தகுந்த தீர்ப்பை அளித்து பெண்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் கரகோஷம் எழுந்தது…
முதலில் எழுந்த சாணக்கியன் பரத் கை குலுக்கி “கலக்கிட்டீங்க மிஸ்டர் பரத்…!!” என பாராட்டிச் சென்றார். அவரைத் தொடர்ந்து அனைவரும் பரத்தை வாழ்த்தியும் பாராட்டியும் சென்றனர்… கோர்ட் நடைமுறைகள் முடிந்து… பெண்களைத் தேடி வந்தனர் கரிகாலன், கெளதம், பிரபாகரன், பரத், சாம்ராட்… மூவரையும் பெண்களான சத்யா, கயல், மஹா கண்ணீருடன் தத்தம் இணையை அணைத்துக் கொண்டனர்…
தங்களைக்கட்டிக்கொண்ட பெண்களை அணைக்காமல்… “இது ஒன்னும் நன்றிக்கடன் இல்லையே…!!” என உஷாராகவே கேட்டுக்கொண்டனர்…
அதில் வெடுக்கென்று விலகியவர்கள்… எந்தப் பதிலும் சொல்லாமல் திரும்பி நடக்கத் துவங்கினர்….
திகைத்து நிற்பது ஆண்களின் முறையாகிவிட்டது… “அவ்வளவு தானா, எங்க காதல் உங்களுக்குப் புரியவே இல்லையா…?” என மறுத்து நின்ற சமயம்…
பத்தடி தூரம் சென்றதும் பெண்கள் நின்று திரும்பி சிரித்தபடி ஓடிவந்து, கட்டிக்கொள்ளப் பாய்ந்து பிடித்துக் கொண்டனர் கலாபர்கள்…
“எங்ககிட்ட நீங்க யாருங்கிற உண்மைய மறைச்சீங்கல, அதுக்குத்தான்…!” என கூறி சிரித்தவர்களைத் தூக்கிச் சுற்றினர் ஆண்கள்.
அதன் பின் வந்த நாட்களில் மூன்று ஜோடிகளும் தங்கள் இணையோடு ஹைதராபாத்தை காதல் பறவைகளாகச் சுற்றி வந்தனர்…
திகட்டத் திகட்டக் காதல் வாழ்க்கை அனுபவித்தவர்கள் அவர்கள், காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தத் திருமணப் பந்தத்தில் இணைய நினைத்தவர்கள்…
தன் காதல் கலாப்பர்களைத் தங்கள் பெற்றோரிடம் கூட்டிச் சென்று அறிமுகம் செய்து, பெற்றோரின் சம்மதத்தோடு மூன்று திருமணங்களையும் ஒன்றாக நடத்தத் திட்டமிட்டனர்…
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்வின் சுவாரசியம் கெட்டுவிடும் என்று அந்தக் விதியும் நினைத்தானோ… ???
மனம் நிறைந்த உற்சாகத்துடன் பெண்கள் மூவரும் ஊர்களுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்…
அனைவருக்கும் முன் தயாராகி வந்த கயலைப் பார்த்துத் திகைத்து நின்றனர் சத்யாவும் மஹாவும்…
“மச்சி இனி நானே டிரஸ் போட்டுக்குவேன், யாரையும் உதவிக்குக் கேட்காமல்…!!” என அசடு வழிந்தபடி சொல்ல…
“தேறிட்ட போ கயல்…ம்ம்ம்ம்..!!” என மஹா மெச்சி கொள்ள
“இது மட்டுமா…?? மேடம் ஆளே மாறிட்டாங்க… இப்போல்லாம் நம்ம உதவியக் கேட்கவே இல்லை, எதுவா இருந்தாலும் போலீஸ்காரர்க்கு போன் பறக்குது… கமிஷனர் ஆபீஸே இவங்க ஜொள்ளுல மிதக்குதுடி…!!” என சத்யா கிண்டலடிக்க…
“ஆமாம் ஆமா, தலைப்பு செய்தியே அதுதானாமே…!!” மஹா அதில் கூட்டு சேர்ந்தாள்.
“ஆஹான், இங்க மட்டும் எப்படியாம் மேடம்… டெல்லில இருந்து ஹைதெராபாத்க்கு தினமும் தூது போய் செல்போன் டவரே கொடைசாஞ்சு போச்சாமே… அது மட்டுமா கோர்ட் ரூம்லையும் கூட மகாலட்சுமி ஜெபம் தான் நடக்குதாமே…!” சத்யா மஹாவையும் கேலி பேசினாள்.
“ஹே சத்யா, ஆஆஆஆ…!” என நாணம் கொண்டு சிணுங்கினாள் மஹா.
