முகிலே!! உன் முகவரி என்ன1

கொஞ்சும் பைங்கிளிகள் கூடி குலவிடவே பொன் நிறத்தில் உதித்தான் பகலவன்… அவன் பொன் கதிர்களால் மரங்கள் யாவும் பச்சை மரகதமாக மின்னின. இந்த இயற்கை அழகு தென்காசி மாவட்டத்திற்கே சொந்தமாகும்…

தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமம்… மண்ணும் விண்ணும் இணைய பாலருவியும் நூலருவியும் பாயும் அழகான ஊர்… கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக சிலுசிலுவென காற்று வீசிட அந்த ஊரை கடந்து சென்றது அந்த பேருந்து…

கையில் பச்சிளம் குழந்தையுடன், தோளில் ஒரு பையுமாக இறங்கினாள் ஒரு அழகுப் பெண்; அருகில் அவளுக்குத் துணையாக அவளின் சகோதரனும்…

அதிகாலையே உழவுக்குச் செல்வோர், வேலைக்கு வருவோர் என அனைவரும் புதிதாக வந்தவர்கள் என்பதால் புதிராகவே பார்த்துவிட்டு கடந்து சென்றனரே தவிர, யாரும் அவர்களிடம் சென்று எதுவும் விசாரிக்கவில்லை. அவரவர்க்கு அவர்கள் வேலை, அவரவர்கள் பாடு…

கிழக்கே உதித்த சூரியன் கூட மெல்ல நகர்ந்து உச்சியை எட்டிவிட்டான்; ஆனால் அந்த வேகாத வெயிலில் இவர்கள் செய்யும் தவம் போதாது என்று அந்தப் பிஞ்சு குழந்தையையும் வைத்துக்கொண்டு நின்று இருந்தனர்…

அவர்கள் வெகு நேரமாக நிற்பதைக் கண்ட ஒரு பெரியவர் தானாக முன்வந்து, “எத்தா யாரு தாயீ, நீ இந்த வேகாத வெயில்ல இப்படி பச்ச புள்ளைய வச்சிட்டு கால் கடுக்க நிக்க…!!” என பரிவாகவே கேட்டார்…

“…” பதில் இல்லை…

“தம்பி இங்கன யாரப் பார்க்க வந்திங்க… ஏன் இங்கயே நிக்குதிங்க…” என பெரியவர் கேட்டார்; இனி கேட்கப் போகும் எந்தக் கேள்விக்கும், ஏன் அவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அவர்கள் பதில் அளிக்கப் போவதில்லை என்பது பாவம் அந்த அறுபது வயது முதியவருக்குத் தெரியவில்லை…

ஊர் பெரியவர் வழியில் நின்று புதியவர்களிடம் பேசுவதைக் கண்ட ஊர்க்காரர்கள் அருகில் வந்து என்னவென்று கேட்க, தங்களைச் சுற்றி நின்ற கூட்டத்தைக் கண்டு இருவரும் மிரள, கூடவே சேர்ந்து குழந்தையும் அழத் தொடங்க, சந்தைகடை ஆகிப் போனது நிலவரம்…

அப்போது “க்ரீச்” என்ற சத்தத்துடன் வந்து நின்றது அந்த ஜீப். “என்ன ஐயா கண்ணு, என்ன இங்க இவ்வளவு கூட்டம்? இவங்க யார்?” என அதிகாரமாக கேட்ட ஆண்மை ததும்பும் குரலில், நொடிக்கும் குறைவான நேரத்தில் குரலுக்கு உரியவனை பார்த்துவிட்டு, பார்வையைத் தழைத்துக்கொண்டவள் மனதை வருடிப் போனது அந்த அஜானுபாகுவனுடைய தேகமும், கற்றை மீசையும், பரட்டைத் தலையுமான அந்த மண்ணின் மைந்தனின் கம்பீரமான தோற்றம்…

“அதைத்தான் தம்பி, காத்தாலை பிடிச்சி காகமா கரைஞ்சிட்டு இருக்கேன், வாய திறக்கல… ஒத்தையில இருந்தாலும் பரவல கையில பிறந்த பச்சை மண்ணு வச்சிக்கிட்டு நிக்குதுங்களே, மனசு கேக்காம என்ன ஏதுன்னு கேட்டுட்டேன்… பொட்டப் பிள்ளை பாருங்க, முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட எப்படி சொல்றதுனு சங்கடப்படுது போல…!!” என அவள் பதில் கூறாததையும் பெரிதாகக் காட்டாமல் அதற்கு ஒரு காரணத்தையும் அந்த வயதானவரே கூறினார்… கல்மிஷம் இல்லாத நெஞ்சிற்கு ஓர் உதாரணம்…

