முகில் மனம் நிறைந்த காதலுடன் விஜயனைத் தேடிச் சென்றாள்…
காதலா…??
ஆம் காதலே தான்… காதலும் நம்பிக்கையும் வேறு வேறு இல்லை என்று விஜயேந்திரன் சொல்லி இருந்தானே… அப்போது அவன் மீது நம்பிக்கை வந்துவிட்டதா… எப்போது…
ஆம் நம்பிக்கை தான்; எப்பொழுதும் அவள் மரணத் தருவாயிலும் விஜயேந்திரன் வருவான் என நம்பினாலோ, அப்பொழுதோ அல்லது அதற்கு முன்பாகவோ அவன் அவளுள் நுழைந்துவிட்டான் என்று தானே அர்த்தம்… அவளுள் இருந்த மிச்சச் சொச்ச நெருடலும் அவன் இரத்த மாதிரியைச் சோதனைக்காக அளித்துவிட்ட போது, மொத்தமாக உடைந்து போயிற்று அவள் சந்தேகம்…
விஜயேந்திரன் மேல் தப்பு இருக்காது என ஐயமறுக்காமல் நம்பினால், முதலில் கணவனிடம் மன்னிப்பு கேட்டுச் சேர்ந்த பிறகு அவனிடம் சொல்லித் தன் அக்காவை ஏய்த்தது யார் எனக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தவளுக்கு, கணவன் மீது பக்தி நிலை முற்றியது…
மில் எங்கே இருக்கிறது என கேட்டவளைக் கொண்டு சென்று விடுவதாக வீர் சொன்னதை காதில் வாங்காமல் நடந்தே சென்று விட்டாள்… கணவன் ஒன்றே மதி அவளுக்கு…
மில்லில் கணக்கு புத்தகத்துடன் அலுவல் அறையில் இருந்த விஜயேந்திரனின் எண்ணமெல்லாம் அவன் மனைவியையே…
நேற்று இருந்த கோபத்தில் “இருக்கக் கூடாது…” எனச் சொல்லிவிட்டான் தான்…
அதனால் அவள் எங்கே சென்று விடுவாளோ என்ற கவலையும், “போய்தான் பார்க்கட்டுமே… கை காலை கட்டித் தூக்கிவிட மாட்டேன்… இந்த விஜயேந்திரன் எவ்வளவு மோசமானவன் என்று அப்புறம் தெரியும்…???” என கருவினான்… இவ்வாறு தனக்குள்ளாகவே தன் எண்ணங்களுடன் உழன்று கொண்டு இருந்தவனுக்கு, அவன் மனைவியின் வருகை வாடைத் தென்றலின் குளுமை தந்தது…
அதற்குள்ளாகவே “இவள் எதுக்கு இப்போ இங்க வரா…??” என கோபத்திற்குத் தாவியது மந்தி மனம்…
கடுவான் பூனையாக முகத்தை வைத்துக்கொண்டாலும், உள்ளே காதல் மனைவி தன் பிரிவை தாங்காது தன்னைத் தேடி வந்துவிட்டதால் என உள்ளுக்குள் குற்ற உணர்ச்சிதான்…
அவள் உள்ளே வரும் பொழுது, விஜயேந்திரன் ஒரு கையால் சிறு மூட்டையைத் தூக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்ததை கண்டாள்.
பொண்டாட்டி கிட்ட ஸ்கோர் பண்ண என்ன என்ன வேலை எல்லாம் பார்க்கிறான் பாருங்க…??
