கையில் இருந்த வெற்று காகிதத்தை வீசி எறிந்துவிட்டு, குழந்தையை வெறித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் தென்றல்…
அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே விளங்கவில்லை… ஏதோ ஒரு மாயச் சுழலுக்குள் சிக்கியது போல் இருந்தது… அவள் கையில் இருக்கும் வெற்று கடிதமும், அவள் இட்ட கையெழுத்தும் அவள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய தாயன்றே… யார் அவள்? எதற்காக கையெழுத்து வாங்க வேண்டும்? எல்லாமே ஒரே குழப்பம்தான்… ஆனால் அதைப்பற்றி சிந்தித்துச் செயல்பட இது நேரமல்ல…
“நாளைக்குத் தீர்ப்பு நினைத்து வந்த காரியம் ஈடேறுமா…?” பயம் வந்து ஒட்டிக்கொண்டது… மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை, அலைபாய்ந்து கொண்டே இருந்தது…
அப்போது அவள் அருகில் வந்த சகோதரன்…
“என்ன பண்ணப் போற…?” சகோதரன்
“தெரியல…ம்?!” தென்றல்
“உன் முடிவை கைவிடப் போறியா…?”
“நிச்சயம் அது மட்டும் நடக்காது…!!”
“அப்போ இதுக்கு என்னதான் வழி…?”
“எதுவா இருந்தாலும் இனி பின் வாங்கப் போறதில்ல… இந்த குடும்பத்தை ஒரு வழி பண்ணியே தீருவேன்…!” என கண்ணில் பழிவெறியை ஏற்றிக்கொண்டாள் பழையப்படி…
“சரி, நீ என்ன பண்ணாலும் உன் கூடவே இருப்பேன்…!” என சகோதரன் வேறு அவளுக்குப் பலம் சேர்ந்தான்…
எவ்வளவுதான் மென்பனித் துகள்கள் இயற்கையைச் சூழ்ந்து மறைக்க முயன்றாலும், ஆதவன் ஒருவன் விடியலைக் கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் பூமி சுழன்றது… எனில் நம்பிக்கை தானே வாழ்வின் ஆதாரம்…
எப்பொழுதும் போல் அன்று விடிந்தாலும் பூபதிகளின் வீட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை… முந்தைய நாட்களில் விளைந்த குழப்பம், அதிர்ச்சி, தவிப்பு, அதனால் ஏற்பட்ட வருத்தம் எல்லாம் உறைந்தே இருந்தது…
காலை எழுந்ததிலிருந்து தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது கலக்கம்; அன்றைய நாள் தீர்ப்புக்கு உரித்தானது… இது நாள் வரை இதுவா அதுவா எனத் தவித்த தவிப்பிற்குப் பதில் கிட்ட வரும் நாள்… அதற்கே ஆயிரம் முறை கடவுளைத் துணைக்கு அழைத்துவிட்டார் சாமுண்டி… தன் பேரன்கள் கறந்த பாலின் சுத்தம் அவர் அன்றி வேறு யார் அறிவார்? ஏதோ சோதனை காலம், இவர்கள் இப்படி நிற்க வேண்டியதாகிப் போயிற்று, ‘சொக்கா காப்பாத்துப்பா’ என மனமுருகி வேண்டியபடி நின்றவர், தம் மக்கள் வரும் சத்தத்தில் வெளியே வந்தார்…
“இந்தா சகுந்தலா…!” என அழைத்தவர் அவருக்குத் திருநீர் வைத்து, “நம்ம புள்ளைங்களுக்கு ஒரு பாதகமும் வராது, எல்லாம் சொக்கன் பார்த்துக்குவான், நீ எதுக்கும் கலங்காதே…!!” என கலங்கி நின்ற மருமகளைத் தேற்றினார் சாமுண்டீஸ்வரி… அதற்காக அவருக்குக் கலக்கம் இல்லை என்ற பொருள் அல்ல; தன் கலக்கத்தை மறைத்து பிறருக்கு நம்பிக்கை கொடுப்பவர்… பின்னே சும்மாவா, ரத்தினவேல் பூபதி குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண் அன்றோ அவர்…
மகன், மகள், மருமக்கள், பேரன், பேத்திகள் அனைவரும் வந்துவிட்டனர். அதன் பின்னே வந்தார் ரத்தினவேல் பூபதி… தன் மக்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர். “எங்கப்பா பெரியவர் காணோம்…?” என விஜயனைத் தான் கேட்டார்…
“அவன் காலையிலே ஏதோ முக்கியமான வேலைக்கு கிளம்பிப் போயிட்டான் ஐயா…!” என மகேந்திரன்…
“இன்னைக்கு போக அவசியம் என்னப்பா வந்தது…?” என ரத்தினவேல் புருவம் சுருக்கி கேட்க…
“ஏதோ முக்கியம் என்கிறதால தான் ஐயா போய் இருக்கான், அதெல்லாம் பஞ்சாயத்துக்குத் தான் வந்துடுவான், நீங்க கவலைப்படாதீங்க…!” என மகேந்திரன் கூறும் முன் முந்தி கொண்டு பதில் சொன்னது முந்திரி கொட்டை வீரம்…
“ஆமாம் தாத்தா, அவன் எங்க இருந்தாலும் பஞ்சாயத்துக்கு வந்துடுவேன் சொல்லிட்டு தான் போய் இருக்கான்…!” மகேந்திரன்.
