முகிலே!! உன் முகவரி என்ன-20

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 29/Jul/2026 ◷ 6 min read

காலையிலிருந்து ரஞ்சனைக் காணவில்லையே எனத் தேடிக்கொண்டிருந்த குறிஞ்சி, அவன் வேகமாக முகிலினியின் அறைக்குச் சென்று கதவு அடைக்கப்படுவதைப் பார்த்துத் திகைத்தான்…

“என்ன நடக்கிறது இருவருக்குள்…?” என அறிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில், குறிஞ்சி மெல்ல மெல்லப் பூனை நடையிட்டு முகிலினியின் அறை கதவில் செவியை வைத்தான். அது சரியாகப் பூட்டப்படாத காரணத்தால் கதவு திறந்து கொண்டது; அந்தச் சிறிய இடைவெளியில் உள்ளே நோக்கிய அவனுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி…

ரஞ்சன்… அவன் ஆண் பிள்ளையே இல்லையாமே… என்ற ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தான் குறிஞ்சி…

மூக்கைப் பிடித்துக்கொண்டு, மதிய நேரத்தில் தூக்கத்தின் நடுவே வந்து எழுப்பும் மாமியாரைப் பார்த்துப் பேய் வந்தது போல் பெண்கள் இருவரும் முழித்து நிற்க… (எனக்கு வேற உவமை தெரியவில்லை ஆத்தா…)

அவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்து வந்த குறிஞ்சி, கீழே கிடந்த சிகை அலங்காரப் பொருளைக் கையில் எடுத்தாள்…

“கூட்டுத் திருட்டாளர்களா? திட்டம் போட்டு எங்க குடியைக் கெடுக்க வந்திங்களா…? இப்போதே இவ்வளவு திருட்டு வேலை பார்த்திருக்கீங்கன்னா, இன்னும் என்னென்ன வேலை எல்லாம் பார்ப்பீங்க? உங்களை இப்படியே விட்டால் நான் குறிஞ்சி இல்லை… இருங்கடி, இன்னைக்கு எல்லார் கிட்டயும் உங்க தகிடுதத்தத்தை எல்லாம் சொல்லி ஒரு வழி ஆக்குறேன் பாருங்க…!!” என்றவள், கையில் கிடைத்த ஆதாரத்தைத் தூக்கிக்கொண்டு ஓட…

“ஏய், இப்ப என்னடி பண்றது? மாட்டின நாம காலி…?” என முகில் பயந்து நடுங்க…

“ஏய், பயப்படுறதுக்கு இதுவா நேரம்?”

“அவள் போறா பாரு, அவளைப் புடிடி…!” என ரஞ்சனா கத்திக்கொண்டே விரட்ட…

என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து நின்ற முகிலுக்கும் அவள் பின்னாடியே ஓடுவதைத் தவிர வேற வழி எதுவும் இல்லை…

நான்கு கால் பாய்ச்சலில் துள்ளி ஓடினாள் குறிஞ்சி… அவ்வளவு ஆவேசத்துடன் நேராகச் சென்று ரத்தினவேலுவின் அறைக்குத் தாவி குதித்துச் சென்றவளை எங்கிருந்துதான் வந்தாளோ… கதவை அடைவதற்கு முன் ரஞ்சனா அவளை இழுத்துப்பிடிக்க, குறிஞ்சி அவளிடம் திமிறியபடி வாய் திறந்து கத்தப் போக, தாமதமாக வந்த முகிலு அவள் வாயைப் பொத்திவிட்டாள்… படார் என கதவு திறக்கவும் திக் என்றானது…

வெளியே அரவம் கேட்டு வந்து எட்டிப் பார்த்த ரத்தினவேலுவிற்குப் பெரும் குழப்பம் தான் எஞ்சியது, ஏனெனில் அங்கு எவரும் இல்லை…

வாயைப் பொத்துன நிலையிலேயே குறிஞ்சியை அழைத்து, இல்லை இல்லை, தூக்கி வந்தனர்…

“ஏய், ஆளு பார்க்க ஒல்லியா இருந்தாலும் கணமா இருக்கா… முடியலடி…?” என முகில் பின்வாங்க…

