டிஸ்க்கும் டிஸ்க்கும்…. இந்த பகுதியில் வரும் அனைத்தும் கற்பனை காட்சியே, யாரும் கையைத் தூக்கி ஆட்சேபிக்க வேண்டாம்… இப்படிக்கு அப்பாவி அடப்பாவி ரைட்டர்….
வழக்கு ஆரம்பித்தது…
பெண்களுக்கு எதிராக வாதாட வந்தது ஹைதராபாத்தின் மிகச் சிறந்த வழக்கறிஞரான “சாணக்கிய ரெட்டி”. அவர் உள்ளே வந்ததும் நீதிமன்றத்தின் உள்ளிருந்த அனைவரின் மனதிலும்… “சாணக்கியரே இந்த வழக்கை வாதாட வந்துட்டாரு, அப்போ இந்த பொண்ணுங்களை யாராலும் காப்பாத்த முடியாது… தூக்கு தண்டனை உறுதி…!!” என உறுதிப்பட பேசுவது பெண்களின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது…
அனைவரும் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்பு
“உங்க சார்பா வழக்காட யாரும் இல்லையா…?” என கேட்க, அந்த கேள்விக்கு பெண்களால் பதில் சொல்ல முடியாமல் திணறினர்… என்ன சொல்வார்கள், வரேன் என்று சொன்ன ஆண்களைப் பற்றி கூறி அவர்களையும் இன்னலுக்கு ஆளாக்க விரும்பாமல் அமைதியாகத் தலை குனிந்து நின்றனர்…
“எப்படி மை லார்ட், வருவாங்க இப்படிப்பட்ட கொடூர கொலைகாரர்களுக்கு வாதாட? மனசாட்சியுள்ள எந்த வழக்கறிஞர் தான் வருவான்…!!” என சாணக்கியர் ஏளனமாக கூறியதும் அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது, அதை அடக்கிய நீதிபதி …
“உங்களுக்காக வழக்காட வழக்கறிஞரை இந்த நீதிமன்றமே ஏற்பாடு செய்து தர முன் வருகிறது…!!” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே…
“சாரி மை லார்ட், வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது…!!” என வாயின் பக்கம் கேட்ட சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்க…
அங்கே முழு நீள கருப்பு அங்கியில் வந்தவனைப் பார்த்து பெண்களை விட அனைவரும் அதிகம் திகைத்துப் போனார்கள்… காரணம், சுப்ரீம் கோர்ட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவனான இளம் வழக்கறிஞர் மிஸ்டர் பரத் சாம்ராட் இந்த வழக்கில் ஆஜராகியிருப்பது பெரும் பேசு பொருளாக மாறியது…
“மை லார்ட், நான் பரத் சாம்ராட், சத்யாமஹா கயல் சார்பாக வழக்காட வந்த டிபன்ஸ் வழக்கறிஞர்…!!” அதற்கான விண்ணப்பப் படிவத்தை நீதிபதிடம் கொடுத்து தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்… பரத் சாம்ராட் என்கிற பரத்.
