கீழ் வானம் சிவக்கக் கொண்டு மேலே வந்த ஆதவனுக்கும் ஆர்வம் போலும்… அன்று பெண்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதில்…
கயலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாகக் கொண்டாடினர்…
அன்று பகல் முழுவதும் சார்மினார், கோல்கொண்ட கோட்டை, ராமோஜி பிலிம் சிட்டி, பிர்லா மந்திர் போன்ற ஹைதெராபாத்தின் முக்கிய இடங்களை குதூகலமாகச் சுற்றிப் பார்த்தவர்கள்… அயர்வுடன் விடுதிக்குத் திரும்பினர். சிறிது நேரத்தில் அவர்கள் வாழ்க்கை திசை திரும்பப் போவதை அறியாமல்…
“ஹா…. மச்சி செம டயர்டா இருக்குடி, சீக்கரம் கதவைத் திறங்க, நிக்க முடியல..…!!!” என மஹா படிகளில் நடக்க முடியாமல் நடந்து வர….
“ஷு, கத்தாதீங்கடி எருமைங்களா, வார்டன் வந்துச்சு, அவ்ளோதான்! லேட்டா வந்ததுக்கு சேர்த்து பில் போட்டுடும்…!” சத்யா
“நாங்க என்னடி பண்ண இன்னைக்கு செம அலைச்சல்டி…!!” கயல்..
“செருப்பு நாயே… டைம் ஆச்சு போதும், வாங்கடி சொன்னதுக்கு என்ன சொன்னிங்க… ஹைதெராபாத் வந்துட்டு… என் தலைவர்… அல்லு அர்ஜுன் படம் பார்க்காம போனா மோட்சமே கிடையாதுனு… நைட் ஷோ பார்த்துட்டு இப்போ அங்க குத்துது குடையுது சொன்னா மிதிப்பேன் நாயிங்களா…!!!” எனத் திட்டி கொண்டே கதவைத் திறந்து மூவரும் உள்ளே புகுந்தனர்…
சில அடிகளே எடுத்து வைத்து இருக்கக் கூடும்… அதற்குள்ளே செருப்பு அணிந்த கால்கள் வழுக்குவதை உணர்ந்து….
“ஏய் எருமை கயல்…. தண்ணீர் குழாயைத் திறந்து விட்டுவிட்டு வந்துட்டியா…??” என சத்யா கத்தினாள்…
“ஐயோ சத்யா நான் எதுவும் பண்ணல… பாத்ரூம் பைப் லீக் ஆகி இருக்கப் போகுது, பாரு கெட்ட ஸ்மெல் வருது…!!” என கயல் கூறினாள்.
“சத்யா… அவளைத் திட்டுவதைத் விட்டுவிட்டு முதல்ல லைட்டைப் போட்டுப் பாருடி… என்னனு…!!” என மஹா சொல்ல…
எட்டி லைட்டை ஆன் செய்து விட்டுத் தரையைப் பார்க்கும்போது…. பெண்களின் இதயம் வழுவி அவர்கள் கால்களுக்கு இடையில் விழுந்தது….
ஏனெனில் அங்கு தரை முழுவதும் கிடந்தது… தண்ணீர் அல்ல… அடர் செந்தூர நிறத்தில் இருந்த ரத்தம்… ரத்தம்….!!!
“ஆஆ…ம்மாஆ சத்யா….!!” என கயல் பயந்து சத்யாவின் கையைப் பிடித்தாள்…
“என்னடி இது …??” நடுக்கத்துடன் மஹாவின் குரல்…
சத்யாவுமே அதிர்ந்தாலும் “எனக்கு மட்டும் என்ன தெரியுமா… என்னனு பார்க்கலாம் இருங்கடி…?” என ரத்தம் வந்த திசையை நோக்கி திகிலோடு பெண்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேற…
ரத்தம் வந்த திசையில் அவர்கள் அங்கே கண்டது… உயிரற்ற ஒரு பெண்ணின் சவம், அதுவும் முகம் சிதைந்த நிலையில்… “ஆஆஆஆ… பிணம்ம்ம்ம்…!!” என கத்தியபடி மயங்கி விட்டாள் கயல்…
மற்ற இருவரும் மயங்கும் நிலையில் இல்லை; ஏனெனில் அவர்களுக்குப் பேச்சும் மூச்சும் இல்லாமல் பிரமை பிடித்துப் போய் உறைந்து நின்றனர்…
தாங்கள் காணும் காட்சியானது பிழையாகி மறைந்துவிடுமோ எனும் நப்பாசையில் கண்களைச் சிமிட்டிப் பார்த்தனர்; ஆனால் அந்தக்காட்சியானது பயங்கர உருவம் எடுத்து மேலும் பெண்களை மிரட்டியது… மயங்கி கிடந்தவளை எழுப்ப அவள் மீண்டும் கத்தப் போக, “ஏ கத்தாதடி கயல்…?” என அடக்கினர்…
“சத்யா, ஆ… பயமா இருக்குடி…!!” என சத்யாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள் கயல்…
“ஷ்… கயல், அமைதியா இரு…!!” என அடக்கினாள் சத்யா.
