முகிலே!! உன் முகவரி என்ன-30

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 08/Aug/2026 ◷ 7 min read

காலையில் விழாவில் மெல்லிய ஜரிகை இட்டு, மிதமான ஒப்பனையுடன், கூந்தலில் மல்லிகைச் சரத்துடன் வந்த குறிஞ்சி, மகேந்திரனின் மனதை வெகுவாகக் கவர்ந்தாள்…

அவளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாலோ என்னவோ… தீராத ஆசையுடனும் வேட்கையுடனும் குறிஞ்சியை அணுகுவது போல் கனவு வர… விருட்டென்று எழுந்து கொண்டான் மகேந்திரன்… தலையை உலுக்கி கனவை விரட்டி நிஜத்திற்கு வர முயற்சித்தவன் மீண்டும் படுத்து உறங்கப் பார்க்க… விட்டாள் தானே அந்த காதல் ராட்சசி, மீண்டும் மோகப் பார்வையுடன் மோகினி வேடத்தில் வந்து வதைக்கவும், படக்கென்று எழுந்து அமர்ந்துவிட்டான், ஐயோ…!!

“கண்ண மூடுனாதானடி, வருவ போ போ! இன்னைக்கு நைட்டு முழுக்க தூங்காம சிவராத்திரி கொண்டாடப் போறேன்…!” என்றவன் அறைக்குள் நடை பயின்றான். அதுவும் விரைவில் சலித்து, “சரி கீழே இறங்கிச் சென்று காற்றாட நடப்போம்” என்று இறங்கி வந்தவன் கண்ட காட்சி தான், ரஞ்சன் குறிஞ்சியைத் துரத்திச் சென்று அவள் தாவணியை இழுத்து அவளை மானப் பங்கம் செய்வது போல் இருந்தது… ரத்தம் செந்தழலெனக் கொதித்து, கண்கள் அவனை மிருகமாக மாற்றியதை உணர்த்த… நாலே எட்டில் தாவி வந்தவன்…

ரஞ்சன் காலரைப் பிடித்து இழுக்க, அதில் தடுமாறி மகேந்திரன் மீது விழுந்தவனை, கோபமாகத் தள்ளிவிட்டான்…

“யாருடா…?” எனத் திரும்பிப் பார்த்த ரஞ்சன்…

“ப்ரோ, நீங்களா? இந்நேரத்துல இங்க என்ன பண்றீங்க ப்ரோ…?” எனக்கேட்டுக் கொண்டே மகேந்திரனின் பிடியில் இருக்கும் தன் காலரை உருவப் பார்க்க… முடிந்தால் தானே… காலர் கிடைத்த அவன் கையில் ரஞ்சனின் கழுத்து மட்டும் கிடைத்திருந்தால், கோழித் தலையைத் திருகுவது போல் திருகி எடுத்து இருப்பான் என்று அறியாமல் போனான் அவள்…

“**** நாயே! அவள் தாவணியைப் பிடிச்சு என்னடா பண்ணிட்டு இருக்க…?” தீக்கங்கு என வந்து விழுந்தன வார்த்தைகள்…

“உன்னை இவள் இருக்குற திசை பக்கமே பார்க்கக் கூடாதுன்னு சொல்லியும், பொம்பளப் புள்ளத் தாவணியைப் பிடிச்சு இழுக்குறது… அதுவும் இந்த வீட்டுக்குள்ள நின்னுகிட்டு… எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும் உனக்கு…??” என ரஞ்சனை அடிக்கக் கையை ஓங்கிட…

அவனைப் காப்பாற்றும் பொருட்டு ஓடி வந்து தடுத்தனர் குறிஞ்சியும் முகிலும்… அதில் பின்வாங்கினான் ரஞ்சன்.

