ஹே அன்புடைய ஆதிக்கனே – 2

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 25/Sep/2026 ◷ 7 min read

மஞ்சள் வானம் மையல் கொண்ட பொன் மாலை நேரம்

ஷீ இஸ் அ ஃபேண்டஸி

ஷனா னான் னானா ஓஹ் ஹோ

ஸ்வீட் அஸ் அ ஹார்மோனி

ஷனானான் னானா ஓஹ் ஹோ

நோ ஒன் க்னோஸ் ஷீ’ஸ் மிஸ்டரி

ஷனானான் னானா ஓஹ் ஹோஓஓ எனப் பாடிக்கொண்டே வந்தவள், வழியில் இருந்த கல் தடுக்கி கீழே பார்த்தாள் சஞ்சனா…

அதான் பார்த்தேன், நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா இந்த கடவுளுக்குப் பிடிக்காதே! ‘ஹீரோயின் என்ட்ரி’ன்னு சொன்னங்களே, சரி கொஞ்சம் பில்ட் அப் கொடுக்கலாம்னு ஒரு பாட்டைப் போட்டு என்ட்ரி கொடுப்போம்னு பார்த்தா, இப்படி இந்த கல்லு சதி பண்ணிடுச்சே! சே… அம்மா! காலு போச்சே.. என வலியால் அலறினாள் பேதை.

இதோ காலைத் தாங்கித் தாங்கி நடந்து வருகிறாளே, இவள் தான் நம் கதையின் நாயகி சஞ்சனா, பள்ளி ஆசிரியை…

வடிவான முகம், பொலிவான தோற்றம், புன்னகை தவழும் இதழ்கள், ஜொலிக்கும் நட்சத்திரம் போன்ற கண்கள், குறையாத அழகுடன் இருக்கும் இவள் கொய்யப் பழம் போன்றவள்…

எப்படியோ வலியைப் பொறுத்துக் கொண்டு தன் வீடு வரை வந்து சேர்ந்ததே இமாலய வெற்றி… வீட்டின் வெளிக்கதவைத் திறக்கும் போதுதான் அவள் அதை கவனித்தாள், எதிர்வீட்டில் நிற்கும் கூட்டத்தை…

என்ன ஆச்சு என யோசித்தவள், போய் பார்க்கலாமா என நினைக்க, சுருக்கு என்ற வலி நான் இருக்கிறேன் என நினைவூட்ட, அந்த எண்ணத்தை அக்கணமே கைவிட்டவள் தன் வீட்டுக்குள் சென்றாள்…

உள்ளே ஹாலில் அவளின் தந்தை சிதம்பரம் சோர்ந்த முகத்துடன் வரவேற்றார்…

வந்துட்டியா சஞ்சு? என்னம்மா, இன்னைக்கும் ஸ்கூல்ல ரொம்ப வேலையா? களைப்பா தெரியுற, சரி நீ உள்ள போய் ரெஸ்ட் எடு என்றார் சற்றும் தயங்காமல்…

எப்பவும் போலத்தான்பா, எக்ஸாம் டைம்ல அதான் நிறைய வேலை. அதை விடுங்க, நீங்க ஏன் இப்படி சோகமா இருக்கீங்க? அம்மா எங்க காணோம்? என நின்றபடியே கண்ணை உள்ளே சுழற்றிய படி கேட்டாள்…

ஒன்னும் இல்லை சஞ்சு, சின்ன டென்ஷன். விடு, அம்மா எதிர்த்த வீடு வரைக்கும் போய் இருக்கா. நீ போய் டிரஸ் மாத்திட்டு வா, அதுக்குள்ள அவளும் வந்துடுவா என சிதம்பரம் பேச்சை முடித்துக் கொண்டார்.

எதிர் வீட்டுக்கா??? அம்மா ஏன் அப்பா அங்க போனாங்க? அவங்களுக்கு என்ன ஆச்சு??? அவங்க வீட்ல வேற ஒரே கூட்டமா இருக்கு, ஏதாவது பிரச்சனையாப்பா? என சஞ்சு கேள்விகளைத் தொடுக்க…

அதெல்லாம் ஒண்ணுமில்லை சஞ்சு, நீ போய் உன் வேலையைப் பார் என வெட்டிவிட்டார் சிதம்பரம்.

