மௌனமாக இருக்கும் இருவரின் அமைதியும் முகிலின் கலக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது…
அவர்களைக் கலங்கிய விழிகளுடன் ஏறிட்டால் முகில்…
“இந்தா பிள்ளை, இப்போ எதுக்கு நீ கண் கலங்குற…? நீ செஞ்சது சரியா சொல்ல முடியாவிட்டாலும், நீ எந்த மாதிரி சூழ்நிலையில செஞ்சேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனா, எனக்கு உன்னோட இந்த கவலை எல்லாம் வீண்னு தான் தோணுது. அதை நீ புரிஞ்சுக்கிற காலம் சீக்கிரம் வரணும்னு அந்த கடவுளை வேண்டிக்கிறேன்…!!” என்றாள் குறிஞ்சி…
முகில் இருக்கும் மனநிலைக்குக் குறிஞ்சி விஜயனுக்கு ஆதரவாகவோ அல்லது முகிலைத் திட்டியே பேசி இருந்தாள். அவள் உடைந்து போவது உறுதி; ஆனால் அப்படி ஏதும் அவள் சொல்லாதது ஒரு பக்கம் நிம்மதியைத் தந்தாலும், விசித்திரமான வகையில் அதுவும் முகிலை பாதித்தது…
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் நிலையில் மூவருமே இல்லாததால், அப்படியே இருக்கட்டும்; கோவில் பூஜை முடிந்த பின்பு எதுவாகயிருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற ரீதியில் இருந்தனர்… பின்ன போட்ட பிளான் அம்புட்டும் ஊத்திக்கிச்சே, அதான்…
“முகிலு…??”
“ம்ம்ம்…?”
“உனக்கு பெரிய அத்தானைப் பற்றி என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை… அத்தான் பிடிச்சா உடும்புப் பிடி தான்… அவர் விஷயத்தில் முடிவு எடுத்துட்டாருன்னா யார் நினைச்சாலும் மாத்த முடியாது… ஏன், ஐயாவால கூட மாத்த முடியாது… அம்புட்டு நெஞ்சுருதி கொண்டவர்… அவர் ஒரு ஒன்னு சொன்னா சொன்னது தான்… கண்டிப்பா அதைச் செஞ்சு முடிக்கிற வரை ஓய மாட்டார். அப்படிப்பட்டவர், ‘உன்னை காதலிக்க வைப்பேன்’னு சொல்றாருன்னா நிச்சயம் அதுல அவருக்குள்ள உன் மேல ஏதோ இருக்கு… இதை ஏன் உன்கிட்ட சொல்றேன்னா, நீயே யோசிச்சு தெளிவா முடிவு எடுப்பாய்…!!” என்றவள், அதற்கு மேல் உன்பாடு என்று விட்டுவிட்டால் சொல்லித் தெரிவது இல்லை; காதல் உணர்ந்து அறிவது தான் காதல் என காதலின் இடைநிலையில் இருப்பவளுக்குத் தெரியாதா…
குறிஞ்சி கூறியதை முகில் வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டாள். அதன் விளைவாக விஜயனை கண்டாலே மிரண்டு ஓடுகிறாள்…
அதெல்லாம் விஜயேந்திரன் அறியாமல் இல்லை… இதுநாள் வரை அவன் அமைதியாக ஒதுங்கிச் சென்றது அவன் கொண்ட காதல் இருவரையும் சேர்த்து வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான்… ஒன்றல்ல இரண்டல்ல எட்டு வருடத் தவக் காதல் அவனுடையது…
“என்ன எட்டு வருட காதலா…??”
“ஆம்…!!”