“ஐயோ அத்தான், நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா நடக்கல, அவனை விட்டுடுங்க…??” குறிஞ்சி…

“ஐயோ மகேன், ப்ளீஸ்! அவன் விளையாட்டாத்தான் அப்படி பண்ணிட்டான், தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடுங்க. இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கறேன், ப்ளீஸ்… விட்டுடுங்க…??!!” முகில் கெஞ்ச…

இருவரையும் உதறிவிட்டவன், “இந்த விஷயத்துல யாரும் குறுக்க வரக்கூடாது…?” என எச்சரித்தவன்…

ரஞ்சனியை கொலைவெறியுடன் நோக்கி வர…

“ப்ரோ ப்ளீஸ் ப்ரோ, நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை ப்ரோ. சும்மா அவங்க கூட விளையாட்டா தான் ப்ரோ புடிச்சு இழுத்தேன்… நான் அவங்ககிட்ட தப்பாவே நடந்துக்க போறேன். நீங்க வேணும்னா அவங்ககிட்ட கேட்டு பாருங்க ப்ரோ. ப்ளீஸ் ப்ரோ, என்னை விட்ருங்க ப்ரோ… நான் ரொம்ப நல்லவன் ப்ரோஓஓ…!!” என பயந்து பின்னால் நகர…

“ஏன்டா, அவள் தாவணியைப் பிடிச்சு இழுத்து விளையாட, அவள் என்ன உன் அத்தமகளா, மாமன் மகளா? தாவணியைப் பிடிக்க இனி கை இருந்தால் தானே? இரு, அதை உடைச்சு போட்டுடுறேன்…!” என்றவன் ரஞ்சனின் கையை பிடித்து முறுக்க முயன்ற சமயம்…

“ஐயோ ப்ரோ, கையை உடைச்சு கிழிச்சு போட்டுடாதீங்க! நான் நீங்க நினைக்கிற மாதிரி ஆம்பளையல்ல, பொம்பள தான் ப்ரோ…!” என பயத்தில் உண்மையை உடைத்துவிட…

சட்டென்று விலகிய மகேந்திரன், ரஞ்சனை நம்பாமல் பார்க்க…

ரஞ்சனிடம் விக்கியைக் கழட்டவும், குறிஞ்சியும் முகிலும் ஓடிவந்து அவளைப் பிடிக்கவும் சரியாக இருந்தது… அவ்வளவுதான், அவர்களின் குட்டு தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டு விட்டது…

மகேந்திரனிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மூவரும் யோசித்துக் கொண்டிருந்த சமயத்திலே, கை தட்டும் ஓசையுடன் இருட்டில் இருந்து வெளிவந்தனர் விஜயேந்திரனும் வீரேந்திரனும்…

“நான்தான் உங்ககிட்ட அப்பவே சொன்னேன் இல்ல, இது ஆளே சரி இல்லை, சந்தேகமா இருக்குன்னு. இப்பவாது தெரிஞ்சுகிட்டீங்களா…?” என்ற வீரேந்திரன்…

அதிர்ச்சி அடைந்த மற்ற பெண்களைக் கண்டுகொள்ளாமல் ரஞ்சனாவின் வெகு அருகில் வந்தவன்…

அவள் முகத்தருகே குனிந்து “லேடீஸ் பெர்ஃப்யூம் வாசனை, அப்பப்போ பூனை குரல், ஆம்பள சட்டைக்கு அடியில் பொம்பள பேட்டி துணி… சும்மா எதுவா இருந்தாலும் நானும் பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது, நீயும் எனக்கு ஈக்குவலா ஈடு கொடுத்தியா… என்ன பண்ணி என்ன பிரயோஜனம்? நான் தான் முதல்லே கண்டுபிடிச்சிட்டேனே, அந்த வகையில் நீ மட்டத்தைத் தாண்டி…?” என்றவனை முறைத்துப் பார்த்தாள் ரஞ்சனா…

குறிஞ்சி மகேந்திரனை நினைத்து வருந்திக் கொண்டிருக்க… முகிலுக்கு விஜயேந்திரனுக்கு விஷயம் தெரிந்து விட்டதே என்கிற பயத்தில் உறைந்து போய் நின்றாள்…

