வாசனை மிகுந்த மரத்தால் அமைந்த குடிலின் உள்ளே, கட்டிலில் மயக்கத்தின் பிடியில் படுத்திருந்த சத்யாவின் அருகே அமர்ந்து, அவளின் பொழில் முகத்தின் வாட்டம் மற்றும் வதங்கிய நிலையைக் கண்டு கெளதம் வெம்பினான்….
சத்யாவை முதல் முறை கெளதம் பார்த்த போது அவனுக்கு நினைவில்லை… மறுமுறை அவன் சத்யாவை பார்க்கும் பொழுது அவளுக்கு நினைவில்லை… விசித்திரமான அவர்களின் காதல் விதியை நினைத்து நொந்து போனவன், நினைவில் முதன்முதலில் சத்யாவின் முகத்தை அரைமயக்கத்தில் பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தான்….
கெளதம் கட்டவிழ்த்து விடப்பட்ட காளையாகவும், காற்றின் போக்குக்குத் திரியும் நூலறுந்த காத்தாடியாகவும்… இளமையின் துடிப்பில் சூடேறிய இளம் ரத்தத்தின் முறுக்கில் சுற்றித் திரிந்த சமையம் எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் சிக்கி, கெளதம் அடிபட்டு உயிருக்கு போராடிய சமயம்…
“நான் அப்பவே நினைச்சேன் இவனுங்களுக்கு எல்லாம் இப்படி தான் நடக்கும்னு, பணம் இருக்குற கொழுப்புல எருமை மாட்டு வண்டியை டர் புர்னு ஓட்டிட்டு போனால் இப்படி தான் ஆகும்…!!” என கெளதமைச் சுற்றி நின்ற கூட்டத்தில் ஒருவன்…
“ஐயயோ தலையில அடிபட்டு இருக்கே, உயிர் பிழைப்பானா பிழைக்கமாட்டானா…?” என பலர் வேடிக்கை பார்த்தனர்… வாழ்வா சாவா என கௌதம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், விண்ணைப் பிளந்து கொண்டு ஒளி வெள்ளத்துடன் வந்த தேவதையாகக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்த சத்யா கௌதமின் அருகே வந்து…
“என்ன இப்படி சுற்றி வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? ஒன்னு உதவி பண்ணா பண்ணுங்க, இல்லையா விலகி நில்லுங்கள்!” என சத்தமிட்டவள்…. கீழே ரத்த வெள்ளத்தில் மிதந்த கௌதமிடம், “உங்களுக்கு ஒன்னும் ஆகாதுங்க, இதோ ஆம்புலன்ஸ் வந்துடுச்சு….!!” என அவள் ஏற்கனவே அழைத்து இருந்த அவசர உதவி ஆம்புலன்ஸ் வந்து இருக்க…
அதில் ஏற்றி விட்டவள் மருத்துவமனை போக்கும் வரை கௌதமுக்கு ஆதரவாக உடனிருந்தாள்… “சார், உங்களுக்கு ஒன்னும் ஆகாது, நீங்க பிழைச்சுக்குவீங்க சரியா…. நீங்க நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்…!!” என அவனுக்கு நம்பிக்கை அளித்த வண்ணம் சென்று அவன் சிகிச்சை பெறும் வரையில் உடன் இருந்தாள்…
பின் கௌதம் கண் விழிக்கும் சமயம் பெற்றோரும் உற்றோரும் இருந்தனர். அவளைத் தவிர முழுமையாக மீண்டவன் அவளைத் தேடாத இடமில்லை. அவனுக்கு மறுஉயிர் தந்த தேவதையின் முக பிம்பம் கௌதமின் ஆழ்மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து போனது…
அதன்பின், கௌதமின் வாழ்வில் மறைந்திருக்கும் மற்றொரு பக்கத்தையும், தன்னைக் காத்த தேவதையையும் தேடுவது ஒரு பக்கமும், பல நாள் தவத்தில் இருந்த அந்த மனிதனுக்கு வரம் வருடம் தேவதையாக சத்யா அமைவது ஒரு பக்கமும் இருந்தது. ஹைதராபாத்தில் ஒரு தொழில்முறை சந்திப்பில் எதார்த்தமாக சத்யாவை பார்க்க நேர்ந்தது… அதன் பின் அவளைத் தேடி வந்த சமயம் சத்யா பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தாள்… முதன்முதலில் கௌதம் சத்யாவை எந்த நிலையில் பார்த்தானோ, அதே நிலையில்தான் இன்று சத்யா இம்முறை கௌதமுக்குத் தெரிய நேர்ந்தது. இதுதான் விதியோ என நொந்து கொண்டான்…
தன்னவளுக்காகவே அவள் மீது கொண்ட காதலுக்காகவும், அவள் தவறு செய்திருந்தாலும் அவளுக்குத் துணை நிற்கத் துணிந்துவிட்டான்… அதற்கு இடையூறு விளைவிக்க யார் வந்தாலும் சரி, அது கரிகாலனாக இருந்தாலும் சரி, வழக்காக இருந்தாலும் சரி, எதைப் பற்றியும் கவலை கொள்ளப் போவதில்லை என்ற தீர்க்கமான தீர்மானம் எடுத்து இருந்தான் கெளதம்….
