அதிகாலை மோகத்துடன் மேகம் சூழ்ந்து கொண்டது வானவனை… தன் மென் கரங்களால் பரப்பும் மஞ்சள் ஒளியை தன் வெள்ளை நிற பஞ்சு போன்ற வெண்மேகங்கள் மீது சூரியன் ஊடலா…? கூடலா…??
பூபதி குடும்பம் அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது…
நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, சகுனம் எல்லாம் பார்த்து குலதெய்வக் கோவிலுக்குப் பொங்கல் வைக்க கிளம்பியது பூபதி குடும்பம்…
தாரை தப்பட்டை மேளம் தாளத்துடன் வெகு விமர்சையாக ஏற்பாடுகள் நடத்தப்பட்டன… நம் குலம் தழைக்கவே என்றே முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வம் தான் குலதெய்வம்…
சில மைல் தொலைவில் ஊரின் எல்லையில் வீற்றிருந்தனர் எல்லைச்சாமிகள்… ஓங்கி உயர்ந்த சிலைகளில் கம்பீரமான தோற்றத்தில் உயிர்ப்புடன் இருந்தன… கள்ளம் கபடம் கொண்ட மனிதர்களுக்கு அச்சம் தரும் வகையிலும், நம்பி வருவோருக்கு அடைக்கலம் தரும் வகையிலும் அமைந்திருந்தன…
ஆண்களில் ரத்தின வேல்பூபதி, ராஜவேல் பூபதி, ராஜேந்திரன் ஆகியோர் பக்கத்து ஊர் பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு வருவதாகக் கூறிவிட… விஜயனுக்கும் மில்லில் வேலை இருப்பதால் பாதியில் வந்து சேர்ந்து கொள்வதாக அறிவித்துவிட… எஞ்சி இருந்தது வீரேந்திரனும் மகேந்திரனும் மட்டுமே…
வயதில் மூத்த பெண்கள் முன் எடுத்துக்கொண்டு கோவில் பூஜை மற்றும் பொங்கலுக்கான வேலையில் ஈடுப்பட்டனர்…
“அம்மாடி தென்றல், கூடவே நின்னு பார்த்து கத்துக்கமா! எனக்கு பின்னாடி நீ தான் இந்த குடும்பத்தை எடுத்து நடத்தப் போற, உனக்கு இதெல்லாம் தெரிய வேண்டியது அவசியம் கண்ணு…!” என செல்லமாக அழைத்த மாமியாரை தட்டாமல் சமத்து மருமகளாகப் போய் நின்று கொண்டாள்…
புது பானையைத் துலக்கி மஞ்சள், குங்குமம் வைத்து முறையான சடங்குகளைச் செய்தனர்…
“அம்மாடி தென்றல், போய் கோவிலுக்குப் பின்னாடிப் போற ஓடையிலிருந்து தண்ணி கொண்டு வாமா…!” என முகிலிடம் பானையைக் கொடுத்து அனுப்ப, அவளும் அதை வாங்கிச் செல்ல அவளுக்குத் துணையாகக் குறிஞ்சியும் ரஞ்சனாவும் வந்தனர்…
முகில் தனக்குள்ளே தன் எண்ணங்களுடன் உழன்று கொண்டிருக்க… குறிஞ்சியும் ரஞ்சனாவும் வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்தனர்… (எவன் எப்படிப் போனது நமக்கு என்ன…)
“ஏன் குறிஞ்சி, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்…??” ரஞ்சனா
“சொல்லுப் பிள்ள…???” குறிஞ்சி
“இல்ல, உங்க வீட்ல பெரியவர் ராஜேந்திரன் இருக்கும்போது ஏன் நல்லவருக்கு அதான் உன் ஆளுக்கு நிச்சயம் பண்ணாங்க…??” என ரஞ்சனாவிற்கு எப்பொழுதும் மனதில் பட்டதை கேட்டுவிடும் பழக்கம்…