“அது சரி, கூச்சப்பட்டு நிக்கிற நேத்து சமஞ்ச பொண்ணு பாரு… ஏம்மா, ஏய்! இந்த வேகாத வெயில்ல பிள்ளைய வச்சுக்கிட்டு இங்க என்னத்துக்கு நிக்கிறீங்க நீங்க ரெண்டு பேரும்… எதுக்கு வந்தீங்க…? எங்க வந்தீங்க…??” என சற்று அதட்டலாகவே கேட்டான்…

கூடியிருந்த கூட்டமும், எதிரே இருந்தவனின் பேச்சுத் தோரணையும் இதற்கு மேலும் அமைதி காத்தால் இரசாபாசம் ஆகிவிடும் என்பதை உணர்த்த மெல்லத் திருவாய் மலர்ந்தது… “பெரிய வீட்டுக்கு…!!”

சிப்பியில் இருந்து சிந்திய முத்தாம் அவள் வார்த்தைகள்… அவ்வளவு அறிதாம்!

“அட, நம்ம பெரிய வீட்டுக்குத் தானே இதை முதல்லயே சொல்லியிருக்கக் கூடாதா ஆத்தா… இந்த கீழவன் சீவன் மிஞ்சி இருக்கும்ல…!!” என ஆதங்கமாக கேட்டார் பெரியவர்…

“அங்க என்ன வேலை? யாரைப் பார்க்கப் போறீங்க…?” என குரல் இறங்காமலே கேட்டான் வண்டிக்காரன்…

அதற்கு வெகுண்டவள் இமை உயர்த்தினாள்; அவள் பார்வை அவன் கழுத்தை மட்டுமே எட்டியது, அலட்சியத்துடன்… “பெரியவரைப் பார்க்கணும்…!” வேண்டா வெறுப்பாகத்தான் பதில் வந்தது…

“எதுக்கு…? ஏன்…?” என அடுக்கு அடுக்காகக் கேள்விகள் பிறந்தாலும், அதற்கு மேல் பதில் சொல்வதற்கில்லை என அவளது இறுகிய மூடிய உதடுகள் மூலம் அழுத்தமாகவே உணர்த்திவிட்டாள்…

“ஒரு பெண்ணிடம் இத்தனை அழுத்தமா… கழுதை எக்கேடு கெட்டுப் போகட்டும் என விட்டுப் போகலாம், ஆனால் அந்தப் பச்சிளம் குழந்தை அதை எப்படியோ போ…!!” என விட மனம் வரவில்லை, இதயத்தில் ஈரம் உள்ள கிராமத்து மனிதனுக்கு…

“நானும் பெரிய வீட்டுக்குத்தான் போறேன், நானே உங்களை அங்க இறக்கி விடுறேன், வாங்க வண்டில ஏறுங்க…!” என அந்தப் புதியவன் இவர்களை அழைக்க…

இவர்கள் மறுப்பு கூறும் முன்பே… “இப்போவே வெயில் உச்சிக்கு வந்தாச்சு, பெரிய வீட்டுக்கு போகணும்னா அதுக்கு மயில் இன்னும் ரெண்டு நடந்தே போகணும்… சட்டுப்புட்டுனு ஏறுங்க, அப்போ தான் நேரத்துக்கே பெரிய வீட்டுக்கு போக முடியும்… தம்பி, அப்படியே என்னையும் வழியில இறக்கி விட்டுடுயா…!!” என அந்த பெரியவர் இவர்களை ஏற்றி விட்டு தானும் ஏறிக்கொண்டார்…

அவர்களுக்கும் மறுப்பு சொல்ல வாய்ப்பு இல்லாததால், வேறு வழி இன்றி ஜீப்பில் ஏறிக்கொண்டனர்… வண்டி அவர்களைச் சுமந்து கொண்டு பெரிய வீட்டை நோக்கி முன்னேறியது…

வழியில் நிலவிய மௌனத்தை கலைத்தது அந்தப் பெரியவர் தான்…

“ஏன்மா பெரிய ஐயாவைப் பார்க்கப் போற…? எட்டு ஊரு பட்டம் கட்டி தோரணையா வாழ்ந்தவர் எங்க ரத்தினவேல் பூபதி ஐயா… பட்டம் பவிசு செல்லாதுனு சட்டம் சொன்னாலும், சொல்வாக்கும் செல்வாக்கும் கொண்டவராக வாழ்ந்தார் எங்க பெரிய ஐயா… அவருக்கு ஒரே மகன் தான் ராஜவேல் பூபதி ஐயா… நம்பி வந்தவங்களை நல்லபடியா காப்பாற்றுவார்… நீங்க எதுக்கு அவரைப் பார்க்க வந்தீங்க…!!” என அவரும் போட்டுப் போட்டுப் பேசுகிறார்… கிரகம் ஆள் சரியில்லை, என்னத்த சொல்ல…