கண்டதும் காதல் கொண்டதே மோகம் என்றில்லை… கண்ட நாள் முதல் அவள் ஒருத்தியை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழ்ந்து வரும் ஏக பத்தினி விரதனவன்… ஒருத்திக்காக மட்டும் வாழும் உயர்ந்த ஜாதி (ஆண்)…
அவள் யாரென்று அறியாது, முகம் கூட தெரியாது… எட்டு வருடமாக அவளைத் தேடி அலைந்தது ஏன்? அவள் கிடைக்காமல் போகலாம் என்கிற நிலையிலும், அவள் அன்றி பிற பெண்களை ஏற்க மாட்டேன் எனப் பெற்றவர்களையும் உற்றவர்களையும் வேதனைப்படுத்தியது ஏன்? வாழ்வென்பது அவளோடு மட்டுமே இல்லை எனில் தனிமரமாக நிற்பது என நெஞ்சு உறுதி கொண்டவனை, சகுந்தலாவின் கண்ணீராலும் கூட மாற்ற முடியவில்லை… அதன்படியே வாழ்ந்து வந்தவன் மேல் இரக்கம் கொண்டதோ அல்லது அவன் தவழ்வாழ்வைக் கண்டு மெச்சியோ, விதியே அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது…
அவள் தான் தன் எண்ணங்களின் நாயகி என ஐயம் திரிபுர முடியாத உண்மை தெரிந்த பின், சேவலாக முகிலை அமுக்கிக்கொண்டான் கள்ளன்… அவள் யாராக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி, அவளை அப்படியே ஏற்றுக் கொண்டான்… குழந்தைக்காக அவள் வந்து இருந்தாள் என்ற போதும், நிச்சயம் விதியே அவளை அவனிடம் சேர்த்துவிட்டது எனில், அது அவன் காதலின் வலிமை என்பதை வேறென்ன சொல்வது? அதே காதல் தான் அவளை அவளாகவே அவனிடம் ஒப்படைத்தும் அவன் ஏற்றுக் கொண்டதும்…
அதே காதல் தந்த நம்பிக்கையில் தான் அவள் தன்னை புரிந்து இயங்கி காதலிப்பாள் என்று அவன் நம்பியதும் அப்படியே…
ஆனால் இப்பொது இருக்கும் நிலைமையில் விஜயேந்திரன் ஒதுங்கிச் செல்வது தான் மாபாதகம் என்பதை அவன் கண்டுகொண்ட பிறகு அமைதியாய் போவது சாத்தியமில்லை… அவனாக வெளிப்படுத்தாது, அவள் அதைக்கண்டு கொள்ளப் போவதில்லை என்பதை விட அவள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை என்பதை அறிந்த பின், இனி அவளே விலகினாலும் இவன் விடப் போவதில்லை…விடும் எண்ணமும் இல்லை… அதிரடியாகவே அவளைத் துரத்தி வன்முறையாகவே அவன் காதலைச் சொல்லப் போகிறான்… அவளின் முழு நம்பிக்கைக்கும் உரியவனாக அவன் மட்டுமே ஆகப் போகிறான்… அவன் சொல்லிலும் செயலிலும் உள்ள காதலைப் படிக்க அவள் இன்னும் ஓர் ஜென்மம் எடுக்க வேண்டும்… (எதே அப்போ போட்டு தள்ள போறியா…?? ஹிஹி ஆமா)
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது பேய் என ஒரு பழமொழி உண்டே அதே போல் குறிஞ்சி கூறியதில் இருந்தே முகிலுக்கு விஜயனை பார்த்தாலே அவன் தன்னை மயக்கி மடக்கி விடுவானோ என்கிற பீதியிலே சுற்றினாள்… ஒன்றை நாம் வேண்டாம் வேண்டாம் என ஒதுங்கும் போது தான் நாம் அறியாதே அவற்றை நெருங்கி செல்கிறோம் என்னும் எதிர்மறை விதிகளுக்கு ஏற்ப… முகில் விஜயனை விலக விலக தான் அவள் மனதில் விஜயேந்திரன் வேர் ஊன்ற ஆரம்பித்தான்…
அன்று வழக்கம் போல் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்து இருக்க சகுந்தலா அவ்வீட்டின் மூத்த தலைமுறைக்கு உணவை பரிமாறிட… எதையோ யோசிக்கும் பாவணையில் முகில் விலகி நிற்க…
” அடி எந்த கோட்டையை பிடிக்கறதுக்குடி இப்படி நிக்குற…!” என சாமுண்டி வழக்கம் போல் பேரன் மனைவியிடம் வம்பு அளக்க…
“எல்லாம் உங்க பேரன் மனகோட்டைய பிடிக்கத்தான் இருக்கும் ஆத்தா…!!” என்று மலர்விழி சொன்னாள்… (அப்போ அப்போ ஒன்னு ரெண்டாவது பேசுமா? நீ இருக்கிறாயா இல்லையென்றே தெரிய மாட்டேங்குது!)