எடுத்த எடுப்பிலே வழக்கறிஞர் திரு. சாணக்கியனால் காரசாரமாக வழக்கு ஆரம்பிக்கப்பட்டது…
“கனம் நீதிபதி அவர்களே… ஷர்மிளா என்கிற இளம் பெண்ணை, இதோ இங்கு கூண்டில் நிற்கும் இந்த மூன்று பெண் கொலையாளிகள்…!!” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே…
“அப்ஜெக்ஷன் மை லார்ட்… இந்த வழக்கிற்கான விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது, இன்னும் தீர்ப்பும் வராத நிலையில் எனது கட்சிக்காரர்களை எதிர்த்தரப்பு வக்கீல் கொலைகாரர்கள் எனக் குறிப்பிடுவது இந்த நீதிமன்றத்தையும், மன்றத்தையும், நீதிமான்களையும் அவமதிக்கும் செயலாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…!!!” என பரத் கூற…
“அப்ஜெக்ஷன் ஓவர்ரூல்… மிஸ்டர் சாணக்கியன், பார்த்துப் பேசுங்க…!!” என்றதும் அவர் முகம் கருத்து விட்டது…
முதல் பாலிலேயே பவுண்டரி அடித்த பரத்தை அங்கிருந்தவர்கள் வெகுவாகப் பாராட்டினர்…
திடீரென நீதிமன்றத்தில் பரத் வழக்கறிஞராகத் தோன்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்… அருகில் இருந்த பெண் காவலர் ஒருவர்… “எம்மாம், பெரிய வக்கீல் அவரு! அவரே உங்களுக்காக வாதாட வந்து இருக்காருனா… நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளுங்களா…?” என வியந்து கேட்டார்…
“மஹாஆஆ அண்ணா, சுப்ரீம் கோர்ட் வக்கிலாம்டி…!!” என கயல் வாயைப் பிளக்க,
“வாய் மூடாமல் பேசும் போதே நினைச்சேன் வக்கீலா இருப்பான்னு, ஆனா இவ்ளோ பெரிய ஆளா இருப்பான்னு நினைச்சுக்கூட பார்க்கல…!!” என சத்யா கூறினாள்…
மஹா அவனை பிரமிப்புடன் பார்ப்பதற்குக் காரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் திறமையாக வாதாடி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையை வாங்கித் தந்து இந்தியா முழுவதும் பெரும் புகழை அடைந்துள்ளதாக அந்த காவலர் கூறியது, பரத் சாம்ராட் மீது ஒரு பிரமிப்பை உருவாக்கியது.
எதிர்த்தரப்பு வக்கீல், சாணக்கியன் பெண்கள் தான் குற்றவாளிகள் என ஐயத் திரிபுற விளக்கத் தொடங்கினார்…
“சாரி மை லார்ட்…
இதோ இங்கு கொலைப் பழி சுமத்தப்பட்டிருக்கும் இந்த மூன்று பெண்களின் அறையில் தான் செல்வி ஷர்மிளா என்ற இளம்பெண்ணின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது… அதுமட்டுமன்றி இவர்களுக்கும் இறந்து போன ஷர்மிளாவிற்கும் இடையே ஏற்கனவே பெரிய மனஸ்தாபம் இருந்து வந்ததாக காவல் துறை நடத்திய விசாரணையில் தெரிய வருகிறது… அதை மனதில் கொண்டு இந்த மூன்று பெண்களும் சந்தர்ப்பம் கிடைத்த போது வஞ்சம் தீர்த்துள்ளனர்… அவளும் இவர்களைப் போல் வாழ வேண்டிய இளம்பெண் என்றும் பாராமல் மிகக் கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர்… அதற்குச் சாட்சியாக ஹாஸ்டல் வார்டன் மற்றும் கொலை நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கத்தியில் கயலின் கைரேகை இருப்பது தெளிவாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது… மேலும் சந்தேகத்திற்குரிய வகையில் இவர்கள் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த மர்மப் பையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், இந்த பெண்கள் சமூக விரோதிகளாக இருக்கக்கூடுமோ என்கிற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது… அத்தோடு போலீஸ் அவர்களைக் கைது செய்ய வரும்போது போலீசிடம் இருந்து தப்பித் தலைமறைவாக இருந்தது இவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எனவே இந்த மூன்று பேரையும் சமூக விரோதிகள் என அறிவித்து… இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் பெண்கள் என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் அதிகபட்ச தண்டனை கொடுத்து, இந்தச் சமுதாயத்திற்கு நீதியின் மீது உள்ள நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பளிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மை லார்ட்…!!” என மூச்சு விடாமல் பேசிவிட்டு கெத்தாக நின்றார் சாணக்கியன்…
“மிஸ்டர் பரத், இதற்கு நீங்கள் ஏதாவது மாற்று கருத்து தெரிவிக்க விரும்பினால் அதை முன்வந்து கூறலாம்…!!” – ஜட்ஜ்
“எஸ் மை லார்ட்… இறந்த ஷர்மிளாவின் உடல் பெண்களின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாலும், கத்தியில் கயலின் கைரேகை இருந்ததாலும், கொலை செய்யப்பட்ட நாளில் பெண்கள் ஹாஸ்டலுக்குள் இருந்ததாலும் என இவைகளை மட்டும் கொண்டு, எவ்வாறு இந்த பெண்களைக் கொலைக் குற்றவாளிகள் என எதிர்தரப்பு வக்கீல் கூறுகிறார் என்பது எனக்குள் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது…!!”
