக்க…

அதை தன் கரங்களில் வாங்கியவன், யாரும் மறுத்து பேச இடம் கொடுக்காமல் தென்றலிடம் விரைந்தான்…

முகிலினியின் இதயம் வெடித்து சிதறியது, கண்கள் வற்றாத நீரை கொட்டியது, உடலும் வலுவிழுக்க தள்ளாடிய அவளை ரஞ்சனாவும் குறிஞ்சியும் தாங்கி பிடித்தனர்… “என்னடி நடக்குது இங்க? நீ போய் அவரை தடுத்து நிறுத்து…?” என அவள் மறுக்கவும், அதே சமயம் அவள் சுக்குநூறாக உடைவதை பார்த்து சகிக்காமல் வெளியே அழைத்து செல்ல பார்க்க, அவள் மறுத்து விஜயனுக்கு கொடுத்த வாக்கை நினைத்து அவள் உயிரோடு எரிய அங்கையே நின்றாள்…

தென்றல் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிய, தலையை மறுப்புடன் அசைத்து பின்னோக்கி நகர்ந்தவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, அவள் கழுத்தருகே தாலியைக் கட்டுவது போல் விஜயேந்திரன் கொண்டு போக…

அவன் கைகளை வேகமாகத் தீச்சுட்டார் போல் தட்டிவிட்டவள்…

“இல்லை… இவர் இல்லை… என்னை ஏமாற்றியது இவர் இல்லை… என்னை மன்னித்துவிடுங்கள்… என்னால் இதற்கு மேல் முடியாது… நான் பொய் சொல்லிவிட்டேன்…!!” எனத் தென்றல் தரையில் மடங்கி அமர்ந்து அழ, அனைவரும் அவளை அதிர்ச்சியும் எரிச்சலும் கலந்து பார்க்க…

“ஏன்மா, என்னமா நீ விளையாடுகிறாயா… நீ தானமாகச் சொன்ன விஜேந்திரன் தான் உன்னை ஏமாற்றினான் என்று, அப்புறம் என்னமா இப்போ இப்படி மாற்றிச் சொல்கிறாய்…?” எனச் சிறு கண்டிப்புடன் பெரியவர்கள் கேட்க…

“நான் பொய் சொன்னேன்ங்க… என் குழந்தையைக் கடத்தி வைத்துவிட்டு அப்படிப் பொய் சொல்ல வைத்துவிட்டார்கள், என்னை மன்னித்துவிடுங்கள்… என்னால் எல்லாருக்கும் அவமானம், தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க… என் குழந்தையை காப்பாற்றி கொடுங்க…!!” எனத் தென்றல் கதறி அழ, அப்படியே மயங்கி விழ, ஓடிச் சென்று தாங்கினான் முகில்…

சுயநினைவு இன்றி மயங்கி கிடந்த சமயத்திலும் குழந்தை… குள… ந்த என பிதற்றிக் கொண்டு இருந்தவளை ஊசி போட்டு படுக்க வைத்தனர்…

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தென்றலின் நினைவில் குழந்தைக்கு பேராபத்து வருவது போல் கனவு வர… “வேணாம் குழந்தை, காப்பாத்துங்க…” என வீரிட்டபடி எழுந்து அமர்ந்தாள்…

கண் விழித்தவளுக்கு எல்லாம் மங்களாகத் தெரிய, கண்ணைத் தட்டித் தட்டி விழித்தவளுக்கு எல்லாம் தெளிவாய் சுற்றி நின்ற பூபதி குடும்பம் தெரிந்தாலும், குழந்தையை காணாமல் பதறியவள்… “என் குழந்தை… குழந்தை ஆபத்துல இருக்கான், அவனை காப்பாற்றனும்… அவங்க கொன்னுடுவாங்க… ஐயோ என் குழந்தை… கண்ணா….!!!” என கதறியபடி எழுந்தவள், பலம் அவள் கையை ஊன்றுவதற்கு கூட இல்லை… எழுந்த வேகத்திலே சோர்ந்து விழுந்தவள், வாய் மட்டும் பிதற்றுவதை நிறுத்தவில்லை… தென்றலின் நிலை கண்டு இரக்கம் தான் வந்தது…