“சரி சாப்பிடுங்க…!” என்றவர் பெருமூச்சு விட்டு தன் தட்டில் இருந்து உணவை கொரித்தார்…
அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தனர் தென்றலும் அவள் சகோதரனும் குழந்தையும்… அவர்களைப் பார்த்து முகத்தை வெட்டிக்கொண்டாள் குறிஞ்சி… மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அவளால் தன் உணர்ச்சிகளைக் கட்டி வைக்க முடியவில்லை…
“வாமா தென்றல், வந்து உட்கார்ந்து சேர்ந்தே சாப்பிடலாம்…!” என அவர் அழைக்க…
“இல்லங்க, பரவாயில்லை நாங்க சாப்பிட்டுட்டோம், நீங்க சாப்பிடுங்க… அதுவும் இன்னைக்கு தீர்ப்பு நாள், தாமதமாக வந்தா நல்லா இருக்காது, அதனால நாங்க முன்னாடியே கிளம்புறோம்… நீங்க நிதானமா வாங்க…!” என்றார்கள்.
“அதுக்கில்ல மா…?” என ரத்தினவேல் இழுக்க…
“அதான் சொல்றாங்க இல்ல ஐயா, அப்புறம் ஏன் அவங்கள புடிச்சு தொந்தரவு பண்றீங்க? போறேன் சொல்றவங்கள போக விட வேண்டியது தானே, என்னத்துக்கு புடிச்சு இழுத்துக்கிட்டு…?” என குறிஞ்சி முந்தி வந்து வெடுக்கென்று கூறியது ரத்தினவேலுவிற்கு ஒரு மாதிரி ஆகி போனது; அமைதியாகி போனார்… எதுவும் கூற முடியாத நிலை.
தென்றலுக்கும் அது ஒரு மாதிரியாகி போனது… அதற்கு மேல் நிற்க பிடிக்காமல் “அப்போ நாங்க முன்னாடி போறோம்ங்க…!!” என்றவள் அவர் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்…
அதோ இதோ என்று ஒரு வழியாக பஞ்சாயத்து தொடங்கி விட்டது; ஆனால் இதுவரை விஜயேந்திரன் வந்தபாடில்லை…
அனைவருமே அவனுக்காகத்தான் காத்து இருந்தனர்…
“டேய், என்னடா இன்னும் பெரியவன் வரல… பஞ்சாயத்து வேற தொடங்கியாச்சு டா… அப்படி எங்க தாண்டா போனான்…?” என வீர் கவலையாக கேட்க…
“தெரியல டா, நேத்து ராத்திரி வீட்ட விட்டு வெளியில் போனவன் இன்னும் இங்க வந்து சேரல…!!” என்ற மகனுக்கும் அதே கவலை தான்.
அதற்குள் கூட்டத்திற்குள் ஓடி வந்த பொடியன், “ஐயா விஜயேந்திரன் அண்ணா அனுப்பி விட்டார்… உங்கள பஞ்சாயத்து தொடங்க சொன்னாரு, அவர் மத்தியில வந்து சேர்ந்துப்பாராம்…!!” என தகவல் சொல்ல கூட்டத்திற்குள் சலசலப்பு எதிரொலித்தது…
“என்னடா இப்படி பண்றான்…?” மகேன் சலித்தான்… அவனுக்கே அது சரியாகப் படவில்லை.
