கரிகாலன் கூறியதை ஆட்சேபனை இன்றி ஏற்றுக்கொண்டனர்…
“இந்தப் பெண்கள் கொலை நடந்த சமயம் விடுதிகள் இல்லை…?? ஷர்மிளா கத்தியால் சாகவில்லை, கழுத்தை நெரித்துத்தான் கொலை செய்யப்பட்டாள்…?? இந்தப் பெண்கள் தலைமறைவாகவும் இல்லை, இது எல்லாம் சரி மை லார்ட்…!! ஆனால் ஷர்மிளா செத்துக்கிடந்தது இந்த பெண்களின் அறையில் தான்… என்பதையும் மறுக்க முடியாத உண்மை… அது எப்படி? இந்த பெண்களுக்கும் ஷர்மிளாவுக்கும் நடந்த பிரச்சனையில், ஷர்மிளா அந்த விடுதியை விட்டு வெளியே சென்றுவிட்ட பின்பு, எப்படி இவர்களின் பூட்டிய அறைக்குள் செத்துக் கிடந்தாள்? இதற்கான பதிலையும் எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறினால் நன்றாக இருக்கும்… நாம் அனைவரும் மட்டுமல்ல, மக்களின் எதிர்பார்ப்பும் ஷர்மிளா கொலைக்கான நீதி கிடைத்தே தீர வேண்டும் என்பதுதான்; அதுவே எனது கோரிக்கையும்…!!” என்றார் சாணக்கியன்…
“மை லார்ட், செத்தது ஷர்மிளா இல்லை எனும் போது, எப்படி ஷர்மிளா கொலைக்கான நீதி வேண்டும் என்று கேட்பது கடலிலே இல்லாத விண்மீனைப் பிடித்துத் தருமாறு கேட்பது போல் இருக்கின்றது…??” என பரத் கூறியதும் நீதிமன்றமே சலசலப்புற்றது…
“இது என்ன புது கதை….?? இதுவரை இவர்கள் கட்சிக்காரர்கள் ஷர்மிளாவை கொலை செய்யவில்லை எனக் கூறி வந்தவர்கள்… இப்பொழுது திடுதிடுவென இறந்தது ஷர்மிளாவே இல்லை என கூறி எதை மாற்ற முயல்கிறார்கள் என்று விளங்கவில்லை மை லார்ட்… எதை நிரூபிக்க இந்த பொய்…??” என சாணக்கியன் கேலி செய்தார்…
“என்ன சொல்ல வருகிறீர்கள் பரத்…??? செத்தது ஷர்மிளா இல்லையென்றால் வேறு யார்…?? அப்படியானால் ஷர்மிளா எங்கே…??” – ஜட்ஜ்
“எஸ் மை லார்ட்… செத்தது ஷர்மிளா இல்ல….!! பிறக்கும் போதே இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த ஷர்மிளாவின் சகோதரி சஞ்சனா தான் கொலை செய்யப்பட்டாள்…!!” என பரத் கூறியதும்…
“மை லார்ட், எதிர்க்கட்சித் வழக்கறிஞர் இந்த வழக்கை திசை திருப்பப் புதுப்புதுக் கதைகளைப் புனைந்து கொண்டிருக்கிறார்…!!” என சாணக்கியன் எகிறினார்…
“என்கிட்ட அதற்கான ஆதாரம் இருக்கு மை லார்ட். நீங்க அனுமதிச்சா இந்த கோர்ட்டிலேயே உங்க முன்பாகவே சாட்சிகளையும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்க நான் தயாராக உள்ளேன்…!!” என பரத் கூறினார்.
“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்… பரத், யூ மே புரோசீட்..!!”