“என்ன மலரு, அப்படி சொல்லிட்ட! என் மவன் மனசு முழுக்க என் மருமகளுக்குத் தான், அதை நிரூபிக்கத்தான் சிங்கக்குட்டி மாதிரி ஒரு பேரனை பெத்து வச்சிருக்காளே…!!” என மருமகளுக்குப் பரிந்து பேசினார் சகுந்தலா…
“அதுவும் சரிதான், ஆனால் குழந்தை விஜயேந்திரனின் சாயலிலும் இல்லை, ஐயாவோட சாயலிலும் இல்லை. அவ்வளவு ஏன், நம்ம வீட்டு ஆளுங்க யாரோட சாயலும் இல்லை ஏன்…?!” என மலர்விழி சந்தேகமாக கேட்ட பின் தான் மற்றவர்களுக்கும் அந்த எண்ணமே தோன்றியது போலும்…
அதிலும் முகிலுக்கு மலர்வழி கூறியதைக் கேட்டு திக்கென்று ஆனது; பின்னே அவள் குற்றச்சாட்டின் அடிப்படையின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டதல்லவா… தன் மருமகள் முகம் வாடுவதைப் பார்க்க சகியாமல்… “அதெல்லாம் ஒண்ணுமில்ல மலரு, பேரன் அம்மா வீட்டு சாயலப் போல இருக்கான், பாரு கண்ணு மூக்கு கூட நம்ம முகிலுது போலத் தான் இருக்கு…!!” என்றார் சகுந்தலா…
“என்னவோ அண்ணி, நீங்க சொன்னா சரிதான்! அம்மாடி, முகில பையனத்தான் உன்னை மாதிரி பெத்துட்ட; அடுத்து பெத்துக்கிறதையாவது எங்க விஜயன் சாயலில் பெத்துக்கொடு…!!” என மலர்விழி கூறியதும், முகிலின் கைகள் அவள் வயிற்றைத் தன்னிச்சையாகத் தடவியது. கண்கள் இயல்பாய் விஜயனைப் பார்த்தன; அவனும் அவளைத்தான் உயிரைத் துளையிடும் பார்வையால் பார்த்துக்கொண்டிருந்தான்…
இருவரின் பார்வையும் காந்தம் போல் ஒன்றையொன்று கவ்வி நின்றது எவ்வளவு நேரமோ… ஆனால் சாமூண்டியின் குரலில் நடப்புக்கு வந்தனர்…
“அம்மாடி, இவங்க ரெண்டு பேரும் பார்த்துகிறத பார்த்தா ஒன்னு ரெண்டோட நிக்காது போலயே! அப்புறம் சகுந்தலா, உன் பாடுதான்… போ திண்டாட்டம் போ…!” என சாமுண்டி இருவரையும் பார்த்துச் சொன்னாள். முகிலுக்கு “ஐயோ…” என்று இருந்தது; அவள் அவசரமாக மறுத்துப்பேச வாயைத் திறக்கும் போதே…
“அது என்ன அத்தை அப்படி சொல்லிட்டீங்க? என் பிள்ளைங்க எல்லாம் எப்பவும் சந்தோஷமா இருக்கணும், வீடு நிறைய பேரன் பேத்திங்களோட நிறைஞ்சி இருக்கணும், அதை நான் கண்ணார பார்த்து குளிரணும், அதுலேயே என் ஜென்மம் ஈடேறிடும் அத்தை…!!” என்ற சகுந்தலாவை கண் வாங்காமல் பார்த்தார் அவரின் ஆசை கணவர் ராஜவேல் பூபதி… இந்த மெல்லிய குணம் தானே அவரை கட்டி வைத்திருக்கிறது. சகுந்தலா ஒரு நல்ல மருமகளாகவும், ஒரு நல்ல மனைவியாகவும், சிறந்த தாயாகவும், இப்பொழுது மருமகள் மெச்சும் மாமியாராகவும் இருப்பதில் ஏகப் பெருமை அவரிடம்…
“சரிமா, உன் மருமகளை நான் ஒன்னும் சொல்லல. வெளி வேலைக்கு கிளம்ப எல்லாம் உட்கார்ந்துட்டு இருக்காங்க, பாரு சீக்கிரம் அவங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லு…?” என்ற சாமுண்டி. தன் கணவன் தட்டில் காலியாகும் பச்சை நிறச் சட்டினியை மீண்டும் நிரப்பி கொண்டு வந்தார். குறிப்பறிந்து பரிமாறும் மனைவியைக் கண்டு கண்கள் கனிந்தன ரத்தினவேல் பூபதிக்கு…”