“உன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டேன்னு எப்படி எல்லாம் தேடி அலைந்து, கடைசியில் உன்னை இப்படிப் பார்க்கத் தானடி…?? அந்த கடவுள் உன்னை என் கண்ணில் காட்ட வேண்டும்…!!”
“நீ என்ன பண்ணி இருந்தாலும் சரி, உன் கூடவே கடைசி வரை நான் இருப்பேன்டி… நீயே என்னை போன்னு விரட்டினாலும் உன் கூடவே தான் இருப்பேன்… அது சாவாக இருந்தாலும் சரி…” என சத்யாவின் கரங்களை தன் கன்னத்தில் ஒற்றிக்கொண்டு கரைந்தான்.
ஒருவாறு தன்னை மீட்டுக்கொண்டு,
“ஏ சத்யா, கண்ணைத் திறந்து என்ன பாருடி ஏய்…. நீ என்ன பொம்பளை ரௌடியா அப்படி எகிறி எகிறி சண்டை போடுற… பார்த்தேன் அன்னைக்கு ஷாப்பிங் மாலில் ஒரு பையன் உன்னை இடிச்சதும், அவனை கொல்லுற வேகத்துல தான் வந்தேன். ஆனா கொடுத்தே பாரு ஒரு அறை! நீ அரைச்சதுல எனக்கே பாவமா போச்சுடி…. ஆனா அந்த துணிச்சல் தான்டி உன்கிட்ட ரொம்ப பிடிச்சது. சீக்கிரம் எழுந்து வாடி ரவுடி ராக்கம்மா….!!”
இந்த முட்டக்கண்ணை உருட்டி உருட்டி முறைக்கும் பொழுது, இந்த படபடக்கும் சிப்பி இமைகளில் முத்தம் கொடுக்கணும்…!!
கோபத்தில் துடிக்கிற இந்த சிவப்பு மிளகாய் மூக்கை அப்படியே கடிச்சு வைக்கணும்…!
நீ கோபப்பட்டு பேசும்போது, இந்த கோவை இதழைக் கடித்து முத்தமிட்டு சமாதானம் பண்ணனும்….!!
நீ கோபப்பட்டு கை ஓங்கும்போது உன்னை அப்படியே வளைத்து பிடித்து, ம்ம்ம்ம்ம்… பேச மட்டும் இல்லை, அதுக்கு செய்யவும் ஆசையா இருக்குடி! உன் ரசிகனை ரொம்ப காக்க வைக்காதடி….!!
என கௌதம் பேசியதைக் கேட்டு சத்யாவின் நாடித் துடிப்பில் மாற்றம்….
மூலிகை எடுக்கச் சென்றவர்கள் வெற்றிகரமாகத் திரும்ப வந்தனர்…
“இந்தாங்க ஐயா, நீங்க கேட்ட மூலிகை…!!” என கரிகாலன் நீட்ட… கூட இருந்தவர்களுக்கு அப்பொழுதுதான் அந்த நினைவே வந்து, கரிகாலனை குற்ற உணர்வோடு பார்த்தனர்….