அந்த நினைவில் முகம் வாடினாலும், “அது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது பிள்ளை, ஆனால் விஜயேந்திரன் அத்தானுக்கு வேற ஏதோ ஒரு பிள்ளையைப் பிடிச்சு போனதால கல்யாணமே வேண்டாம் என்ற நிலை இருந்தது, இப்பதான் சமீபத்துல என்கிட்ட சொன்னான்…!!” என குறிஞ்சி கூறிட…
பேச்சு தன்னவனைப் பற்றி என்றதும் முகிலின் காதுகள் கூர்மையடைந்தன… விஜயனைப் பற்றி அவர்கள் கூறிய விஷயம் அவளுக்கு அத்தனை உவப்பாக இல்லை… தன் கணவன் வேறொரு பெண்ணை நேசித்தான் என்பது மனைவிமார்க்கு எத்தனை வலி தரக்கூடிய செய்தி…
“ஓ அப்படியா! அந்தப் பிள்ளை யார் என்று ஏதாவது விவரம் தெரியுமா…??” என துருவினாள் ரஞ்சனா…
“அதெல்லாம் எதுவுமே தெரியாது பிள்ளை… அத்தானுக்குமே அந்தப் பிள்ளையைப் பற்றித் தெரியாதாம்… ஏதோ ஒன்று இரண்டு முறைதான் பார்த்திருக்காராம்… பார்த்துப் பிடிச்சிருந்ததால அந்தப் பெண் எங்க தேடியும் ரொம்ப வருஷமா கிடைக்கவே இல்லையாம்… அதனாலதான் அந்தப் பெண்ணைத் தவிர வேற கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டார்…!!” எனக் குறிஞ்சி கூறியதைக் கேட்டு முகிலுக்கு உள்ளுவரே வேதனை சூழ்ந்தது.
“அ..அப்படினா உங்க அத்தான் முகிலுக்கு எப்படித் தாலி கட்டினார்…?” என கேட்ட ரஞ்சனாவிற்கு, பதில் அவள் கேள்வியில் இருப்பது போல் தோன்றும் ஒரு நிமிடம் திகைத்தவள் கண்களில் மின்னல் வெட்டியது…
“அது….??” என ரஞ்சனாவின் கேள்வியில், அவள் முகத்தைப் பார்த்து இருந்த குறிஞ்சிக்கு அதில் தெரிந்த பாவனை குழப்பத்தைத் தந்தது… “என்ன…?” என கண்களால் கேட்டவளுக்குப் பதிலாக முகிலை கண்களால் சுட்டி காட்டினாள் ரஞ்சனா…
குழப்பத்துடன் நின்றிருந்த முகிலைப்பார்த்ததும் குறிஞ்சியின் மூளையில் பொரி தட்டிவிட… கண்கள் விரிந்து ரஞ்சனாவைப் பார்க்க, அவளும் ஆம் என்பது போல் ஆமோதிக்க, இருவரும் தங்கள் கண்டுபிடித்த விஷயத்தை நினைத்து ஆச்சரியமடைந்தனர்…
காதல் புகுந்தாலே கெட்டித்தனமும் தானே வந்துவிடும் போல்… விடை அறியா விடுகதைக்கு விடை கண்டுபிடித்திருந்தனர்…
ஆனால் அதை அறிய வேண்டியவளோ தன் நிலையில் நின்று மனதை உழட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாள்…
அதற்கேற்றார் போல முகில் காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
அன்றைய காலை உணவிற்குப் பின் விஜயன் இருக்கும் பக்கம் முகில் செல்லவே இல்லை; அவன் கண்மறைந்து அவள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினாள்… விஜயனிடமிருந்து தப்பிப்பதிலேயே கவனமாக இருந்த முகில், பிள்ளையைப் பற்றி மறந்து போனாள்…
இரவு நேரத்தில் பாலை அருந்திவிட்டு சமத்தாகத் தூங்கும் பிள்ளையை அலட்ட விரும்பாததும் ஒரு காரணம்…
தாயின் கதகதப்பில் பாதுகாப்பாக உறங்கும் குழந்தை, அன்னையின் உடல் சூடு இன்றி எழுந்து அழு தொடங்கியது , முகில் அருகே இருந்த கூட ஓசை கேட்டு ஓடி வந்து இருப்பாள்… அவள் தான் விஜயனுக்குப் பயந்து அடுக்கலையில் எதையோ உருட்டித் தள்ளிக் கொண்டிருந்தாளே… கொஞ்ச நேரத்திலேயே குழந்தை வீல் வீல் என அழத் தொடங்கியது…