“நாயே, சாவடிச்சுடுவேன்! ஒழுங்கா மரியாதையா கூட வந்து தூக்கு, இல்லை நீ எக்கேடு கெட்டுப் போன்னு விட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்… அப்புறம் நீ தனியா தான் இந்த அவதார் கும்பலைச் சமாளிக்கப் பாத்துக்கோ…!” என ரஞ்சு விரட்ட…

முகிலி மூச்சை அடக்கிக் கொண்டு குறிஞ்சியைத் தூக்கி வந்தாள்… அவர்கள் அறைக்குள் வந்து குறிஞ்சியை விட்டுவிட்டு, உள் பக்கமாகத் தாழ்ப்போட்டவர்களைப் பார்த்து, “ஏய்! ஒழுங்காகவும் மரியாதையாகவும் என்னை விட்டுவிடுங்கள், இல்லை என்றால் நடப்பதே வேற…!!” என குறிஞ்சி இருவரையும் பார்த்து மிரட்டுகிறாள்…

அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தைப் பார்த்து மற்றவருக்குச் சமிக்ஞை செய்து கொள்வதைப் பார்த்து குறிஞ்சிக்கு பயம் கவ்விக்கொண்டது… லேசாகக் குரல் நடுங்க, “இ.. இங்க பாருங்க, என்னை ஏதாவது பண்ணிடுங்க, என் அத்தனுங்க உங்கள சும்மா விட மாட்டாங்க…??” என எச்சரிக்கை விடுத்தாலும், அவள் கால் நடுங்குவதைத் தடுக்க முடியவில்லை…

முகிலினியும் ரஞ்சனாவும் குறிஞ்சியை விரைத்த பார்வையால் பார்த்துக் கொண்டே அவளை நெருங்க… குறிஞ்சி பயத்தில் தன் கைகளால் முகத்தை மூடிக்கொள்ள…

சில வினாடிகள் பொறுத்தபின் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை என்பதை உணர்ந்து அவர்களைத் தேடினர்; ஆனால் அவர்கள் அங்கு இல்லை. சுற்றித் தேடியும் காணவில்லை. “எங்கே போனார்கள்…?” என குறிஞ்சி நகரப் பார்க்க, அவளின் காலடியில் இரண்டு பெருச்சாளிகளும் கிடந்தன…

“ஏய், என்ன பண்றீங்க…?” என குறிஞ்சி போட்ட சத்தத்தில் குழந்தை விழித்துக்கொண்டு அழ, முகிலினி எழுந்து குழந்தையைத் தூக்க, ரஞ்சு குழந்தைக்குப் பவுடர் பால் கலக்க, அவர்களை விளங்காத பார்வையுடன் பார்த்து நின்ற குறிஞ்சியிடம் அனைத்தையும் ஒன்றும் விடாமல் விளக்கினர் தோழிகள் இருவரும்…

“அடக் கடவுளே! உன் அக்காவுக்கு இப்படி ஒரு நிலைமையா? கேக்கவே கஷ்டமா இருக்கே! பாவம், இந்த பச்சைப்பிள்ளை தாய் தகப்பன் இல்லாம எப்படித் தவிச்சு இருக்கும்…!!” என குறிஞ்சி மெய்யாகவே தென்றலுக்காக வருந்தினாள்…

“இப்பவாது நாங்க செஞ்சது சரின்னு ஒத்துக்கிறியா…?” என முகில் கேட்கவும்…

இங்க பாரு முகிலு, இப்போ கூட நீ சொல்றத வச்சு என் அத்தானுங்க…

மேல என்னால சந்தேகப்பட முடியல, ஏன்னா அவங்க குணம் அப்படி… அத்தனை நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா அதே சமயம் உன் அக்கா சாகுற நிலைமையில அப்படி ஒரு வார்த்தை சொல்லியிருக்காங்கன்னா அது பொய்யா இருக்க வாய்ப்பில்லை… ஆனால் ஏன் சொன்னாங்க தான் எனக்கு புரியல…?? என குறிஞ்சியே குழம்பி விட்டாள்… தென்றல் இறுதியாக கூறியதை கேட்டு…

ஆம், விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்றல், பிரசவ வலி எடுத்து வாழ்வா சாவா என போராடிய நிலைமையில் தான் முகிலினியை அழைத்து, “என் குழந்தையை அனாதையா விட்ராத முகிலு… ஹா..ப்பா… குழந்தை அப்பா பூபதி ராஜாவோட பேரன்… என்னை ஏமாத்திட்டாரு… நியாயம்…ம்மா ஆஆ விட்ராத… குழந்தை பூ…ரா பேரன்…!!” என்று பேசிச் செயலிழந்து மயங்கிப் போனாள்…

