நெஞ்சில் உறுத்திய தாலியை கையில் ஏந்தி, அதை வெறித்துப் பார்த்தபடி இருந்தால் முகிலினி…
ஆம், அவள் முகிலினி தான்…!!
தாலி கட்டி அழைத்து வந்தவர்கள் பால் பழத்திற்கு ஏற்பாடு செய்ய, அவர்களிடமிருந்து தப்பி அறைக்குள் வந்து பதுங்கிக் கொண்டாள் முகிலினி…
இவள் முகிலினி எனில், தென்றல் என்ற பெயர் வந்ததற்கு ஏதேனும் காரணம் உண்டோ?
ஆம், நிச்சயம் உண்டு…
தென்றல் முகிலினியின் உடன் பிறந்த சகோதரி… இவர்களின் தாய் தந்தை சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்… அழகான தூக்கணாங்குருவி கூட்டைப் போல வாழ்ந்து வந்த இவர்களின் குடும்பம், எதிர்பாராத விபத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போனது… தீப்பிடித்து எரிந்த வீட்டிலிருந்து பிள்ளைகளைக் காக்கவே தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர் அவர்களின் தாய் தந்தையர்…
துக்கம் அனுசரிக்க வந்த உறவினர்களோ… இரு சகோதரிகளைத் தங்களுக்கு பாரமாகவே கருதி ஆதரவு கொடுக்க மறுத்து அருகிலுள்ள மிஷனரியில் சேர்த்துவிட்டனர். அங்கேயே தான் அக்கா தங்கை இருவரும் தொகுப்பூதியத்தில் படித்து வளர்ந்தனர்… தனக்கென இருக்கும் ஒரே சொந்தமான தன் அக்காவை உயிராக நேசித்த முகிலினிக்கு… தென்றலுக்கும் அப்படியே…
கோடை விடுமுறையை கழிக்க மட்டும் அவ்வப்போது தூரத்து உறவினரான இலஞ்சிக்கு பக்கத்து ஊரில் வசிக்கும் அவர்களின் அத்தை ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள்…
ஆதரவற்ற அவருக்கும் இவர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்… ஆனால் அருகில் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் அவருக்கு அதில் யாரை குற்றம் சொல்ல முடியும்…
ஆசிரியர் பணி என்பது தென்றலுக்கு ஒரு பெரிய கனவாகும்… எப்படியோ அரும்பாட்டுப் படித்து முடித்தவள் ஆசிரியர் பயிற்சிக்குத் தகுதியானால்… அத்தையின் அறிவுரையால் பக்கத்து ஊரில் ஆசிரியர் பயிற்சிப் பணியில் சேர்ந்தாள். அதுவரை எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது…
அதன் பிறகுதான் தென்றலிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தினம் தொடர்பு கொண்டு இருந்தவள் தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பு குறையத் தொடங்கினாள். நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாயின, மாதங்கள் வருடங்களாயின; ஆனால் அவளிடமிருந்து எந்த ஒரு தகவலும் வந்து சேரவில்லை முகிலினிக்கு… எவ்வளவு முயற்சித்தும் தென்றலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை…
அவளுக்கு என்ன ஆனது, ஏதானது என்று தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான், தென்றல் ஒரு நாள் அவளுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தால், “விரும்பிய வாழ்வை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன், விரைவில் சந்திக்கலாம்…!!” என்று. அப்பொழுதுதான் முகிலினிக்கு மூச்சே வந்தது… தனக்குத் தெரியாமல் தென்றல் திருமணம் செய்து கொண்டது வருத்தம் அளித்தாலும், சகோதரி நன்றாக இருந்தால் சரி என்று அவளும் விட்டுவிட்டாள்…
ஒருவழியாக முகிலினி மேல்படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டுக்குச் செல்லத் தயாராக இருந்த சமயம், இடியாக அந்தச் செய்தி வந்து விழுந்தது…
தென்றலுக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அந்தச் செய்தி வந்தது… அதைக் கேட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஓடி ஓடி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவளுக்கு அங்கு காத்திருந்தது பேரதிர்ச்சி…
“அது தென்றலுக்கு ஏற்பட்ட விபத்தல்ல, அவள் தற்கொலை முயன்றுவிட்டாள்” என்பதுடன், அவள் நிறைவாகக் கர்ப்பிணியாக இருக்கும் செய்தியைக் கேட்டு, தங்கள் கூட்டுக்கு புதிதாக வந்த உறவை நினைத்து அழுதார்களா அல்லது சிரித்தார்களா என்றே தெரியவில்லை முகிலினிக்கு…
தென்றல் பிழைப்பாளா…?? மாட்டாளா…?? எனத் தவிக்க வைத்து, இருபத்தி நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைத்தாள் தென்றல். ஆனால், நிரந்தரமாக ஒரு புதிய வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டால் அவள்…
கையில் பச்சிளம் சிசுவையும் கோமாவில் இருக்கும் தென்றலையும் வைத்துக்கொண்டு முகில் பட்டப்பகலில் சும்மா இருக்க முடியாது.