அதற்குள் சத்யாவிற்கு கௌதமிடம் இருந்து அழைப்பு வந்ததால், பேசச் சென்று விட்டாள்…
மற்ற நேரங்களில் இருக்கும் சத்யாவிற்கும், கௌதமிடம் பேசும் சத்யாவிற்கும் எத்தனை வித்தியாசம்… என அவர்களே ஆச்சரியமாகப் பார்த்தனர்…
காதல் வந்தால் உரியவனிடம் விரும்பி சுயம் இழக்க வைக்கும்… கௌதமின் அன்பு சத்யாவின் மென் பக்கங்களைத் திறக்க வைத்தது என்பது தான் உண்மை…
“சரி கௌதம், நான் பத்திரமா வந்துடுவேன்… ஆட்டோ ஏறுன உடனே போன் பண்றேன்… ஐயோ கௌதம், நான் சின்ன குழந்தை இல்லை, இப்படி ட்ரீட் பண்ணாதீங்கனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், ப்ளீஸ்! நிறைய தடவை வந்து போன வழி தான்… கூடவே மஹாவும் கயலும் வராங்க… ம்ம்ம் சரி, பாய்…!” என பேசி விட்டுத் திரும்பியவளை, கயலும் மஹாவும் கையை கட்டி கொண்டு பார்க்க… அதில் வெட்கம் பூ பூத்தாலும் மறைத்துக்கொண்டு கெத்தாக நிற்க…
கயல் பார்த்தியாடி இவளை… நம்மள சொல்லிட்டு கௌதம் அண்ணா போன் போட்ட உடனே எப்படி பூனை குட்டியா மாறுறா…??
அப்போ சத்யா, இனி நீ பால் மட்டும் தான் குடிப்பியா…?? என கயல் அப்பாவியாக கேட்க,
ஹாஹா அடியே கயல், நான் கூட நீ திருந்திட்டனு நினைச்சேன் லூசு, அவ என்ன கேலி பண்றாடி…!! என சொன்ன சத்யா, தோழிகளை கட்டி கொண்டு,
என்னவோடி இந்த காதல் வந்து நம்ம மூணு பேர் வாழ்க்கையையும் மாத்திடுச்சி…!! என சத்யா ஆனந்தமாக சலித்துக்கொள்ள…
“அது என்னவோ உண்மைடி, நாம எல்லாம் இப்படி மாறுவோம்னு நினைச்சு கூட பார்க்கல..!” என மஹாவும் கூற,
“எப்படி மாறிட்டோம் மஹா… நாம பார்க்க முன்ன இருந்த மாதிரி அப்படியே தான் இருக்கும்…!!” என கயல் தன் உடலை ஆராய்ந்து பார்க்க,
“அடியே, இவளே! நம்ம உருவத்தை சொல்லலடி, உள்ளத்தை சொன்னேன்… முன்னெல்லாம் கல்யாணம் பண்ணா பிடிஎஸ் இருக்குற ஒருத்தன் தான் கல்யாணம் பண்ணனும்னு இல்லனா நம்ம கல்யாணமே பண்ணிக்காம சிங்கிளா இருந்துடலாம்னு கனவு கண்டுட்டு சுத்திட்டு இருந்தோம். இப்போ… நமக்கானவங்க வந்ததுக்கு அப்புறம் அவங்களே தான் உலகம்னு மாறிட்டோம்ல, அத சொல்ல வந்தேன்டி…!!” மஹா…
“ஆமாம் மச்சி… நானும் நினைச்சேன் அவங்க வந்ததும் நாம ரொம்ப மாறிட்டோம்னு… இது ஒருவேளை நாம வளர்ந்ததற்கான அறிகுறியா மச்சி…??” என கயல்.