அதற்கு மேல் தூண்டித் துருவவில்லை சஞ்சனா; அவளுக்குத் தெரியும். அவள் தந்தையைப் பற்றி அவளுக்குத் தெரிய வேண்டியதாக இருந்தால் நிச்சயம் சொல்லி இருப்பார்; இல்லையென்றால் அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூடக் கறக்க முடியாது.

சரி அப்பா என்றவள்…

உள்ளுக்குள்ளே சரிதான், போங்கப்பா நீங்க சொல்லாட்டி எனக்குத் தெரியாதாக்கும்! எப்படியாவது கத்திரிக்க முத்தினா கடைத் தெருவுக்கு வந்துதான் ஆகணும் என நினைத்துக் கொண்டே தன் அறை நோக்கிச் சென்றவள், கதவில் கையை வைத்துத் தள்ளும் முன்பே… திறந்த கதவின் வழி வெளியே வந்த ஒரு கரம் சஞ்சனாவை உள்ளே இழுத்துப்போட்டு கதவை மூடியது…

ஏய்ய்! ஆ! எனப் பதறி விழப் போனவள், அருகில் இருந்த மேசையைப் பிடித்துத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, தன்னை உள்ளே இழுத்துப்போட்ட உருவத்தை முறைத்துப் பார்த்தாள்…

ஈஈ சாரி அக்கா! உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் என்கிற ஆர்வத்துல வலுவா இழுத்துட்டேன் எனப் பல்லை இளித்தாள் சஞ்சனாவின் இளைய தங்கை சம்யுக்தா.

உன் ஆர்வத்துல கொல்லி வைக்க ஸ்… அம்மா வலிக்குதே என காலைப் பிடித்துக் கொண்டு துடித்தாள்.

ஐயோ அக்கா என்ன ஆச்சு எனப் பதறினாள் சம்யு.

“ம்ம் புண்ணாச்சு” என மெய்யாகவே புண்ணான தன் காலைக் காட்டினாள்.

“அச்சச்சோ, சாரி அக்கா, நான் பார்க்கல!” எனக் கூறி, கட்டில் மேல் கிடந்த துணியை எடுத்து அருகில் இருந்த டேபிள் மீது போட்டாள்…

கைப்பையை மேஜை மேல் வைத்துவிட்டு வந்து கட்டிலில் ஒய்வாக அமர்ந்தவள், காலைத் தூக்கிப் பார்த்தாள்; அடி ஒன்றும் பெரியதாக இல்லை என்றாலும் வலி உயிர் போனது…

“ரொம்ப வலிக்குதா அக்கா? நான் வேணுமானா மருந்து கொண்டு வரவா?”

“ப்ச், அதெல்லாம் வேணாம்டி, சின்ன காயம் தான். விடு, நீ ஏதோ முக்கியமான விஷயம் சொல்றேன்னு சொன்னியே, அது என்ன?” என்று கூறி தன் வலியைத் தள்ளி வைத்தாள்.

“அதுவா அக்கா!” என்றவள், மீண்டும் ஒரு முறை கதவு சரியாகச் சாற்றப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துவிட்டு, கட்டில் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

“விஷயம் தெரியுமா அக்கா?” என உவகை ஊற்றெடுக்கச் சொன்ன சம்யுவைப் பார்த்து, அவளின் சிரிப்பு பெரியவளுக்கும் தொற்றிக் கொண்டது…

“என்னடி?” எனச் சிரிப்புடன் கேட்டாள் சஞ்சனா.

“அக்கா, நம்ம பரம எதிரி இருக்காருல, அதான் அக்கா எதிர்த்த வீட்டு டெரர் பீஸ் யுகேந்திரனோட கல்யாணம் நின்னு போச்சு தெரியுமா?” என உற்சாகத்துடன் சொல்ல…

“என்னடி சம்யு சொல்றது, நிஜமாவா?” என கேட்டவளுக்கு தன் காதுகளை நம்பவே முடியவில்லை.