“அச்சச்சோ நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க விடுங்க நான் பார்த்துக்கிறேன்…!!” என முகில் பதறிப்போய் தடுத்தாள். அவன் எதிர் பார்த்ததும் அது தானே…
சிறு மூட்டையை இருந்த இடத்திலேயே வைத்தவிட்டு நிமிர்ந்தவளிடம்…
“ப்ச் இங்க எதுக்கு வந்த…?? ஏன் வந்த…? ?” விஜயேந்திரன்… அவள் இறங்கி வந்ததில் வந்த ஏத்தம்…
“உங்ககிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்…? ?” முகில்
“சரி கேட்டுட்டு கிளம்பு…!!” என்கவும்
“ஹான்… இப்போ என்ன சொல்வது…? ?” என புரியாமல் விழி பிதுங்கி நின்றாள் முகில்… உடனே மாறி
“நிஜமாவே பண்ண தப்ப உணர்ந்து தான் மன்னிப்பு கேட்கிறேன்ங்க என்னை நம்புங்க…!!”
“அவ்ளோ தானே சரி கிளம்பு…? ?” அவளை விரட்டி விடுவதிலேயே குறியாக இருந்து கோபத்தை வெளிப்படுத்துகிறானாமா…
“என்னங்க நீங்க சும்மா சும்மா கிளம்பு கிளம்பு சொல்லிட்டு இருக்கீங்க, உங்கள விட்டு போகவா? இவ்வளவு தூரம் நடந்தே வந்தேன்… கால் எல்லாம் வலிக்குது தெரியுமா…?? உங்ககிட்ட உண்மை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டு…!!” என முகில் பேசி கொண்டு இருக்கும் போதே…
அவ்விடத்தை விட்டு நகர்ந்து வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான்…
“என்னங்க, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… என்னங்க…?” அந்த ‘என்னங்க’வை ஏலம் விட்டுக் கொண்டே சென்றாள்…
முகிலின் குரல் காதில் விழுந்தாலும் விழாதது போலவே அவளைப் புறக்கணித்துச் சென்ற விஜயனின் பக்கவாட்டில் ஒரு இளம் பெண் சுமையுடன் மோத வர…
“என்னங்க, ஆள் வருது பார்த்து…?” என இவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… அந்தப் பெண் தன் மீது இடிக்காமலும், அதே சமயம் அந்தப் பெண் கீழே விழாமலும் இருக்கச் சாதுரியமாக விலகிக் கொண்டவன், நொடியில் அந்தப் பெண்ணின் சுமையை தனியே தள்ளிவிட்டான்… அதில் அவளும் மூட்டையும் தனித்தனியாக விழுந்து தப்பின…
அதற்குள் அங்கிருந்து மற்றவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணைத் தூக்கி விட்டு இருக்க, முகில் ஓடி வந்து விஜயனின் கன்னத்தையும் தோளையும் தொட்டு, மீண்டும் அடிபட்டு விட்டதா என்ற அக்கறையோடு வெகு சிரத்தையாக ஆராய்ந்தாள்…
ப்ச் என முகிலினியின் கையை பிடித்துத் தடுத்தவன்… “என்ன பண்ற இது? நாலு பேர் வந்து போற இடம், யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க…?” என அடிக்குறலில் சீறினான்…
“பார்த்தா என்ன இப்போ…? நீங்க என் புருஷன் தான…? யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை, எனக்கு என் புருஷன் மட்டும் தான் முக்கியம்…!” என்றவள், அவன் கைப்பிடியிலிருந்து தன் கையை உருவிவிட வேண்டும் என்றே அவனைச் சோதித்தாள்… முகிலின் கை அவன் மீது படும் போது, மயில் இறகை கொண்டு வருவது போல் சுகமாக இருந்ததால், அவள் தொடுகையை அவன் கண்களை மூடி ரசித்தான்…
திடீரென்று ஆட்களின் குரல் கேட்கவும், பதற்றத்துடன் அவளிடம் இருந்து விலகி நின்றவன்… “இதுக்கு மேல இங்க நிக்க ஆகாது…” என்று விட்டுவிட்டு வெளியே நடந்து சென்றான்.