வழக்கம் போல் அப்பக்கம் மௌனம் மட்டுமே இருந்தது; கண்ணாடி வழியே இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த கட்டிளம் காளையனின் கண்கள், புதிதாக வந்தவர்களைத் தான் வட்டமிட்டுக்கொண்டு இருந்தன…

“ஐயாகண்ணு, ஏன் தொண்டை தண்ணிய கண்ட கண்ட கழுதைக்காகக் கரைய விடுதிய கத்திரிக்கா முத்தினா கடை தெருவுக்கு வரத்தான் போகுது… என்ன பெரிய வீட்டுப் பெருமை எல்லாம் பலமா இருக்கு ஐயாகண்ணு…!!” என நக்கலாகவே கேட்டான்…

வம்படியாகத் தங்களை வண்டியில் ஏற்றியதோடு அல்லாமல், தங்களை கழுதையோடு ஒப்பிட்டுப் பேசியவனை கூர்முனை விழியால் ஏறிட்டு நோக்கிட, அவனும் அந்நேரம் வண்டியின் பேக் மிரர் வழியே அவளின் பார்வையைச் சலைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்; இரு கண்களின் தீட்சண்யத்தால் கோடை தகித்தது…

“அதுகில்ல தம்பி, பெரிய ஐயாவை நம்பி வந்துட்டாக… அதுக்கு என்ன கஷ்டமோ நஷ்டமோ, நம்ம பெரிய ஐயா பத்தி சொன்னா அதுங்களுக்கு கொஞ்சம் தகிரியம் வரும்ல? பெரிய ஐயா மாதிரி நியாயமான ஆளுங்க யாருமே இல்லைனு சுத்து பட்டு ஊருக்கே தெரிஞ்சது ஒன்னுதான்ங்குங்க…!!” என அந்தப் பெரியவர் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை தான்…

பட்டங்களில் இயற்றப்படாவிட்டாலும் ரத்தினவேல் பூபதி அந்த இலஞ்சி கிராமத்திற்கு அரசர் போன்றவரே எனக் கருதி வருகின்றனர்… மக்களின் நலனுக்காக வாழும் மனிதர் தான் வாழ்ந்த பட்டத்தை தானே முன்வந்து துறந்தவர்… மக்களோடு மக்களாக வாழத் தொடங்கி மக்களுக்காக வாழ்கின்றவர்… நீதியும் நேர்மையும் இரு கண்கள் போல் கொண்ட வாழ்க்கை நெறியாளர் அவர்; எவ்வழியோ அதிலே அவர் மக்களையும் வளர்த்து வழிநடத்திச் செல்கிறார்…

அவரது ஒரே மகனான ராஜவேல் பூபதியும் அவரது மகன்களும் தான் அவருக்குப் பக்கபலன்… எள் என்றால் எண்ணெயாக நிற்கும் மகன் கிடைத்திருக்கிறார் என்றால், தாத்தாவின் கண் அசைவுக்கே காரியத்தை கச்சிதமாக முடிக்கும் பேரமக்கள் வாய்க்கப்பெற்று தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தில் சஞ்சரித்து வருகிறார்…

பல நூறு கதைகள் பேசியபடி பெரிய வீட்டை அடைந்து இருந்தது ஜீப்… பேசியது அம்புட்டும் பெரியவர் மட்டும் தான் என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை…

அரண்மனை போன்ற பிரம்மாண்டம் இல்லாவிட்டினும், அதற்கு நிகரான அந்த மளிகையின் நுழைவாயிலில் அவர்களை இறக்கிவிட்ட ஜீப், அத்தோடு அவர்களையும் கழட்டிவிட்டுப் புழுதியை கிளப்பிவிட்டு மறைந்தது…

அந்தப் பெரிய கருப்பு இரும்பு கேட்டைப் பார்த்தவள் கண்கள் அதிலேயே நிலைத்துப் போனது… இதோ இந்த இரும்பு கதவினைப் போலவே இவளது இதயமும் பூட்டித் கிடக்கிறது… ஊரே போற்றும் ரத்தினவேல் பூபதியின் சமஸ்தானம் இவளின் வருகையால் ஆட்டம் காணப் போகிறது…

தன் வெண்பிஞ்சு கரங்களால் அக்ரோஷமாக கதவைத் தள்ளித் திறந்தாளோ, அதைப்போல இவ்வீட்டின் மனிதர்களின் மனதையும் தூள் தூளாக உடைத்து எறியும் நோக்கத்துடனே வந்து இருக்கிறாள் இவள்…

யார் அவள்…???

புயல் ஒன்று பூவின் முகவரியில் வருகை தந்து இருக்கிறது…!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top