“மை லார்ட், சுப்ரீம் கோர்ட் வக்கீல் மிஸ்டர் பரதற்கே சட்டம் தெரியாது போலும்… சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் இந்தப் பெண்கள்தான் குற்றவாளிகள் என உறுதியாக நிரூபிக்கின்றன… அப்படி இருக்கும்போது அதை நம்ப மறுக்கும் எதிர்தரப்பு வக்கீலை நினைத்து எனக்குப் பரிதாபம் தான் தோன்றுகிறது…!!” என சாணக்கியன் கூறியதும் மீண்டுமொரு சிரிப்பலை எழுந்தது.
“மை லார்ட், சாட்சியும் சந்தர்ப்பமும் தான் ஒரு குற்றவாளியை நிரூபிக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, சட்டம் படித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் என் கேள்வி அதுவல்ல… இங்கு சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் இந்த பெண்களுக்கு எதிராகத் திரிக்கப்பட்டிருக்கின்றன என்பதே மிகச் சரியான வாக்கியமாக இருக்கும்…!!” – பரத்
“எதைச் சொல்வதாக இருந்தாலும் விளக்கமாகச் சொல்லுங்கள் மிஸ்டர் பரத்…!” – ஜட்ஜ்
“நிச்சயமாக மை ஹானர்… முதலாவதாக, கொலை நடந்ததாக போலீஸ்க்குத் தகவல் தந்த ஹாஸ்டல் வார்டனை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்…!!”
“பர்மிஷன் கிராண்டட்…!!”
ஹாஸ்டல் வார்டன் ரங்கமணி வந்ததும், அவரிடம் பரத் விசாரணையைத் தொடங்கினான்…
“நீங்கதானே கயல், சத்யா, மஹா மூணு பேரும் தங்கி இருந்த லோட்டஸ் ஹாஸ்டல் வார்டன்…?” – பரத்
“ஆ… ஆமாம் சார், நான் தான்…!” – ரங்கமணி
“கொலை நடந்த அன்னைக்கு நீங்கதானே போலீஸ்க்குத் தகவல் தந்தது? உங்களுக்கு ஹாஸ்டலுக்குள்ள கொலை நடந்தது எப்பொழுது தெரியும்…? எப்படித் தெரியும்…?” – பரத்
“இல்லை சார், நான் எந்தத் தகவலையும் யாருக்கும் கொடுக்கவில்லை. சொல்லப்போனால், போலீஸ் வந்ததுக்கு அப்புறம்தான் ஹாஸ்டலில் கொலை நடந்தது என்று தெரியவந்தது…!!” எனப் படபடப்புடன் கூறினார்…
“நீங்க இப்படிச் சொல்றீங்க, ஆனா போலீஸ் உங்ககிட்ட இருந்துதான் தகவல் வந்ததாச் சொல்றாங்களே…?? ஒன்னு போலீஸ் பொய் சொல்லணும், இல்லனா நீங்க பொய் சொல்லணும்… போலீஸ்க்கு பொய் சொல்லக் காரணம் இல்லை… ஆனா உங்களுக்கு…?? ஒருவேளை நீங்களே கொலை பண்ணிட்டு, அதை மறைக்க அவங்க மேல பழி போட்டீங்களா..…?” எனப் பரத்தின் வாதம் மிரட்டலை பிரதிபலித்தது…