அதன் பின்னரே யார் அந்த பூபதி ராஜா என குழம்பி நின்றவளுக்கு விடை அவள் சகோதரி விட்டுச் சென்ற குறிப்பேட்டில் இருந்து கிடைத்தது… அவளின் துரதிஷ்டமா அல்லது விதியின் சதியா என்று தெரியவில்லை. அவளின் சகோதரியின் காதலனின் புகைப்படம் ஒன்று கூட கிடைக்கப்பெறவில்லை… அல்லது அவனின் சாமர்த்தியமான கைங்கரியமா என்று தெரியவில்லை… மொத்தத்தில் தன் தமக்கை ஏமாற்றப்பட்டிருக்கிறாள், அதற்கு காரணம் ரத்தினவேல் பூபதியின் பேரன் தான் என்பது மட்டும் உறுதி…

அவள் நம்புவதற்கு அது மட்டும் காரணம் அல்ல… தென்றலுக்கு வந்த பெரும்பாலான கடிதங்கள் பூபதி மாளிகையின் முகவரியில் தான் இருந்தன… அத்தோடு அவர்களின் காதல் சின்னமாக பூபதி வீட்டு வாரிசு தந்த பரம்பரை செயின் என இவை அனைத்தும் சேர்ந்து அவளுக்கு நிச்சயம் என்ற பின்னே தான் முகில் நியாயம் கேட்டு வந்தாள்…

“பார் குறிஞ்சி, நீ நம்புறியோ இல்லையோ அது எனக்கு தேவையில்லை… ஆனா நிச்சயமா எங்க அக்காவை ஏமாத்துனவனை நான் சும்மா விடப் போறதில்ல…”

“யாருக்காக இல்லாவிட்டாலும் இவனுக்கான நியாயம் நிச்சயம் கிடைச்சே ஆகணும், அதுவரை யார் தடுத்தாலும் நான் ஓயப் போறதில்லை…!” எனத் திட்டவட்டமாக முகில் கூற, அவளுக்கு ஒரு துணையாக ரஞ்சனாவும் எழுந்து நிற்க, இருவரையும் ஒருசேரப் பார்த்து நின்று குறிஞ்சி நீண்ட நெடிய மூச்சொன்று எடுத்து விட்டு…

“நீங்க சொல்றதுல துளி அளவு கூட எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், நான் உங்க ரெண்டு பேருக்கும் உதவி செய்யலாமா என்று முடிவு பண்ணிட்டேன்… ஆனா இதனால எனக்கு என்ன இலாபம்…?” என குறிஞ்சி இருவரையும் பார்த்து வில் புருவம் வளையக் கேட்க,

“என்ன வேணும்…?” என இவர்கள் கேட்க,

அதற்கு குறிஞ்சி கொடுத்த பதிலில்…

அன்றைய நாளில் தோழிகள் இருவரும் இரண்டாம் முறையாகத் திகைத்துப்போயினர்…

“எதே…!” ஒரே போல் இருவரும் கேட்டு வைக்க,

“ஆமா, நீ என்றால் நீ இல்லை ரஞ்சன், என்னை லவ் பண்ற மாதிரி நடிக்கணும். அதுவும் எல்லார் முன்னாடியும் இல்லை, மகேன் அத்தான் முன்னாடி மட்டும் நடிச்சா போதும்… என்ன புரிஞ்சதா…?” குறிஞ்சி விவரமாக காரியம் சாதிக்க,

“ஏம்மா உனக்கு இந்த கொலவெறி? ஏற்கனவே அந்த மனுஷன் என்னைய பார்த்தாலே அவ்ளோ காண்டு ஆகிறார், இதுல உன் கூட சேர்ந்து சுத்தினா எனக்குப் பாடையே கட்டி விடுவார்…!” என ரஞ்சு அஞ்சிப் புலம்ப,

“எனக்கு வேண்டியதும் அது தானே…!” என குறிஞ்சி கூறிவிட்டுச் சிரிக்க,

“எதே, எனக்குப் பாடை கட்டறதா…?” ஆமா, அது என்ன மகேன் அத்தானை மட்டும் வெறுப்பு ஏத்திப் பார்க்கிறது? இதுல ஏதோ உள் குத்து இருக்குறது போல இருக்கே! ஒழுங்கா உண்மை சொன்னா தான் தகுந்த உதவி செய்யப்படும்…!