அங்கு யாரையோ அழைத்து மில்லின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு…
“நான் வயலுக்குப் போறேன், மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்…” என்றவன், தன் புல்லட்டை உதைத்து இயக்க…
சாட்டமாக ஏரியாவில் உட்கார்ந்து கொண்ட முகில், விஜயனின் தோள்களை இறுகப் பற்றிக் கொள்ள…
“ஏய் இறங்குடி…?!” விஜயேந்திரன்
“முடியாது…!” முகில்
“அரை வாங்காத, ஒழுங்கா இறங்கி வீட்டுக்கு போ…!” வாய் தான் கண்டித்தது போல, வண்டி அவன் கையில் வழுக்கிச் சென்றது…
“அடிச்சுக்கோங்க, ஆனா உங்கள விட்டுட்டு வீட்டுக்கு எல்லாம் போக முடியாது… நான் என் புருஷன் கூட தான் இருப்பேன்…!” என தோளில் இருந்த அவள் கரம் இறங்கி, அவன் இடையை வளைத்துப்பிடித்துக் கொண்டது, விடவே மாட்டேன் என்பது போல்… கோர்த்திருந்த வளை கரங்களைப் பார்த்து மீசை துடிக்க சிரித்துக் கொண்டான் விஜயேந்திரன்…
அவனுக்கு இருந்த கோபம் எல்லாம் அவன் மனைவியைப் பார்த்த உடனே பறந்து விட்டது… ஆனால் எவ்வளவு தூரம் தன்னை நம்பி வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே, கோப முகத்திற்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான்…
அவள் உண்மையெல்லாம் என்று கூறும் போதே அவன் அறிந்து கொண்டான், மனைவி தன்னை நேசிக்கத் தொடங்கி விட்டாள் என்று…
இவள் பாட்டுக்கு நாலு பேர் மத்தியில் எல்லாத்தையும் உளறி கொட்டி விடக் கூடாதே… அதற்காகவா இத்தனை நாள் அவன் அனைத்தையும் மறைத்து வைத்து ரகசியம் காத்தான்… அவன் மனைவியின் கௌரவத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாதுமே…
வா என்று அழைக்கலாம் தான், ஆனால் அவன் மனைவியோ புதிதாக முளைத்த பாசத்தில் ‘என் புருஷன், என் புருஷன்’ என அவன் பின்னாடி சுத்துவது விடலைப் பருவத்தில் வரும் முதல் காதல் போல் அத்தனை உவகையாக இருந்தது… அதான் அவள் அழைக்காமல் வந்து விட்டாலே…
புல்லட் பறந்தது அந்த மண்சாலையில்… கண்ணுக்கு எட்டிய வரை பச்சை பசுமையுடன் குழுமமாக காட்சியளித்தது வயல்; அதன் வரப்பு வழியே வண்டிய ஓட்டிச் சென்றவன்…
விவசாயப் பொருட்களைப் பராமரிப்பதற்காகவே கட்டிய அந்த சிறிய வயல் வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தவன், நேராகச் சென்று வயலில் கதிர் அறுக்கும் வேலையை மேற்பார்வையிடலானான்…
அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் விஜயைக் கண்டதும் முகத்தில் படர்ந்த புன்னகையுடன் அவனுடன் வம்பலத்துக் கொண்டிருக்க…
முகிலுக்குப் பற்றி கொண்டு வந்தது நாய்க்குட்டிக்கு புதிதாக முளைத்த காதல்; அதனால் ஏற்பட்ட பொறாமையில் கணவனோடு பேசுபவர்களைக் கடிக்க முடியாத நிலையில் புசுபுசு என மூச்சு வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்…