முகில் விஜயனுக்கு உணவு பரிமாற… மகேந்திரனுக்கு வைக்க என பாத்திரத்தை சகுந்தலா கையில் எடுக்க, ஓடி வந்து அதை வாங்கிக்கொண்டாள் குறிஞ்சி… “கொடுங்க அத்தை, மகேன் அத்தானுக்கு நானே வைக்கிறேன்…!” என்றதும், சகுந்தலா மகனைப் பார்க்க அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, சகுந்தலா மறுபேச்சின்றி குறிஞ்சியிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தார். மற்றவர்களைப் பார்க்க, அவர்களும் அர்த்தம் பொதிந்த பார்வையுடன் சகுந்தலாவை எதிர் கொண்டனர்…
விஜயனுக்கும் மகேந்திரனுக்கும் பெண்கள் பரிமாறுவதைப் பார்த்த வீர்க்கு, அடி வயிற்றில் எரிச்சல் எடுத்து மூக்கு, வாய் வழியாகப் புசுபுசுவெனப் புகை விட்டுக் கொண்டிருந்தான்…
“அவனுக்கு ஒரு ஆள் இருக்கு, எனக்கு ஒரு ஆள் இல்லையே! இதையெல்லாம் கேட்கக் கூட ஒரு ஆள் இல்லையே! I am feeling of Arabia…??” என வாய்க்கு வந்ததை வைத்துப் புலம்ப…
“க்கும் இவனுக்குக் கிடைச்சாலும் அப்படியே சும்மா கிழிச்சி தள்ளிடுவான்…!” என சாமூண்டி அவனை வார்…
“இந்தா பாரு ஈஸு, என் இமேஜ் டேமேஜ் பண்றது வேலையா வெச்சுட்டு இருக்க நீயே… வேணா பாரு, ஒரு நாள் இல்ல ஒரு நாள் எவனையாவது இழுத்துட்டு வந்து நிக்கப் போறேன்…!” என வீர் கூறியதும்…
உணவு அருந்தி கொண்டு இருந்த ரஞ்சனாவிற்குப் புரை ஏறி கண் கலங்கி விட்டது… “பார்த்து மெல்ல மெல்லடா பொடியா… நான் எனக்கு மச்சானா எவனையாவது இழுத்து வந்து நிக்கப் போறேன் சொன்னதுக்கே இப்படியா…??” என புருவத்தை ஏற்றி இறக்கித் கேட்ட அழகியல் கலந்திருந்தது அவன் செய்கை…
“நாயே, ஒரு பொண்ணைப் பிடிச்சாலும் பரவலப் போயும் போயும் உன் புத்தி எப்படிப் போகுது பாரு… கடைசி வரைக்கும் உனக்கு அந்த கரளா கட்டை தாண்டா…??” என சாமுண்டி அவனுக்கு வசைபாட…
“நீ போ கிழவி! உன்னை விட அம்சமா, அழகா, அடக்கமான பொண்ணா இதோ இவனை மாதிரி ஒரு பொண்ணைப் பிடிச்சி காட்டுறேன்…!” என ரஞ்சனாவை நோக்கி கை காட்ட அவளுக்குப் பக் என்றானது…
“என்ன இவன் வந்ததிலிருந்து என்னையே சொல்லிட்டு இருக்கான்… போட்ட வேஷம் கலைஞ்சி போச்சா…??” என அருகில் கண்ணாடி எனப் பளபளக்கும் தட்டை எடுத்துத் தன் முகத்தைப் பார்க்க, பெரிதாகக் காட்டி கொள்ளும் படி ஒன்றும் இல்லை என்பதைத் தெரிந்த பின்னே அமைதியாகினாள்; அதற்கும் அவன் விட்டால் தானே…
“நீ வாடா பொடியா, இவங்கள விட்டா நமக்கு வேற ஆள் இல்லையா என்ன…!! உனக்கு நான், எனக்கு நீ என்று மாறி மாறி பரிமாறிப்போம்…!!” என ரஞ்சனாவை அருகில் இழுக்க…
“ஆத்தி, இவன் என்னமோ செய்ய முடிவு பண்ணிட்டான். இனி இங்க இருந்து இவன் கிட்ட சிக்கி சின்னாபின்னமாகும் முன் ஓடிடுவோம்! நான் வரல…!!” என எழுந்தவள் வீர்க்கு எதிராக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு பெருமூச்சு விட, கண்ணில் கல்மிஷத்துடன் வீர் அவளைப் பார்த்து இருந்தான்…
