கண்ணி வைக்கும் கலாபனே-15

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 24/Sep/2026 ◷ 4 min read

“கேட்டேன்…??” என சத்தம் உயர்ந்தது…

“பார்த்த உடனே பிடிக்கவில்லை… பழகப் பழகப் பிடித்திருக்கிறது…!!” என இருவரும் தலை குனிந்தபடியே கூறினர்….

இருவரின் குனிந்த தலையையும் பார்த்து கசந்த முறுவல் புரிந்தவள் அமைதியாகிப் போக….

சத்யாவிடம் பெரிதாக எதிர்பார்த்த கயலும் மஹாவும் அவள் அமைதியைக் கண்டு இருவரும் உள்ளத்தால் குறுகுறுக்க… “சத்யா ஏதாவது சொல்லுடி… இப்படி அமைதியாக இருக்காதே??” மஹாவின் கேள்விக்கு மௌனமே பதிலாக இருந்தது…

“காதலிப்பதும் காதலிக்காததும் உங்கள் தனிப்பட்ட உரிமை, அதில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை… இத்தனை நாள் நண்பர்களாக இருந்ததற்கு ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்லிவிடுகிறேன்… அவசர காலத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்… ஆத்திரத்தில் முடிவெடுத்து, அவசரத்தில் அழு என்கிற கதையாகிவிடக் கூடாது இதை…

எடுத்துக்கொள்வதும் எடுத்துக்கொள்ளாததும் உங்கள் உரிமை…!!” என பேச்சை முடித்துக் கொண்டவளைப் போல் சிந்தனையில் ஆழ்ந்து போனாள் சத்யா…”

சத்யாவின் நறுக்குத் தெறிக்கும் பேச்சுகளில் வெகுவாக அடிபட்டுப் போனது தோழியாரின் உள்ளம்… அதற்கு மேல் பேச எதுவுமே இல்லாமல் மௌனம் ஆட்சி புரிந்தது மூவருக்குள்ளும்…

அதை உடைப்பது போல கயல்… “எப்படிடி சத்யா கண்டுபிடிச்சது…?” என, “இவ்வளவுதான் என் மௌனத்தின் நீளம்” என மனதில் பட்டதை கேட்டு வைத்தாள்…

மஹாவிற்கும் இக்கேள்வி மனதில் உதித்தது உண்மையே….

“மொசப் பிடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாதா…?” என சத்யா தலையைத் திருப்பாமலே கூறினாள்…

“மச்சி எங்க மேல கோவமாடி ப்ளீஸ்டி உன்கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கோம், இன்னும் அவங்ககிட்ட கூட சொல்லல, உனக்கு பிடிக்கலனா எங்களுக்கு வேணாம்…!” என கூறிய மஹாவைப் பார்த்த சத்யாவின் பார்வையில், இறுதி வார்த்தை மஹா வாய்க்குள்ளாகவே விழுங்கிவிட்டாள்….

“நான் அப்போ சொன்னது தான் இப்போவும்… காதலிக்கிறதும் காதலிக்காததும் உங்களுடைய தனிப்பட்ட உரிமை, அதில் நட்பு என்கிற பெயரில் கூட நான் தலையிட மாட்டேன்… என்னோட எண்ணம் எல்லாம் நம்ம தலைக்கு மேல பெரிய கத்தி தொங்கிட்டு இருக்கு… எப்போ, எந்த இடத்தில் இருந்து கத்தி நம்மள நோக்கி வரும் என்று தெரியாம ஓடிட்டு இருக்கோம்… இதுக்கு நடுவுல உங்களுக்கு காதல் எப்படி முளைச்சுதுனு யோசிச்சிட்டு இருக்கேன்…!!” என நிதர்சனத்தை சத்யா கூறிய பின்னரே, யதார்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தனர்….

“ப்ஸ்! சும்மா சும்மா மூஞ்சியத் தொங்கப் போட்டுட்டு நிக்காதீங்க…. இதுக்குத்தான் சொன்னேன், எதைச் செய்யும் முன்னரும் யோசிச்சுச் செய்யச் சொன்னேன்… இப்போ போய் தூங்குங்க… மணி ஆகிடுச்சு…!!” என அவர்களை விரட்டியவள் தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்….

உண்மைச் சுட்ட சோர்வுடன் உறங்கச் சென்ற கயலிடம்… “கயல் பெயர் என்ன சொன்னது?” என கண்களை மூடியபடி சத்யா கேட்க..

“கரிகாலன்டி… உயரமா இருந்தாரே… நல்லா கலரா….??” என கயல் ஆர்வத்தில் சொல்லிக்கொண்டே போக சத்யா திரும்பிப் படுத்துக்கொண்டாள்… அதைப்பரியாத கயல் மேலே தொடர்ந்தாள்… மஹா வந்து அவளை அமைதிப்படுத்தும் வரை…

நள்ளிரவு தாண்டிய நடுநிசி நேரம்… ஓநாய்களின் ஓலம் நடுங்கச் செய்ய, குடிலில் இருந்த மூன்று ஜோடி கண்களில் ஒன்று மட்டும் உறங்காமல் விழித்திருந்தது…

“கரிகாலன்… க. ரி. கா.. ல.. ன்.. காலன்.. கான்… கருடன்…!!” எனச் சிந்தனையிலேயே விருட்டு என்று எழுந்து அமர்ந்தாள் சத்யா…

சத்யாவின் சந்தேகம் உர்ஜிதம் ஆகுமா நாளைய விடியலின் கையில்…


நிச்சயமற்ற உலகில் மெல்ல மெல்ல இருள் மறைந்து பூபாலம் இசைக்கும் நேரம்….

