“எங்களை கடத்தி வந்தவர்களிடம் இருந்து தப்பிக்க வழி இல்லாமல் இந்த காட்டுக்குள் சுற்றி வந்தோம்… விதியோடு வாழ்வா சாவா என்ற விளையாட்டில் நாங்கள் மூவர் தான் பகடைக்காய்கள்…. இதுதான் நடந்தது, இதை நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்….!!” என்ற சத்யா ஒரு அடி முன்னால் வந்து…
“அதை விட முக்கியமான விஷயம், ஷர்மிளாவிற்கு கூட பிறந்தவர்கள் யாருமே கிடையாது…. ஏனென்றால் ஷர்மிளாவை எங்களை விட அதிகமாகத் தெரிந்தவர்கள் யாருமில்லை…!!” என கசந்த முறுவலுடன் கூறினாள் சத்யா…
“நல்லா தெரிஞ்சதால தான் கொலை பண்ணிட்டிங்களா…?” என கரிகாலன் அப்போதும் விடாமல் கேட்டான்….
“போட்டு வாங்க, பார்க்கிறீர்களா கருடன் ச்சு கரிகாலன் சார்….!!” என விரக்தி புன்னகை ஒன்றை சிந்தியவள், “நாங்க போறோம்…!” எனப் போவதற்குத் தயாராக இருந்தனர்.
“கொஞ்சம் இருங்கள், இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்….!!” என வழி மறித்தான் கரிகாலன்.
“உங்களோட உண்மையான நோக்கம் என்ன…?? அதை உங்களால சொல்ல முடியுமா…?? மிஸ்டர் கரிகாலன்…!!” என கிடுக்குப்பிடியாகக் கேள்வியைக் கேட்டாள்.
சத்ரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருந்து விடுவதே மேல் என்று நினைத்த கரிகாலன், “ஓகே பைன், நாங்க உண்மையை சொல்லிடுறோம்…. எங்களுக்கும் ஷர்மிளாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனா உங்களுக்கும் எங்களுக்கும் நெருக்கமான சம்பந்தம் இருக்கு…!!” என்றதும், புரியாத பார்வையுடன் பெண்கள் மூவரும் பார்த்தனர்….
“என்ன புரியலையா… சொல்றோம், புரிஞ்சிக்க முடியுதா பாருங்க… நாங்க மூணு பேரும் ஒன்னா சேர்ந்ததே உங்க மூணு பேரல தான்… அதாவது உங்கள காதலிச்ச காரணத்தால தான்… உங்கள காப்பற்ற தான் நாங்க மூணு பேரும் ஒன்னு சேர்ந்தோம்….!!” என கரிகாலன் கூறியதை சத்யா நம்பாமல் பார்க்க, கயலும் மஹாவும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்…
“எப்படி நீங்க ஷர்மிளாவைக் கொலை பண்ணலைங்கிறத நாங்க நம்பினோமோ, இதையும் நீங்க நம்பிதான் ஆகணும்…!!” என அதுவரை மௌனமாக இருந்த கெளதம் வாயைத் திறந்தான்…
“எப்படி…?” என மஹா மனம் தாங்காமல் கேட்டுவிட்டாள்….
“என்ன எப்படி…? உங்களை எங்க பார்த்தோம், எப்படி லவ் பண்ணோம்னு கதை சொல்லச் சொல்றீங்களா…? இது அதற்கான நேரமும் இல்லை…!! சரியான இடமும் இது இல்லை, ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. உங்களுக்காகத் தான் நாங்களும் இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்து இருக்கோம், அதுலேயும் புரிய வேணாமாவா உங்களுக்கு…? நீங்க சொல்றத வச்சுதான் உங்களைச் சட்டத்திடம் இருந்து காப்பாத்த முடியும்…!!” என பரத் ஆவேசமாக ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான்.