அழுத்தமான காலடியுடன், குற்றச்சாட்டற்ற பார்வையுடன் முகிலை நெருங்கிட…

பெண்ணவளுக்கு வியர்வை அரும்பியது…

“என்ன இதெல்லாம்….?” என வார்த்தைகளில் கடுமை காட்டி கேட்க…

பயத்தில் நாவு வறண்டு, நாக்கு மேல் அன்னத்தில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது முகிலுக்கு…

“எதுக்கு இத்தனை பொய்? எதுக்கு இத்தனை பித்தலாட்டம்? இதனால என்னத்த சாதிக்கப் போற?” ஆற்றமை அடக்க முடியவில்லை விஜயனுக்கு…

“வந்து… வந்து….!” என வார்த்தைகள் தந்தி அடிக்க… முகிலுக்கே அவள் செய்தது மிகவும் கேவலமாகத் தெரிந்தது. அன்று இருந்த மனநிலையில் அது சரியாகப் பட்டது, ஆனால் இப்போதோ குற்றவாளியாக நிற்கும் தன் நிலை அறவே வெறுத்தது…

“சொல்லு, எல்லாம் டி.என்.ஏ ரிப்போர்ட்ட்க்காகத் தானே செய்கிறேன், கூடவே இருந்து அன்பு செலுத்தினால் தானா புரிஞ்சுிப்பேன் என்று நினைத்தேன்… என் நினைப்புத் தப்பு என்று பொட்டுல அறைந்தது போலச் சொல்லிட்ட… இத்தனை நாள் கூட இருந்தியே, கொஞ்சம் கூடவாடி புரிஞ்சுக்கல.. ச்சை போடி…!!” என ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தவன், நிராசையுடன் முடித்தான்…

“இப்போ உனக்கு டெஸ்ட்க்கு எங்க மூணு பேரோட மாதிரி தானே… மகேந்திரா?”

…!!” விஜயேந்திரன்

“சொல்லுடா பெரியவனே…!!” மகேந்திரன்…

“நாளைக்கே நம்ம மூணு பேருடா”

ரத்த மாதிரியை இவங்க கிட்ட ஒப்படைத்து விடு…!!” என்றான் முடிவாக…

“அதெல்லாம் வேணாங்க….?” என முகில் தன்னிலை விளக்கம் அளிக்க முன் வர, அவளைக் கை காட்டித் தடுத்தான் விஜயேந்திரன்…

“போதும், இதுக்கு மேல விளக்கம் தேவையே இல்லை. ரத்த மாதிரி கிடைச்சதும் நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம், ஆனால் இனி நடிப்புக்கு இங்க இடமில்லை… வரேன்…?” என்றவன் விடுவென நடந்து சென்று விட்டான்… அவனையே பின்பற்றினர் அவனைப் கடந்து பிறந்தவர்கள்…

“என்ன சொல்லி சென்றான், நடிப்புக்கு இந்த இடமில்லை என்று தானே சொன்னான்? அப்படி என்றால் என்னை வெளியேறும்படி கூறினானா இங்கு இருந்தா அல்லது உள்ளத்தில் இருந்தா…?? ஆனால் நான் நடிக்கவில்லை என்றால் நம்புவான…??” என, காலம் கடந்த ஞானம் வீணாகுமா…??

காலையில் எழுந்ததிலிருந்து குறிஞ்சி விஜயனைத் தேடித் தேடிக் கலைத்து விட்டாள். அவனை இங்க பார்த்தேன், அங்க பார்த்தேன் என ஆளாளுக்கு ஒன்று கூறி அவளைப் பந்தாடினர்…

நமக்கு ஒருவர் மேல் நம்பிக்கை வர வேண்டுமானால்… அவர் மீது நமக்கு பற்று உண்டாக வேண்டும்; அவரின் உண்மையை முழு மனதோடு அப்படியே ஏற்க வேண்டும்…

