முகிலே!! உன் முகவரி என்ன-27

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 05/Aug/2026 ◷ 6 min read

குறிஞ்சி தன்னை கடித்துத் தின்பது போல் பார்ப்பதைக் கண்டு மகேனுக்குக் கோபம் வந்தது…

“என்ன இவள் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் பெரியவர்கள் முன்னால் இப்படிப் பார்த்து வைக்கிறாள்… இதெல்லாம் சரியல்ல என்று அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்…!!” என முடிவு எடுத்தான்…

அனைவரும் உணவை முடித்துக்கொண்டு தங்கள் வேலைக்குத் திரும்பத் தனியாக வந்த குறிஞ்சியை மடக்கினான் மகேந்திரன்…

“குறிஞ்சி, இன்னைக்கு நீ என்கிட்ட நடந்துகிட்ட முறை சரியில்லை… இன்னைக்குக் காலையில நமக்குள்ள நடந்ததெல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்திடு… நீ எதையும் பார்க்காத மாதிரி நினைச்சுக்கோ… நானும் எதுவும் வெளியில சொல்ல மாட்டேன்…!!” அவ்வளவுதான் உனக்கும் எனக்கும் கணக்குத் தீர்ந்துவிட்டது, வேறு எதுவும் இல்லை என்பது போல் விலக முற்பட்டவனிடம்…

“அத்தான் என்ன சொல்றீங்க, நான் என்னத்தப் பார்த்தேன்…??” என ஒன்றுமே தெரியாத பூனைக்குட்டி போல் பவிசாகக் கேட்டு வைத்தவளின் கண்கள், மகேந்திரனை வஞ்சனை இன்றிப் பார்த்து வைத்தன…

இவனுக்குத்தான் அந்தப் பார்வையில் இருந்தவிரகத் தாகம் பற்றி கொண்டது … “ஏய், அப்படிப் பார்க்காதடி…!!” என அவளுக்குத் தன் முகத்தைக் காட்டாமல் அவனிடமிருந்து திரும்பிவிட்டான் உஷாராக…

“ஆனா நான் தான் முழுசா பார்த்துட்டேனே…!!” என நாணிக் கோணியவள் ,

“ஏன் அத்தான், நான் பார்த்ததை வீட்ல சொன்னா என்ன ஆகும்??” குறிஞ்சி அப்படி எல்லாம் என்கிட்ட இருந்து ‘எஸ்’ ஆக முடியாது ராசா, விட்டேனா பார் என அவனை இழுத்துப்பிடித்தாள்…

“ஏய்ய்ய் பைத்தியமாடி உனக்கு, இதை போய் அவங்க கிட்ட சொல்றேன்னு சொல்ற??” எனப் பதறினான். அவள் அடாவடி தெரியுமே… வீரோடு சேர்ந்து இவள் கெட்டுப் போனாளா அல்லது இவளுடன் சேர்ந்து அவன் கெட்டுப் போனானா என்று தெரியாது; ஆக மொத்தம் இருவரும் ஒரே சட்டியில் கொதிக்கும் உளுந்த வடை தான்… (அப்புறம் பசிக்கும், இல்லையென்றால் சாப்பிட வேண்டும்…)

“ப்ச், என்ன ஆகும் சொல்லுங்க அத்தான்…!!” என குறிஞ்சி சிணுங்கியே சீரழித்தால் ஆடவனின் உறுதியை …

“அறிவுகெட்டவளே, அது மாதிரி எதையும் பண்ணித் தொலைச்சுடாத, அப்புறம் விஷயம் விபரிதமாகிப் போகும்…!!” என்றவனுக்குப் போயும் போயும் இவளிடம் சிக்கினோமே…

“ஓ, அப்போ நான் யார்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாதா? சரி சரி, அப்படிச் சொல்லாம இருக்க, நீங்க எனக்கு என்ன தருவீங்க அத்தான்??” என காதலுக்குப் பேரம் பேசினாள்.

“ஏய், என்னையே மிரட்டுறியா…?” என்கிற வகையில மாட்டிக்கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது.

