மூன்று ஊர் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டு மிதப்பாக வந்து கொண்டிருந்தனர் முப்படைத் தளபதிகள்… அவர்கள் வீட்டின் வாயிலில் அவர்களை வரவேற்றது வாகை மலர்கள் அல்ல, விளக்குமார்கள்…
“ஜஸ்ட் மிஸ்” அதிலிருந்து சாமர்த்தியமாக விலகித் தப்பித்திருந்தனர் மூவரும். அதுக்காக இவனுங்க பெரிய அத்லீட் (விளையாட்டு வீரர்) சொல்ல மாட்டேன், ஏன்னா மூணு பேருக்கும் விளக்கமாத்து அடி புதுசு கிடையாது, அதனால வந்த சாமர்த்தியம்…
“நல்லவனே, இன்னைக்கு ஆத்தா உக்கிரமா இருக்கு போலயே! சும்மாவே சலங்கை கட்டி ஆடுவாள்… இப்போ சொல்லவா வேணும் என்ன ஆட்டம் ஆடப் போகிறதோ…?” என கடைக்குட்டி வீரர் அதான் விரேந்திர பூபதி என்னவோ ரகசியமாகத் தான் கூறினான்…
“ம்ம்ம் ஆமாம்டா, உன்னைய படுக்கப் போட்டு உன் மேல ஏறி நின்னு தாண்டவம் ஆடலாம்னு இருக்கேன்…!!” என வந்தார் ஒரு வயதான முஹம்முது பின்லேடி.
“கிழவிக்கு எப்படிடா காது கேட்டுச்சு..??” என வீரர் மனதுக்குள் கேட்பதாக நினைத்துச் சத்தமாகப் பேசிவிட்டான்… பயபுள்ளைக்கு வாய் கோளாறு…
“கோடிப் பயலுகளா, என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க மனசுல எந்தக் குடும்பத்துல பிறந்துட்டு என்ன வேலைடா பார்த்து வச்சி இருக்கீங்க? ஒழுங்கு மரியாதையா உண்மையச் சொல்லிப்புடுங்கடா, உங்களல யாருடா அந்த குழந்தைக்கு அப்பன்…!!” என கோபத்துடன் கேட்டபடி வந்தார் ஈஸ்வரி சாமுண்டீஸ்வரி… ரத்தினவேல் பூபதியின் சகப்பத்தினி… மும்மூர்த்திகளின் பாட்டி…
“உங்கள பாலூட்டி சோறுட்டி வளர்த்ததற்கு நல்ல பெயர் வாங்கித் தந்துட்டீங்கடா… ஊருக்குள்ள உங்க ஐயாக்கு இருந்த மானம் மரியாதையை எல்லாம் அழிச்சிடுவீங்களேடா… நம்ம வீட்டுக்குள்ளயும் ஒரு வயசு பொண்ணு இருக்கிறத மறந்துட்டீங்களா… நாளைக்கு அவளைப் பற்றி ஊர் என்ன பேசும்னு யோசிச்சீங்களா… ?” என்ற குரலில் ஆற்றாமை பெருகி ஓடியது…
“அப்படி நல்லா உறைக்குற மாதிரி கேளுங்க ஆத்தா… !!” என்றபடி வந்தாள் அவள் குறிஞ்சி… மூவேந்தர்களின் அத்தை மகள் ரத்தினம்… ரத்தினவேல் பூபதியின் மகளான மலர்விழி மற்றும் அவள் ஆருயிர் கணவனான ராஜேந்திரனுக்கும் திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த அபூர்வ மலரவள் குறிஞ்சி…
எதற்கும் யாருக்கும் அடங்காத மூவேந்தர்களை நிற்க வைத்து தட்டி கேட்கவும், கட்டி வைக்கவும் இவர்களால் மட்டுமே முடியும்; இவ்வளவு ஏன், இவர்களைப் பெற்றவர்களான ராஜவேல்பூபதிக்கும் சகுந்தலாவுக்கே கூட அந்த உரிமை கிடையாது…
“வாசல்ல நிக்க வச்சே எல்லாம் கேக்க போறிங்களா …? எல்லாம் உள்ள போய் பேசிக்கலாம்…!” என அழுத்தமான குரலில் விஜயேந்திரன் கூறிய பின் அவனை எதிர்த்து பேச எவருக்கும் துணிவு வரவில்லை…
அழுத்தமான காலடிகளுடன் உள்ளே சென்றவனைத் தொடர்ந்து உள்ளே வந்தனர் சகோதரர்கள்…