விஜயனுக்குப் பேச்சில் கவனம் ஒரு பக்கம் இருந்தாலும், மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவன் அவளின் அந்த உரிமைக்கோபம் பிடித்துப் போய்… எப்பொழுதும் சிறுநகை பூப்பவன், வாய் விரித்து முகம் கொள்ளாத வண்ணம் சிரித்தான்…
அப்பொழுதுதான் கவனித்தவன் போல்…
“என்ன சின்னக் குட்டி, இங்க என்ன பண்ற? காலேஜுக்குப் போகல…?” என உறவு முறையில் தெரிந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான்…
“இல்லை பெரிய மாமா, அம்மைக்கே மேல முடியல. மருந்து வாங்க காசு வேணும், இல்ல அதான் இன்னைக்கு நானே வந்துட்டேன்…!!” என அவள் கூறிட…
“வேலை பாக்குறது தப்பில்ல, ஆத்தா! படிக்கிற பிள்ளை படிப்பை விட்டுட்டு வந்து வேலை பார்க்கிறது தான் தப்பு. அம்மைக்கு மேல் முடியலைன்னா சொல்லக்கூடாதா? நான் பணம் கொடுக்க மாட்டேனா? இன்னைக்கு இத வச்சுக்கோ, நாளைல இருந்து நீ வர வேணாம். அம்மாவுக்கு எப்ப முடியுதோ அப்போ வர சொல்லு, அப்புறம் நான் கணக்கு பார்த்துக்குறேன்…!!” எனக் கூறியவன் பணத்தைக் கொடுக்க…
அதை மறுப்பில்லாமல் வாங்கிக் கொண்டவள், “மாமா, இன்னும் கொஞ்சம் வேலை தான் பாக்கி இருக்கு. அது ஆச்சு, இந்த வேலையும் சேர்த்து முடிச்சுட்டு மத்தவங்க கூடவே போய்க்கிறேனே…!!” என கோரிக்கை வைக்க விஜயனால் மறுக்க முடியவில்லை. வேலை அவ்வளவு கிடைக்கிறதே…
“சரி செய் சின்ன குட்டி…!!” என்றவன் மீண்டும் அவளிடமே, “வயல் வேலைக்கு வரப்போ இப்படித்தான் உடுப்பு போட்டு வரப்போற? பொன்னாத்தா, நீ பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது…?” என கண்டித்தான்…
“அவள் போட்டிருப்பது நாகரிகமான சுடிதார் தான், ஆனால் கீழே குனிந்து நிமிர்ந்து வயலில் வேலை செய்யும் போது அது அநாகரிகமாக மாறிவிடுமே! எத்தனை பேர் கண்கள் அதை நல்ல விதமாகப் பார்க்கும் என்று சொல்ல முடியாதே…!!” என முகில் நினைத்தது மெய் தானே…
விஜயேந்திரன் தன் சட்டையை கழட்டி அந்த பெண்ணுக்குக் கொடுக்கப் போகிறான் என முகில் எதிர்பார்த்துக் கொண்டிருக்க…
அவனோ விறுவிறுவென நடந்து சென்று வயல் வீட்டில் இருந்த ஒரு பழைய சட்டையைக் கொண்டு வந்து, அதை உடுத்திக்கொள்ளச் சொன்னான்…
முதலில் முகில் அதைச் சாதாரணமாகத் தான் எடுத்துக் கொண்டாள்…
நேரம் ஆக ஆக… திசை நான்கும் திரண்ட கார்மேகங்கள் இருட்டிக்கொண்ட வர, வேகம் வேத வேகமாக அறுத்த கதிர்களை எல்லாம் மழையில் நனையாமல் இருக்க அனைத்தையும் நன்கு கட்டி, மழைநீர் உள்ளே போகாதபடி பெரிய பை கொண்டு அதை மூடிவிட்டு வருவதற்குள் மழை சடசடவெனப் பெய்ய ஆரம்பித்தது…