“அக்கா என்னக்கா ஆச்சு? குழந்தை எங்க? யார் வச்சி இருக்கா? நீ ஏன் அப்படிப் பொய் சொன்ன… அக்கா பதில் சொல்லுக்கா அக்காஆஆஆ…?” என தன் பாட்டிற்கு உளறி கொண்டிருந்தவளின் தோளை உலுக்கி கேட்க…

“ஹான்…?” என விழித்தவள்… முகிலினி எனத் தங்கை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினாள்… தென்றலின் அழுகை அடங்கும் வரை அவள் முதுகை வருடினாள் முகிலினி… அதில் சற்று அழுகை குறைந்தாலும் விசும்பல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது…

“அப்போ டீச்சர் ட்ரெயினிங்கிற்காக வந்த புதுசு… நாம சின்ன வயசுல இருந்தே வந்து போன ஊராக இருந்தாலும், வெளியே அதிகமா பழகாததால இந்த ஊர் பற்றியும் பூபதி குடும்பம் பற்றியும் எனக்கு அதிகமா தெரியாம போச்சு…!!”

ஒரு நாள், பிள்ளைகளோடு பேசியபடி அந்த மண் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் தென்றல்… முதல் நாள் மழையினால் சாலையில் ஆங்காங்கே குட்டைகள் உருவாகி இருந்தன…

அந்த மண்சாலைக்கு சற்றும் பொருந்தாத நவநாகரிக கார் ஒன்று அவர்களை வேகமாக கடந்து செல்ல, குட்டையில் இருந்த சேற்றையும் அவர்கள் மேல் வாரி இறைத்து விட்டு நிற்காமல் சென்றது…

“ஏஏ…” எனத் தென்றலும் பிள்ளைகளும் முற்றிலுமாக சேற்றில் குளித்தனர்…

மறுநாளும் இதே போல் நடைபெறவே, கீழே கிடந்த கல்லை எடுத்து காரின் கண்ணாடியை பதம் பார்த்தாள்…

வண்டி சடசடவென பிரேக் போட்டு குலுங்கி நின்றது. அதிலிருந்து நவநாகரிகமாக ஒரு ஆண்மகன் விரைப்புடன் இறங்கி வர, தென்றலுக்கு உள்ளூர திகில் எடுத்தாலும் அதை மறைத்துக் கொண்டு…

“ஹலோ மிஸ்டர், இது என்ன உங்க அப்பா வீட்டு ரோடா…? பசங்க எல்லாம் வர்றது உங்க கண்ணுக்குத் தெரியல… படிக்கிற பிள்ளைங்க மேல இப்படி சேற்றை வாரி இறைச்சுட்டுப் போறீங்களே, உங்களுக்கெல்லாம் என்ன தலையில கொம்பா முளைச்சிருக்கு…??” எனத் தென்றல் அவனைப் பிளிறு பிளிறு எனப் பிடிக்க…

அந்த ராட்சத ஆண்மகனோ “ஹாஹா…!!” என வாய் விட்டுச் சிரிக்க, தென்றலுக்குத் தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது… “இவன் என்ன லூசா…?” என்பது போல் பார்க்க…

“சாரி சாரி, நீ சொன்ன மாதிரி கொம்பு வச்சு என்னை மெசேஜ் பண்ணிப் பார்த்தேன், சிரிப்பு வந்துருச்சு. நீ திட்றதக் கண்டினியூ பண்ணு…??” எனக் கூறிவிட்டு, அவள் திட்டுவதைக் கேட்பதற்காகவே நிற்பவன் போல் பாவனை பண்ண…

“ச்சே, இர் ரெஸ்பான்சிபல் இடியட்ஸ்…!!” எனத் திட்டி விட்டு அவனைக் கடந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டால்…