உள்ளே வந்த விஜயேந்திரன் நடுக்கூடத்தில் கையை பின்னால் கட்டியபடி கம்பீரம் சற்றும் குறையாமல் நிற்க… அவனைச் சுற்றி நின்றனர் உறவினர்கள்… எவருக்கும் அவனை கேள்வி கேட்கும் துணிவு இருக்கவில்லை…
“நீ கேளு… ?” என ராஜவேல் மனைவியைக் கண் காட்ட, அவர் “ஐயோ நான் மாட்டேன்… !” என மறுத்துவிட்டு “நீங்க கேளுங்க… ?” என சகுந்தலா கூற, அதற்கு ராஜவேல் “நான் மாட்டேன்… !” என்று மறுக்க, இருவரும் யோசனையாக மாப்பிளையையும் தங்கையையும் பார்க்க அங்கும் இதே நிலையே, ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நின்றனர்…
“யார் கேள்வி கேட்பது … ?” என தயங்கி நின்ற வேளையில்…
“என்ன பெரிய அத்தான் இது? எவளோ ஒருத்தி வந்து அந்த குழந்தை இந்த வீட்டு வாரிசுங்கிறா, நீங்க ஏமாத்திட்டீங்கன்னு என்ன என்னவோ சொல்றா… உங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்க… பதில் சொல்லுங்க பெரிய அத்தான்…??” என நெருடல் தாங்காது கேட்டு வைத்தாள் குறிஞ்சி…
“என்ன சொல்லணும்… ?” என அமைதியாக அதே சமயம் அழுத்தமாகவே கேட்டு வைத்தான்…
“சொல்லுடா உன் மேல தப்பு இல்லைன்னு… அப்படி இல்லைனா ஒருவேள இந்த பொண்ணுக்காகத்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம், தம்பிங்களுக்கு முதல்ல பண்ணி வைங்கன்னு சொன்னியா…?” என பட்டென கேட்டு வைத்தார் சாமுண்டீ…
சாமுண்டீ கேட்ட கேள்வி தான் அங்கிருந்து அனைவர் முகத்திலும் பிரதிபலித்தது. அதற்கான பதிலை எதிர்நோக்கியே விஜயேந்திரன் முகத்தைப் பார்த்து இருக்க… சுழல் வட்டத்தில் அனைவரது முகத்தையும் ஒரு முறை பார்த்தவன்… “உங்களுடைய இந்த ஊர் மக்கள் எல்லாருடைய சந்தேகத்திற்கும் பதில் இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்… அதுவரை காத்திருங்கள்…!!” என்றவன் அதற்கு மேல் பேச விரும்பாதவன் போல் நகர்ந்து விட்டான்… வேட்டியைத் தூக்கி மடித்துப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக மாடிப்படி ஏறிச் சென்றவனை வாயைப் பிளந்து கொண்டு பார்க்க மட்டுமே முடிந்தது அங்கிருந்தவர்களால்… (நாலு லெக் பீஸ் ஒரே நேரத்துல உள்ள போகும் போலயே)
“கிழவி வாயில கொசு போய்ட போகுது, டோர் லாக்…!!” என வீர் சாமுண்டீ நாடியைத் தூக்கி விட அவன் கைகளில் பட்டென்று ஒன்று போட்டவர்…
“ச்சை, தீவெட்டி தடியா எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என்னை கிழவினு கூப்பிடாதனு…!!” என திட்டியவரை வெறுப்பேற்றவே, மூப்பினால் இறங்கிய அவரது தோளில் கையை போட்டு அழுத்தி அணைத்தான்…
“தடிமாட்டு பயலே, எத்தனை தடவை சொல்றது என் மேல உன் கரல கட்டை கை போடாதேன்னு! தின்னு தின்னு காட்டெருமை மாதிரி உடம்ப வளர்த்து வச்சிருக்கான் வளர்ந்த தடியன்…!” என சாமுண்டி சாடினாள்.
