முகிலே!! உன் முகவரி என்ன-29

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 07/Aug/2026 ◷ 7 min read

உரமேரிய தேகத்தில் சிறு கட்டிலுடன் கண்மூடி அசதியில் படுத்து இருந்தான் விஜயேந்திரன்…

கத்தி குத்து வாங்கியவனைத் துரித கதியில் மருத்துவமனையில் சேர்க்கவே, அதிக இரத்தப்போக்கைத் தவிர பெரிதாக வேறு எதுவும் இல்லை என இருபத்தி நான்கு மணி நேரத் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறி அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்…

கூடவே கொலைகாரர்கள் பற்றிப் போலீசிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது… எல்லாம் ரத்தினவேல் பூபதியின் அறிவுறுத்தலின் பேரில்தான்…

“எய்யா சாமி கோவிலுக்குப் பூஜை பண்ணப் போன இடத்துல என் பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…?? எந்தக் கொல்லி கண்ணு எம்புள்ளைங்க மேல பட்டுச்சோ… கம்பிரமா நடமாடிட்டு இருந்த பிள்ளையை இப்படி முடக்கிப் போட்டியே ஆண்டவா…?” என அரற்றினார் சகுந்தலா. கருவில் சுமந்தவளாயிருந்தே அவன் வலி அவருக்கும் தானே…

“சகுந்தலா, இப்படிப் புலம்பிப் புலம்பியே அவனைப் படுக்க வச்சிடாத, வா அவனை அவன் பொண்டாட்டி பார்த்துக்குவா. நாம போய் பெரிய சாமியார ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடலாம்…!!” சாமுண்டி

அவர்கள் சென்று வெகு நேரம் கழித்து கண் மலர்ந்தான் விஜயேந்திரன்… அதுக்காகவே காத்து இருந்தவள் போல் முகில் நொடியும் அவனை விட்டு விலகாமல் இருந்தாள்…

அவளைக் கண்டதும் “அம்மா எங்கே…?” எனத் கேட்டான்…

“அத்தையும் பாட்டியும் வெளியே போய் இருக்காங்க…!!” எனப் பதில் சொன்னாள் முகில்.

“குழந்தை…??”

“மலர் பெரியம்மா கிட்ட இருக்காங்க, உங்களுக்கு ஏதாவது வேணுமா? ஜூஸ் குடிக்கிறீங்களா இல்லை கஞ்சி பிசைந்து தரட்டுமா…?” அத்தனை பரிவு அவள் குரலில்…

“ம்ம்… ஜூஸ் போதும்…!!” என்றவன் சிந்தனையில் ஆழ்ந்தான்…

அவன் புருவ மத்தியில் சுருக்கத்துடன் அமர்ந்து இருப்பதே அவன் சிந்தனையில் இருப்பதை காட்டிவிட… அவள் அதை கலைக்க விரும்பாத போதும், அவன் காலையில் இருந்து எதுவும் உட்கொள்ளவில்லை என்பது நினைவு வந்து, முதலில் அவன் வயிற்றை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் விஜயனைத் தொட்டு அழைத்தால்… என்ன என்பது போல் பார்த்தவனிடம்…

“ஜூஸ்…!!” என நீட்ட அதை ஒரு கையால் வாங்கிப் பருகும் அவனைப் பார்த்தவளுக்குக் கண்களில் கண்ணீர் முட்டக் கொண்டு வந்தது… எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும் அவன் ஒரு கையால் சிரமப்பட்டுப் பழச்சாறு பருகுகையில் அவளுக்கு உடைந்து கொண்டு வந்தது கண்ணீர்…

அதைப் பார்த்து பதறியவன் “என்னச்சு?” என வினவ…

“ம்ஹும் ஒண்ணுமில்ல…!!” என கண்ணீரைத் துடைக்கத் துடைக்கத் பெருகி வந்து கொண்டே இருந்தது அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு முகிலின் கையைப் பிடித்துத் தன் பக்கம் அமரச் செய்தவன் வந்து கொண்டே இருந்தான்…

ஒற்றை விரலால் அவள் நாடியைத் தூக்கி, “ஏன்…?” எனத் கேட்க…

அவ்வளவுதான்; அவன் நெஞ்சில் சாய்ந்து கதறிவிட்டாள்; அவன் அடிபட்ட இடத்தைத் தவிர்த்துத் தான் சாய்ந்தாள்…