குழப்பமான மனநிலையுடன் முகில் விஜயனுக்கு உணவை பரிமாற, அவளை மட்டுமே கவனித்து இருந்த விஜயேந்திரனின் கை, எதையோ எதார்த்தமாகத் தேடுவது போல் முகிலின் இஞ்ச் இடைவெளியில் தெரிந்த இஞ்சி இடையை மெல்ல வருடினான்…
எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு முதலில் அது கருத்தில் படவில்லை… மென்மை வன்மையாக மாறவும் திட்டுக்கென்று தூக்கி வாரிப்போட விஜயனைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்து எதுவுமே நடப்பது போல் என்ன என்றான்… அவளை இல்லை என்னும் விதமாகச் கூறியவள் நடப்பிற்கு வர, அவளை இயல்பாக இருக்க அவன் விட்டால் தானே…
பரிமாறும் போது இடையில் கிள்ளுவது… வேண்டுமென்றே பொருளைக் கீழே தட்டிவிட்டால் அவள் எடுக்கச் செல்லும் போது பசக் பச என முத்தமிடுவது என்பன போன்ற சேட்டைகளால் முகிலை முழி பிதுங்க விட்டான் அவள் கணவன்… நல்ல வேளையாக விஜயேந்திரன் கடைசியாக அமர்ந்து இருந்ததால் அவன் செய்யும் சேட்டைகளை பிறர் காண வாய்ப்பு இல்லை, அதைத் தெரிந்து தானே அவன் அவ்வளவும் செய்கிறான்…
முகில் இடையைத் தழுவி, ஆணின் கரமோ விட மாட்டேன் எனச் சண்டையிட்டு அழுந்து படுத்து, அவள் மடிப்புச் சதையை பிடித்துப் பிசைய, உணர்ச்சியை முகத்தில் காட்டாது இருக்க முகில் பெரும்பாடு பட்டுப்போனாள்… கண்ணில் இறைஞ்சலுடன் கணவனைப் பார்க்க… அவன் வேண்டும் என்றே வதைக்க, “ப்ளீஸ் வேணாம், எல்லாம் இருக்காங்க” என இறைஞ்சினாள்…
“அப்போ நீயே ஒரு முத்தம் கொடுத்து விட்டுடுற…” என கராராகக் கேட்க அவள் மறுக்காமல், “மாட்டேன்” எனச் சொல்ல…
“உன்கிட்ட தான் கேட்கிறேன், அந்த காரச் சட்னியை வைக்க முடியுமா முடியாதா என்று…?” என வேண்டும் என்றே விஜயேந்திரன் உரக்கப் பேச…
“ஏண்டி அங்க என்ன வெட்டி முறிக்கிறவ? என் பேரன் கேக்குறது காதுல விழல, சீக்கிரம் அவன் கேக்குறதக் கொடுடி…!!” என சமையல் தெரியாமல் சாமுண்டி அவளை விரட்ட…
“அதான் ஆத்தாவே சொல்லிட்டாங்க இல்ல, இன்னும் என்ன தயக்கம்? கொடுடி…!!” என விடாப்பிடியாக அவள் விரல்களில் தன் விரலை கோர்த்து, அவளை நழுவ விடாமல் சிறை வைத்துக் கொண்டான் கள்ளன்…
அவள் திருதிருவென முழிக்க… “முழிச்சு முழிச்சு மூடைய கிளப்பாதடி, அப்புறம் வேற எதையாவது கேட்டு வைக்கப் போறேன்… ??” என சரசமாகக் கூறியவனை கண்டு பதறிப் போனவள், வேறு வழி இன்றி சட்னியை எடுத்து அவனுக்குப் பரிமாறுவது போல் நன்கு குனிந்தாள். விஜயேந்திரன் கன்னத்தில் முத்தமிட குனிய, அவனோ வேண்டும் என்றே அவள் முத்தமிட வரும் போது கன்னத்தை உயர்த்தி இதழ்களை இணைத்தான்… அதை எதிர்பாராத முகில் பதறி விலக, கையில் இருந்த சட்னி விஜயேந்திரன் மீது தவறி கொட்டி விட்டது…
“அச்சச்சோ …!! இப்படி ஆகிடுச்சே …!! என்ன முகிலை பார்த்து பண்ண கூடாத…?? விஜயேந்திரன் விடுப்பா தெரியாம பட்டதுக்கு …!!” என ஆளாளுக்கு அவர்களுக்கு ஏற்ற மாதிரி வருத்தம் தெரிவிக்க…
