முகிலே!! உன் முகவரி என்ன-7

விண்ணவர்களை விரட்டிச் சென்று கருப்பு மை போலச் சூழ்ந்து கொண்ட கொடிய இருள், வெளிச்சத்தைத் தேடும் மேகங்கள் முழுநிலவை மறைக்க… மொட்டை மாடியில் தூரத்தில் தெரிந்த நிலவை வெறித்து நோக்கியபடி இருந்தான் விஜயேந்திர பூபதி…

எவ்வளவு நேரம் வானத்தை வெறித்து நின்றானோ, அவன் தோள்களில் விழுந்த கரத்தினால் சிந்தை கலைந்து திரும்பியவனை எதிர்பட்டனர் அவன் உடன் பிறந்த சகோதரர்கள்…

“என்ன பெரியவனே, உன் கிட்டயும் அம்மா பேசுறாங்களா…??” என மகேந்திரன் கேட்க,

அமைதியே பதிலாக நின்றது…

“என்ன பெண் பாவம், பொல்லாதது… நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் வேணாம்பா. தப்பு பண்ணி இருந்தா ஒத்துக்கோங்க, நானே அந்தப் பிள்ளைகிட்ட பேசி சமாதானம் பண்ணி கட்டி வச்சுடுறேன். அது இதுன்னு சொன்னாங்களா? ஏன்னா என் கிட்டயும் அதைத்தானே சொன்னாங்க…??” என வீர்…

அவனை ஒரு முறை முறைத்தான் விஜயேந்திரன்…

“ஏன்டா…??” மகேந்திரன் சலித்துக் கொள்ள,

“அட இல்லடா, நம்மகிட்ட சொன்ன அதேதான் இவன் கிட்டயும் பிசுபிசுக்காமல் சொல்லி இருக்காங்களா இல்லை வேற எக்ஸ்ட்ரா பீட்டு சேர்த்துப் போட்டுட்டாங்களான்னு தெரிஞ்சுக்க வேணாமா, அதான்…!!” அசடு வழிந்தான்.

“உன் ஆர்வத்துக்கு அணை போடு மகனே… அடுத்து என்ன செய்யலாம் என்று பேசுவதற்குத்தான் இங்க வந்திருக்கிறோம்… அதைப்பற்றி மட்டும் யோசி ராசா…!” என மகேந்திரன் கூற…

“அட போடா, நான் எதை யோசிக்க? இதே அந்தப் பெண்ணுக்குப் பதில் வேற ஏதாவதொரு ஆம்பள இருந்திருந்தால், பொய் சொன்ன வாயை உடைத்து உப்பு கண்டம் போட்டிருப்பேன்… எனக்கு எல்லாம் அதிரடியாகச் சண்டை போடத்தான் தெரியும், சாமர்த்தியமாக யோசிக்க எல்லாம் வராது… நீதான் மெத்தப் படித்த மேதாவி ஆச்சே, நீயே ஒரு உருப்படியான யோசனை சொல்லு…!!” என மகேந்திரனைப் பக்கமே திருப்பிவிட்டான் வாழப் பழ சோம்பேறி வீரன்…

“பேசாமல் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று மிரட்டிப் பார்க்கலாமா? அப்போதாவது உண்மை சொல்கிறாளா என்று பார்ப்போம்…!!” என ஆர்வமாக மகேந்திரன் கூற (அட, அரை மெண்டல்களா!)

“ஏன்டா உன் புத்தி இப்படிப் போகுது? ஏற்கனவே நம்மில் எவனோ ஒருவன் கெடுத்துத்தான் அந்தப் பெண்ணின் கைவசம் பிள்ளை இருக்கிறது என்று ஊரே பேசுது. இதுல நாம கடத்தினோம் என்று தெரிஞ்சா, கண்டிப்பா அந்தப் பிள்ளையை நம்மில் ஒருவன் தலையில் கட்டி வைக்கிறார்களோ இல்லையோ, நம்ம மூவரையும் கட்டி வைத்து உரிச்சிடுவாங்கடி… தப்பிக்க ஐடியா கொடு என்று கோர்த்து விடப் பார்க்குது பயபுள்ள… இதுல வேற வெளிநாட்டுக்கு எல்லாம் போய் படித்துவிட்டு வந்தானாமா…!!” என பீருக்குக் கூட அறிவு வேலை செய்யும் என்பதைத் தெரியவித்து விட்டான்…

“ஏண்டா, நான் வெளிநாட்டுக்கு போய் படிச்சதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? இவ்வளவு அறிவா பேசுற? இல்ல, எங்க உருப்படியா நீ தான் நல்ல ஐடியா கொடுக்கிறாய்…!” மகேந்திரன்…

தலையில் கைவைத்து தீவிர யோசனை செய்த பின்னர், “பேசாம இப்படி பண்ணிடுவோமா? நாம எல்லாம் போய் அந்தப் பொண்ணு கால்ல விழுந்து, நீ நினைக்கிற மாதிரி ஆள் எல்லாம் நாங்க இல்ல, நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க, எங்க மேல இருக்கிற பழியைத் துடைச்சு எங்களை எப்படியாவது காப்பாத்துமான்னு கெஞ்சுவோமா…!” என ஆர்வமாகச் சொல்ல, அவனை காரியத் துப்பாத குறையாகப் பார்த்தனர் சகோதரர்கள்.