“என்ன கிழவி பொசுக்குன்னு காட்டெருமை சொல்லிப்புட்ட! எவ்வளவு கஷ்டப்பட்டு முட்டையும் பாலையும் தின்னு எயிட் பேக் வளர்த்து வச்சிருக்கேன்… இங்க பார்த்தியா, அர்னால்டு பாடி ஆம்ஸ் பாக்குறியா…!?” என புஜத்தை முறுக்கி காட்டினான் (குரளி வித்தைக்காரன்)…
“டேய், பேச்சை மாத்தாம ஒழுங்கா உண்மைய சொல்லிடு, அது உன் குழந்தை தானா…???” என சாமுண்டி சரியாக மடக்கிவிட்டாள்.
“தாய் கிழவி என்ன வார்த்தை சொல்லிட்ட… பொண்ணுங்க என்கிற வார்த்தை கூட இந்த முரட்டு சிங்கிள் ரெடி டு மிங்கிள் கிட்ட கிடையாது…!!” (அப்ப முட்டு சந்துல கிடைக்குமா..?)
“என்னது கிழட்டு சிங்கமா..??”
“ஐய கிழவி, அது முரட்டு சிங்கிள் அப்படினா பொண்ணுங்க கிட்ட பேசவே தெரியாது… பொண்ணுங்க என்றாலே பிடிக்காத பசங்கன்னு அர்த்தம்… பொண்ணுங்க பக்கமே தலை வச்சு படுக்காது, அக்மார்க் யோகியன் நான்… என்னை போய் சந்தேகப்படுறியே…?? எனக்கு என்னமோ இந்த அமுக்குனி மேல தான் சந்தேகமா இருக்கு. வெளி ஊர்ல படிக்க போனவன்… அங்கேயே தங்கிட்டான், லீவுக்கு கூட ஊருக்கு வரல, அப்படினா என்ன அர்த்தம்? யோசி தாய் கிழவி யோசி…!!” என அருகில் அமைதியாக நின்ற மகேன் என்கிற மகேந்திர பூபதியை கோர்த்தாள்.
“என்ன அர்த்தம்…?” என சாமூண்டி வெள்ளந்தியாகக் கேட்டார்…
“பாய புள்ள அங்க தீயா வேலைபார்த்து இருக்கான்னு அர்த்தம் புரியலயா? அந்த புள்ளையோட அப்பன் இவன் தான்டா..!!” என வீர் சொன்ன தோரணையில், ஒருவேளை உண்மையா இருக்குமோ என சாமூண்டி நம்பிவிட…
“நிஜமாவாடா நல்லவனே…?” எனவும் கேட்டு வைத்தார்.
“அடேய்…!!!”
“ஆத்தா, அவன் சொல்றத நம்பாத… எல்லாம் பொய்…!” என அலறினான் மகேன்.
“அடேய் பனமட்ட தடியா… உன்னை கேட்டா அவர எதுக்கு இழுத்து விடற… ஆமாம், அஞ்சாம் கிளாஸ் படிக்கும்போது இங்கிலீஷ் டீச்சர்கிட்ட ஐ லவ் யூ சொன்னவன் தான நீ… நீ முரட்டு சிங்கிளா…?” என குறிஞ்சி வரிந்து கட்டிக்கொண்டு வர…
“ஏய் குள்ள வாத்து, அது ஸ்பெல்லிங் கரெக்ட்டானு கேட்டேன்டி, அதை அந்த டீச்சர் தப்பா புரிஞ்சுகிட்டா நான் என்ன செய்யுறது…?” என சமாளித்தான்.