“ஹாஹா, ஸச் எ பிரேவ் பியூட்டி…!” என வாய்க்குள் சொல்லிக்கொண்டவன்…

அதற்கு மறுநாளும் தொடர்ந்து தென்றல் வரும் வழியில் அவளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்… முதலில் தென்றல் அவனை ஒரு சாதாரண ரோக் என நினைத்து கடந்து விடுவாள்…

அன்று அவள் பணிபுரியும் பள்ளியின் ஆண்டு விழாவில் பிள்ளைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைத் தென்றலிடம் ஒப்படைக்கப் பட…

பேட்ச் பேட்சாகப் பிரித்து பிள்ளைகளைத் தயார் செய்து மேடைக்கு அனுப்பி வைத்த தென்றல்… இறுதியாகக் கலந்து கொள்ளவிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகளைத் தயார் செய்வதற்காக, கதவை உள்பக்கம் தாழ் போட யாருமில்லை என்று நினைத்து, யாரோ வெளியில் தாழ்பட்டுச் சென்றுவிட…

பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்து முடித்துவிட்டுத் தென்றல் கதவைத் திறக்க முயன்றாள், ஆனால் அது திறக்காமல் இறுக மூடி இருந்தது…

“யாராவது இருக்கீங்களா கதவைத் திறங்க..?” என கத்தி கத்தி ஓய்ந்தவள், கதவை எவ்வளவு இடித்தும் திறக்க முடியாமல் போக ஜன்னல் வழியாகத் தெரிந்த நபர்களை உதவிக்கு அழைக்க…

அங்கிருந்த குடிபோதை ஆசாமிகளோ அவள் கத்துவதை காதில் வாங்காமல், பிடித்திருந்த பீடித்துண்டை அணைக்காமல் மேற்கூரையில் வீசிவிட்டுச் சென்றனர். அங்கு விழாவிற்காக கலர்கலராகக் கட்டப்பட்டிருந்த மெல்லிய துணியில் தீப்பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பு ஜுவாலையாக மாறி, தென்றல் இருந்த மேற்கூரை நெருப்பால் தீப்பற்றி எரிந்து ஓடுகள் ஒவ்வொன்றாக கீழே விழ…

பிள்ளைகள் பயந்து அங்கும் இங்கும் ஓட… அவர்களைப் பாதுகாப்பாக அணைத்துக்கொண்டவள் தப்பிக்கும் வழியைத் தேடினாள். பிள்ளைகள் மேல் நெருப்பு படாதவாறு அவர்களை நிற்க வைத்துவிட்டு அவள் கதவை நோக்கிச் செல்லவும், மேல் கூரை இடிந்து பெரிய நெருப்புத் தூண் விழுந்து தப்பிக்க இருந்த ஒரு வழியையும் மூடிவிட்டது…

“யாராவது காப்பாத்துங்க, பிள்ளைங்க நெருப்புல மாட்டிட்டு இருக்காங்க, தயவு செஞ்சு இந்த பிள்ளைகளை யாராவது காப்பாத்துங்க…!!” எனத் தென்றல் அந்நேரத்திலும் பிள்ளைகளை நினைத்தே கவலைப்பட…

இனி அவ்வளவுதான், பிள்ளைகளோடு சேர்ந்து இந்த நெருப்பில் தீக்கிரையாகப் போகிறோம் என முடிவு செய்தவள், அந்த கோரத்தைக் சிறு பிள்ளைகள் பார்க்காமல் இருக்கத் தன் கண்களை இறுக்க மூடி, அவர்களைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்…

அச்சமயம் எதிர்பாராத வகையில்… இடிபாடுகளைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்; அன்று வழியில் பார்த்த ரோட் சைடு ரோமியோ…

“தென்றல்..!! தென்றல் சீக்கிரம் வா, நெருப்பு உங்கள நோக்கி வந்துட்டு இருக்கு, சீக்கிரம் வா..!!” எனத் தன் கையை நீட்டி அவளை அழைக்க…