“எங்களுக்காக இல்லாட்டியும், அட்லீஸ்ட் உங்களுக்காக வந்து உண்மையைச் சொல்லுங்களேன்…?” என கெளதம் கெஞ்ச… சத்யா வாயைத் திறக்காமல் அமைதியாகிப் போய்விட, மற்ற இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்…
என்ன சொன்னாலும் சத்யா வாய் திறக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த கரிகாலன் மஹாவிடம்… “உங்களுக்காகத் தானே கீழே இறங்கி வந்து பேசுறோம்…?? எதுக்கு இவ்வளவு வரட்டுப் பிடிவாதம்…?? இந்த நிலைமையில வேற ஒருத்தனா இருந்தா உங்களை எப்படி வேணும் என்றாலும் யூஸ் பண்ணிட்டுப் போயிட்டு இருப்பாங்க. உங்கள உண்மையா காதலிச்ச பாவத்துக்கு நாங்களும் தான் இந்த பிரச்சனையில மாட்டி இருக்கோம்… நீங்க எல்லாம் உண்மையா காதலிக்கிறவனை நம்பாதீங்க… எவன் ஏமாற்றுவான், எவன் விட்டுட்டுப் போவனோ அவனை நம்பத்தான் லாயிக்கு… எப்படியோ போங்க…!!” என கோபமாகத் திட்டி விட்டுத் திரும்பிப் போக எத்தனித்தான்…
“நில்லுங்க கரிகாலன்…!” எனத் தடுத்து நிறுத்தினாள் மஹா
“இது நீங்க நினைக்கிற மாதிரி பிடிவாதம் இல்லை, பயம்… நீங்க சொன்ன ஆம்பளைங்களால ஏற்கனவே பட்ட காயம், இன்னொரு ஆணை நம்ப தயங்குது, அவ்ளோ தான்… இப்போ என்ன, உங்களுக்கு ஷர்மிளா பத்தி தெரியணும், அதானே நான் சொல்றேன்…!!” என கூறிய மஹாவிடம் சத்யா ஒரு முறை பார்த்தாள்….
சத்யாவிற்கு இதில் உடன் பாடு இல்லை என்றாலும் தடுக்கவும் முனையவில்லை; அதைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட மஹா, ஷர்மிளா அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தி விட்டுச் சென்ற குழப்பங்களைப் பற்றிக் கூறலானாள்…
யார் அந்த ஷர்மிளா என்கிற கேள்விக்கான விடை இதோ…
சத்யா, மஹா, கயல் மூவருக்கும் ஹாஸ்டல் ஒன்றும் புதிது அல்ல… ஆனால் ஹைதராபாத் வந்த புதிதில் மொழி தெரியாத நிலையில், மற்ற பெண்களோடு சகஜமாகப் பழக சில காலங்கள் எடுத்தது… அதுவும் சில பல அனுபவங்களுக்குப் பிறகு…
அப்படிப்பட்ட கசப்பான அனுபவங்களில் ஒன்றுதான் ஷர்மிளாவோடு அவர்களுக்கு ஏற்பட்டது…
ஷர்மிளா ஹாஸ்டலில் புதிதாகச் சேர்ந்து பெண்களிடம் நட்பு பாராட்டி அவர்களுக்கு நெருக்கமானால், பின்பு சிறு சிறு சில்லறைகளை வாங்க ஆரம்பித்து, திடீரென்று பெரிய தொகை அவசரமாகத் தேவை என அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, நம்ப வைத்துப் பெரிய தொகையைப் பெற்றுக்கொள்வாள்… பின்பு அதைத் திருப்பி கேட்பவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுவாள்…