நேற்று நிச்சயத்தில் அவர்கள் செய்த பந்தா என்ன பாவ்லா! என்னமோ கல்யாணமே முடிஞ்ச மாதிரி அந்த வைதேகி அத்தை மருமகளே, மருமகளேன்னு இழைத்தது என்ன இப்போ நினைச்சாலும் ஏனோ சஞ்சனாவிற்கு எரிச்சலாக இருந்தது.

“அட ஆமா அக்கா, அந்த பொண்ணோட அப்பா வந்து செமையா சண்டைப் போட்டாங்க. அப்புறம் நம்ம அப்பா தான் போய் பஞ்சாயத்து பண்ணி வச்சார்.”

“ஓஓ, இதான் மேட்டரா! நான் கூட எதுக்கு அவங்க வீட்டுல இவ்வளவு கூட்டமா இருக்குன்னு யோசிச்சேன். ஹா, இந்த அப்பா கூட இதுக்கு தான் மூஞ்சை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்து இருக்காரா… நான் கேட்டதுக்கு ஒண்ணுமில்லை, வேற சமாளிச்சார் தெரியுமா!” என சஞ்சு சலித்துக் கொள்ள.

“ஆமா அக்கா, அப்பா அவரோட செல்ல பிள்ளை கல்யாணம் நின்னு போன சோகத்துல கீதம் வாசிக்கிறார்” என சம்யு சேர்ந்து நக்கல் அடித்தாள்…

அப்ப வாசிக்கட்டும் விடு, ஆமா எதனால கல்யாணம் நின்னுச்சு?? ஒருவேளை பொண்ணுக்கு இந்த சிடுமூஞ்சி பத்தி உண்மை தெரிஞ்சு கல்யாணத்துக்கு முன்னாடியே எஸ்கேப் ஆகிடுச்சா..?? என கிண்டலாகக் கேட்டாலும் அவளுக்கு அந்த விவரம் தேவைப்பட்டது…

அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை தான், இவரைப் பற்றி முழுசா தெரிஞ்சா எந்தப் பொண்ணு தான் ஓடாம இருக்கும்.. ஆனா அந்த யுகேந்திரன் தான் கல்யாணத்தை நிறுத்திட்டதா அப்பா அம்மா கிட்ட சொன்னார் என சம்யு தன் காதுக்கு எட்டிய செய்தியைப் பகிர்ந்தாள்…

ஆஹான்.. என்ன வேணுமாம் அந்த ஆளுக்கு என சஞ்சு விட்டேறியாகக் கேட்க,

தெரியலையே என சம்யு சலித்துக் கொண்டாள்.

என்னால நம்பவே முடியல சம்யு, நம்ம இரண்டு பேரை விட அந்த ஹிட்லர் மேல இந்த அப்பாவுக்கு அவ்வளவு பாசம் நம்பிக்கை எல்லாம்… அந்த ஆள் இப்படி கல்யாணத்தை நிறுத்துவார்னு அப்பா கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்…

உண்மை தான் அக்கா, சின்ன வயசுல இருந்தே யுகேன் மாதிரி படிக்கணும், யுகேன் மாதிரி நடக்கணும், எதுக்கு எடுத்தாலும் அந்த ஆள் கூட நம்மள கம்பேர் பண்ணி பேசுவார்ல, இப்போ அப்படி அவரால பேச முடியாதே… என சம்யு வெறுப்பாகச் சொல்ல,

“நல்லதுதான், இனி தெரியும் அந்த ஆளோட லட்சணம்” என சஞ்சு குத்தலாகச் சொல்ல…

“அட ஏன் அக்கா, நீ வேற! இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும் அந்தப் பொண்ணு சரியில்லை. அவங்க வீட்டு சைடுல அளவுக்கு அதிகமான டிமாண்ட் வச்சாங்க, அதை எல்லாம் கூட ஏத்துக் கிட்டவன், கடைசியா அவங்க அம்மாவையும் தம்பியையும் விட்டுத் தனியா வரச் சொன்னதை பொறுத்துக்க முடியாமல் தான் இந்த கல்யாணத்தை நிறுத்திட்டான் யுகேந்திரன்.”