வயலில் இருந்து சிறிது தூரத்தில் தான் வீடு இருந்தது என்றாலும், அதைச் சென்றடைவதற்குள் விஜயனும் முகிலினியும் நன்கு நனைந்து விட்டிருந்தனர்…
தன் சட்டையைக் கழட்டிப் பிழிந்து காயப் போட்டவன், பின்பு முகிலைப் பார்க்க அவள் அதே ஈரச் சேலையில் இருப்பதைக்கண்டவன்…
“உள்ளே இருக்கும் பீரோல என் சட்டை ஒன்னு இருக்கு, பாரு எடுத்துப் போட்டுக்கோ. என் மேல எல்லாம் ஈரம் இருக்கு, அங்க துடைக்கத் துண்டு இருக்கும், அதை அப்படியே எடுத்துட்டு வா….!” எனப் பணிக்க…
சரி என்றவள் புடவை முந்தானையைக் கழட்டி விட்டு விஜயனின் சட்டையைத் கையில் எடுத்தவள், உள்ளம் குறுகுறுக்க அவன் சட்டையை எடுத்து அதை ஆழமாகச் சுவாசித்தவள்… உடலில் ஒவ்வொரு செல்லிலும் அவன் வாசமே…
அவன் சட்டையை அணிந்து கொண்டவளுக்கு, அவள் கணவனே அணைத்தது போல் வெட்கம் கொண்டவள், பின் விஜயேந்திரன் ஈரத்துடன் நிற்பது நினைவுக்கு வரத் தாய் உள்ளம் கொண்டு பதறியவள் துண்டைத்தேட… அடுக்காக மடித்து வைக்கப்பட்ட வெண்மைத் துணிகளின் நடுவே நீல நிறத் துணி அவளை ஈர்க்க, அது என்ன எனப் பார்க்கும் ஆர்வத்தில் எடுத்துப் பார்த்தது ஒரு தாவணி…
பிரமாதமாகச் சொல்லி கொள்ளும் படி இல்லை என்றாலும், அந்தத் தாவணி பல காலமாகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவதை உணர முடிந்தது…
“யாருடையது இருக்கும்? ஒருவேளை குறிஞ்சியுடையதா இருக்குமோ? அதை ஏன் இவர் துணி நடுவுல மறைச்சு வைக்கப் போறார்…?” என யோசித்தவளை இடையிட்டான் விஜயேந்திரன்…
“இன்னும்மா துண்டு கிடைக்கல…?”
“ஆ, இதோ எடுத்துட்டேன், வரேன்…!” என குரல் கொடுத்தவள்… துண்டை தேட, பெரியதொரு சத்தத்துடன் இடியும் மின்னலும் முழங்க, சரியாக இருக்க…
“அம்மாஆ…!” என பயத்துடன் முகில் மர அலமாரியில் பதுங்கினாள்… சின்னத்திலிருந்து தனித்து வளர்க்கப்பட்டதால் மோசமான மனிதர்களை விட இடி, மின்னல் ஒன்றும் அவ்வளவு பயமுறுத்துவது இல்லை தான்… இருப்பினும் எதிர்பாராத சமயத்தில் பெருஞ்சத்தத்துடன் ஒலிக்க, பயந்துவிட்டாள் அவ்வளவே…
மெல்ல விழி திறந்தவளுக்கு வயிற்றில் சுரீர் என்று வலி எடுக்க, வயிற்றில் கை வைத்தவளுக்கு புத்தியில் ஏதோ ஒன்று உரைக்க, மீண்டும் அந்தத் தாவணியை எடுத்துப் பார்த்தவள் முகம் அப்பட்டமாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியது…
ஏனெனில் அது அவளுடைய தாவணியே தான்… எட்டு வருடங்களுக்கு முன்பு அவள் தொலைத்தது…
எப்படி இத்தனை வருடங்களுக்கு எத்தனையோ நினைவுகளோடு அழிந்து போனது மீண்டும் அவள் நினைவுகளுக்குள் வர, பல காரணங்களில் ஒன்று முக்கியமான காரணம்…