“ஆமாம், அப்படித் தான் வச்சிக்கோங்க…!” என கெத்தாகக் கூறிவிட்டவளுக்குப் பின், அவளை மீண்டும் வாங்கும் எண்ணமே அவனுக்கு இல்லை…

“ப்ச்! சொல்லித் தொலை, என்ன வேண்டும் உனக்கு…?” ஏனோ அவளிடம் தழைந்து போகப் பிடித்து இருந்தது; ஆனால் அதே சமயம், அவனுடைய மாற்றத்தை அவள் அறியக்கூடாது என்பதில் அந்த அமுக்குனி மகேந்திரன் வெகு கவனமாக இருந்தான்…

மகேனை மட்டும் மனதில் சுமந்து கொண்டு நின்றவளின் வாயிலிருந்து தயங்காமல் வந்து விழுந்தன வார்த்தைகள், “நீங்க…!” என…

“என்ன…?” என மகேந்திரன் புருவத்தை உயர்த்தி, கூர்மையான பார்வையுடன் கேட்க…

நடப்புக்கு மீண்டவள், “அது வந்து… நான் எப்போ, எங்க கூப்பிட்டாலும் நீங்க உடனே வரணும்னு சொல்ல வந்தேன், அவ்வளவுதான்…!” என அசடு வழிந்தாள்…

“உஃப்! அவ்வளவுதானா? நான் கூட நீ கொடுத்துப் பில்டப்க்கு என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்…!” என்ற அவனது குரலில் என்ன இருந்தது? ஏமாற்றமா…?

“ஏன் நீங்க என்ன நினைச்சீங்க அத்தான்…?” வேண்டும் என்றே ராகம் இழுத்தவள், அவன் அனல் பார்வையைப் பார்த்து அமைதியாகிப் போனாள்.

“சரி அத்தான், இன்னைக்கு சாயங்காலம் நம்ம ஊரு குளக்கரைக்கு வந்துடுங்க. உங்கள எதிர்ப்பார்த்து காத்துட்டு இருப்பேன், மறக்காம வந்துருங்க…!!” என அவனிடம் காதல் படிக்க அழைத்தாள் நங்கை…

“என்ன விளையாடுறியா? அப்படியெல்லாம் நீ கூப்பிட்ட உடனே வர முடியாது, எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு…!!” என்று அவள் இழுத்து இழுப்பாகச் சென்றால், அவன் இளப்பமாக கூடுமோ என்று பயந்து, வேண்டும் என்றே அவளிடம் கடுமை காட்டினாள்…

முகம் வாடிப் போனது குறிஞ்சி மலர் மாதுவிற்கு… ஆனால் உடனே அதைச் சரி செய்து கொண்டு, “சரி பரவலா, விடுங்க அத்தான், நீங்க உங்க வேலைய பாருங்க, நான் ரஞ்சன் கூடவே போய்க்கிறேன்…!!” என்று விட்டு நகரப் போனவளின் கையை பிடித்து நிறுத்தினான் ரஞ்சன்…

அவனை எங்கே அடித்தால் எங்கே விழுவான் என்று தெரிந்து தானே அவள் ரஞ்சன் பெயரை இழுத்தாள்…

“ஏய்… இனி நீ அவன் கூட சுத்தறதப் பார்த்தேன், உன் கைய கால ஒடச்சி போட்டுருவேன் பார்த்துக்கோ… குளக்கரைக்குத் தான நானே வேலையெல்லாம் முடிச்சிட்டு வருவேன், அதுவரை காத்திரு…!!” என்று விட்டு விறுவிறுவென சென்று விட்டான் மகேந்திரன்…

போகும் அவனையே பார்த்து நின்ற பாவையை ஒரு தரமென அவன் திரும்பிப் பார்த்திருந்தால் கூட, அவள் கண்ணில் வழியும் காதலும் அது தந்த வலியும் அவனுக்குக் கொஞ்சமேனும் புரிந்து இருக்கக் கூடுமோ..