குழந்தையின் பெருங்குரல் அழுவதும், பின் சத்தம் அதிகரிப்பதைக் கேட்டு ஓடி வந்து முகில் அறையில் பார்க்க…
பிள்ளையோ தகப்பன் சாமி அரவணைப்பில் அவன் நெஞ்சுச் சூட்டின் கதகதப்பில் அசந்து உறங்குவதைக் கண்டவள் திகைத்துத்தான் போனாள்… எத்தனை பாசமாகப் பிள்ளையை அணைத்திருக்கிறான் என்பதைப் பார்த்தவள், பார்த்தபடியே நின்று இருக்க எவ்வளவு நேரம் நீடித்ததோ…
“குழந்தையைக்கொடுங்க…!” என விஜயனிடமிருந்து வாங்கக் கையை நீட்டினான்…
“ஏன்…?” என ஒற்றைக் கேள்வியை மட்டுமே கேட்டான்…
“உங்களுக்கு எதுக்கு சிரமம்? எவ்வளவு நேரம் அவன இப்படியே வச்சுட்டு இருப்பீங்க? கொடுங்க, நான் பார்த்துக்குறேன்…!!!” என்று கூறி, நீட்டிய கையை இறக்காமலேயே நின்றான்…
“ஏன், உன் கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சு போச்சா…?!! பிள்ளையைச் சுமக்கிறது தகப்பனுக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல…!!” குழந்தையை மேலும் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு கூறினான்…
“அப்படின்னா இது உங்க குழந்தை தானா…???” என முகில் படபடப்புடன் கேட்டாள்…
“ஆமா…!! நீ இந்த குழந்தைக்கு அம்மான்னா, நான் தான் அப்பாவா இருக்க முடியும்…???” என விஜயேந்திரன் வேறு ஒரு அர்த்தத்தில் கூற, அதைத் தவறாகப் புரிந்து கொண்டவளோ…
“அப்ப நான் தூக்கி கொஞ்சுற எல்லா குழந்தைக்குமே நீங்க அப்பாவாகிட முடியுமா…???” எனச் சுருக் என்று கேட்டுவிட்டாள்…
“சீ, அசிங்கமா பேசாதடி… நான் சொன்னதுக்கு அர்த்தம்… நீ ஒரு குழந்தைக்கு அம்மான்னா, அந்த குழந்தைக்கு நான் அப்பாவா இருப்பேன்… நீ ஒரு குழந்தைக்கு சித்தியா இருந்தா, நான் அந்த குழந்தைக்கு சித்தப்பாவா இருப்பேன்னு சொல்ல வந்தேன்… ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ, என் குழந்தைக்கு நீ மட்டும் தான் அம்மாவா இருக்க முடியும்… அந்த உரிமையை நான் வேற எவளுக்கும் கொடுத்ததும் இல்ல, இனியும் கொடுகிறதாகவும் இல்ல…!!” என்றவன், அவர்களுடைய உரையாடலில் சிணுங்கிய குழந்தையின் முதுகைத் தட்டி அமர்ந்தான்…
“போதும் கொடுங்க…??” குழந்தை அவன் நெஞ்சிலே தான் கிடந்தது… அதைக் கைநீட்டித் தூக்கப் போனவளையும் தடுத்து, தன் நெஞ்சின் ஓரத்தில் அவளுக்கும் அடைக்கலம் கொடுக்க… இவள் பதறி “வேணாம் விடுங்க” என விலக…
“ஏண்டி இப்படி ஓடுற? ஏன் என்னை காதலிச்சிடுவாமோ என்கிற பயமா உனக்கு? அதான் ஓடப் பார்க்கிறியா…?” என அவளைச் சரியாகக் கனிந்து கேட்டவனை, விழி விரித்துப் பார்த்தவள் மறுபேச்சின்றி அவன் நெஞ்சில் சரண் புகுந்து கொண்டாள்… அவன் சொன்னது போல் இல்லை என நிரூபிக்க வென்றே…!!