“இந்த கேஸ்ல செத்தது ஷர்மிளா இல்ல சஞ்சனாதான் என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை எனக்கு விரைவாகக் கிடைக்க உதவியாக இருந்த… இந்தியாவின் சிறந்த இளம் தொழிலதிபர் எனப் பட்டம் வென்ற மிஸ்டர் கௌதம் பிரபாகரனைச் சாட்சியாக அழைக்கிறேன்…!!” என்றதும்
பெண்கள், “இன்னும் எத்தனை அதிர்ச்சியைக் கொடுப்பீங்க…??” என வாசலைப் பார்க்க…
ஆடம்பரமான கோட் சூட்டில் ஸ்டைலாக வந்து நின்றான் இந்தியாவின் சிறந்த இளம் தொழிலதிபரான கௌதம் பிரபாகரன்…
“ஏன் மச்சி, நாம எல்லாரும் இந்த கதையோட ஹீரோயின் தானா…?” கயல்
“எனக்கும் அதே டவுட் தான்டி…” மஹா
“ஏண்டி லூசுங்களா, இன்னுமா நம்புறீங்க நாம தான் கதாநாயகிகள்னு…?” சத்யா…
“பின்ன இல்லையாடி.. நம்ம கூடவே சுத்தி இருக்காங்க… நமக்கு மட்டும்தான் இவங்க யாருனே தெரியல, ஆனா இவங்க மூணு பேரையும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நாமளும் இங்க தான் இருந்தோம், நமக்கு மட்டும் ஏன் தெரியல…?” என கயல் அங்கலாய்க்க… மஹா வழிமொழிய…
“அது ரைட்டர் செஞ்ச சதிடி! அதுவும் இல்லாம அப்போ அப்போ நியூஸ் பார்க்கணும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த பிடிஎஸ்ல முழுங்கி கிடைக்குறீங்களே… அப்புறம் எப்படி தெரியும்…!!” என சத்யா கலாபர்கள் வந்து விட்ட நிம்மதியில் இயல்பாக கலாய்த்தாள்…
“அந்த சோகத்தை ஏன்டி கேக்குற பிடிஎஸ் குழு பிரியப் போகுதாம், அதை நினைச்சாலே துக்கம் தொண்டையை அடைக்குது…!!” என மஹாவும் கயலும் கண்ணீர் சிந்தினர்.
“ஷு பக்கிஸ்! எங்க உட்கார்ந்து என்ன பேசிட்டு இருக்கீங்கடி? அமைதியா இருங்க, கொஞ்சம் கூட கொலை கேஸ்ல மாட்டி இருக்கோம்னு பயம் இல்லாம…!” என்றவள், இளமைத் துடிப்புடன் மிடுக்காக நின்ற கௌதம் பிரபாகரனை காதல் கொண்ட கண்களால் தீண்டினாள்.
அது சரி, என அவர்கள் நினைக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம்!
“சொல்லுங்க மிஸ்டர் கௌதம் பிரபாகரன்… உங்களுக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்பந்தம்…?” சாணக்கியன்.
“உண்மை தெரிந்தால் அதைச் சொல்றதுக்குக் கூட முன் வரலாம் தானே…? அதைத் தவிர வேறு என்ன சம்பந்தம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் மிஸ்டர் சாணக்கியன்…?” என கௌதமின் பதிலில் மூக்குடைந்து நின்றார் சாணக்கியன்…
“சரி மிஸ்டர் பரத், உங்களுக்கு ஷர்மிளா எப்படித் தெரியும்? உங்களுக்கும் சரும அழகுக்கும் என்ன சம்பந்தம்…? அதையாவது நான் கேட்கலாமா…?” என நக்கலாகக் கேட்டார் சாணக்கியன்.
“ஸாரி மிஸ்டர் சாணக்கியா, ஷர்மிளாவை எனக்குத் தெரியாது, ஆனால் என்னோட நண்பனுக்குத் தெரியும்…!” என்று கெளதம் விவாகரமாகப் பதில் கூறினான்…
“தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற மாதிரிதான் பதிலைச் சொல்லி எதை நிரூபிக்க நினைக்கிறீர்கள் மிஸ்டர் கெளதம்…?” சாணக்கியரின் கோபம் எல்லை கடக்க ஆரம்பித்தது.
