கண்ணி வைக்கும் கலாபனே -27

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 05/Oct/2026 ◷ 4 min read

அதன் பின்பும் வினித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறாள்… அதற்கு அவன் மறுக்கவே, அவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோவை பெண் வீட்டாருக்கு அனுப்பித் திருமணத்தை நிறுத்தியுள்ளாள். திருமணத் தடை என்ற மன உளைச்சலில் வினித் தற்கொலை செய்து கொண்டான்… அதில் மனமுடைந்த அவனினபெற்றோர் ஷர்மிளாவின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்…!!

“மை லார்ட், இது மட்டும் இல்லை… இந்த ஷர்மிளா மீது பல வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் அதிகமானவை பணம் கேட்டு மிரட்டியது மற்றும் இளம் பெண்களைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களே ஆகும். அவர் மீது பதிவாகியிருப்பவற்றில் ஒரு புகார் என் கட்சிக்காரர்களாலும் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது… அதற்கான நகல்களையும் உங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறோம்…!!” என பரத் தன் வாதத்தை முன்வைத்தான்.

“எல்லாம் சரி… எதை வச்சு செத்தது ஷர்மிளா இல்லைன்னு சொல்ல வரீங்க மிஸ்டர் கௌதம்…?” என சாணக்கியன் கிடுக்குப்பிடியாகக் கேட்டார்.

“ஏன்னா ஷர்மிளாவின் அக்கா சஞ்சனாவை எனக்குத் தெரியும்… என் நிறுவனத்தில் பணிபுரியும் சஞ்சனாவை நான் ஷர்மிளா எனத் தவறாக யூகித்து அவர்களைப் போலீசில் மாட்டிவிட முயன்றபோது, போலீசாரின் தீவிர விசாரணையில் தான் ஷர்மிளாவும் சஞ்சனாவும் இரட்டையர்கள் என எங்களுக்குத் தெரியவந்தது… ஷர்மிளா இறந்துபோன செய்தியை அறிந்த பின் நான் சஞ்சனாவைத் தான் தேடிச் சென்றேன். அப்பொழுது சஞ்சனா இரண்டு நாட்களாகவே வேலைக்கு வரவில்லை என்றும், அவரது சகோதரி பார்க்கப் போவதாகக் கூறி விடுப்பு எடுத்ததாகத் தகவல் கொடுத்திருக்கிறார்…!!” என கௌதம் பிரபாகரன் சொன்னதும்…

“அது மட்டும் இல்லை மை லார்ட், இறந்தது சஞ்சனா தான் என அடையாளம் காட்டிய அவரது அன்னையும்… இறந்த உடலின் பற்களிலிருந்து எடுக்கப்பட்ட பரிசோதனைகள் இறந்தது சஞ்சனா தான் என அரசு மருத்துவர் அளித்த ரிப்போர்ட்டும் உங்கள் கைகளில் மை லார்ட்…!!” என பரத் ஆதாரங்களை அனைவரின் முன்பாகச் சமர்ப்பித்தான்…

இது எதிர்பார்த்ததே இல்லையே என சாணக்கியரே ஒரு நிமிடம் அசந்து தான் போனார்…

“மிஸ்டர் பரத் இறந்தது ஷர்மிளா இல்ல சஞ்சனா தான் என்று நிரூபித்த நீங்கள்… அந்த ஷர்மிளா எங்கே…?? ஏன் சஞ்சனாவைக் கொன்னாள்…?? என்பதைச் சுருக்கமாகவும் கோர்ட் நேரத்தை வீணாக்காமல் கூறி முடிக்கவும்…!” என நீதிபதி கூறியதும் அனைவருமே சிரித்து விட்டனர்…

“அடேய், எவ்வளவு சீரியஸாக ஒரு கோர்ட் சீன் எடுத்துட்டு இருக்கேன், சிரிச்சே சொதப்புறீங்களேடா!”

“எஸ் மை லார்ட்… கௌதம் சொன்னது போல் ஷர்மிளா பல பணக்காரப் புள்ளிகளிடம் இளம் பெண்களை அனுப்பி, அதை வீடியோவாக எடுத்து, அதை வைத்து அவர்களை மிரட்டிப் பணம் பறித்து வந்தாள்… அந்தச் சமயம் தான் எனது கட்சிக்காரர் கயலைத் தன் வலையில் சிக்க வைக்க நினைக்க… சாதுரியமாக அவர்கள் அதைத் தடுத்து விட்டனர்; அதோடு மட்டுமல்லாமல் ஷர்மிளாவையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்…!!”

ஷர்மிளாவை நம்ப மறுத்தனர் பெண்கள், அதனால் அவளுக்குப் பண வரத்து குறைய ஆரம்பித்தது. அவளுடைய பகட்டாக வாழும் ஆசையில் ஓட்டை விழத் தொடங்கியது. அப்பொழுது வேறு வழி இல்லாமல், அவள் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொண்டு, ஏற்கனவே அவள் எடுத்து வைத்திருந்த பணக்காரப் புள்ளிகளின் வீடியோக்களை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்க நினைத்ததோடு செயலாற்றியும் வந்திருக்கிறாள். முதலில் அவள் வலையில் சிக்கியவர்கள் பின்பு தானாகவே சுதாரித்துக் கொண்ட பெரும் புள்ளிகள் அவளைக் கொல்ல நினைத்தனர். அதை எப்படியோ அறிந்து கொண்டவள், அவர்களிடமிருந்து தப்பிக்கத் தேடிய வழி இதுவே. ஷர்மிளாவின் தந்தை தன் இரு மகள்களின் பெயரிலும் பெரும் தொகை ஒன்றை எல்ஐசி பாலிசியாக எடுத்து வைத்திருந்தார். அதை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என நினைத்தவள், சஞ்சனாவைக் கொன்றுவிட்டு ‘செத்தது ஷர்மிளா’ என நம்பவைத்து, அவள் பெயரிலும் சஞ்சனாவின் பெயரிலும் வரும் தொகையையும் தானே அடைந்து விடலாம் எனத் திட்டம் தீட்டி இருக்கிறாள்…!!

