“அது….!!” என மஹா கூற முடியாமல் திணறும் போதே….
“கொலை நம்மளோட ரூம்ல நடந்து இருக்கு, போலீஸ் வந்தா நம்ம மேல தான் முதல்ல சந்தேகம் படுவாங்க… அப்படியே நாம பதில் சொன்னாலும், அடுத்து கேள்வி கேட்டா, ‘ரூம்குள்ள எப்படி இவள் வந்தா?’ன்னு கேட்டா என்ன பதில் சொல்லப் போறோம்…?? எதுக்காக…?? யார்…? இவளைக் கொலை பண்ணாங்க…?? தெரியாது…!! இப்படி எந்தக் கேள்விக்கும் நமக்கு பதில் தெரியாதுன்னு சொன்னா நம்புவாங்களா…?? அது மட்டுமில்ல, யாரோ பிளான் பண்ணி நம்மள மாட்டி விடப் பாக்குறாங்க… ஆனா ஏன்…?? எதுக்கு, யாரு…??” எதுவுமே தெரியாம போய் நாம மாட்டிக்க கூடாது… இது நமக்காக விரிக்கப்பட்ட சிலந்தி வலை…!!”
“நீ சொல்றதும் சரிதான் சத்யா, அப்போ நாம தப்பிக்க வேற வழி ஏதாவது இருக்கா…?” என மஹா கேட்டாள். சமையலறையில் அவர்கள் இருந்தபோது, ஹாஸ்டல் வாசலில் போலீஸ் வாகனம் நிற்பதை உணர்த்தும் வகையில் ஆண்களின் கணீர் குரல்கள் கேட்கத் தொடங்கின…
“இங்க பாருங்க, இப்போ எதுவும் பேச நமக்கு நேரமில்லை, உடனே இங்க இருந்து வெளிய போய் ஆகணும்… பாத்ரூம் வழியா போய்டலாம்…!” என சத்யா கூறியதை வேதமாக எடுத்துக்கொண்டனர் மற்ற இருவரும்…
அந்த இக்கட்டான நேரத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்பதை மட்டும் யோசித்தவர்கள்… அந்த சிக்கலை விட்டு முழுமையாக வெளியே வருவதைப் பற்றி சிந்திக்காமல் எடுத்த முடிவு தான் அவர்களைப் பெரும் இக்கட்டில் தள்ளியது…
கதவு சாவி துவார வழியாகப் பார்த்து யாரும் வருகிறார்களா…? எனப் பார்த்தனர்… யாரும் வரவில்லை என ஆசுவாசம் அடைவதற்கான நேரம் அதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள், போலீஸ் வந்து அவர்கள் குற்றவாளிகள் எனப் பிடிக்கும் முன்பே அங்கிருந்து சென்றுவிட நினைத்தனர். ஆனால், சிறையை நோக்கி நடக்கத் தேவையான போதிய நேரமும் அவர்களுக்கு இல்லை; மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் வகையில் மகாவின் கைப்பேசி போதிய சார்ஜ் இல்லாமல் உயிர் விட்டது….
மீண்டும் சூழ்ந்து கொண்டது மர்ம இருள் பெண்களைச் சுற்றி…
“ஆஆ” என கயல் பதறினாள்.
“மஹா…”
“சாரி சத்யா, சார்ஜ் இல்லை…!”
“ப்ச்! இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னேன், மொபைலை அதிகமா யூஸ் பண்ணாதீங்கன்னு! இப்போ வேற வழியே இல்லை, இருட்டுல தான் நடந்து போகணும். மஹா, நீ அப்படியே முன்ன போ. கயல், நீ மஹா முதுகை பிடிச்சிகிட்டு போ, நான் உனக்கு பின்னாடி வரேன்…!!” என சத்யா கூறியதை பின் தொடர்ந்து நகரத் தொடங்கினர்…
மெல்ல ஊர்ந்து செல்பவைகளைப் போன்று தரையில் காலால் ஊன்றி பாத்ரூம் அடைந்து மஹா கதவைத் திறக்க, கயல் “ஆஆஆஆ” என அலறிக்கொண்டு கீழே விழுந்தாள்… என்ன ஏது என்று பதறிக்கொண்டு பார்த்தபோது பார்த்த சமையம்…
வெளியே இருந்து ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம் பிணத்தின் மேல் பட்டு அதன் கோரமான முகத்தைப் பார்த்தவள், பயத்தில் அலறி கீழே மடங்கி அமர்ந்து அழுதாள்…
மற்ற இருவரும் மேலும் பதறி, “க..கயல்… எ..என்னடி ஆச்சு கயல்? எங்க இருக்க…?? ஏதாவது பேசுடி…??” என பயத்தில் அழ ஆரம்பித்தனர்…
“சத்யாஆஆஆஆ எனக்கு பயமா இருக்குடிஇஇஇஇ…!!’என கதறி அழ ஆரம்பித்தாள்…
வேறு வழியின்றி பெண்கள் இருட்டில் தட்டித் தடுமாறி கயலைத் தேடித் தூக்கிக் கொண்டனர்…
அவர்களைக் கட்டிப்பிடித்தவள்… “மஹா, சத்யா, அந்தப் பொண்ணு… அந்தப் பொண்ணு ரொம்பப் பாவம்டி… இவ்வளவு கொடூரமா கொல்ல எப்படிடி மனசு வந்துச்சு… அந்தப் பொண்ணுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல… ஏன்டி அவளைக் கொன்னாங்க…” எனத் தேம்பித் தேம்பி அழுதாள்…
“கயல் இங்க பாரு, போலீஸ் வந்து இந்தப்பொண்ணைக் கொன்னது யாருனு கண்டுபிடிச்சு அவங்களுக்குப் பெரிய தண்டனை கொடுப்பாங்க… வா இப்போவே இங்க இருந்து போய்டலாம்…!!” என அவசரப்படுத்தினார்…
“ஆமாம் ஆமாம், வாங்க போயிடலாம்” என கயல் எழுந்து இருவரின் கைகளையும் தன்னோடு கோர்த்துக் கொண்டு… இருட்டில் தத்தித் தத்தி நடக்க…