என ரஞ்சு வெளிப்படையாகவே அவள் சந்தேகத்தைக் கேட்க…

அதுவா அது வந்து…!!! என குறிஞ்சி முல்லைக்கொடி உடலை வளைத்து நாணி வெட்கப்படும் உடல் மொழியை வைத்தே இனம் கண்டு கொண்டாலும், அவள் வாய்மொழி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர்…

“அவர்னா எனக்கு உயிர்…!!” என கூறிவிட்டு முகத்தை இரு கைகளால் மறைத்துக்கொண்டாள் வெட்கத்தில்…

“ஓ, ஆனா நீ உங்க வீர் அத்தான் கூடத் தான் எப்பவும் சுத்திட்டு இருப்ப…??” “அப்புறம் உனக்கு மகேன் அத்தானை பிடிக்கும் சொல்ற லாஜிக் இடிக்குதே…??” என ரஞ்சு பொடி வைத்து கேட்க…

அதுவரை அவர்கள் இருவரின் சம்பாஷனையில் குந்திக்காமல் குழந்தையைப் பார்த்து இருந்த முகில், ரஞ்சுவின் கேள்வியில் புருவத்தைச் சுருக்கி அவளை “என்ன..?” என்று குறு குறுவென பார்க்க… “சும்மா…!!” என வாயசைத்து குறிஞ்சியிடம் கவனத்தைத் திருப்பிவிட்டாள் உஷாராக…

“அதுவா சின்ன வயசுல இருந்தே அவனும் நானும் ஒன்னா தான் வளர்ந்தோம்… எனக்கு அவனோட வம்பு பண்ண பிடிக்கும், அவனுக்கு என் காலைவாரி விடுறது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா யார் கிட்டயும் எதுக்காகவும் அவனை விட்டுக்கொடுக்க மாட்டேன், அவனும் அப்படித் தான்… எங்களுக்குள்ள காதல்ங்கிற உணர்வை தாண்டி புரிதல், நட்பு ஆழமா இருக்கு… அது என்னவோ அவனுக்கும் சரி எனக்கும் சரி ஒருத்தர் மேல ஒருத்தர்க்கு காதல் வரவே இல்லை… ஏன், அந்த எண்ணம் ரெண்டு பேருக்குமே கிடையாது, அவனை கேட்டாலும் இதையே தான் சொல்லுவான்… ஏன் உங்க பட்டணத்துல மட்டும் ஆண்-பெண் நட்பு புனிதமா இருக்கும் போது, அத்தை மகன், மாமன் மகள் காதல் இல்லாம புரிதலோட நட்பா இருக்கக் கூடாதா…??” என குறிஞ்சி ரஞ்சனாவைப் பார்த்து கேள்வி கேட்க…

தடுமாறிப் போனால் பெண்ணவள் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவள் தடுமாற்றத்திலிருந்தே முகில் கண்டு கொண்டான். அவளைக் காப்பற்றும் பொருட்டு…

“தப்பே இல்லை தாயே… நீங்க ரெண்டு பேரும் உங்க வினாடி வினாப் போட்டியை முடிச்சுட்டீங்கன்னா… நாம அடுத்த என்ன செய்யறதுனு முடிவு எடுக்கலாமா…?” என மற்ற இருவரையும் பார்த்து கேட்க…

இருவரும் முகிலை பார்த்தபடி நிற்க, அவளோ கைகளை நெட்டி முறித்து கழுத்தில் சொடக்கு எடுத்துவிட்டபடி, “ஆரம்பிக்கலாமா…?” என்றாள்…

மூவேந்தர்களைக் கவுக்க மூப்பெரும் தேவியர்கள் போடப் போகும் திட்டம் என்ன… கன்னியர்கள் வலையில் காளையர்கள் சிக்கிவார்களா அல்லது காளையர்களிடம் சிக்கிச் சின்னா பின்னமாகப் போகிறார்களா…?? எதுவோ ஒன்று, எது நடந்தாலும் எங்களுக்கு ஒரு குளு குளு கிளு கிளு வேணும், அப்படித் தானே…??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-20

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

12

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top