“பரப்ப நான் துடைச்சிட்டு வேற துணி மாத்திட்டு வரேன்…!!” என்றவன் முகிலை முழுங்கி விடும் பார்வை பார்த்து கொண்டே உடை மாற்ற சென்றான்…
பெரியவர்கள் அனைவரும் உணவை விரைவாக முடித்துக் கொண்டு எழுந்து சென்றுவிட, அங்கு எஞ்சியிருந்தது இளையவர்கள் மட்டுமே…
எனவே சகுந்தலா பெண்களை அமர சொல்லி அவர்களுக்கு பரிமாற, ஆண்களுக்கு எதிர்புறம் பெண்கள் என அமர்ந்து இருக்க…
ஆடை மாற்றி கொண்டு வந்த விஜயனும் ஆண்கள் வரிசையில் அமர்ந்து கொண்டான்; ஆனாலும் அவன் பார்வை மொத்தமும் முகிலிடம் மட்டுமே இருந்தது… உணவோடு சேர்த்து தன் மனைவியையும் பார்வையால் விழுங்கினான் விஜயேந்திரன்…
விஜயனின் பார்வை தன்னைத் துளைப்பது போலத் தட்டில் இருந்து தலையை உயர்த்தாமலே முகில் உணர்ந்தாள்… மெல்லத் தலையை உயர்த்தாமலேயே கண்களையே தூக்கிப் பார்க்க… அதற்காகவே காத்திருந்தவன் போல் பிறர் அறியாமல் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுச் சிரிக்க, அவள் டக்கென்று தலையை குனிந்து கொள்ள, இதுவே தொடர்கதையாகிப் போக…
முகில் தான் திண்டாடிப் போனாள்… “ஏய் ரஞ்சு… ரஞ்சுஉஉ…?”
“என்னடி..?” என ரஞ்சனா, வீரிடமிருந்து தன் கவனத்தைத் திசைதிருப்பிய தோழியிடம் கடுப்புடன் கேட்க…
“என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாருடி…?” என குறைப்பட…
“யாருடி…?” ரஞ்சனா…
“அவர்தான்டி…??” என்ற முகிலுக்குத் தொண்டை வரை வந்த வார்த்தை சிக்கிக் கொண்டு தவித்தது…
“ஓ உன் புருஷனா…!!” எனச் சொல்ல, முகில் அவளை முறைக்க…
“என்ன முறைச்சு என்னடி? ஆகப் போது அவர் கட்டுன தாலி உன் கழுத்துல தானே இருக்கு… அதை விடு, இப்போ அவர் உன்னை பார்க்கிறதால என்ன வந்துச்சு…?” ரஞ்சனாவிற்கு மெய்யாகவே விளங்கவில்லை…
“நீ என்னடி இப்படி கேக்குற? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்தது உனக்கு தெரியும் தானே? அப்புறம்.. அப்புறம் இப்படி உத்து உத்து பார்த்து வச்சா நான் என்ன பண்றது..?” என ஒன்றுமே தெரியாதவள் போல் சொன்ன முகிலை வினோதமாகப் பார்த்தாள் ரஞ்சனா…
முகிலை உற்றுப் பார்க்க அவள் கண்ணக் கதப்புகளில் ஏறிய சிவப்பு உணர்த்திய செய்தியைக் கண்டாள்… ஆனால் அதை அவளே உணராத நிலையில் தான் எடுத்துச் சொல்லி, அவள் வேறு விதமாக முடிவெடுத்து விட்டால் என்ன செய்வது? எனவே அவளே உணர்ந்து புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள். முகிலிடம், “அவர் பார்த்தா உனக்கு என்ன? நீ ஏன் அவரைப் பார்க்கிற? பேசாம சாப்பிடுடி… என்னை தொந்திரவு பண்ணாத…!!” என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் ரஞ்சனா…
“ப்ச் போடி…?” என்ற முகில் முகத்தைத் திருப்பித் தந்தாலும், விஜயேந்திரன் என்ன செய்கிறான் என்று ஓரக்கண்ணால் பார்த்தவள் திகைப்பின் உச்சிக்குச் சென்று வந்தாள்…