“நான் நேரடியாகவே உண்மையாவே சொல்றேன், என்னை விட என் நண்பனுக்குத்தான் ஷர்மிளாவை நல்லா தெரியும்!” கெளதம்…
“அப்படியானால் உங்க நண்பர் தானே இங்கு இருக்க வேண்டும், அவருக்குப் பதில் நீங்கள் இங்கே வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? போய் அவரை அழைத்து வாருங்கள்…!” என சாணக்கியர் எள்ளலாகக் கேட்டார்.
“அதுக்கு நான் சொர்க்கம் தான் போய் அழைத்து வர வேண்டும்…!” என கௌதமும் அவரை விடப் படு எள்ளலாகக் கூறினான்.
“மை லார்ட், என் நண்பன் வினித் இறந்துவிட்டான்… அவன் மூலமாகத்தான் ஷர்மிளாவைப் பற்றித் தெரியும்… அப்படி எனக்குத் தெரிந்த சில உண்மைகளைக் கூற எனக்கு அனுமதி வேண்டும்…!” என கெளதம் நேரடியாகக் கோரிக்கை வைத்தான்.
“சொல்லுங்கள் கௌதம், உங்களுக்குத் தெரிந்த உண்மையைத் தாராளமாக இந்த நீதிமன்றத்தில் நீங்கள் கூறலாம்…!!” என அனுமதி வழங்கினர்…
“நன்றி ஐயா, நான்கு மாதங்களுக்கு முன்னால் என் நண்பன் வினித் ஒரு பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான், அவள் பெயர் ஷர்மிளா… அப்போ எனக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது… என் நண்பன் இறந்த பிறகுதான் அவளைப் பற்றி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் தெரிந்து கொண்டேன், இதுவே…”
ஷர்மிளா ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஆடம்பர வாழ்க்கையை வாழ நினைத்து பல பணக்காரர்களுடன் இருந்து வருகிறாள்; அந்த நெருக்கம் பல நேரங்களில் கட்டிலில் கம்பெனி கொடுக்கும் வரை சென்றுவிடுகிறது…. அப்படியான நெருக்கமான தருணங்களில் அவர்களுக்கே தெரியாமல் புகைப்படமும் வீடியோவும் எடுத்து, அதை வைத்து மிரட்டி பல லட்சங்களை மோசடி செய்திருப்பதாகத் தெரிந்தது… அவளைப் பற்றி முழுமையாகத் தெரியாத என் நண்பனும் அவளோடு நெருங்கிப் பழகி இருந்துள்ளான்; அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்து வைத்துப் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரம் இதில் இருக்கிறது…!!” என ஒரு கோப்பையை நீதிபதியிடம் அளித்துவிட்டுத் தொடர்ந்தான்…
ஒரு அளவுக்கு மேல் என் நண்பனால் பணத்தைக் கொடுக்க முடியாததால், ஷர்மிளாவிடம் அதை நேரடியாகவே தெரிவித்துவிட்டான்; அதோடு அவளைச் சங்கடப்படுத்தாமல் தவிர்த்தும் வருகிறான். பணம் கிடைக்கவில்லை என்றதும், ஷர்மிளா பலவகையில் வினித்தை மிரட்டிப் பார்த்துவிட்டு, ‘அந்த அந்தரங்க வீடியோவை என் நண்பனின் குடும்பத்திடம் கொடுத்து, உங்கள் பையனின் மானத்தைச் சிதைத்து சிரிக்க வைத்துவிடுவேன்; ஒழுங்காக நான் கேட்கும் தொகையைக் கொடுங்கள் அல்லது இந்த வீடியோவை உங்கள் சொந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்’ என மிரட்டியுள்ளாள். அதற்குப் பயந்து அவர்கள் அவள் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டனர்.