“இதை எந்த கேப்பிலடா எடுத்த…??” என பரத் வியந்து கேட்க…
“நீ குகை பக்கம் ஒதுங்குறதுக்கு முன்னாடியே…!!” என கரிகாலன் நக்கலாகக் கூறினான்…
“க்கும் ஏன், நீ தண்ணிக்குள்ள ஜலபுல ஜங் பண்றதுக்கு முன்னாடி கூட சொல்லலாமே…!!” என பரத்தும் பதிலுக்கு அவன் காலை வாரிவிட்டான்…
பின் பெண்கள் அருகில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்ட இருவரும்… “திட்டம் எப்படி போகுது…!” என பரத் கேட்க,
“எல்லாம் ஒழுங்கா தான் போய்ட்டு இருக்கு, ஆனா இவங்க தான் பிடி கொடுக்க மாட்டிங்குறாங்களே….??” என கரிகாலன் கூறிட,
“அப்புறம் எப்படிடா நாம நினைச்சு வந்த வேலை முடியும்…!!” என பரத் கவலையாகக் கேட்க…
“விட்ரா… இவளுங்க எங்க போயிட்டே போறாங்க, இவங்க குடுமி நம்ம கையில இருக்கு…. பார்த்துக்கலாம்….!!” கரிகாலன்…
“அது சரிடா, இந்த பத்ரா நம்ம கிட்ட இருந்து தப்பிச்சு போய்ட்டானே, அதுக்கு என்ன பண்ண…??” பரத்…
“அது நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தனது கட்டைவிரலைத் புருவத்தில் வைத்துத் தேர்த்தபடி, கரிகாலன் யோசித்து ஒரு புதிய திட்டத்தைத் தீட்டினான்.
விடையில்லா வினாக்களுக்கான விடையைத் தேடி இருளின் பயணம் இரவில்… நாம் அறியா ரகசியங்களையும் தெரிந்த காற்றும் சுழன்று அடிக்க… மரகிளையின் உச்சியில் அமர்ந்து இரை வருவதற்காகக் காத்திருக்கும் கோட்டானிகளின் கண்ணில் சிக்கிய காட்சியில் அலறித் துடித்தது…
அமைதியான, நிச்சலனமான இரவின் பிடியில் உறங்கிக் கொண்டு இருந்தனர் பெண்கள்…
வெள்ளி நிலா ஒளி ஊடுறுவிய குடிலில் மெல்லிய சிமினி விளக்கு எரிந்து தங்க மஞ்சள் நிறத்தை மிதமாகப் பரப்பிக் கொண்டு இருந்த வேளை…
திடகாத்திரமான இருள் உருவம் ஒன்று குடிலின் சாளரம் வழியே உறங்கிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்த பார்வையில் வேட்டையாடும் வெறியில் அவ்விருட்டிலும் கண்கள் மின்னி மறைந்தன. அழுத்தமான அதே வேளையில் மிக மெல்லிய காலடி ஓசையோடு உள்ளே நுழைந்த அவ்வுருவம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் அருகில் சென்று அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தபடி நின்றது. பின் அதன் கையில் இருந்த கூர்முனை ஆயுதத்தை வெளியே எடுத்து சத்யா மீது குத்தப் பாய்ந்த சமையம்…
மூடியிருந்த சத்யாவின் கண்கள் விருட்டென விரிந்து, தன்னை நோக்கி வந்த கத்தியைப் பாய்ந்து பிடித்துக் கொண்டிருந்தாள்…
அதில் திடுக்கிட்ட உருவம் விட்டுக்கொடுக்காமல் மேலும் வலுவாக சத்யாவைத் தாக்கத் துடித்தது; அதில் சத்யாவிற்கும் அவ்வுருவத்திற்கும் இழுப்பாரி நடைபெற்றது…
ஒரு கட்டத்திற்கு மேல் சத்யா தோற்க நேரிடும் சூழலில், சரியாக உள்ளே வந்த கரிகாலன், பரத், கௌதம் மூவரும் அந்த உருவத்திடம் இருந்து சத்யாவைக் காப்பாற்றினர்…
அதில் திடுக்கிட்ட பெண்கள் எழுந்து, அருகில் இருந்த விளக்கை அந்த உருவத்தின் அருகே கொண்டு சென்று யார் என்று பார்க்க அதிர்ந்து போயினர்….
வந்தவன் யார்…?? பெண்களை விடாமல் துரத்தும் மர்மம் தான் என்ன…?? முடிச்சுகள் அவிழும் தருணம்….
!

