கண்ணி வைக்கும் கலாபனே -25

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 03/Oct/2026 ◷ 4 min read

“அப்ஜெக்சன் மை லார்ட் மிஸ்டர் பரத், அவர் கட்சிகாரர்களைத் தப்பிக்க வைக்க வீண் பழியை ஒரு அப்பாவி மீது சுமத்தப் பார்க்கிறார்…!!” என சாணக்கியர்க்கு மூக்கு வியர்த்தது…

“அப்ஜெக்சன் சஸ்டைன்டு! மிஸ்டர் பரத், எந்த முகந்திரயமும் இல்லாமல் சாட்சி கூறுபவரை மிரட்டுவது சரியில்லை….!!” என முதல் வார்னிங் கொடுத்தார் நீதிபதி…

“சாரி மை லார்ட், வலுவான முகாந்திரம் இருக்கிறது… ஷர்மிளாவுக்கும் ஹாஸ்டல் வார்டன் ரங்கமணிக்கும் இடையே முதலில் இருந்து தகராறு இருந்தது… அது முற்றி ஷர்மிளா ஒருமுறை அனைவர் முன்னிலையிலும் வைத்து ரங்கமணியை அடித்து இருக்கிறார்… அதை பார்த்த சாட்சிகளும் இருக்கின்றன… ஏன் இவர் அதை முன்விரோதம் என்று எடுத்துக்கொண்டு கொலை செய்திருக்கக் கூடாது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர நினைத்தேன், அவ்வளவே….!!’என பரத்

“அப்ஜெக்சன் ஓவர்ரூல்டு… பரத், யூ ப்ரோசீட்…!” ஜட்ஜ்…

“சொல்லுங்க மிஸ் ரங்கமணி…!” “பரத்…

“இல்லை சார், இல்லை! நான் பொய் சொல்லவே இல்லை… அன்னைக்கு என் அண்ணன் மகள் பிறந்தநாள் கொண்டாடினாங்கறதுக்காக நான் **** நட்சத்திர ஹோட்டலுக்குப் போயிட்டு அப்போதான் வந்தேன், என்னை நம்புங்க… நான் யாரையும் கொலை பண்ணல…!” என அழத் தொடங்கிவிட்டார்…

“எஸ் மை லார்ட், மிஸ் ரங்கமணி கூறியது போல அவர் அன்று ஹாஸ்டலில் இல்லை என்பது உண்மை… ஆனால் அதே நேரத்தில் போலீஸ்க்கு வந்த தகவலும் உண்மை…!” என பரத் கூறியதை புரியாத புதிராகப் பார்த்துக் கொண்டிருந்தனர்…

“என்ன சொல்ல வர்றீங்க பரத்…? தெளிவா சொல்லுங்க…?”

“மை லார்ட், கொலை நடந்த அன்று ரங்கமணி வெளியே சென்றதைப்பயன்படுத்திக் கொண்டு, அவரது அறையிலிருந்து தொலைபேசி மூலம் போலீசார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருக்கின்றனர்… அதாவது எனது கட்சிக்காரரைத் திட்டமிட்டு மாட்டிவிட நடந்த சதிச்செயல்…!”

அப்ஜெக்சன் மை லார்ட்… மிஸ்டர் பரத் கூறுவது எப்படி இருக்கிறது என்றால், சட்டம் என்னோடது, ஆனால் மாப்பிள்ளை நான் இல்லை என்பது போல் இருக்கிறது… இந்த மூவரும் ஹாஸ்டலுக்குள் இருக்கும் பொழுது தான் கொலை நடந்தேறி இருக்கிறது; அதுவும் அவர்கள் அறைக்குள்ளேயே! அதை விட முக்கியமாக, ஹாஸ்டலில் பறிமுதல் செய்யப்பட்ட கத்தியில் கயலின் கைரேகை தெளிவாகப் பதிந்து இருக்கிறது…!!

“கரெக்ட் ஹாஸ்டலில் ‘பறிமுதல்’ செய்யப்பட்ட கத்தியில் இருந்த கைரேகை கயலுடையது என்பது மிகச் சரியே… ஆனால் கொலை அந்த கத்தியால் நடைபெறவில்லை என்பதையும் மருத்துவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை எதிர்த்தரப்பு வக்கீல் கவனிக்கத் தவறிவிட்டார் போலும்…!!” என பரத் மருத்துவ அறிக்கையில் இருந்த வரியைச் சுட்டிக்காட்டினான்…

“ஏன் இதை என்கிட்ட சொல்லல…!!” எனத் தன் ஜூனியர்களைப் பார்வையால் எரித்தார் சாணக்கியர்.

அதாவது, கொலை உண்மையில் எப்படி நடந்திருக்கக்கூடும் என மருத்துவ அறிக்கையில் விளக்கமாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால்… கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தை துணியால் இறுக்கி குரல்வளையை நெரித்து கொலை நடந்திருக்கிறது… அதாவது அந்தப் பெண் இறந்த பின்புதான் அவள் முகத்தை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிதைத்து இருக்கிறார்கள் என்பதையும்… அத்தோடு கொலை நடந்த நேரம் எட்டு முதல் எட்டரை மணி வரை என ஆட்டோப்ஸி ரிப்போர்ட்டில் தெளிவாகக் கூறி இருக்கின்றனர்… மேலும் கொலை நடந்த சமயம் எனது