தன்னுடன் பேசி விளையாடி, ஆடிப் பாடி மகிழ்ந்த ஒரு உறவு இப்பொழுது நடைபிணமாகப் படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்க்கப் பார்க்க முகிலுக்கு வருத்தமும் கோபமும் ஒருங்கே வந்தன…
தன் சகோதரியின் நிலைமைக்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடித்துப் பழிவாங்க வேண்டும் என நெஞ்சுறுதி கொண்டாள்…
தென்றலின் பொருட்களை அலசி ஆராய்ந்த பொழுதுதான் சில கடிதங்கள் அவளுக்குக் கிடைத்தன… அதில் இருப்பதை வைத்து ஓரளவு கிரகிக்க முடிந்தது இதுவே… “தென்றல் இலஞ்சியைச் சேர்ந்த பூபதி குடும்ப வாரிசு மூலம் காதல் என்ற பெயரால் ஏமாற்றப்பட்டு, அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள்” என்பது மட்டுமே… இதை அறிந்து கொண்ட மறுக்கனமே கையில் குழந்தையையும் துணைக்கு வந்தவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள், நியாயம் கேட்க…
அவள் தேடி வந்தது என்னவோ தன் அக்காவை ஏமாற்றிய ஒருவனைத்தான்; ஆனால் அங்கு வாரிசாக நின்றவர்களோ மூன்று பேர்… இதில் யார் அந்த கயவன் என முகிலால் எப்படி கண்டறிய முடியும்? ஒன்று, தென்றலே வந்து இவன் தான் அவன் என்று கை காட்டினால் மட்டுமே முடியும். அப்படி இருக்க, அம்மூவரில் ஏமாற்றியவனை எங்ஙனம் கண்டுபிடிக்க attempts செய்தாலும், அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக அவள் கையில் எடுத்த அஸ்திரம் தான் DNA பரிசோதனை… அவள் ஒன்று நினைத்து இருக்க, விதியோ வேறொன்று நினைத்ததால் இன்று விஜயேந்திர பூபதி கையால் தாலி வாங்கிக் கொள்ள நேர்ந்தது…
அடுத்து என்ன செய்வது…? என யோசித்துக் கொண்டிருந்த முகிலின் சிந்தனையை கலைத்தது சகுந்தலாவின் குரல்…
“அம்மாடி தென்றல், வெளிய வாமா…!!” என அழைத்தவர் அவளை நேராக அழைத்துச் சென்றது அந்த வீட்டின் பூஜை அறைக்குத்தான்… மொத்த பூபதி குடும்பமும் அங்குதான் இருந்தது.
“என்ன கண்ணு, நீ கல்யாணம் முடிச்சு கையோட போய் ரூம்ல உட்கார்ந்துகிட்டா எப்படி…?? நல்ல நேரம் முடியறதுக்குள்ள நடு வீட்ல விளக்கு ஏத்தனும், அப்புறம் நீயும் தம்பியும் பாலும் பழமும் திங்கணும், இன்னும் எவ்வளவு சடங்கு இருக்கு! சீக்கிரம் வா கண்ணு, நீதான் இந்த வீட்டு மூத்த மருமகள், முதல் மஹாலட்சுமி. இந்த குடும்பம் நல்லா இருக்கணும்னு வேண்டி கிட்டு வந்து இந்த குத்து விளக்கை ஏற்றுமா…!!” என சகுந்தலா வாஞ்சையாக அழைத்தார்…
முகிலினிக்கு உள்ளுக்குள் இருந்து பொத்துக்கொண்டு வந்தது…
இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனால் தான் அவள் தமக்கை அங்கு சுய நினைவு இன்றி, சுயமாக எழுந்து உடல் உபாதைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாமல், அதற்கும் பிறரைச் சார்ந்த ஒரு ஜடப் பொருளாகக் கிடக்கிறாள்… அப்படி இருக்க இந்த குடும்பம் நல்லா இருக்க அவள் வேண்டுமா…?? அத்தோடு அவள் விருப்பத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் தாலி கட்டி இழுத்து வந்துவிட்டால், உடனே இவள் “அன்பே ஆருயிரே” என உருகி அவனோடு குடும்பம் நடத்த வேண்டுமா…??
கோபம் கண்ணை மறைக்க, சகுந்தலா கையில் கொடுத்த தீப்பெட்டியைத் தட்டிவிட்டவள்…
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல ஹான்… மன்னிக்க முடியாத தப்பு அத்தனையும் செஞ்சுட்டு… நீங்க வந்து கூப்பிட்ட உடனே எல்லாம் மறந்து உருகி வந்திடணுமா… இதே நிலைமை உங்க வீட்டு பொண்ணுக்கு ஏற்பட்டாலும் இப்படித்தான் நடந்துப்பீங்களா சொல்லுங்க…???” என்ற முகிலின் கேள்விக்கு, அவன் விஜயந்திரனைத் தவிர அனைவரும் தலை குனிந்து நின்றனர்.
“அப்படி எல்லாம் இல்லை கண்ணு, இப்போ நீயும் எங்க வீட்டு பொண்ணு தான்மா…??” என சகுந்தலா சமாதானம் செய்ய முயல,
“போதும் தயவு செஞ்சு இந்த நடிப்பை இத்தோட நிறுத்துங்க, எரிச்சலா வருது….!!’ என சிடுசிடுவென்று பேசிவிட்டு, யாரையும் மதியாது அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.
முகில் பேசிவிட்டுச் சென்ற தினத்தில், முகம் வாடி நின்ற சகுந்தலாவிடம் வந்த விஜயேந்திரன், சகுந்தலாவை ஆறுதலாக அணைத்துத் தோளோடு நிறுத்திக்கொண்டவன், கண்கள் முகில் சென்று பூட்டிய அறையையும் அழுத்தப் பார்க்கத் தவறவில்லை.
தாயைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தவன், நேராகச் சென்றது முகிலைத் தேடித்தான்…
டம் டம் என்று கதவு உடையும் வரை தட்டித் தகர்த்தவன், தடாலடியாக உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டான் உள் பக்கமாக…
பூட்டிய அறையின் ரகசியம் விடியலில் தெரியும்… அப்போ இப்போ சொல்ல மாட்டேன், அப்படித் தானா… ச்சீஈ போங்கள்… எஸ்கேப்!