“வாய்ப்பே இல்லை ராஜா, அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை…!!’ என சத்யாவும் மஹாவும் சேர்ந்து சொல்ல, அங்கு ஒரு அழகிய சிரிப்பலை பரவியது…
அதைச் சிதைக்கும் வண்ணமாக, சத்யா கயல் இருவரையும் பார்க்க யாரோ வந்திருப்பதாகத் தகவல் வர, கீழே விரைந்து சென்றவர்கள் அங்கு இருந்தவர்களைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர்… ஆனால் வந்தவர்கள் அவர்கள் தலையில் பெரும் இடியை இறக்கி வைத்திருந்தனர்…
கரிகாலன், கெளதம், பரத் மூவரும் ஹைதராபாத் ரயில் நிலையத்தில்… பெண்களுக்காகக் கத்திக் கொண்டிருந்தார்கள்…
“என்னடா மச்சான், இது நேரம் ஆகுது, இன்னும் இவங்களை காணோம்…!!” என்று பரத் கேட்க…
“டேய், நான் போன் பண்ணும்போது கேட்டேன், நாங்க கிளம்பிட்டோம்னு தான் சொன்னாங்க. ஒருவேளை டிராபிக்ல மாட்டி இருப்பாங்க, வந்துருவாங்க, வெயிட் பண்ணி பார்ப்போம்…!” என கெளதம் சொன்னதும் பொறுமையாக காத்திருந்தனர்…
ஆனால் அவர்களின் காத்திருப்பு வீண் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை…
அவர்கள் செல்ல வேண்டிய ரயிலும் வந்து சென்று விட்டது, ஆனால் பெண்கள் வந்தபாடாகத் தெரியவில்லை… அவர்களுக்கு அழைத்தால் ‘தொலைபேசி பயன்பாட்டில் இல்லை’ என ஒன்று போல் மூவருக்கும் வந்தது… அதில் ஆண்கள் திகிலடைந்தனர்…
“என்னடா கரிகாலன், அவங்களையும் காணோம், அவங்க கிட்ட இருந்து எந்த தகவலையும் காணோம். எனக்கு என்னவோ பயமா இருக்குடா, ஏதாவது பிரச்சனையில மாட்டி இருப்பாங்களா…?” என கெளதம் பதற…
“எனக்கும் அப்படி இருக்கமோ என்று தோணுதுடா, ஏன்னா அவங்க தங்கி இருக்கிற ஹாஸ்டல் ஓனர் பையன் அவங்ககிட்ட ஏதோ பிரச்சனை பண்ணுறதா கயல் என்கிட்ட சொன்னா… அவன் வேற சரியான பொறம்போக்குடா…!!” என கரிகாலன் சொன்னதும்…
“ஏன்டா இவங்களா பிரச்சினையைத் தேடிப் போவாங்களா இல்லை எல்லாப் பிரச்சினையும் இவங்க இருக்கிற இடத்தை நோக்கி வருமா? ஏன்டா இப்படி பண்றாங்க…?” பரத் சலித்துக்கொண்டாலும், அவர்களுக்கு என்ன ஆனது என்கிற பயம் உள்ளுக்குள் பதைபதைப்பாகத்தான் இருந்தது…
“சரி வாங்க, என்ன ஆச்சு என்று நேரில் பார்ப்போம்…!!” என மூவரும் கிளம்பி வெளியே வரவும், தெரியாத எண்ணிலிருந்து கரிகாலனுக்கு அழைப்பு வரவும், பெண்களாக இருக்குமோ என எடுத்துப் பேசினான்…
“பேசியது மஹா தான்… அவர்களால் ரயில்வே ஸ்டேஷனுக்கு வர முடியாததையும், தங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம் எனவும், தங்களைத் தேடி வர வேண்டாம் எனவும் சத்யாவும் கயலும் கூறும் படி சொன்னதாகத் தகவல் சொன்னவள், பரத்திடம் அவள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணமாகக் கூறிவிட்டு, அதற்குமேல் ஒரு வார்த்தை பேசாமல் பட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டாள்…
அவர்கள் மீண்டும் அதே எண்ணிற்கு அழைத்தபோது, அதுவும் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குழம்பிப் போய் நின்றனர்…
எவ்வளவோ முயன்றும் ஆண்களால் பெண்களை நெருங்க மட்டும் அல்ல, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியவில்லை… பெண்களின் இந்த விலகலுக்குக் காரணம் என்ன?? என்பது கூட தெரியாமல், அவர்களின் நிலை என்ன என்பதையும் அறிய முடியாமல் தவித்து நின்ற சமயம் தான்…
சத்யா டெல்லியில் இருப்பதாகவும்… மஹா சென்னையில் இருப்பதாகவும்… கயலுக்கும் அவள் தாய் மாமாவிற்கும் திருமணம் நடக்கப் போவதாகவும் தகவல் கிடைக்க… கொதித்து எழுந்தன ஆண் சிங்கங்கள்… புயலெனப் புறப்பட்டுச் சென்றனர் அவர்களின் காதலுக்கான நியாயத்தைத் தேடி… இதுவரை ஆண்களின் காதல் முகத்தை மட்டும் கண்டவர்கள், அவர்களின் நிஜ முகத்தைக் கண்டால் தாங்குவார்களோ பூவையர்கள்…???
“காதல் கண் கட்டுதே…” கண்ணி வைக்கும் கலாபனே இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்…
நன்றி…
வணக்கம்…