“அந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா நிறைய சொத்து வரும் என்று தெரிஞ்சும், அவன் அம்மா தம்பிக்காக இந்த கல்யாணத்தையே நிறுத்திட்டானே, அதுதான் நம்ம யுகேந்திரன்” என அப்பா அம்மா கிட்ட புகழ்ந்து தள்ளுனதை நீ கேட்டிருக்கணும் அக்கா” என பொறாமையில் பொங்கினாள் சம்யுக்தா.

“அதை வேற கேக்கணுமா? இந்த அப்பாவுக்கு அந்த யுகேந்திரன் என்ன பண்ணாலும் அது பெருசாத்தான் தெரியும். நீ வேணா பாரு, என்னைக்காவது ஒருநாள் அந்த ஆள் குட்டு வெளிப்படும் அன்னைக்கு புரியும் இந்த அப்பாவுக்கு நம்ம அருமை…”

“புரியுமா அக்கா?” என ஏக்கத்துடன் கேட்டாள் சம்யுக்தா…

“புரியும், புரிய வைப்போம்.எங்க போய்விடப் போறாரு பார்த்துக்கலாம், விடு சம்யு” எனத் தங்கையைச் சமாதானம் செய்தாலும், சஞ்சுவின் மனமோ, “நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்” என முடிவெடுத்துக் கொண்டது…

இவர்கள் இப்படி வருத்தப்படும் அளவிற்கு யுகேந்திரன் இவர்களுக்கு என்ன செய்தான் என்று தானே கேட்கிறீர்கள்???

என்ன செய்யவில்லை என்று சொல்கிறேன்…

பயபுள்ள இங்குக் குடி வருவதற்கு முன்னாடி சஞ்சு, சம்யு வாழ்க்கை சோலைவனத்தில் பூக்கும் வண்ண மலர்களின் மகரந்தத்தின் வாசனைக்குச் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகள் போல வண்ணமயமாக இருந்தது வாழ்க்கை..

நம்ம அடக்கமான பள்ளி ஆசிரியை சஞ்சனாவும் அமைதியான கல்லூரி மாணவி சம்யுக்தாவும் பிறவி அறந்த வாலுங்க… சிதம்பரத்திற்கும் அவர் மனைவி வசுந்தராவிற்கும் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் கழித்து, சஞ்சனாவும் அடுத்த மூன்று ஆண்டு இடைவெளியில் சம்யுக்தாவும் பிறக்க அவர்கள் இருவருக்கும் செல்லத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை…

சொல்லப் போனால் அவ்வீட்டின் இளவரசிகளாகவே இருவரும் வளர வந்தனர்… ஆட்டகாசத்திற்கு அளவே இல்லை, உள்ளுக்குள் இருவரும் எவ்வளவு அடித்துக் கொண்டாலும் மற்றவர்கள் முன் ஒருவரை ஒருவர் இதுவரை விட்டுக் கொடுத்தது இல்லை…

எப்போ இவர்களின் எதிர் வீட்டிற்கு யுகேந்திரன் குடும்பம் குடி வந்ததோ, அன்னைக்கே இவர்களோட நிம்மதி, சந்தோஷம், சுதந்திரம் எல்லாம் பறிபோச்சுன்னு தான் சொல்ல வேண்டும்…

சிதம்பரத்தின் நண்பரின் குடும்பம் என்று அறிமுகம் ஆனார்கள் விசுவநாதனின் – வைதேகியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இரு குடும்பமும் ஒன்றிப் பழகி நெருங்கிய குடும்பமாகிப் போயினர்.

வசுந்தரா வீட்டில் கறி குழம்பு வைத்தால் முதல் கிண்ணம் அவர்கள் வீட்டிற்குப் போகும்; அதேபோல் வைதேகி வீட்டில் பலகாரம் செய்தால் அது இவர்களது வீட்டிற்கு முதலில் வரும்.