தேவலோகத்திலிருந்து அவளை ரட்சிக்கவே வந்த தேவதையைப் போல் தெரிந்தான் அவன்…

முதலில் பிள்ளைகளை அவனிடம் கொடுத்து காப்பாற்றியவள், இறுதியாக அவள் செல்ல முயலும் அதற்குள் கட்டிடம் இடிந்து, இடிபாடுகளுக்கு இடையில் தென்றலின் கால் மாட்டிக்கொள்ளவும், சரியாக இருக்க…

“ஐயோ தென்றல்…!!” என அவளை அவன் காப்பாற்ற முயல… முடியாமல் போக, அவர்கள் பக்கம் நெருப்பு வேகமாகப் பரவத் தொடங்கி இருந்தது…

“வேணாங்க, என்னை உங்களால காப்பாத்த முடியாது, என்னை விட்டுட்டு நீங்க தப்பிச்சு போயிடுங்க…!!” என தென்றல் வலியில் துடித்துக் கொண்டே சொல்ல…

“நம்பிக்கையை கைவிடாத தென்றல், உனக்காக நான் இருக்கேன், என் கையை கெட்டியா பிடிச்சுக்கோ…!!” என்றவன் தீவிரமாக முனைந்து அவளைக் காப்பாற்றவும்…

அதே நேரத்தில் அந்த அறையே ஒட்டுமொத்தமாக இடிந்து சற்று முன் அவர்கள் இருந்த இடத்தில் விழவும், சரியாக இருக்க மயிரிழையில் உயிர் தப்பினர்…

இருவருமே தப்பித்தோம், பிழைத்தோம் என ஒருசேர பெருமூச்சு விட்டனர்…

அதற்குப் பிறகு பிள்ளைகளையும் தென்றலையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்ததும் அவனே…

அந்தத் தீ விபத்திலிருந்து தென்றல் மீள சில காலம் தேவைப்பட்டது… அவள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தயாரான போது, அவளே அறியாமல் அந்த அவன் இன்று வருவானா என அவள் உள்ளம் எதிர்பார்த்தது…

அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவன் எப்பொழுதும் போல் வழக்கமாக நின்று தென்றலைச் சைட் அடிக்கும் இடத்தில், அவன் காரின் மேல் சாய்ந்து நின்று இருக்க…

அவனை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு கடந்து சென்றவள்… என்ன நினைத்தாளோ மீண்டும் அவனிடம் வந்து நின்று…

“தேங்க்ஸ்..!!” என்று கூறி…

அவன் விழி விரித்து ஆச்சரியம் போல் காட்டி நிற்க…

“உயிரைக் காப்பாற்றியவருக்குத் தேங்க்ஸ் சொல்வதற்குக்கூட மேனர்ஸ் தெரியாதவள் நான் …!!” என ரோஷமாக கூறிவிட்டுச் செல்லப் பார்த்தவளை…

கைநீட்டித் தடுத்தவன் “வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா? சின்னதா ஒரு ஹக் கூடவே ஒரு ஐ லவ் யூ சொல்ல மாட்டியா…?” என கேட்டுத் தென்றலைத் திணற வைத்தான்…

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாம்… அதேபோல் அவன் ஒவ்வொரு செயலும் தென்றலின் மனதில் இடம் பிடிப்பதற்காகவே செய்தான்… அதில் வெற்றியும் கண்டான்…

அவரைப் பற்றி கேட்டபோது, அவர் ரத்தினவேல் பூபதியோட வாரிசுன்னு தான் என்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டார்…

“என்னைச் சுத்தி சுத்தி வந்து காதலிக்கிறேன் சொன்னார், மாட்டேன் சொன்னேன், கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னார்… சரி உங்க அப்பா அம்மா வந்து பேசச் சொல்லுங்க என்று சொன்னேன்… அம்மா இல்ல அப்பா, அந்த காலத்து டைப் லவ் மேரேஜ் எல்லாம் அவருக்குப் பிடிக்காது, அவருக்கு ஈகோ அதிகம்… நம்ம கல்யாணத்துக்கு ஒரு காலமும் அவர் சம்மதிக்க மாட்டார் என்றார்…!!”