“அவளை அடக்கி என்ன சத்யா பண்ண… இ..இது நம்ம ரூம்ல எப்படி… பயமா இருக்கு சத்யா… ஐயோ என்ன நடக்குதுன்னு புரியலையே… பேசாம வார்டன கூட்டிட்டு வரலாம், வா???” என மஹா சொல்லியபடி வெளியே போக முனைந்த சமையம்…
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மின்சாரம் தடை ஏற்பட்டது…
நிகழவிருக்கும் விபரிதத்தின் பிரதிபலிப்போ…? ஏற்கனவே அசம்பாவிதத்தைப் பார்த்த திகிலில் இருந்தவர்களைக் கிலி பிடிக்க வைத்தது காரிருள்…
“சத்யா, மஹா, இங்க இருட்டுல நிக்குறது பயமா இருக்குடி, ப்ளீஸ் லைட் போடுங்க…!!” என பயத்தில் அழத் தொடங்கினாள் கயல்…
“நாயே, கரண்ட் போய்டுச்சுடி…!!” சத்யா பதட்டத்தில் அதட்டினாள்…
“கயல் அமைதியா இரு, நான் செல்போன் டார்ச் ஆன் பண்றேன்…!!” என மஹா தன் செல்போனை ஒளிர விட்டாள்…
கும் இருட்டை விலக்க முடிந்தாலும், கண்ணை குருடாக்கும் இருளை விரட்டியது கைபேசியின் வெளிச்சம்…
அடுத்து என்ன செய்வது…? என புரியாமல், பயத்தில் பெண்கள் அந்த இருட்டு அறையில் இறந்து கிடந்த சடலத்துடன் கடந்த திக் திக் நிமிடங்கள் அவை.
“சத்யா, என்னடி இது இப்படி ஆகிப்போச்சு? அடுத்து என்ன பண்ண…?” என மஹா தவித்த குரலில்…
“தெரியல மஹா… முதல்ல இங்க இருந்து வெளியே போகணும், அப்புறம் தான் எதுவா இருந்தாலும் யோசிக்க முடியும். நீ எங்க இருக்கியோ அங்கேயே நில்லு… நான் கயலை கூட்டிட்டு வந்துடுறேன்…!” என சத்யா கயலை அந்த இருட்டில் தேடிப் பிடிக்க,
“அம்மாஅஅஅ… சத்யா ப்ளீஸ், ப்ளீஸ்! எனக்கு பயமா இருக்கு… என்னை காப்பாத்து…!” என கயல் வேறு விடாமல் ஒப்பாரி வடித்தாள்.
“அடிச்சிடுவேன் கயல், வாய மூடு! எங்களுக்கு மட்டும் பயம் இல்லையா என்ன…? சப், நாங்க சொல்ற வரை மூடின வாயைத் திறக்க கூடாது…!” என சத்யா அதட்டி, கப்சிப் ஆகிப் போனாள் கயல்.
“மஹா, ஏன் நிக்குற? கதவைத் திறந்து வெளியே போ…!” என குரல் கொடுத்த வண்ணம் சத்யா கயலை பிடித்துக்கொண்டு கதவருகில் வந்தாள்…
“சத்யா, கதவு பூட்டிக்கிச்சு போலடி, திறக்கவே மாட்டேங்குது…?” என கதவின் பிடியைத் திருகிப் பார்த்துக் கொண்டே மஹா பதட்டத்துடன் கூறினாள்…
“என்ன சொல்ற நகரு…!” என சத்யா பிடியை பலமாக இழுத்துப் பார்த்துத் தோற்றவள்…
“மஹா, உன் கிட்ட ரூம் சாவி ஒன்னு இருக்குமே, அதை எடு சீக்கிரம்…!” எனத் துரிதப்படுத்தினாள்…
“ஹா… சத்யா, சாரிடி, அது தொலைஞ்சு போச்சு…!” மஹா…
“என்ன மஹா, இப்போ வந்து சொல்ற? அடுத்து என்ன பண்றது…?” குழம்பி நின்ற சமையலில், போலீஸ் சைரன் சத்தம் கேட்டு மூளை மரத்துப்போய் நின்றனர் பெண்கள்…
“ஐயோ போச்சு போச்சு, போலீஸ் வருது, நம்மள பிடிக்கப் போறாங்களா?” என கயல் வாயில் கை வைத்த வண்ணம் புலம்பிய பின்னரே விழித்துக்கொண்டனர் பெண்கள்.
“சத்யா, போலீஸ்டி அப்போ கொலை நடந்தது ஏற்கனவே தெரியுமா…? இந்த ரூம் வெளியே இருந்து பூட்டினா தான பூட்டும், அப்போ யாரோ நம்மள வேணுமேனே மாட்ட வைக்கப் பார்க்குறாங்களா…?” என சத்யா மனதில் நினைத்ததை மஹா கூறிவிட்டாள்…
“அய்யய்யோ, அப்போ நாம தான் கொலை பண்ணோம்னு நம்மள புடிச்சிட்டு போய் ஜெயில்ல போடுவாங்களடி… ஐயோ வேணாம்டி, ஜெயில்ல கொடுமை படுத்துவாங்கன்னு அந்த படத்துல பார்த்தேன்டி… நம்மளையும் அப்படி பண்ணின நான் செத்தே போய்டுவேண்டி… வாங்க, அவங்க நம்மள பிடிக்கிறதுக்கு முன்னாடி இங்க இருந்து ஓடிப் போலாம்…!!” என கயல் மீண்டும் அழுது புலம்பினாள்…
“ஷ், கயல்! எதுக்கு அழற? நாம தான் எந்தத் தப்பும் பண்ணலையே, அப்புறம் எதுக்கு இப்படி பயந்து அழற? நமக்கு ஒன்னும் ஆகாது, கண்ணைத் துடை…!!” என மஹா அதட்டினாள்…
“எப்படி நிரூபிப்ப? சொல்லு மஹா, நாம தப்பு பண்ணலன்னு எப்படி நிரூபிக்கப் போற??” என சத்யா தீர்க்கமான குரலில் கேட்டாள்…