விஜயனின் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கான நன்மையை மட்டுமே அவன் எதிரொலிக்கிறான்… ஏன், முதலில் இருந்தே அவள் யார் என்ற உண்மை அறிந்த போதும் கூட அவன் அவளை யாரிடமும் காட்டி கொடுக்கவில்லை, இப்போதும் அப்படியே… ஆனால் இவள் தான் தன் ஒவ்வொரு செயலிலும் அவனுக்குப் பரீட்சை வைக்கிறாள்…

இதிகாசத்தில் கூட பெண் தான் தன் பவித்திரத்தை உணர்த்த அக்னியில் இறங்கினாளாம்…

ஆனால் இங்கோ தன் காதலை நிரூபிக்க வன் தினம் தினம் அக்னிப் பரீட்சையில் உட்படுத்தப்படுகிறான் விஜயன்… அதுவும் காதலியின் கையால்; அத்தனையிலும் அவன் காதல் கொண்டு வென்று விட இவளுக்குத்தான் தோல்வி நிலை… அவள் கொண்ட உறுதியில்…

இதோ இப்போது கூட இரத்த மாதிரியை கொடுத்து விட்டு தான் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவன் என நிரூபித்து விட்டான்… ஆனால் மாறாக இவள் அவனுக்குத் தந்தது துரோகம் தான் அல்லவா? அவனிடம் நம்பிக்கை தேடியவள், தன் மீதே அவன் கொண்ட நம்பிக்கையை உடைத்து விட்டாளே…

விஜயனைப் பார்க்கத் துடித்தாள்; ‘இனி நீயே என் கதி’ என சரணாகதி அடைய விரும்பினால்… தொலைத்த பொக்கிஷம் மீண்டும் கை சேருமா…??

காலையில் கண்ணை உருத்தாத நாகரீக உடையில் சுற்றி கொண்டு இருந்த ரஞ்சனாவை, ‘யார் இவள்…??’ எனப் பார்த்தனர் அனைவரும்…

சகுந்தலா வந்ததும் முதல் வேலையாக அவரிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தாள்…

“அத்தை, இது என்னோட உயிர் தோழி. இத்தனை நாள் வெளி ஊர்ல இருந்தா… என்னை பற்றி கேள்வி பட்டதும் என்னை பார்க்க ஆசையா கிளம்பி வந்துட்டா. அவளை என் கூட கொஞ்சநாள் இருக்க சொல்லவா அத்தை…?” என வருத்தத்தை குரலில் காட்டிக் கேட்டாள்… இந்த அன்பான பெண்மணியிடம் தான் எத்தனை பொய்… அதுவும் பொய் மேல் பொய் சொல்கிறோமே என வருந்தினாள்…

“அட என்ன கண்ணு, இதுக்கு போய் என்ன இப்படி தயங்குது? அதுக்கு என்ன, தாராளமா தங்கிட்டு போகட்டும். ஐயாகண்ணு, இந்த பிள்ளை தங்கறதுக்கு ஒரு அறையை சுத்தம் பண்ணி கொடுத்துடுங்க…!” என்ற மாமியார் கையை பிடித்து நன்றி நவிழ்ந்தாள் முகில். உறுக்கமாக மன்னிப்பை யாசிப்பது போல்… அப்பாவி மருமகள் என அந்த மாமியார் நம்பி விட்டார்…

“அத்தை, அவர் எங்க இருக்கார் தெரியுமா அத்தை…?” தயங்கினால் ஆகாது என வரவழைக்கப் பட்ட தைரியத்துடன் கேட்டு விட்டாள்… தவறு செய்த பின் தைரியம் குறைவது இயல்பு தானே…

“பெரியவனா…? அவன் காலையிலே மில்லுல வேலை இருக்குனு புறப்பட்டு போய்ட்டான் மா… சாப்பாடு கூட வேண்டாம் சொல்லிட்டான். அறுவடை நேரம் வேறயா? அப்படியே பயிரை பார்த்து செஞ்சு மில்லுக்கு அனுப்பி, அப்புறம் கொள்முதல்க்கு அனுப்ப ஏதுவா நாலு நாள் தோட்டத்து வீட்டுலே தங்கிக் கொள்வதா சொன்னான். ஏன் உன்கிட்ட சொல்லலையா கண்ணு…?”