அதுபோல மஹாவிடமும் சத்யாவிடமும் பலமுறை கேட்டு இருக்கிறாள்… ஆனால் அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டதால்… அடுத்து இலக்காக கயலிடம் கேட்கிறாள்… இயற்கையிலேயே இரக்க குணம் கொண்டவள்… கூடவே அவள் சம்பளம் என்ன என்பது கூட தெரியாத அவள் தந்தை அவளிடமிருந்து எதையும் எதிர்பார்த்தது இல்லை… அதனால் இவள் இரக்கப்பட்டு கொடுக்க அதைத் தொடக்கமாக எடுத்துக்கொண்டாள்… அன்று முதல் அடிக்கடி கயலிடம் பணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டு வந்தாள் ஷர்மிளா…
“கயல், உனக்கு ஒன்னும் காசு சும்மா வரல… ஏசி ரூம்ல உட்கார்ந்தாலும் உழைச்சு சம்பாதிக்குற காசு… ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாங்க… ஆனா நீ எதுல போடுறனு பார்த்துக்கோ… இதுவரை குடுத்ததுல எதாவது வந்துச்சா…?” என சத்யா கேட்டுக்கொண்டு இருக்கும் போதே அவர்கள் அறைக்குள் வந்த ஷர்மிளா… சத்யாவை கண்களால் எரித்துக்கொண்டே இருந்தாள்…
“கயல், நான் உன்கிட்ட பணம் வாங்கினா இவளுக்கு என்ன வந்தது? நான் ஒன்னும் சும்மா வாங்கல… எப்படியும் திருப்பி கொடுத்துடுவேன் வட்டியோட…!” என்றவள் அத்தோடு விட்டாள். பரவ இல்லையே…
“என்னமோ இவ ஒழுங்கு மாதிரி சொல்ல வந்துட்டா… கயல் அப்பாவிங்கிறதால உன்னோட வண்டவாளம் தெரியாதுன்னு நினைச்சியா? ***** க்கா…?” சத்யாவை பற்றி தப்பாக பேசிவிட்ட சத்யா, ஷர்மிளாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்க… வாய்த்தகராறு உருவி எடுத்து கை தகராறில் முடிந்தது… அதில் வார்டன் வந்து இருவரையும் விலக்கி வார்னிங் கொடுத்து பிரச்சனை முடிந்தது. அப்போது மட்டுமே…
த்யா அந்த சண்டைக்குப் பிறகு கயலிடம் சரியாகப் பேசவில்லை… இவள் விலகி இருந்தாலாவது புரிந்து கொள்வாள் என அவள் நினைத்தது… கயலுக்குப் பெரும் துன்பம் நேரிடும் வழிவகை செய்தது…
வழக்கம் போல் பணியிலிருந்து திரும்பியவர்கள்… கயல் அவர்களோடு வராததை வருத்தமாக எண்ணிக்கொண்டவர்கள், அவள் வந்ததும் எடுத்துச் சொல்லிச் சமாதானம் செய்யக் காத்திருந்தனர்….
ஆனால் மணி ஆனதே தவிர கயல் வரவே இல்லை… அவளுக்கு அழைத்துப்பார்த்தால் மொபைல் சுவிட்ச் ஆப் என வந்தது… கயல் இப்படிச் செய்பவள் இல்லை என்பதால் திகைத்தவர்கள், இரவு நேரப் பணியில் இருக்கூடும் என நினைத்து அலுவலகம் சென்று நேரிடையாகப் பார்க்க முடிவு செய்து கிளம்பிச் சென்றனர்…
ஆனால் அங்கோ கயல் மதியமே கிளம்பிச் சென்றுவிட்டதாகக் கூறியதைக் கேட்டு பயம் உருவம் எடுக்க ஆரம்பித்தது; எங்கே விபரீதமான முடிவை எடுக்கத் துணிந்தாளோ என்று…
அலுவலகத்தில் நன்கு தெரிந்த உயர்பதவியில் இருக்கும் சிலரிடம் உதவியைக் கேட்க அவர்கள் அளித்த தகவல், கயலை ஷர்மிளாவே அழைத்துச் சென்றதாகவும், கூடவே அவளை நன்கு அறிந்தவர்கள் அவளின் கீழ்த்தரமான வேலைகளையும் கூற சத்யாவிற்கும் மாஹாவிற்கும் கிலி பிடித்தது.