“நான் அப்போ உங்க அப்பா சம்மதம் கிடைக்கும் வரை காத்திருப்பதாகச் சொன்னேனா??”

“உனக்கு எங்க அப்பாவைப் பத்தி தெரியாது, அவர் நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுருவார் என்றார்…?”

“பரவாயில்லை, காலம் முழுக்க உங்களுக்காகவே காத்திருப்பேன் என்று சொன்னேன்… அதற்கெல்லாம் சம்மதிக்கவே இல்லை…

“முதல்ல நாம கல்யாணம் பண்ணிட்டு போய் நின்னா, ஊருக்கு பயந்து அப்பா நம்மள ஏற்றுக் கொள்வார் என்று

சொன்னார்…!!”

“யோசிச்சு பார்த்துட்டு நானும் சமாளித்தேன். கோவில்ல வச்சு தாலி கட்டினார்… ஆனா எனக்கு அப்பவே அவர் தரப்பிலிருந்து யாருமே வராதது கொஞ்ச நெருடலாகவே இருந்தது… அப்போ எதையோ சொல்லி சமாளிச்சுட்டார்… முகில் கிட்டயாவது உண்மையை சொல்லலாம்னு கேட்ட போது, எங்க அப்பாவை பற்றி தெரியாது, அவர் நம்மள பிரிக்க எதாவது செஞ்சுடுவார்ன்னு பயம் காட்டினார்… அதனால தான் உனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு உன்கிட்ட கூட சொல்லல முகில்… ஊரை விட்டு தனியா ரெண்டு பேரும் வீடு எடுத்து வாழ்ந்தோம்…”

“சரி கல்யாணம் ஆயிடுச்சு, இப்ப வந்து உங்க அப்பா கிட்ட போய் சொல்லலாமே” என்று கேட்டேன்… “எங்க அப்பா பிடிவாதக்காரர், கல்யாணம் ஆனாலும் நம்மள பிரிச்சு வச்சுருவார். ஒரு குழந்தை வந்துட்டா நம்மள அவரால ஒண்ணுமே பண்ண முடியாது”ன்னு சொன்னார்… முதல்ல எனக்கு அது குழப்பமாக இருந்தது, ஆனா அவர் காட்டின அன்புல எனக்கு அவர் மேல் சந்தேகமே வரல, அவ்வளவு அவரை நம்பினேன்… அந்த நினைவில் முகம் வாடினால்

“திடீர்னு ஒரு நாள் அவர் வீடுக்கு வர்றத நிறுத்திட்டார்… அப்போதான் அவரைத் தேடுனதுல அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியவந்தது… அது அவரைப் பற்றி அத்தனை நல்லதாக இருக்கவில்லை… அவர் பல மலரை நுகர்ந்த வண்டு என்பதே தெரிய வந்துச்சு… நான் மொத்தமா ஏமாந்து போயிட்டேன் முகில்… என்னால அப்போது தாங்க முடியல, முகில்… வயிற்றில் இருக்கும் பிள்ளையை அழிச்சுடுன்னு சொல்லிட்டு ஃபாரின் போயிட்டார்… எனக்கு அந்த நேரத்துல என்ன செய்யறதுன்னு தெரியல”

ஒரு அக்காவா நான் ஏமாந்துட்டு வயிற்று பிள்ளையோட வந்து நின்னா அது உனக்கும் அசிங்கம்… ஊரும் என்னை கல்லால துப்பும்னு பயந்தேன்டி… நம்ம அப்பா அம்மா சொத்து சுகத்தை சேர்த்து வைக்காம போனாலும் கவுரவமாக வாழ்ந்து செத்தாங்க, அவங்களுக்கு நான் துரோகம் பண்ணிட்டேனே என்கிற குற்ற உணர்ச்சியில தான் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன்… என அழத் தொடங்கிட