கோடை விடுமுறையில் தங்குவதற்காக அவளது தூரத்து அத்தை வீட்டுக்கு வந்தவள், பூப்பெய்திவிட்டதால் சின்னதாகச் சடங்கை நடத்தி, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று அவளது அத்தை தென்றல், மயில் கழுத்து பச்சை நிறத்திலும் இவளுக்கு மயில் நீல வண்ணத்திலும் மெல்லிய ஜரிகை இட்ட தாவணியை வாங்கித் தந்திருந்தார்… அதுதான் அவள் நினைவுக்கு வர முக்கிய காரணம்…
எப்படி எப்படி இது இவன் கைகளில் என யோசித்தவளுக்கு, கொஞ்ச நாள் முன்பு குறிஞ்சி கூறியது நினைவுக்கு வர சட்டென உறைந்து போனாள்…
எட்டு வருடங்களுக்கு முன்பாக விஜயேந்திரன் பார்த்த பெண்ணும் அவளும் ஒன்றா… அவன் தேடித் தேடி அலைந்து கிடைக்காமல், அவள் நினைவோடு வாழ்கிறேன் என்று சொன்ன பெண்ணும் தானா…
எப்படி இன்னொரு பெண்ணை மனதால் நினைத்து தன்னோடு காதலாக வாழ முடியும் என்று யோசித்து யோசித்துத் தலை வெடித்துப் போனவளுக்கு, இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்த்ததே இல்லை…
அந்த நிமிடம் இந்த உலகத்திலே அதிர்ஷ்டசாலி யார் என்று கேட்டால் அவளைத்தான் நிச்சயம் சொல்வாள்… எடை வலுவிழக்க இதயம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்… உடல் எல்லாம் காய்ச்சல் கண்டது போல் இருந்தது, ஆனால் அது மழையில் நனைந்ததால் என்று சொல்வதல்ல…
“கள்ளா…?? நான் யாருன்னு தெரிஞ்சது தான் தாலி கட்டுனீங்களா…??” என்றவளுக்கு உள்ளமெல்லாம் தித்திப்பு…
ஒன்றன்பின் ஒன்றாக ஏதேதோ நினைவுகள் எல்லாம் வர, காலையிலிருந்து விஜயனுடன் இருப்பவளுக்குப் பிற பெண்களின் நிழலைக்கூட அவன் மீது படராமல் பார்த்துக் கொண்ட விதமும், அவன் அணிந்த சட்டையைக்கூடப் பிற பெண்கள் தொடுவது தீது என ஒதுங்கித் தான் கொண்டவனும் அவளுக்கு உயர்ந்த கனவானாகத் தெரிந்தான்…
ஏகபத்தினி விரதனான அந்த ஸ்ரீ ராமனையும் விட ஒரு படி மேலாகத் திகழ்ந்தான் அவன்… இவனால் எண்ணத்தில் ஏதேனும் ஒரு பிற பெண்ணுக்குத் தீங்கிழைக்க முடியுமா…?? இனி நினைவால் கூடச் சந்தேகப்பட முடியுமா அவளால்…?? கண்ணில் கோர்த்து இருந்த நீரைத் தன் சுட்டு விரலால் சுண்டி விட்டாள்…
ஒரு முடிவு எடுத்தவளாக அந்தத் தாவணியைக் கையில் எடுத்தவள், அவள் போட்டிருந்த ரவிக்கை பாவாடை மீதே கட்டிக்கொண்டு விஜயேந்திரனுக்கு முன்னால் சென்று நின்றாள்…
அவளைப் பார்க்காமலே துண்டை வாங்கித் தலையைத் துடைத்தவன், நிமிர்ந்து பார்த்த மாத்திரத்தில் திகைத்துப்போனான்… தலை தட்டி குப்புற விழுந்தான்…
விழுந்தவன் விழுந்தது தானா, எழுவானா மாட்டானா…?? அவன் எங்கேயாவது விழட்டும், அடுத்து எங்களுக்கு ரொமான்ஸ் எபிசோட் வருமா வராதா… அதான் டார்லிங்ஸ்…