“பயந்துட்டேன் ஹுஉஉஉஉ..” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் அவன் மீதே கதறி அழ, அவள் கூறாத வார்த்தைக்கும் அர்த்தம் புரிந்தவன், மௌனமே வடிவாக முகிலின் முதுகை நீவி விட்டு ஆறுதல்படுத்தினான். வார்த்தைகள் அற்ற மௌனம் கூட மொழியாகக் காதலால் மட்டுமே முடியும்…

மெல்ல மெல்லக் கண்ணீரை அடக்கியவள், தன் கையால் அவன் கொண்ட காயத்தை நீவி விட்டுக்கொண்டிருந்தாள்… அதிலே அவன் வலி எல்லாம் விரட்டி விடுபடுவது போல…

எவ்வளவு நேரம் நீடித்ததோ இருவரின் மௌன நிலை; சகுந்தலா வந்து கலைக்கும் வரை இருவரும் கட்டுண்டு இருந்தனர்…

சகுந்தலா வரும் அரவம் கேட்டு மின்னல் விலகி எழுந்து கொண்டாள்.

“தம்பி, நீ தாலி கட்டுன நேரம் சரி இல்லையாம்ப்பா, தாலில தோஷம் தாங்கி இருக்குனு நம்ம குடும்ப சாமி சொல்றாரு… அதுக்கு பரிகாரமா மறு தாலி கட்ட சொல்லி இருக்கார்… உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லைனா நாளைக்கே வச்சிக்கலாமாபா…?” என்றவளின் மனது ஆறவில்லை; பரிகாரம் உடனே செய்து விட்டால் தான் நிம்மதி…

ஒரு முறை முகிலை பார்த்துவிட்டு, பின் சகுந்தலாவிடம் சம்மதம் சொல்லி…

அவ்வளவுதான், அவர் கால்கள் இரண்டிலும் இறக்கை கட்டிப் பறந்தார்… அந்தம் பந்தம் தகவல் கொடுத்து துரிதமாக வேலைகளைச் செய்தார்…

தாலி மாற்றும் சடங்கென்றே அதிகாலையிலேயே முகில் எழுப்பப்பட்டு, குளித்துத் தயாராகி, பட்டாடை உடுத்தி, ஈரத் தலையைத் தளர்த்தி, பூச்சுடி பொட்டு வைத்து மிதமான அலங்காரத்துடன் மணையில் அமர்த்தப்பட… வெண்பட்டு வேஷ்டியில் வந்து இறங்கிய விஜயனின் உறுதியான கரங்களால் தங்கத் தாலியை வாங்கிக்கொண்டாள்…

முன்பு அவசரக் கதியில் நடந்த விஜயனின் திருமணத்தைச் சமன் செய்யவே இந்தச் சடங்கை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து இருந்தனர்…

உற்றார் உறவினர் ஊரார் என அனைவரையும் அழைத்துவிடாவிட்டாலும், வந்து நிறைந்த முக்கியமான நபர்களாலே பூபதியின் இல்லம் நிறைந்த போனது…

காலையிலிருந்து வந்தவர்கள் யாவரும் சிறு ஓய்வு கூட அளிக்காமல், முகிலையும் விஜயனையும் ஆசிர்வதித்துச் சென்றனர்…

“ஏற்கனவே ஜோடி பொருத்தம் அம்சமா இருக்குனு சொல்றாங்க, இதுல கையில குழந்தையோட நின்னீங்கனா கண்ணு பட்டு போகும்… அதுவும் இல்லாம எவ்வளவு நேரம் தான் நீயும் குழந்தை வச்சிட்டு கஷ்டப்படுவ கொடு…!!” என சாமுண்டி குழந்தையை வாங்கிக் கொண்டார். அதனால் அவன் தேவை சரியாக வர நிவர்த்தி செய்ய முடியாமல் போக, பசியில் குழந்தை சிணுங்க ஆரம்பித்துவிட்டது…

விருந்துக்கு வந்தவர்கள் கைமாற்றி கைமாற்றி குழந்தையைத் தூக்க, குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிவிட்டது…

“தென்றல் பிள்ளை அழறான் பாருடா, பசி போல, பால் கொடு…?” என்க…

கை நீட்டி பிள்ளையை வாங்கிக்கொண்டவள் அறைக்குத் தூக்கிச் செல்லத் திட்டமிட…

“எங்க போறீங்க? குழந்தைக்குத் தாய்ப்பால் தானக் கொடுக்கிறீங்க…?” என கேட்டபடி வந்தார் சகுந்தலாவின் ஒன்றுவிட்ட அண்ணி உறவில் மிக முக்கியமானவரும் கூட…