பிறந்தது முதல் செல்வமாக, செல்வாக்காகவும் வளர்ந்தவள்… அழுந்து பார்த்து அதிரடியாய் பேசும் விஜயனை விடவும், அளந்து பார்த்து அமைதியாகப் பேசும் மகேந்திரனை விடவும், அவளைப் போலவே துறுதுறுவென துள்ளிப் பேசும் வீர் மேல் பிரியமும் சினேகமும் அதிகம்…

அதுவும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தும்பி பிடிப்பது… அடுத்தவர் சாப்பாட்டைத் திருடித் தின்பது, பெயில் பண்ணின வாத்தியாரை பாம்பைக் காட்டி ஓட வைப்பது… இன்னும் இன்னும் ஏராளமான சேட்டைகளைச் சேர்ந்தே செய்துவிட்டு, மாட்டி கொண்டால் கூட ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்காது, இணை பிரியாது திரிந்தனர்…

பள்ளி பருவம் முடிந்து கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்த காலக்கட்டம்… வீர குறிஞ்சியும் இருவருமே ஒரே கல்லூரியில் படிக்கத் தொடங்கிய சமயம். திடீரென வீர உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகிவிட… குறிஞ்சியை அழைத்துச் சொல்லும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டது…

ஒரு முறை அவன் வருவதற்குத் தாமதம் ஆகிவிட, அவனுக்காகக் காத்திருந்த குறிஞ்சியை வம்பிழுத்தது ஆயோகியர்கள் கூட்டம் ஒன்று… தனி ஒரு பெண்ணாக அவர்களைக் கண்டு மிரண்டு, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயந்து ஓடிய குறிஞ்சி, கண்மண் தெரியாமல் ஓடியவள் இருட்டில் மாட்டி பயத்திலே உயிர் விட இருந்தவளை ஆபாத் பாண்டவனாகக் காப்பாற்றியது மகேந்திரன் தான்…

ப்ராஜெக்ட்க்காகக் கல்லூரியிலிருந்து தாமதமாக வந்தவன், குறிஞ்சியைத் தேட அவள் அங்கு இல்லாததை அறிந்து அருகில் இருந்தவர்களை விசாரித்து அவளைத் தேடி வந்து காப்பாற்றினான்…

“அத்தாஆ…ன்…!” என அன்று அவன் மார்பில் உணர்ந்த பாதுகாப்பை அவள் தாயின் கருவறை தாண்டி அன்றுதான் உணர்ந்தாள்…

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளத் தவள் கல்லூரி படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க…!! விட்டால் தானே…?? “என்ன குறிஞ்சி,

இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல. இப்படி எல்லாத்துக்கும் பொம்பள பிள்ளைங்க முடங்கிப் போனா, அது அந்தப் பொறுக்கிகளுக்கு வெற்றி ஆகாதா? தப்பே பண்ணாத, நீ ஏன் பயந்து நடுங்கணும்?

நீ ஒதுங்கிப் போனா அவனுக்குக் கொம்பு முளைக்கும், இதே போல அடுத்த பெண்ணை நாசமாக்க கிளம்பிடுவான்… துரத்தி வரும் நாய்க்கு முன்னாடி எதிர்த்து நில், அதுவே உனக்கான வெற்றி தான்…!” எனத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் மூட்டி அவளை மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வைத்தவன் மீது தோன்றிய மதிப்பும் மரியாதையும் நாளடைவில் ஈர்ப்பாக மாறிவிட…

“ஏய் குறிஞ்சி, யாருடி அது? உன்னை கூட்டிட்டு வந்துட்டு போற ஹீரோ பாக்கவே கருப்பா செம களையிருக்காருடி…!” என சக பெண்கள் மகேந்திரனை வர்ணித்து கூறியதைக் கேட்டவள் காற்றில் மிதக்க ஆரம்பித்தாள்.