“கட்சிக்காரர்களான சத்யா, கயல், மஹா மூவருமே பிவிஆர் மாலில் திரைப்படம் பார்த்திருந்தனர் என்பதற்கான ஆதாரம் மற்றும் சாட்சியைக் கைப்பற்ற எனக்கு உதவிய ஹைதராபாத் அசிஸ்டன்ட் கமிஷனர் மற்றும் மக்கள் செல்லமாக அழைக்கும் மிஸ்டர் கருடன் அதாவது திரு. கரிகாலன் ஐ.பி.எஸ்.-க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…!” என கூறியவன் வாசல் பக்கம் பார்க்க…

அங்கே கச்சிதமான காக்கி உடையில்… விரைவாக வந்து நின்றான் கரிகாலன் ஐ.பி.எஸ்…

“சத்யா நீ சொன்னது சரிதான்டி, இவர் போலீஸ்காரர் தானாம்டி…!” என கயல் ஏமாற்றம் கலந்த வியப்புடன் கூற…

“இதை முன்னமே சொன்ன அப்போ நம்பலையே இப்போ ஆச்சரியமா…!” என சத்யா சொல்ல… எப்படி இவ இதெல்லாம் கண்டுபிடித்தாள் என கயலும் மஹாவும் அவளை வியந்து பார்த்தனர்…

“போதும் என் மூஞ்சப் பார்த்தது, படம் அங்க ஓடுது பாரு…!” என இருவர் கன்னத்தையும் திருப்ப…

கரிகாலன் கொடுத்த ஆதாரம் மற்றும் சாட்சிகளை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தான் பரத்…

“கொலை கத்தியால் செய்யப்படாத பொழுது, அதில் இருக்கும் கைரேகையை மட்டும் வைத்து எனது கட்சிக்காரர்களை எப்படி குற்றவாளிகள் என கூற முடியும் மை லார்ட்…??” பரத் கேட்டான்.

“அப்ஜெக்சன் மை லார்ட்! இந்த சாட்சிகளும் ஆதாரங்களும் உண்மை என்றால், எதற்காக இந்தப் பெண்கள் அன்று ஹாஸ்டலில் போலீஸிடம் சிக்காமல் யாருக்கும் தெரியாமல் தப்பித்துச் சென்றனர்? இவர்கள் கொலை செய்யவில்லை என்றால் போலீஸிடம் வந்து சரணடைந்து இருக்கலாமே, அதை விட்டுவிட்டு ஏன் ஓடிச் சென்று தலைமறைவாக வேண்டும்? அத்துடன் அவர்களுக்கு ஆண் நண்பர்கள் சட்டவிரோதமாக உதவி செய்திருக்கின்றனர்…???” என சாணக்கியர் கேள்வி எழுப்பினார்…

“மை லார்ட், எதிர்தரப்பு வக்கீல் எழுப்பிய கேள்விக்கான பதிலை என்ன விட மிஸ்டர் கரிகாலன் ஐபிஎஸ் சொன்னால் மிக சரியாக இருக்கும், ஆதலால் அவரை விசாரிக்கும் அனுமதி அளிக்குமாறு வேண்டுகிறேன்…!!!” என பரத் கேட்க,

“பர்மிஷன் கிராண்டெட்டட், யூ மே புரோசீட்…!!” ஜட்ஜ்

கூண்டில் ஏறிய கரிகாலனிடம் வந்த பரத் கேள்விகளைக் கேட்க…

“சொல்லுங்க மிஸ்டர் கரிகாலன்… போலீஸ் கிட்ட இருந்து தப்பி தலைமறைவான சத்யா, கயல், மஹா ஆகிய மூவரும் எப்படி வந்து கோர்ட்டில் சரண் அடைந்தார்கள்…??”

ஷர்மிளா கொலை கேஸ் என் கவனத்திற்கு வந்த பிறகு நான் மேற்கொண்ட விசாரணையில், சத்யா, கயல், மஹா ஆகிய மூவர் தங்கியிருந்த அறையில் தான் கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதை அடுத்து அவர்களை விசாரிக்கச் சென்ற பொழுது, அவர்கள் மூவரும் தங்கள் நண்பரின் வீட்டில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நான் தனிப்பட்ட முறையில் அவர்களைத் தேடிப் போனேன். ஆனால் அவர்கள் அங்கே இல்லை… அவர்கள் மூவரையும் சில ரவுடிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாக அந்தத் தோழியின் தந்தை என்னிடம் புகார் அளித்திருந்தார்… அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த ரவுடிகளைக் கண்டுபிடிக்க நேர்ந்தது…!!

அச்சமயம் அந்த ரவுடி கும்பல் இந்தப் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்… அவர்களிடமிருந்து இந்தப் பெண்களை மீட்டுத் தற்காத்துக்கொண்டு வரும்போது, அதில் சத்யாவுக்குக் காலில் பயங்கரமான அடி விழுந்ததாலும் மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் இருந்ததாலும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தால் என் நேரடிப் கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது…!!

அதாவது இந்த பெண்கள் தலைமறைவாகவில்லை, உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா…??” என ஏளனமாக கேட்டார் சாணக்கியன்..

“உறுதியாக… ஏன்னா குற்றவாளியோ நிரபராதியோ, ஒரு காவலனைப் பொறுத்தவரை குற்றம் நடக்காமல் பாதுகாப்பது என் கடமை… இந்த பெண்களின் உயிர்க்கு ஆபத்து இருக்கிறது என்பதை என் கண்கூடாகப் பார்த்த பின்பு, அவர்களை என் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய முடிவு செய்து, உயர் அதிகாரியிடம் முறையாக அனுமதி பெற்றே என்னுடைய கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தேன்…!!” என அழுத்தம் திருத்தமாக கூறினான் கரிகாலன்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே -25

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

4

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top