ஏற்கனவே சத்யா, மஹா, கயல் இவர்களால்தான் தனக்கு இந்த நிலை நேர்ந்தது என வஞ்சம் கொண்டிருந்தவள்… ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க நினைத்தாள்… ஷர்மிளாவைக் கொல்லத் துடிக்கும் பெரும் புள்ளிகளிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கமும், பணத்துக்குப் பணமும் கூடவே, இதில் அவளின் பரம விரோதிகளாக நினைக்கும் சத்யா, மஹா, கயலை மாட்டிவிட்டு, கொலைப்பழி அவர்கள் மீது சுமந்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்து பழிவெறி தீர்த்துக்கொள்ள எண்ணி இருந்தாள்… அதன்படியே மஹாவின் கைப்பையில் இருக்கும் சாவியை அவள் அறியாமல் எடுத்திருக்கிறாள்…!!

அத்தோடு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சஞ்சனாவை அன்பாக அழைத்துச் சென்றாள். தனக்கு நேரிடப்போகும் அசம்பாவிதத்தை அறியாமல், தன் சகோதரி என்று நம்பிச் சென்ற சஞ்சனாவைக் கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தையும் சிதைத்துவிட்டு… பெண்களின் மேல் பழியை வலுவாக்கப் பணம் இருந்த பையையும் வைத்தாள்… பெண்கள் அறைக்கு வரும் தகுந்த சமயம் வரை காத்திருந்து… ஹாஸ்டல் வார்டன் ரங்கமணி வெளியே சென்றதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரது தொலைபேசியிலிருந்தே போலீசாருக்கு அழைத்துத் தகவலைக் கூறி பெண்களைக் கச்சிதமாக மாட்டிவிட முயன்றாள்… அங்கு அவள் தவறவிட்டது சஞ்சனாவின் அடையாள அட்டையைத்தான்… அதைத்தான் அன்று சத்யா பார்க்க நேர்ந்தது; அதை மட்டும் எனது கட்சிக்காரர் அப்போதே பார்த்திருந்தால், இத்தனை இன்னல்களுக்கு அவர்கள் ஆளாகி இருக்க மாட்டார்கள்…!!

“அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்ட பின்பும் சத்யா கையில் மஹாவின் மீது பழைய வெறி அடங்காமல், அவர்களைக் கடத்தி கொலை செய்யும்படி பிரபல ரவுடி பத்ராவிடம் பெரும் தொகை ஒன்றை கொடுத்து ஏற்பாடு செய்திருக்கிறாள்…” என்னும் கூடுதல் தகவலைப் பிடிபட்ட ஷர்மிளாவின் கள்ளக்காதலன் சந்துக்கு ரெட்டி போலீசில் அளித்த வாக்குமூலம்…!! என கரிகாலனிடம் இருந்து பெற்றதை நீதிபதியிடம் அளித்தவன்…

“ரௌடி பத்ராவைத் தப்பிக்க விட்டு, அவன் மூலமாகவே ஷர்மிளாவை ஹாஸ்டலில் கொலை நடந்த அறையிலேயே கைது செய்துள்ளது காவல் துறை…!” என கரிகாலனுக்குக் கண்ணைக் காட்ட…

ஷர்மிளாவை அனைவரின் முன்பாக நீதிமன்றத்தில் நிறுத்தினான் கரிகாலன்…

இருதியாகத் தன் தரப்பு வாதத்தை முன் வைத்துவிட்டு, “எப்பா சோடா குடுங்கடா…!!” என்பது போல் போய் அவன் இருக்கையில் அமர்ந்து விட்டான் பரத்…

தீர்ப்பை எழுதி முடித்த நீதிபதிகள் அதனை வாசிக்கத் தொடங்கினர்.

“இந்த வழக்கில் திறமையாகவும் மிக நுண்ணியமாகவும் வாதாடிய திரு. பரத் சாம்ராட்டை இந்த நீதிமன்றம் வெகுவாகப் பாராட்டுகிறது…!!”

“அத்தோடு இந்த வழக்கில் அரசுத் தரப்பிலிருந்து நியாயமான சாட்சிகளையும் ஆதாரங்களையும் சேகரிக்க உதவிய காவல் துறையையும், கரிகாலனையும், தெரிந்த உண்மையை தைரியமாக கூற முன் வந்த கெளதம் பிரபாகரனையும் இந்த நீதிமன்றம் வெகுவாகப் பாராட்டுகிறது… வழக்கின் ஆதாரங்களையும் சாட்சிகளையும் வைத்து சத்யா, மஹா, கயல் மூவரும் நிரபராதிகள் என இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது… சஞ்சனாவைக் கொலை செய்த குற்றத்திற்காக வும்… சத்யா, கயல், மகாவைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகவும்… ஷர்மிளா மற்றும் சந்துக் ரெட்டி ஆகியோருக்கு… இந்த நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது. மேலும் அவர்கள் மீது இருக்கும் புகார்களையும் விரைந்து விசாரிக்கும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது…!!” என தீர்ப்பை அறிவித்தார் நீதிபதி…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே -27

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

4

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top