“ஓஓ, அப்போ பத்தாம் கிளாஸ் படிக்கும் போது டியூஷன் வாத்தியார் பொண்ணுக்கு ரூட் விட்டது… பன்னெண்டாம்ல பார்வதி, காலேஜ் சீனியர் அக்கா, இவ்வளவு ஏன்? பக்கத்து வீட்டு பரிமளம், எதிர் வீட்டுல வாசல் தெளிச்சு கோலம் போடுற கோகிலா அக்காவை கூட விட்டு வைக்கலையே ராசா நீ…?” என குறிஞ்சி வீரின் வண்டவாளங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைக்க, அனைவரது கண்களுமே வீரை சந்தேகமாகப் பார்த்தன..
“அடிங் குள்ள வாத்து எத எங்க கோர்த்து விடுற …?!” என தலையில் கை வைத்துக்கொண்டு நிமிர்ந்தவன், அப்பொழுதுதான் குடும்பம் மொத்தமும் அவனைச் சுற்றி சந்தேகப் பார்வையுடன் வட்டமடித்து நின்றதை கவனித்தான்…
“மக்களே, இப்ப எதுக்கு குத்த வச்ச பிள்ளைக்குச் சடங்கு சுத்துற மாதிரி என்னைச் சுத்தி நிக்கிறீங்க…?”
“அஞ்சாம் கிளாஸ் இங்கிலீஷ் டீச்சர்…???”
“பன்னிரண்டாம் கிளாஸ் பார்வதி…?? ”
“எதிர்விட்டு கோகிலா…??”,
“ஒழுங்கா மரியாதையா உண்மைய ஒத்துக்கோ, நீதான அந்தக் குழந்தைக்கு அப்பா…?” என வீரை முறைத்தபடி கோரசாகக் கேட்டுச் சுற்றி வந்தனர்…
அவர்களின் செய்கையில் வீர்க்கு கிலி பிடிக்க, “ஐயோ அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணே… அதெல்லாம் அறியாத வயசுல தெரிஞ்சே பண்ண சின்ன சின்ன சில்லறை தப்புகள், காதல், குழந்தை எல்லாம் பெரிய சம்பவம், அதுக்கெல்லாம் நான் லாய்க்கே இல்லை, என்னை நம்புங்கோ…!!”
“இதை எங்கள நம்பச் சொல்றியா? இன்னும் என்னவெல்லாம் மறைச்சு வச்சு இருக்க, சொல்லு டா…?” என சாமூண்டி கேட்க…
“ஆத்தா மகமாயி, ச்சு ஈஸ்ஸு! உன் மேல சத்தியமா அந்த குழந்தைக்கு மட்டுமில்ல, இதுவரைக்கும் பிறந்த எந்தக் குழந்தைக்கும் நான் அப்பா இல்லை. அம்மாம், பெரிய தப்பு பண்ற அளவுக்கு எனக்குத் தகிரியம் இல்லை…!!” எனப் படுத்தே விட்டான்யா பெயரில் மட்டுமே வீரம் வைத்து இருக்கும் வீரேந்திரன்…
இப்பொழுது அவர்களின் சந்தேகப் பார்வை வீரை விட்டு மகேந்திரன் பக்கம் திரும்ப, “ஐயோ நான் இல்லை, ஆளை விடுங்க…?” என வாசல் பக்கம் திரும்பியவன் கால்கள் அப்படியே நின்றன…
அவனைத் தொடர்ந்து பார்த்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி நுனியைத் தொட்டு ஸ்தம்பித்து நின்றனர்.
அவர்கள் எதைப் பார்த்து அதிர்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதேதான் அங்க நடந்தது… அட, என்ன நடந்ததா… என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களோ அதுதான் நடந்தது… சரி சரி, வன்முறை வேண்டாம், என்ன நடந்தது என்று அடுத்த எபிசோடில் பார்ப்போம்… நான் நினைத்ததும் நீங்கள் நினைத்ததும் ஒன்றுதான், பார்க்கலாம்…