“ஏன் சொல்றேன்னா, பிறந்த குழந்தைக்கு ஆறு மாசம் வரைக்கும் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு நம்ம கிரிக்குக் குழந்தை பிறந்தப்போ டாக்டர் சொல்லி இருக்காரு சகுந்தலா… அது குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குமாம், விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சுச் சொன்னாதான் சொல்லிக்கிறாங்க… இதெல்லாமே இவனுங்க இப்போதான் கண்டு பிடிக்கிறாங்க. ஆனால் அந்த காலத்திலே என் மாமியார் என் புருஷனுக்கு ஆறு வயசு வர தாய்ப்பால் தான் தந்தாங்களாம், அதான் மனுஷன் இப்போ வரைக்கும் வைரம் பாய்ந்த கட்டையா இருக்கார்…!” எனச் சொல்லும் போதே அத்தனை புரிப்பு அவர்கள் முகத்தில்…

“சரியா தான் அண்ணி சொன்னீங்க, நான் கூட என் பசங்களுக்கு மூணு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் கொடுத்தேன்… நம்ம காலம் வேற, இப்ப இருக்கிற காலம் வேற, நாமெல்லாம் அப்ப சாப்பிட்டது வேற, இப்போ இவங்க சாப்பிடற சாப்பாடு வேற… என்ன செய்ய அண்ணி…?” சகுந்தலா

“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா என்ன… நீ ஒன்னு கவலைப்படாத, ஆத்தா தாய்ப்பால் சுரக்கறதுக்கு நிறைய வழி இருக்கு, அதுக்கான லேகியம் எல்லாம் செஞ்சு கொடுத்து விடுறேன்… அதைச் சாப்பிடச் சாப்பிடப் பால் அபரிவிதமா சுரக்கும் பாரு…!” (

“சரி சரி, குழந்தை அழறான் பாரு, சீக்கிரம் பாலைக் கொடு. எப்படி கொடுக்கணும்னு நான் சொல்லித் தரேன்…!!” என வற்புறுத்தலில் திகைத்துப்போனாள் முகில்…

மருமகள் முழிப்பதைப் தவறாகப் புரிந்து கொண்டு, “அண்ணி, பிள்ளைக்குக் கூச்சமா இருக்கும், வாங்க அறைக்குக் கூட்டிட்டுப் போலாம்…!!” என சகுந்தலா அழைக்க, தட்டிப் பேச வழி இன்றி திகைத்து நின்ற சமையல் கை கொடுத்தல் குறிஞ்சி…

“அத்தை குழந்தைக்குப் பால் கொடுக்கிறது தானே, நாங்க பார்த்துக்கிறோம், நீங்க முதல்ல போய் வந்தவங்களை கவனிங்க…!!” என முகிலைக் காக்க முயற்சிக்க…

“வாடி என் பெருமனுஷி! நீ என்னடி ஏழெட்டப் புள்ள குட்டி பெத்த மாதிரி பேசிட்டு இருக்க? போ, வயசுப் பிள்ளையா லட்சணமா இரு. நீயும் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்த அப்புறம் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டா போதும், இப்போ போடி… அடி போடினா…??” என அண்ணியார் விரட்ட…

தனி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்ட முகில் விழி பிதுங்கி நிற்க… அவளைத் தள்ளிவிட்டு வந்து, பால் கொடுக்கும் சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்து, குழந்தைக்கு புகட்டச் சொல்லித் திணறித்தான் போனாள்…

அதற்குள் பிள்ளையோ பசியில் வீல் வீல் என்று அழத் தொடங்க… உண்மையைச் சொல்ல முடியாமலும், குழந்தையின் பசியை ஆற்ற முடியாமலும் முகில் தவித்தாள்…

பசியில் குழந்தை அழுது அழுது மூச்சு விடத் தவிக்கவும் பயந்துபோனாள்…

“என்னம்மா, குழந்தை இப்படி அழ விடுற? சீக்கிரம் கொடு. உனக்குக் கூச்சமா இருந்தா நாங்க எதிர் பக்கம் திரும்பிக்குறோம், சீக்கிரம் கொடு. பிள்ளைக்குத் தேம்பல் கானது பார், சீக்கிரம்…??” என உத்தரவிட்டு, சட்டமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டனர் இருவரும்…