விடிந்தும் விடியாத வேளையில் பெண்களைத் தேடி மூவரும் அதிர்ந்து நின்றனர்…. காரணம் பெண்கள் மூவரும் அதிகாலையிலே கிளம்பிச் செல்வதற்காகக் கதவைத் திறக்கவும் இவர்கள் வரவும் சரியாக இருந்தது…

“எங்க கிளம்பிட்டீங்க எல்லாம்…??” என அதிர்ச்சியான குரலில் கௌதம் கேட்க

“உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, இதுக்கு மேல எங்க வழியை நாங்க பார்த்துக்கிறோம்…!” என சத்யா வெட்டிப் பேசிவிட்டு கிளம்பத் துணிந்து…

“எப்படிப் பார்த்துப்பீங்க உங்களுக்கு இன்னும் முழுசா குணமாறப்போகுதுன்னு… பார்த்தீங்கதானே நேத்து நடந்ததை…?” என பரத் அவர்களைப் போக விடாமல் தடுக்க முனைந்தான்…

“அது எங்க பிரச்சனை சார், அதை எப்படிச் சமாளிக்கணுமனு எங்களுக்குத் தெரியும்… வந்தவங்க ஒரு நாள் போய்தான் ஆகணும், அதனால எங்களைத் தடுக்காதீங்க…!” என காரமாக கூறிவிட்டு, கயல் மற்றும் மஹாவின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற முயன்றவர்களை, அதுவரை வேடிக்கை பார்த்தவன் தன் நீண்ட கைகளை நீட்டித் தடுத்து நின்றான் கரிகாலன்…

“உங்களை இங்கிருந்து போக நான் அனுமதிக்க மாட்டேன்… ஒழுங்கா உள்ள போங்க…!!” என உருமினான் கரிகாலன்…

அதில் கயலும் மஹாவும் திடுக்கிட்டு அவனைப் பார்க்க, சத்யா மட்டும் அமைதியாக அதே சமையல் கூரான பார்வையை கரிகாலனைப் பார்த்தபடி இருந்தாள்…

“என்ன உரிமைல இந்த மிரட்டல் மிஸ்டர் கருடன்? ச்ச… சாரி கரிகாலன்…?” என்கிற வார்த்தையில் சத்யா கரிகாலனை ஆழமாகப் பார்த்தாள்…

அதில் இறுகிய முகத்துடன் கரிகாலன் பதில் கூறத் தொடங்கினான்…

“ஏன்னா நீங்க மனசாட்சியே இல்லாம கொன்ன ஷர்மிளா என் தங்கை…!!” எனத் தடாலடியாகக் கூறிவிட, அதை கேட்ட பெண்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்…

“உலகம் தெரியாத ஒரு அப்பாவி பொண்ணை துடிக்க துடிக்க கொன்ன உங்களை எப்படி சும்மா விட முடியும் சொல்லுங்க… உங்களுக்கு என் தங்கச்சி என்ன துரோகம் பண்ண அவளை போய் நீங்க மூணுப் பேரும்… ச்ச… பொண்ணுங்களா நீங்க…!!” என கரிகாலன் ஆத்திரமாக கேட்டான்…

“சொல்லுங்க என் தங்கச்சியை…?? ஏன் கொன்னிங்க சொல்லுங்க….?? ஏன் கொன்னிங்க…??” என கரிகாலன், பரத், கௌதம் மூவரும் இறையை வட்டமிடும் கழுகு போல் பெண்களை வட்டமிட்டனர்…

“நிறுத்துங்க… ஷர்மிளா உங்க தங்கச்சியா…?? சத்தியமா எங்களுக்குச் செத்தது ஷர்மிளான்னு நீங்க சொல்லித் தான் எங்களுக்கே தெரியும்…!!” என சவால் பொருட்டாகாமல் சத்யா பொங்கினாள்.

“இதை எங்களை நம்பச் சொல்றீங்களா…? எங்களைப் பார்த்தா முட்டாள் நெத்தியில் எழுதி ஒட்டி இருக்கா…??” என கரிகாலன் எள்ளலாகக் கேட்டான்…

“நாங்க கொன்னதை நீங்க பார்த்தீங்களா…? அன்னைக்கு உண்மையிலேயே என்ன நடந்தது தெரியுமா….??”

“நீங்களும் இந்த உலகமும் நினைப்பது போல நாங்கள் தவறு செய்த குற்றவாளிகள் இல்லை… எங்களுடைய பாதாத சூழ்நிலை எங்களை குற்றவாளிகளாகக் காட்டிய நாள் அது…!” என சத்யா, தனது வாழ்க்கையில் கருப்பு நாளாக அமைந்த ஷர்மிளா கொலை செய்யப்பட்ட நாளைப் பற்றி கூறத் தொடங்கினாள்…

கன்னியர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட அந்தச் சம்பவத்தை ஓரிரு வார்த்தைகளில் விளக்கிவிட போதுமா…? காத்திருங்கள் அடுத்த பதிவில் விரிவாக…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே-15

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

8

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top