“ஏண்டா எருமை மாடு ஆம்பள புள்ளையா! லட்சணமா பேசுடா! அவ கால்ல விழறதுக்கா உடம்ப இப்படி வளர்த்து வச்சிருக்க? தடி ஐடியா சொல்றானாம்… தடி நாயே…!!” என மகேந்திரன் துப்பியே விட்டான்…

“வேற என்னடா பண்ணச் சொல்ற? பொம்பள புள்ளையா போச்சேன்னு பார்க்க வேண்டியது தான் இருக்கு…!!” என வீரன்…

“யாரும் யார் கால்லையும் விழ வேண்டாம்… என்னை நம்புங்க, நிச்சயம் நம்ம மேல தப்பு இல்லைனு நிரூபிச்சு அவளை இந்த ஊரை விட்டு ஓட வைப்பேன். அதுக்கு உங்க உதவி எனக்குத் தேவை… நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒத்துழைப்பீங்க தானே?” என இருவரையும் பார்த்து கேட்க,

“நாங்க எப்பவும் உன் பக்கம் தான்டா பெரியவனே…!!” என இரு சகோதரர்களும் அவன் பக்கம் நின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, அங்கு ரத்தினவேலு உடலும் உள்ளமும் தவிர்ந்து போய் இருந்தார்… சாமுண்டீஸ்வரி அவரை வெவ்வேறு விதமாகத் தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார், ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை…

இவ்வாறு அன்றைய பொழுது பூபதி குடும்பம் தங்கள் தூக்கத்தை இழந்து இருக்க, அதற்குக் காரணமானவளோ அதைப் பற்றி சிறு பிரக்ஞை கூட இல்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிடலானாள்…

அருகினில் நிம்மதியாக உறங்கும் மகனின் தலையைத் தேய்த்தவள், “நீ தூங்கு கண்ணா, நிம்மதியா தூங்கு, உனக்காக நான் இருக்கிறேன்…!!” என கூறியவளின் மனதில் சொல்ல முடியாத துயரம் வந்து அடைத்தது… தலையைப் பிடித்துக் கொண்டு இருந்தவளின் தோள்களில் ஆதரவாக விழுந்தது அந்த கரம், அவளின் சகோதரனாக வந்தவனின் கரம்…

“இதுக்குத்தான் அவ்வளவு சொன்னேன், எதுக்கு இவ்வளவு வீண் விரையம்? போலீஸ் கிட்டப் போய் இருந்தா, அவங்க விசாரிக்கும் முறையில் இந்நேரம் நாம நினைச்சது தானா நடந்து இருக்கும்…?!” என ஆயிரத்தி நூறு முறையாவது கூறியிருப்பான்…

“ப்ச்! போலீஸ் கிட்டப் போய் இருந்தா மட்டும் என்ன ஆகி இருக்கும்? இவங்க பெரிய இடம்னு பணத்தைக் கொடுத்து காம்பரமைஸா போகச் சொல்லுவாங்க, அப்படி இல்லையா? இவங்களுக்கு இருக்குற செல்வாக்கை பயன்படுத்தி, இப்படி ஒரு சம்பவமே நடக்கலன்னு சாதிச்சு நம்மளை ஒழிச்சு கட்டி இருப்பாங்க… நமக்குத் தெரியாதா இந்த பெரிய இடத்தோட வேலை எல்லாம்? அவங்க கௌரவத்திற்காக என்ன வேணாலும் செய்வாங்க, எவ்வளவு அடிமட்டம் வேணாலும் இறங்குவாங்க… அதோட நமக்குத் தேவையானது இவங்க பணமோ பொருளோ இல்லையே…!!”

“எப்படியோ இவங்களைப் பற்றி ஊருக்குத் தெரியப்படுத்தியாச்சு, இனி இவங்களால தப்பிக்க முடியாது. நமக்கான நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது…!!” என்றவள் கண்ணில் அத்தனை தீவிரம்…

“சரி நேரமாகிடுச்சு, நீ போய் படுத்துக்கோ. நாளைக்கு நமக்கு முக்கியமான வேலை இருக்கு…!!” என குழந்தை அருகே படுத்துக்கொண்டவளுக்கும் தூக்கம் தூரப் போனது…

துங்க இரவு கரைந்து சூரியன் உதயமானது. பெரும் அடைமழை பெய்து ஓய்ந்தது போல் ஆனது அன்றைய விடியல்… அத்தனை அமைதி!

எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும் ரத்தினவேல் பவனத்தில், இன்று அவை துணி கொண்டு துடைத்தது போல் ஆனது அனைவரது முகமும்… உயிர்ப்பே இல்லை…

பல பல வேலைகளுக்காக வெளியே செல்லும் அந்த வீட்டு மனிதர்கள், காலை உணவு வேளை மட்டுமாவது அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதாத விதி… இன்றும் அப்படியே.