“இருடா, எனக்கு என்னவோ பெரியவன் பெருசா ஏதோ பண்ணப் போறான் தோணுது…?” வீர்
“அப்படியும் இருக்குமோ… இருக்கும்…!!” என்றவன் மற்றவர்களோடு சேர்ந்து அங்கே நடப்பதைப் பார்க்க வேடிக்கை பார்க்கலானான்…
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீர் திடீரென…
“டேய் நல்லவனே, நான் தியாகி ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்டா…!!!” என கூறிய வீரின் முகத்தில் அந்தப் பூரிப்பு…
“என்னடா உளறுற…?” என மகேன்… திடிர்னு லூசு மாதிரி பேசினால் பதட்டமா இருக்குமா இல்லையா…
“உளறலடா, இன்னைக்கு எப்படியும் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரப்போறதில்ல… ஏன்னா விஜயேந்திரன் இன்னும் வந்து சேரல. அப்படினா நமக்கு சாதகமா எந்த சாட்சியோ அத்தாட்சியோ இல்லை… பஞ்சாயத்து நமக்கு தண்டனை கொடுக்கப் போறது உறுதி. அதுக்குத்தான் பேசாம நானே குற்றத்தை ஒத்துக்கிட்டு, அந்தப் பிள்ளைக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. எப்படி…?” என வெட்கத்துடன் சொன்னான் பாருங்க எப்பா சகிகல!
“ஏன்டா இப்படி…?” பீதியாகிப் போனான் மகேன்… பயபுள்ளைக்கு மந்திரிச்சு விடணும் போலயே!
“பின்ன என்னடா, பெரியவனுக்கு ஒரு பச்சை கிளி இருக்கு, உனக்கும் ஒரு மந்தாகினி. எனக்குத்தான் ஒன்னும் செட்டாகல, இப்படி ஏதாவது அமைஞ்சாத்தான் உண்டு. அதான் வாய்ப்பைப் பயன்படுத்திக்கப் போறேன்… ஒரு வாழ்விழுந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி ஆச்சு, அப்படியே நானும் செட்டில் ஆன மாதிரி ஆச்சு. எப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சேன் பார்த்தல்ல…??”
எத்தனை ஆனந்தம் அந்த கரடிக்கு!
“என்னத்த…?? நீ மாங்காய் அடிக்கிறியோ இல்லையோ, ஆனா உனக்கு இன்னைக்குப் பாடை உறுதிதான்! ஏற்கனவே அங்க தப்பு செஞ்சது நீயா நானான்னு பேச்சு போயிட்டு இருக்கு, இதுல நீதான் கன்ஃபார்ம் ஆயிட்ட! பூபதி குரூப்ஸ் கையால உனக்கு சங்குதான்… நாங்க எதுவும் பண்ணத் தேவை இல்லை, இதுவே போதும் உனக்கு…!!” என கூறிய மகேன், அப்போதுதான் கவனித்தவன் போல்…
“ஆமா, அது யாருடா மந்தாகினி? என்கூட ஏன்டா கோர்த்து விடுற…??”
“போடா போடா, எனக்கே சங்குன்னு சொன்னல்ல, போகப் போக நீயே தெரிஞ்சுப்பியா…???” என முகத்தைத் திருப்பிக் கொண்டது மூஞ்சூரு வீர்.
“அடேய்…!!” என இவர்களுக்குள்ளே நடந்து கொண்டிருந்த சம்பாஷனையைத் தடுத்தது அந்த குரல்…
“ஏப்பா, இப்படி ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பார்த்துகிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்? பஞ்சாயத்து ஆரம்பிங்க…!!!” என்றது ஒரு அருதப் பெருசு…
அதான் பஞ்சாயத்தை ஆரம்பிக்காம அங்க என்ன வெட்டிப் பேச்சு…?? யதுநந்தினி…
வாங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம், என்ன நடந்தாலும் நமக்கு என்டர்டைன்மென்ட் வேணும், அம்புட்டுதான்…!!