திடீரென்று மஹாவின் கால் எதிலோ மாட்டிக்கொள்ள… “சத்யாஆஆ, கால் எதிலையோ மாட்டிக்கிச்சுடி…!!” என பயத்தில் கூற…
“என்ன சொல்ற மஹா… சரி காலை வேகமாக உதறு??” என
“நல்லா மாட்டிக்கிச்சு போலடி, வர மட்டிங்குதுடி…!!” என மாட்டிக்கொண்ட தவிப்பில் அழுகை எட்டிப் பார்த்தது மஹாவிற்கு… “கயல், நான் வேகமா இழுக்குறேன்… நீ அவ கையை கெட்டியா பிடிச்சிக்கோ…!!” என இருவரும் பலம் கொண்டு இழுக்க… அதன் வேகத்தில் மீள்தன்மை கொண்டு… மூவரும் மூன்று திசைகளில் சென்று விழுந்தனர்…
இப்பொழுது அந்த காரிருள் சூழ்ந்த அறைக்குள் எந்த திசையில் விழுந்தனர் என்பதே தெரியாமல் மூவரும் கலங்கி நிற்க…
“சத்யா…”
“கயல்…”
“மஹா…”
“பயப்படாதீங்க… இருக்கும் இடத்துல இருந்து மெதுவா எதையாவது பிடிச்சிட்டு மெல்ல எழுந்திரிங்க… பாத்ரூம் கிட்ட வந்து சேருங்க….!!” என சத்யா சொல்ல…
அவரவர் இருந்த இடத்திலிருந்து பொருட்களைப் பிடித்துக்கொண்டு எழுந்தனர்… மஹாவிற்கு அவள் பிடித்து இருப்பது அவர்கள் அறையின் மேசை நாற்காலி என்பது புரிய, திடமாக எழுந்து நின்றவள் முதலில் போய் கதவை அடைய இலகுவாகிற்று…
அடுத்ததாக கயல், அருகில் எதுவும் தட்டுப்படாமல் தரையில் தவழ்ந்து கொண்டே கதவை நோக்கிப் போக ஆரம்பிக்க, அவள் கையில் ஒரு கூரான பொருள் தட்டுபட்டது… அதை கையால் எடுத்துத் தள்ளிப் போட்டவள்… தவழ்ந்தபடியே கதவருகே சென்றாள்…
இறுதியாக சத்யா கட்டில் அருகே விழுந்து இருப்பதை உணர்ந்தவள், எழும் முன்பு கட்டிலிக்கு அடியில் ஏதோ சற்று வித்தியாசமான பொருள் தட்டுப்படுவதை உணர்ந்தாள். அதை என்னவென்று பார்க்கப் போனவளை…
“சத்யா எங்க இருக்க? நாங்க ரெண்டு பேரும் கதவு கிட்ட வந்துட்டோம், வா! யாரும் வர்றதுக்குள்ள போயிடலாம்…!!” என மஹா ரகசியக் குரலில்…
அத்தோடு அதை மறந்தவள் அவர்களோடு சென்றுவிட்டாள்…
சத்யா அந்தப் பொருள் என்ன என்பதைப் பார்த்து இருந்தால் கதையே வேறாக மாறியிருக்கும்… பார்க்காமல் போனது அவர்கள் துரதிஷ்டம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்…
ஆட்கள் யாரும் வருகிறார்களா எனப் பார்த்துவிட்டு, சந்தேகம் வராமல் கதவையும் பூட்டிவிட்டு… மெல்லப் பூனை நடையிட்டு யார் கவனத்தையும் ஈர்க்காமல் வெளியே சென்று வந்துவிட்டதாக நிம்மதி அடைந்தனர்…
அந்த நிம்மதி நிலைப்பது என்பது கேள்விக்குறிதான்… ஏனெனில் இவர்கள் அறியாமலேயே சிலந்தி வலையில் மாட்டிய இறையாகிப் போனார்கள்…
ஹைதராபாத்தில் அவர்களுக்குத் தெரிந்த நெருங்கிய தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றனர்…
அன்று இரவைத் தூங்காமலேயே கழித்தவர்கள், விடியும் வேளையில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்த செய்தியைப் பார்த்தபோது அதிர்ச்சியில் நின்றனர்…
காரணம், அதில் கொலை நடந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதிரடியாக நுழைந்த காவல் துறை பல தடயங்களைக் கைப்பற்றியது. பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இந்த வழக்கு சிறப்பு அதிகாரியிடமும் மற்றும் ஹைதராபாத் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் மிஸ்டர் கருடனிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர் விசாரிக்கும் விதம் வேறு என்பதால், மக்கள் பெரிதும் ஆவலுடன் இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அதேபோல், ஹாஸ்டல் கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் மற்றும் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து தகவலும் வெளிவந்த நிலையில், பெண்களைத் தேட வேண்டிய குற்றவாளிகள் என காவல்துறை அறிவித்ததைத் தொடர்ந்து பெண்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தனர்.
வேறு வழி இல்லாமல் போலீசில் சரணடைய முன்வந்தனர். அதன்படி, அவர்கள் தோழியின் தந்தையின் உதவியோடு காவல் நிலையம் சென்றபோது, வழிமறித்து பெண்கள் மூவரையும் கயவர்கள் கடத்திச் சென்றனர்… அதன் பின் நடந்த அனைத்தும் நாம் அறிந்ததே…