ஆதுரமாக அவளை அணைத்துக் கொண்டவனின் முகத்தில் அத்தனை நிம்மதி… நெடுநாள் அவன் தொலைத்த சந்தோஷம் மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்துவிட்ட நிம்மதி அது…
விஜயனின் நெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்த முகிலுக்கு அத்தனை பாதுகாப்பு; அதுவரை அவளுக்குக் கிடைத்திருக்கவில்லை… வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்து விடமாட்டோமா என்கிற ஏக்கம் அவளைப் பிடித்துக் கொண்டது…
மறுநாள் விடிந்தது முதல் முகிலுக்கு விஜயேந்திரன் தான் சிந்தனை; அவனின் ஒவ்வொரு செயலும் அவனை நல்லவன் என்று காட்ட இவளுக்குத்தான் பித்து பிடித்தது…
இதில் வேறு குறிஞ்சி, அவன் வேறு பெண்ணை விரும்பிய விஷயம் சேர்ந்து கொள்ள, முன்னிலும் மோசமாகக் குழம்பிப் போனால்… எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழப்புவோம், அப்போதான் கொழுத்த மீன் பிடிக்க முடியும்…
இவர்கள் மூவரும் வம்பளந்து கொண்டு சென்றதில் நேரம் போக… அவர்களைத் தேடி வந்துவிட்டான் வீர்…
“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அங்க எல்லாரும் நீங்க கொண்டு வர தண்ணிக்காகத்தான் வெயிட்டிங்… சீக்கிரம் போய் கொண்டு வாங்க அண்ணி…!” என்றவன்…
“டேய் பொடியாரே! அது என்ன எப்போ பார்த்தாலும் பொண்ணுங்க கூடவே சுத்துறது? ஆம்பளைங்க எல்லாம் உனக்கு கண்ணுக்குத் தெரியவே மாட்டாங்களா? வாடா என்கூட…!” என்று ரஞ்சனா கழுத்தில் கையை வளைத்துப்பிடித்து அழைத்து, இல்லை இழுத்துச் சென்றான்…
அவர்கள் பின்னாலே மகேந்திரன் தனியே செல்வதைப் பார்த்து குறிஞ்சிக்கு ஆசை பிறக்க, அவனை அமுக்க வேண்டி இருந்தது. நேற்று குளக்கறைக்கு வந்தவள், அவன் காதல் கூறும் முன்பே நழுவிவிடக் கூடாது என்றும், இன்றாவது அவனிடம் கூறிவிட வேண்டும் என்றும் முடிவு கட்டியவள்…
“முகிலு, இந்தா நாலடி தூரத்துல தான் ஓடக் கிடக்கு, நீ போய் தண்ணி எடுத்துட்டு இரு. நான் ஒரு முக்கியமான வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன்… இப்ப விட்ட மகேந்திரன் அத்தானை பிடிக்க முடியாது, புரிஞ்சிக்கோ…??!!” என தயங்கி நின்றவளிடம் கூறிவிட்டுச் சிட்டாகப் பறந்து விட்டான்…
“சரி…!” என்றவள் விஜயனை நினைத்தபடியே ஓடையில் நீர் எடுத்துக்கொண்டு திரும்பினாள்… அவள் சிந்தனை சுற்றுப்புறத்தில் இல்லாததாலும், அவளின் இருபுறமும் சூழ்ந்திருந்த புதரில் மறைந்து நின்றவர்களைக் கவனிக்கத் தவறினதாலும்…
அதன் விளைவாக, கத்தியுடன் எதிர் வந்தவர்களைக் கண்டு நடுங்கியவளுக்குச் சுதாரிக்கும் வாய்ப்பே போய்விட்டது…
அலறித் துடித்து அங்கும் இங்கும் ஓடிச் சென்றவளை, நாலே தாவில் பிடித்துவிட்டனர் கயவர் கூட்டம்…