முகம் சிவக்கும் வண்ணம் அழும் பிள்ளையைப் பார்க்க இவளது இதயத்தில் ஈட்டி இறங்கியது… வேறு வழி இன்றி, அவள் மலராத மொட்டைப் பிள்ளைக்கு அமுது ஊட்டினாள் பெறாத தாய்…

சுரக்காத மடியில் பிள்ளையோ பால் அமுது கிடைக்கும் என்று நம்பி, அவள் வெற்று மார்பை முட்டி முட்டி பால் அமுதைத் தேட… பாலுக்குப் பதிலாக ரத்தம் வடிந்தது அவள் நெஞ்சில்… குழந்தையை ஏமாற்றத்தில் அழத் தொடங்க… கதறியே விட்டாள் பெண்ணவள்… தனக்குத் தாய்க்குத் தாயாக நின்றவளின் பிள்ளைக்குத் தான் தாயாக இருக்க முடியாது என்ற துர்பாக்கியத்தை நினைத்து மேலும் கதறினாள்…

முகிலின் அழுகையில் என்னவோ ஏதோ என்று திரும்பிப் பார்த்து கேட்க, அதற்குள் அறையைப் பிளந்து கொண்டு உள்ளே வந்து நின்றான் விஜயேந்திரன்…

“நீங்கள் போய் வந்திருக்கவங்கள பாருங்க, பிள்ளையை நான் பாத்துக்குறேன்…?” என உற்றவனே சொன்ன பிறகு, எதிர்த்துப் பேசாமல் பெண்கள் இருவரும் முகிலைத் திரும்பிப் பார்த்த வண்ணமே சென்று விட, அவர்கள் சென்றதும் கதவை அடைத்தவன்… கையில் கொண்டு வந்த புட்டிப் பாலை நீட்டா வேகமாக வாங்கியவள் குழைந்தையின் பசியை ஆற்றினாள்… ஆனால் அவள் கண்ணில் சுரந்த கண்ணீர் மட்டும் நிற்காமல் ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டே இருந்தது…

முகிலின் இந்த நிலைகண்டு விஜயனுக்குச் சிறு எரிச்சல் கூட வந்தது… “எல்லாம் இவளாகவே இழுத்துக்கொண்டது என்று போதாத குறைக்கு, குழந்தையை வேறு அவள் விஷயத்தில் இழுத்து வைத்து அலைக்கழிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை…!!” அவனுக்கு

வயிறு முட்டப் பால் குடித்துவிட்ட மிதப்பில் தன் பொக்கை வாய் திறந்து குழந்தை சிரிக்க, அதன் பின் நிம்மதி வந்தது விஜயனுக்கும் முகிலுக்கும் மட்டுமல்லாமல்… சரியான சமயத்தில் விஜயனை அனுப்பி வைத்துவிட்டு, என்ன நடக்கிறது என அவர்கள் அறையில் திறந்து கிடந்த ஜன்னல் ஊடே பார்த்து நின்ற ரஞ்சனா மற்றும் குறிஞ்சிக்கும் தான்…

ஒருவாறு வந்த விருந்தினர் அனைவரும் விடைபெற்றுக்கொண்டு போயிருக்க, மற்ற வேலைகள் அனைத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டுத் தூங்கச் செல்லவே வீட்டு மனிதர்களுக்கு இரவு வெகு நேரம் ஆகிவிட்டது… விஜயேந்திரன் சொன்ன பிறகு குழந்தையையும் முகிலையும் தொந்தரவு செய்யவில்லை…

குழந்தையை உறங்க வைத்துவிட்ட பின்பு குறிஞ்சியைத் தேடிச் சென்றாள் முகில்… அவளும் ரஞ்சனாவும் முகிலைத் தான் எதிர்பார்த்து இருந்தனர்…

“வா முகிலு, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் காத்துக்கிட்டு இருந்தோம்…” என்றாள் குறிஞ்சி…

“சொல்லுங்க…?” என்ற முகிலிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் முழித்தனர் மற்ற இருவரும்…

“அது… சொல்றேன், தப்பா எடுத்துக்காத முகில். எங்களால இதுக்கு மேல இந்த டி.என்.ஏ விஷயத்துல உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு தோணல… நாங்க எவ்வளவு ட்ரை பண்ணாலும் அதுக்கு பலன் கிடைக்கப்போறது இல்லை… அவங்ககிட்ட மறைச்சு செய்ய முடியாதபடி… இத்தனை நாள் அவங்க கூட பழகுறதை வச்சு சொல்றேன், எனக்கு என்னமோ இவங்க மேல தப்பு இருக்கும்னு தோணுதுடி… இதெல்லாம் வேணாம் விட்டுடலாமே…?” என எதையும் மறைக்காமல் சொல்லிவிட்டாள் ரஞ்சனா…