“இல்லையே அத்தை, நான் தூங்கிட்டு இருந்தேன்…?” என்றவளுக்கு அவமானத்தால் கண்கள் கன்றி சிவந்து விட்டன… தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என அவ்வளவு கோவமா…

ஆனால் விஷயம் வேறு என காலை உணவின்போது குறிஞ்சி சொன்னாள்…

முகிலு நம்ம விஷயத்தை ஐயாவுக்குத் தெரிஞ்சி போச்சு போல, காலையிலே பெரிய அத்தானை கூப்பிட்டுப் பேசி இருப்பார் போல…!!

“இந்த வீட்ல என்ன நடக்குது பா… ஏப்பா, சின்ன பசங்க விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு பெரியவங்க ஒதுங்கி நின்னா அவங்களுக்கு எதுவுமே தெரியாது, அர்த்தமா…?” ரத்தினவேல் பூபதி கடினமாகக் கேட்டார்.

“என்ன புரியலையா? ஒரே நைட்ல ஆண் பெண்ணாக மாறின விந்தையைச் சொல்றேன்… எதுவும் கேட்க மாட்டாங்க என்ற தைரியத்தில் எல்லாம் இப்படி பண்ணிட்டு இருக்கீங்களா… இந்த குடும்பத்துக்கு ஒரு பாரம்பரியமும் மரியாதையும் இருக்கு… அதை உடைக்குறவங்களுக்குத் தண்டனையும் நிச்சயம் உண்டு… சொல்லு பா, என்ன பண்ணலாம்….??? அடிச்சுத் திருத்த நீங்க சின்னவர் இல்ல, பெரியவர், வளர்ந்துட்டீங்க…!!”

“எனக்குத் தண்டனை கொடுத்து நீங்க சிரமம் எடுத்துக்காதீங்க… நானே எனக்குத் தண்டனை கொடுத்துக்கிறேன்… இப்போவே நம்ம தோட்டத்துக்கு, வீட்டுக்கு போயிடுறேன், யாருக்கும் தெரிய வேணாம்…!!!” என்று வேண்டுகோளாகக் கேட்டவன், “தப்புக்குத் தண்டனையா அனுபவிக்கிறேன்… எனக் காயம் கொண்ட உடலோடு தனித்து போகிறேன்” என்றான்.

செய் என இரக்கமே இல்லாமல் அனுப்பி விட்டுவிட்டார்… இதுதான் ரத்தினவேல் பூபதி; எத்தனை அன்பும் பாசமும் வைத்திருக்கிறாரோ, அதே அளவு கண்டிப்பும் கட்டுக்கோப்பும் அவரிடம் உண்டு.

அதைக் கேட்டதிலிருந்து முகிலுக்கு உள்ளே செத்துவிட்டது அவளது பிடிவாதம், அவநம்பிக்கை, அசட்டுத்தனம் எல்லாம்…

“அத்தை, குழந்தையை கொஞ்சம் பார்த்துக்கோங்க, நான் அவரைப் பார்க்கப் போறேன்…” முகில்.

“ஏன்மா, வேணாம்டா…!!” எனத் தடுக்க…

“அத்தை, அவர் காயத்தை வச்சிட்டு தனியா எவ்வளவு வேலையை சமாளிப்பார், நான் போறேன்… தயவு செஞ்சு என்னை தடுக்காதீங்க, குழந்தை மட்டும் பார்த்துக்கோங்க…!!” என்றவள் யாருடைய மறுப்பையும் எதிர்பாராமல் கிளம்பிச் சென்றுவிட்டாள்…

காட்டாறு போல் காதல் திரண்டு வரும் பொழுது

அதை அணை போட்டுத் தடுக்க முடியுமா…!!

ஓடும் நதி

கடலில் சங்கமிப்பது

தானே இயற்கை நியதி…

அதே போல்

அவளும் அவனுமாக

சங்கமிக்கப் போகிறாள் காதலில்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-30

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

15

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top