நடுநாயகமாக ரத்தினவேல் அமர்ந்து இருக்க, அவரைச் சுற்றி அவர் குடும்பத்தினர் அந்தப் பிரம்மாண்ட செம்மரக் கட்டையாலான உணவு மேஜையை நிறைந்து இருந்தனர். ஆனால், ஒருவரது முகத்திலும் பொலிவே இல்லை; கலை இழந்து காணப்பட்டனர்…

தம் மக்கள் அமைதியாக உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தவர், தனக்கு உணவு பரிமாறும் மருமகளிடம்…

“ஏம்மா நம்ம வீட்டுக்கு வந்தவங்க சாப்பிட்டாங்களா…?” என விசாரிக்க… சகுந்தலாவின் கை அந்தரத்தில் நின்றுவிட, அமைதியாக உணவு உண்டு கொண்டு இருந்த அனைவரும் ரத்தினவேலுவை விலக்கென நிமிர்ந்து பார்த்தனர்… அதை சிறிதும் சட்டை செய்யாமல்… மேலே தொடர்ந்தவர்…

“என்னமா சகுந்தலா, உன்னைத்தான் கேக்குறேன்…??”

“இ… இன்னும் இல்லைங்க ஐயா…!”

“என்னமா, நீ முதல்ல வீட்டுக்கு வந்தவங்கள்தான் கவனிக்கணும். சரி, போய் முதல்ல அவங்கள கூட்டிவா… நான் அப்புறம் சாப்புடுறேன்…!!” என பிடிவாதமாக அமர்ந்து, மாமனாரடம் மறுத்து பேச வாய் வராமல் சங்கடத்துடன் தென்றலை அழைக்கச் சென்றார் சகுந்தலா…

“வயசாச்சே, ஒழியே! இந்த மனுஷனுக்கு விவஸ்தை இல்லாம போச்சு…!!” என உள்ளுக்குள்ளே முனகிக் கொண்டார் சாமூண்டீஸ்வரி… வெளியே சொல்லத்தான் அவரால் முடியாதே, ஏனென்றால் இதுதானே பக்தி அவருக்கு…

வழக்காட வந்தவர்கள் வீட்டில் வசதியாகத் தங்கி இருப்பதே பெரும் சங்கடமாகத் தோன்றியது. இதில் வெளியே சென்று அவர்கள் முகத்தைப் பார்க்க நேரிட்டு, மேலும் சங்கடத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பாது அண்ணன், தங்கை இருவரும் அறைக்குள்ளே முடங்கி கிடக்கும் நேரத்தில், விருந்துண்ணவா என்று அவர்களை அழைப்பது அவர்களுக்கே அபத்தமாகத் தான் தோன்றியது…

இருப்பினும் நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் இருக்க சகுந்தலா பின்னே சென்றாள்; இருவரும் பிள்ளை சுமந்து கொண்டு தான்…

டைனிங் டேபிள் வரை வந்தவர்கள் தயங்கி நின்றனர்…

“அட வாம்மா வாய்யா வந்து சாப்பிடுங்க…!!” என ரத்தினவேல் சகஜமாக அழைக்க, சங்கடத்துடன் அவர் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தனர்…

சங்கோஜாத்துடன் அமர்ந்தவர்களைச் சுற்றி இருந்தவர்கள் குறுகுறுவென்று பார்க்க… மூவேந்தர்களோ இவர்கள் இருவரையும் பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தனர்… (பார்த்துப் புகைச்சல் இங்க வரைக்கும் வருது)

ரத்தினவேல் கண் காட்ட, சகுந்தலா உணவை தென்றலுக்கும் அவள் சகோதரனுக்கும் பரிமாறிட…

“குழந்தையை வச்சிக்கிட்டு நீ எப்படி மா சாப்பிடுவ? சகுந்தலா கிட்ட குழந்தையைக் கொடுத்துட்டு நீ சாப்பிடு…!!” என ரத்தினவேல் கூறியதும் சகுந்தலா குழந்தையை வாங்கிக்கொள்ள… தென்றல் சங்கடமாகவே உணவை உட்கொள்ளத் தொடங்கினாள்…

படக்கென்று எழுந்த விஜயேந்திரன்… “ஐயா, உங்களுக்கு வேணா வினயம் பண்ண வந்தவங்களுக்கு விருந்து போடற பெரிய மனசு இருக்கலாம், எனக்கு அந்த மனசு இல்லை…!!!” என்றவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலேயே கை கழுவி விட்டு விறுவிறுவென எழுந்து செல்ல, அவன் பின்னே சகோதரர்களும் சென்றனர்; அவர்கள் பின்னே ஒருவர் ஒருவராக உணவை உண்ணாமல் எழுந்து சென்று விட்டனர். காலியான உணவு மேசையைப் பார்த்து மனம் ஒடிந்து போனார் ரத்தினவேல்…

முட்டாள்தனத்தால் ஏமாந்தவர்களை விட அன்பு கொடுத்து ஏமாந்தவர்களே அதிகம்… அதில் ரத்தினவேல் பூபதி மட்டும் விதிவிலக்கா என்ன…?? பாசம் சில நேரம் மோசம் செய்யலாம்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top