தந்தை இல்லாத அவர்களுக்கு சிதம்பரம் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தார்… ஆண் பிள்ளைகளே இல்லாத சிதம்பரத்திற்கு யுகேந்திரன் பண்பும்  மற்றும் அவன் தம்பி ராகவின் விகற்பம் இல்லாத குறும்பு தனமும் பிடித்து விட இருவரும் அவரின்  செல்லப் பிள்ளைகளாகி போயினர்… 

யுகேந்திரன் சஞ்சு மற்றும் சம்யுவை விட ஆறு மடங்கு மூத்தவன் என்பதால் பெரும்பாலும் அவனே அனைத்திலும் முதன்மையாகத் திகழ்வதாலும், மகள்கள் இருவரும் சுட்டித்தனத்தால் சரியாகப் படிப்பதில்லை என கவலையில் இருந்த அவர்,

யுகேந்திரனின் பண்பைக் கண்டு இருவரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவனிடமே ஒப்படைத்தார்…

அன்று தொடங்கியது சஞ்சு, சம்யுவின் வாழ்க்கையில் ஏழரை…

படிப்பு தொடங்கி என்ன படிப்பது என்ன சாப்பிடுவது என்ன உடுத்துவது அவ்வளவு ஏன் யார் யாரிடம் எவ்வளவு பேசுவது வரை அத்தனையும் அந்த ஹிட்லர் கட்டுபாடு தான்.. 

இவன் ரொம்பத்தான் கட்டுப்படுத்துகிறான் என்று தந்தையிடம் சென்று முறையிட்டால், ‘அவர் யுகேந்திரன் நல்லவன், அவனுக்கு எல்லாம் தெரியும், உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறான்’ எனத் தட்டி கழித்து விடுவார். ஆனால் அதற்காகப் பொறுப்பற்றவர் அல்லது மகள்கள் மீது அக்கறை இல்லாதவரும் இல்லை…

இவர்களிடம் என்ன சமாதானம் சொன்னாலும், யுகேந்திரனிடம் மகள்களிடம் அதிகக் கெடுபிடி காட்ட வேண்டாம் எனப் பல முறை அவர்கள் கண்மறைவாக அவனிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை அந்தக்கறார் ஆசாமி யுகேந்திரன்… வச்சு செஞ்சுட்டான் என்றே சொல்ல வேண்டும்.

இவன் எப்போதுடா நம்ம வாழ்க்கையிலிருந்து தொலைவான் எனச் சகோதரிகள் காத்திருக்க, விதியோ?

அவன் போவான் ஆனால் போமாட்டான் என இழுவையாக இழுத்து நின்ற சாதே சமையம் சிலடி தூரத்தில், மொட்டை மாடியில் தன் அறைக்குள் சாளரம் அருகே அமர்ந்து இருந்த யுகேந்திரனின் டைரியினுள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவன், அதை ஆசையுடன் வருடினான்.

பால் நிலா வெளிச்சத்தில் மிளிர்ந்தது அந்தப் புகைப்படம்; அதில் இரட்டை ஜடையில், பள்ளிச் சீருடையில் புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தாள் இளம் வயது சஞ்சனா…

************

ஹாய் டார்லிங்ஸ் ❤️
உங்களுக்கு இந்தக் கதை பிடிச்சிருந்தா, மறக்காம ஒரு Like போட்டு, உங்க கருத்தை Comment-ல சொல்லுங்க. 🥹❤️
உங்க ஒவ்வொரு Comment-உம் எனக்கு எழுதுறதுக்கான அடுத்தடுத்த வரிகளுக்கே ஒரு பெரிய Motivation. 🫶✨
நீங்க கொடுக்குற அந்த சின்ன அன்புதான்… நான் தொடர்ந்து எழுதுறதுக்கான பெரிய காரணம். ❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

ஹே அன்புடைய ஆதிக்கனே – 2

Yadhu nandhini
Ongoing Novel
Family, Romance
3

Chapters

12

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top