ஏனெனில், விஜயேந்திரன் முகிலை மோகம் பொங்கப் பார்த்தபடி நிறுத்தி, நிதானமாக அவன் ஒவ்வொரு விரல் இடுக்கில் இருந்த உணவைச் சுவைப்பது போல் இருந்தாலும், அதன் அர்த்தம் அவள் மனையாள் அன்றி வேறு யாரும் அறிந்திட வாய்ப்பு இல்லை…
மூச்சு விட மறந்தவள் முகம் குங்குமத்தை சூடி கொள்ள… “பொறுக்கி…!” என வாய் விட்டு முனகிக் கொண்டவளுக்கு, இரவில் அவன் விரல் கொடுத்த சுக வேதனை நினைவுக்கு வர, அடி வயிற்றில் ஆயிரம் கோடி பட்டாம்பூச்சிகள் பறந்தன…
விஜயனின் கண்கள் காதல் மகுடி வாசிக்க “ம்மாஹா!!” என தன்னை அறியாது முனகி விட்ட பின்னே, அந்தப் பொல்லாத கணவன் அவளை நிரம்ப ஆட்டி வைப்பதை உணர்ந்து அவனை முடிந்தவரை முறைக்க விஜயனுக்கு, முகத்தில் குடி கொண்ட குறுநகை விரிந்து முகம் கொல்லாத வண்ணம் புன்னகையாக மலர முகிலைத்தான் பார்த்தான்… அதன் வீரியம் தாங்காமல் இம்முறையும் முகிலே பின்வாங்க நேர்ந்தது…
“ஏய், என்ன பார்த்து சிரிச்சிட்டே இருக்காங்கடி? எனக்குக் கடுப்பா வருதுடி…?” என முகில், “எங்கே அவன் வசீகரப் புன்னகையில் வீழ்ந்து விடுவோமா..” என்கிற பயத்தில் புலம்ப, ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் ரஞ்சனா இல்லையே… “ஏய், என்னடி அமைதியாகவே இருக்கே…??” என ரஞ்சனாவே திரும்பிப் பார்க்க, அவள் ஆள் அங்கில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், சரி குறிஞ்சி இடம் கூறலாம் என்று திரும்பிப் பார்க்க, அவளோ ரஞ்சனாவை விட மோசம்… உணவை கைகளால் அளந்து கொண்டு மகேந்திரனை கண்களால் கபளிக்கரம் செய்து கொண்டிருந்தாள்…
“சீ மோசம்டி ரெண்டு பேரும்…??” எனச் சொல்லிவிட்டு, விஜயனைப் பார்க்கக் கண்களில் தேடலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்… அவன் தேடுவது அவள் காதலைத்தான் எனச் சொல்லித் தான் தெரிய வேண்டுமா…??
முகிலுக்கு அது புரிகிறது… அவளுக்கு மட்டும் ஆசை இருக்காதா? “என்ன துறவறம் பேணும் வயதா? அவளுக்கு அன்பு கணவன் தோள் சாய்ந்து ஆறுதல் தேட ஆசை தான்… ஆனால் அவள் இருப்பது குருஷேத்ரத்தில் அல்லவா? யார் பக்கம் உண்மை என அறியாமல், அவள் மனம் விஜயனை ஏற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவித்தது. அவன் கண்கள் காதல் கொண்டு யாசிக்கையில், அதைத் தர முடியாத நிலையில் அவள் மனம் படும் பாடு அவளுக்கே தெரியும்… அவளுக்குத் தேவை அவள் கணவன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும்… அவள் எதிர்பார்ப்பு பலிக்குமா…??
அவன் எதிர்பார்ப்பும் காதல் தான், இவள் எதிர்பார்ப்பும் காதல் தான்; ஆனால் அதற்கு அவர்கள் வரையறுத்த வார்த்தைகள் தான் வேறு வேறாக இருக்கின்றன, தவிர அர்த்தம் எல்லாம் ஒன்று தான் என்பது எப்போது இவர்கள் புரிந்து கொள்வார்கள்? அட, புரியவில்லை என்றால் விட்டுவிடுவோமா? நாம் நூறு எலுமிச்சை பழங்களைப் போட்டு விளக்கி மாட்டோம்…