முகிலுமே இதைப்பற்றி கூறத்தான் அவர்களைத் தேடிச் சென்றாள். அவள் விஷயத்தில் தேவையில்லாத இவர்களை இழுத்து வம்பில் மாட்டி வைக்க விரும்பவில்லை என எடுத்துக்கூறி விலகச் சொல்ல நினைத்தாள்… ஆனால் ரஞ்சனா கூறியதில்தான் உண்மை இருப்பதை உணர்ந்து கொண்டாள்; ஆனால் அவளால் இந்த விஷயத்திலிருந்து ஒதுங்கி கொள்ள முடியுமா…?!

“விஜயேந்திரன் அத்தான்” அப்படின்னு நான் சொல்லித் தெரியத் தேவை இல்லைன்னு நினைக்கிறேன், கூடவே இருக்க உனக்கே நல்லா புரிஞ்சிருக்கும்… அப்புறம் மகேந்திரன் அத்தான் கூடவே இருக்குற நானே அவர் கண்ணுக்குத் தெரியல, இதுல வெளிய இருந்து வந்துட்டாலும் க்கும்…!” என்று நொடித்துக் கொண்டவள்… அப்புறம் வீரன் குறிஞ்சி வாயை மூடி…

“ஆள் பார்க்க டான்பில்சர் மாதிரி இருந்தாலும் பக்கப் பழம்டி அவன், அதுகெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான்…!!” என்ற ரஞ்சனாவை மற்ற இருவரும் குறுகுறுவென்று பார்த்தனர்…

“ஓ, என்ன விட அவனப் பத்தி உனக்கு நல்லா தெரியுமோ… அவ்ளோ நல்ல அனுபவமோ…?” என குறிஞ்சி குறும்பாகக் கேட்க,

“எஸ், நல்லா தெரியுமே! ஆள் முரட்டு முட்டா பீஸா இருந்தாலும் செம பீஸ், நானே அவன் முட்டாள்தனத்துக்கு ஃபேன் ஆயிட்டேனா பார்த்துக்கோயேன்…!!” என கண்ணடித்துக் கூறிட,

“ஓஹோ, கதை அப்படிப் போகுதா? இந்த விஷயத்தை வீரன் கிட்ட சொல்லியே ஆகணுமே…?” என குறிஞ்சி கூற,

“ஐயோ சாமி, அவனுக்குத் தெரிஞ்சா வேற வினையே எனக்கு வேணாம், சும்மாவே அந்த அலப்பறை பண்ணுவான், இது மட்டும் தெரிஞ்சது என்னை வைத்துச் செய்வான்டி குறிஞ்சி, ப்ளீஸ் சொல்லாதே…?” என்று ரஞ்சி கெஞ்சுவது புரிந்துகொண்டு, சுவாரசியத்தை கொடுக்க அவளுடன் விளையாட நினைத்த குறிஞ்சி…

‘அப்போ முதல் வேலைய அவன் கிட்ட சொல்லிட்டுத்தான் மறு வேலை…!!” என்றவள் எழுந்து ஓட,

“ஏய்ய்ய் வேணாம் நில்லு… ஏய் ஓடாதடி…!!” எனத் துரத்திச் சென்றாள் ரஞ்சனா…

இவர்கள் விளையாட்டில் முகத்தில் மென்னகை பூக்க, அவர்கள் பின்னாலே நிதானமாகச் சென்றாள் முகில்…

குறிஞ்சியைத் துரத்தி வந்த ரஞ்சனா, அவளைப் பிடிக்கும் ஆர்வத்தில் கைகூப்ப எட்டியவள், தாவணியைப் பற்றி இழுக்க…

அது ஆண் இடத்திலிருந்த ரஞ்சனா குறிஞ்சியிடம் தவறாக நடந்து கொள்வது போல் சித்தரிக்க… கண்களில் தீ பிழம்புடன் பார்த்து இருந்த மகேனுக்கு நரம்பு புடிக்க நடந்து வந்தவன் ரஞ்சன், சட்டைக் காலரை இழுத்தான்…

ஆக அடுத்த பலியாடு சிக்கிடுச்சு, என்ன பிரியாணி போற்றுவோமா தங்கமே?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-29

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

16

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top