“வேணாம் என்னை விட்ருங்க…?” என அவள் கெஞ்சியதும் அவர்கள் செவியை எட்டவே இல்லை… அவர்களின் நோக்கம் எல்லாம் அவளைக் கொல்வதில் மட்டுமே இருந்தது… அவள் இறைஞ்சல் எல்லாம் வீண் போனது…
குறிஞ்சி…!! ரஞ்சு…!! வீர்…!! என்னை காப்பற்றங்க என அவள் அழைத்தது எல்லாம் காற்றில் கரைந்து போனது…
துருப்பிடித்த கூர் கத்தியை முகத்திற்கு நேராகக் கண்டவள், தன் சாவு அதனால் ஏற்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்தவள், உள்ளத்தில் இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்து போனது… கண்ணீருடன் கண்களை மூடியவளுக்கு விஜயேந்திரன் வந்தான். அவள் மூடிய கண்களுக்குள், ‘அவர் என் கணவர், அவர் என்னை காப்பாற்றுவார்’ என மின்மினிப் பூச்சி ஒளி அளவில் அவளுக்கு நம்பிக்கை வந்தது. மறுநிமிடமே… “விஜய் என்னை காப்பாற்றுங்க… விஜய் என்னை காப்பாற்றுங்க…” எனப் பெருங்குரலில் கத்தத் துவங்கினாள்…
“சீ, கம்முனு கிட! உன்னை காப்பாத்த எவனும் வரமாட்டான்… இன்னைக்கு எங்க கையில தான் சாகப் போற… உன் விதி முடிஞ்சிது, புரியாதா…?” என்றவன் முகிலை நோக்கி முழு பலத்துடன் கத்தியை வீசினான்… பயத்தில் கண்களை மூடிக்கொண்டவளுக்கு வெகு நேரம் சென்றும் வலி இல்லை என்பதை உணர்ந்து, கண்ணைத் திறந்து பார்த்தவளுக்கு… ஆனந்தக் கண்ணீர் ஊக்குவித்தது, கூடவே சிரிப்பும்…
(அங்க ஒரு மனுஷன் இவளுக்காக விழுந்து விழுந்து சண்டை போட்டுட்டு இருக்கான், பக்கி பயபுள்ள பார்த்து சிரிச்சிட்டு இருக்கு, பாத்தீங்களா… குத்துடான்னு விட்டு இருக்கணும்…)
ஆம், புன்னகை தான்… அவள் எதிர்பார்த்தது போலவே அவளின் நாயகன் அவளை ஆபத்திலிருந்து காக்க வந்துவிட்டானே… அழைத்த குரலுக்கு ஓடி வரும் தெய்வம் போல் அவள் கணவன் வந்துவிட்டானே… தனக்காகத் தன் கணவன் வந்துவிட்டானே என்பதே எத்தனை உவகையாக இருக்கிறது… அதில் விளைந்த புன்னகை தான் அது…
விஜயேந்திரன் எதிராளிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயம், அதில் ஒருவன் தப்பி முகிலின் முதுகில் குத்தப் பார்க்க… அதைக் கண்ட விஜயேந்திரன் பாய்ந்து சென்று முகிலை இழுத்து, கத்தியைத் தன் உடலில் வாங்கினான்…
தண்ணி எடுக்கச் சென்றவளை இன்னும் காணவில்லை என்று பதறி குடும்பத்தினர் வரவும், விஜயேந்திரன் ரத்த வெள்ளத்துடன் முகிலின் மடியில் சரியவும் சரியாக இருந்தது… வீரும் மகேந்திரனும் கொலைகாரர்களைப் பின்னே துரத்திச் செல்ல… பெண்கள் பதறி வந்து விஜயனைப் பார்க்க,
முகிலின் முகத்தைப் பார்த்தபடியே இருந்த அவனின் கண்களோ ஒளி இழந்தன… “என்னங்க…” “விஜயா…” “அத்தான்…” “ஏய்யா ராசா…” என்பன போன்ற ஓலங்கள் மட்டுமே ஒலிக்க, நாமும் விடைபெறுவோம்…
முடிஞ்சி ஜோலி முடிஞ்சி… அடுத்து யாரை போட்டுத் தள்ளலாம் என்னும் சிந்தையில் ரைட்டர்… கொலை வெறியுடன் ரீடர்ஸ், ஹிஹி! அப்படித் தானே…