“அதனால தான் சுயநலமா தற்கொலை பண்ணிக்க முடிவு எடுத்தீங்களா? உங்களையே நம்பிட்டு இருக்குற முகிலைப்பற்றி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? இல்ல உங்க வயிற்றில் வளர்ந்த குழந்தையைப் பற்றி நினைச்சீங்களா? உங்களுக்கு உங்களோட வலி மட்டும் தானா? நீங்க செத்துட்டா மட்டும் ஊர் உலகம் உங்களை தூற்றிப் பேசாதா…? பேசுற உலகம் எத்தனை நாள் பேசிட்டுப் போகும்? எல்லாம் அவங்க வாய்க்கு அடுத்த அவல் கிடைக்கிற வரைக்கும் தானே… நீங்க எடுத்த தப்பான முடிவால என்ன சாதிச்சீங்க? பெண்களுக்கு முன்னோடியா இருக்க வேண்டிய நீங்களே இப்படி தப்பான பாதையை உங்களுக்கு வழி காட்டினா இந்த சமுதாயம் எதை நோக்கிப் போகும்? தப்பு பண்றவன் எல்லாம் நிம்மதியா சுத்தும்போது பெண் பிள்ளைங்க நீங்க மட்டும் தற்கொலை பண்ணிட்டு சாகனுமா? தைரியமாக துணிந்து போராடி இருக்க வேண்டும்!” என்று விஜேந்திரன் தீவிரமாக அறிவுறுத்தியபோது…

தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட தென்றல், பின் விட்ட இடத்திலிருந்து தொடங்கினாள்.

“நான் கோமால இருந்து கண்ணு முழிச்சுப் பார்த்த முதல் செய்தி, இவனோட அப்பாவுக்கும் இந்த ஊர் அரசியல்வாதி மகளுக்கும் கல்யாணம் என்பதைத் தான்… அதைக் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிடுச்சு… இந்த குழந்தை முகத்தைப் பார்த்தாவது அவர் மனசு மாறுவார்னு நம்பி குழந்தையைத் தூக்கிட்டுப் போனேன். என்னை வழியிலேயே மறிச்சு, குழந்தையைக் கடத்திப் போய் பிணையமா வச்சு, உன் வீட்டுக்காரர் மேல பழி போடச் சொன்னாங்க. எனக்கு வேற வழி தெரியல, முகில் என் குழந்தை… என் குழந்தைக்காக நான் என்னை மன்னிச்சுடு முகில்…!” என கதறி அழுதவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் திணறித்தான் போனார்…

“அக்கா, குழந்தைக்கு ஒன்றும் ஆகாது, நான் சொல்கிறேன், இல்லையா? என்னை பார், உன்னை ஏமாற்றியது யாருக்கா…???” என கேட்டாள் முகில். பின்னே இதுவரை நடந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் மூல காரணமான அந்த காரணகர்த்தா யார் என்று தெரிய வேண்டாமா…???

“சொல்லுங்கள் சொல்லுங்கள், நீங்கள் அவன் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா…???”

எஸ், அதே, அதே…

ரத்தினவேல் பூபதி குடும்பத்தின் ஆஸ்தான எதிரியான ரகுநாதனின் ஒரே சிம்மந்த புத்திரன் ரகுவீர் பூபதி தான்…

ரகுநாதனிடமிருந்து குழந்தையை மீட்டு, நாளை திருச்சிற்றம்பத்தின் மகள் சந்தியாவிற்கும் ரகுவீர்க்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுப்பார்களா…??

ஒய், நிறுத்து! அதான் கிளைமாக்ஸ் வந்தாச்சுல்ல? உன் கதையென்றால் உன் பாட்டுக்கு ட்விஸ்ட் வச்சுட்டே போவியா? நாளைக்கு கல்யாணத்தை நிறுத்துற, அந்த குழந்தையை காப்பாத்துற, எல்லா ஜோடியையும் சேர்த்து வைக்கிற… என்ன… அதானா டார்லிங்ஸ்…

ஹாய் செல்லம்ஸ், கதை இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கதையைப் படித்துவிட்டு உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

முகிலே!! உன் முகவரி என்ன-35

Yadhu nandhini
Completed Novel
Family, Romance
41

Chapters

12

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top