இவ்வாறே குறிஞ்சியின் மனதில் விதையிட்டு வேர் ஊன்றத் தொடங்கினான் மகேந்திரன்…

மகேந்திரன் மேல் விருட்சமாக மாறிய அவள் காதலைச் சொல்லத் துணிந்த சமயம் மகேந்திரன் கல்லூரி காலம் முடியும் சமயம் அதுவே… ஆர்வத்துடனும் ஆசையுடனும் தன் காதலை அவனிடம் கூறச் சென்றவள் திகைத்தால்…

“இங்க பாரு, இந்த வயசுல வரத்துக்கு பேரு காதலே கிடையாது, வெறும் ஈர்ப்பு கூட இருக்கலாம். ரெண்டு பக்கமும் வருவது தான் காதல். நீ மட்டும் லவ் பண்ணா போதாது, எனக்கு உன் மேல காதல் வரணும்… எனக்கு இப்போதைக்கு இருக்கிற ஒரே சிந்தனை ஃபாரின் போய் படிக்கணும், சொந்த தொழில் தொடங்கணும் என்கிறது மட்டும் தான்… அதுவரைக்கும் எனக்காகக் காத்துட்டு இருந்தா அப்போ உன்னோடது காதல்னு ஒத்துக்கிறேன்…

ஆனால் அப்பவும் உன் மேல எனக்கு காதல் வருமாங்கிறது சந்தேகம் தான்…!” என அவனுக்குக் காதல் கடிதம் நீட்டிய பெண்ணிற்குச் கூறிய அறிவுரையை கேட்டிருந்த குறிஞ்சி… அதைத் தனக்கெனக் கூறிய பதிலாகக் கருதி

“நீ போயிட்டு வா அத்தான், உனக்காக நானும் என் காதலும் காத்திருப்போம்…!!” என அவனிடம் காதலைக் கூறாமல், இதயம் முழுவதுமாக மகேந்திரனைச் சுமந்து கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்…

அங்குதான் விதி குறிஞ்சிக்குச் சதி செய்துவிட்டது. படிப்பு முடித்துவிட்டு மகேந்திரன் தொழிலைத் தொடங்கி இருந்தான். அவனது சமையல் திறமையைப் பார்த்துவிட்டு, அவனுக்குப் பெண் கொடுக்க முன்வந்தது குறிஞ்சி. மகேந்திரனுக்கோ தடை ஏதும் இல்லாததால் சம்மதம் தெரிவித்தான்; அது குறிஞ்சியின் இதயத்தில் இடியைப் போல இறங்கியது.

குறிஞ்சி மட்டும் வாயைத் திறந்து “நான் மகேந்திரன் அத்தான் காதலிக்கிறேன்” என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால் கூட, மகேந்திரனின் கை, கால் கட்டி அவனுக்குக் குறிஞ்சியைத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியுமே! அத்தனை அலாதியான அன்பு அவர்கள் அவள் மீது வைத்திருந்த என்பதில் ஐயமில்லை…

ஆனால் மகேந்திரனுக்கு தன் மீது சிறு ஈர்ப்பேனும் இருந்திருந்தால் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து இருப்பானா…? என்கிற உண்மை குறிஞ்சியை உலுக்கிப் போட்டது…

மகேந்திரனுக்கும் சந்தியாவுக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடு கோலாகலமாக நடைபெறுவதைப் பார்த்தவள், இதயம் ஊமையாக ரத்தக் கண்ணீர் வடித்தாள். மகேந்திரன் இன்னொரு பெண்ணுடன் கனவில் கூட சேர்த்துப் பார்க்காத, விரும்பாத குறிஞ்சி தற்கொலைக்கு முயன்றது அவளுக்கும் விதியின் விளையாட்டே தவிர வேறொரு ரகசியமோ அல்ல…

நூற்றில் ஒரு வாய்ப்பாக மகேந்திரனின் நிச்சயம் முகிலால் தடைபட்டுப் போக… இது கடவுள் அவள் காதலுக்கு ஏற்படுத்திய நல்வாய்ப்பு என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள், நிச்சயம் அந்த வாய்ப்பைத் தவிர்த்து விடப் போவதில்லை…

மகேந்திரனுக்கு அவள் காதலை உணர வைக்க, அவள் கொண்ட காதலின் பலப்பரிட்சையை நடத்தப் போகிறாள்… அதில் அவள் அடையப் போவது வெற்றியா அல்லது தோல்வியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-27

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

13

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top