கண்ணி வைக்கும் கலாபனே -1

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 21/Aug/2026 ◷ 4 min read

வெயோனின் வேட்கை நிறைந்த தணலை அனுபவித்த பூமியும், அனல் காற்றை வெளியிட்ட…. வாட்டியது போதும் என நினைத்த சூரியனும், தன் செம்பிழம்பான கதிர்களைச் சுருட்டிக் கொண்டு ஆரஞ்சு நிறத்தை வானில் பரப்பி மறைந்து செல்லும் அந்தி மாலை பொழுது…. தினசரித் தேடலை முடித்துக் கொண்டு பறவைகளும் குஞ்சுகளும் அவற்றின் உறைவிடத்தில் பாதுகாப்பாக அடைந்து கொண்டன….

எங்கு நோக்கினும் இருள் சூழ்ந்த இரவு நேரக் கரிய அரக்கன் ஆட்சியில், வேட்டைக்காக வெளிவந்த இருவாட்சிப் பறவைகளின் அலறலும்… பூச்சிகளின் ரீங்கரமும், கோட்டன்களின் ஓலமும் திகிலைக் கூட்டியது…. ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, துணைக்கு ஏனும் ஆட்கள் கூட இல்லாத, மனித நடமாட்டமே காணாத அந்த அடர் சவுக்கு மரங்கள் நிறைந்த கானகத்தில்…. பேரமைதி…!!

அந்த மயான அமைதியை நொறுக்கும் வண்ணம் கேட்டது காய்ந்த சருகுகள் காலில் மிதிபடும் ஓசை….

“கிரிச்… கிரிச்…” நேரம் ஆக ஆக வேகம் அதிகரித்து, வெகு அருகில் அதிவேகச் சத்தத்துடன் கேட்டது காலடிகள்…..

அந்த மங்கிய நிலவொளியில், அடர்ந்த மரங்களுக்கு நடுவே ஒரு உருவம் கருப்பாக ஓடி வருவது, அதன் பின்னால் தெரிந்த தேசிய நெடுஞ்சாலையின் விளக்குகளின் உதவியால் தெரியத் தொடங்கியது; அதன் பின்னாலே சில டார்ச் ஒளிகளை அடித்துக்கொண்டு சிலர் ஓடி வருவது தெரிந்தது……

இருட்டில் வருவது யார் என்று தெரியாவிட்டாலும்… ஓடி வந்து வெட்டவெளியை அடைந்தது ஒரு உருவம் எனில், ஓடி வந்தது ஒன்றல்ல பல உருவங்கள் என்பதே தென்பட்டது.

தப்பி வரும் வேகத்தில் ஒரு உருவம் கால் இடறி கீழே விழ… அதன் மேல் மற்ற இரு உருவங்களும் தடுமாறி விழுந்து, மூவரும் சேர்ந்து உருண்டு கொண்டே அருகே இருந்த மணல் அள்ள வெட்டிய பள்ளத்தில் விழுந்தனர்…

பராமரிப்பற்ற அந்த வனத்தில் பலமான காற்றில் முறிந்து விழுந்த கூரான மரகிளை ஒன்று அம்முவரில் ஒருவரின் கையை பதம் பார்த்துவிட… ரத்தம் குபு குபுவென பீறிட்டு வர… அலறப் போன அவ் உருவத்தின் வாயை இறுகப் பொத்தித் தடுத்தது இன்னொரு உருவம்…

முன் பக்கமாக குத்தி பின்னாக வெளிப்பக்கமாக வந்த அந்த கிளையை பிடித்து எறிய முயல… ரணம் தாங்க முடியாமலும், அதைவிடக் கத்தி அழக்கூட முடியாத பரிதாபத்தில் கண்ணீர் சிந்தத் துடித்தது… அந்த உருவத்தின் வலியை உணர்ந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் மற்ற இருவர் கண்ணிலும் அதே கண்ணீர்…

“டே வாடு எக்கடிகி பாரிபோ கூடது… வெள்ளி பிரென்ஜி வெட்டுகோண்டி…” (ஹிஹி தெலுங்கு எனக்கு ராவே மாட்டேங்குது, அதனால தமிழ்ல போட்ருவோம்)

“டேய், அவங்க எங்கேயும் தப்பிச்சு போக விடக்கூடாது… நாம பிரிஞ்சு போய் தேடலாம்… அவங்க யார் கையில கிடைச்சாலும் கொன்னுடுங்க, சரியா…?” என கட்டளை இட்டபடி, கையில் கத்தி அருவாளுடன் தேடி வந்தனர் பத்து திமிர் பிடித்த தாண்டவராயர்கள்.

திசைக்கு இருவராகப் பிரிந்து,

இருட்டில் அந்த அத்துவான காட்டில்… அங்கும் இங்கும் இஞ்சி இடுக்கு, சந்து பொந்து என டார்ச் லைட் வெளிச்சத்தில் தேடினர்…

அவர்கள் சொன்னதைக் கேட்டு உயிர் பயத்தில் உறைந்து போயினர்… அம்மூவரும்….

அவர்கள் வெகு அருகில் டார்ச் ஒளி தென்பட… திகைத்திருந்தார்கள்… இது அஞ்சி நடுங்கும் நேரம் இல்லை… அவர்களைக் காப்பற்ற எந்த சூப்பர் ஹீரோவும் வரப் போவதில்லை… அதுவும் ஆள் அரவம் அற்ற இந்த இடத்தில், அந்த கயவர்களிடம் இருந்து அவர்கள் மானத்தையும் உயிரையும் அவர்களே காத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவல நிலையில், வருத்தப்படக் கூட அவகாசம் இல்லையே…

மூவரில்… நுண்ணறிவு கொண்ட அந்த உருவம்… அருகில் உடைந்தே கிடந்த மரக்கிளைகள், காய்ந்த சருகுகள் என கிடைத்த அனைத்தையும் இழுத்துத் தங்கள் மேல் போர்த்திக் கொள்ளவும், கயவர்கள் அந்த இடத்தை நெருங்கவும் சரியாக இருந்தது… (ஜஸ்ட் மிஸ்)

“டேய், இந்த பக்கம் இருந்துதான் சத்தம் வருது, ஒரு இடம் விடாமல் தேடுங்க…!” எனச் சல்லடை போட்டுத் தேடினார்கள்…

அதில் உயிர் பயத்தில் நடுங்கியது… உயிரை கையில் பிடித்துக்கொண்டு… வாழ்வின் கடைசி நம்பிக்கையாக மனமுருகி கடவுளை வேண்டிக்கொண்டே… மூவரும் மூச்சை விடாமல் இழுத்துக்கொண்டு மற்றவர்களை இறுக அணைத்துக்கொண்டு அந்த குழியில் பதுங்கினார்கள்…

சரியாக அந்த குழிக்கு மேலாக வந்து நின்றனர் கயவர்கள்…

“அண்ணையா… அண்ணன் இங்கலே இல்லையே…!” (அவங்க இங்க இல்லை) என மற்றவர்களும் அதையே சொல்லிக்கொண்டே வந்து அந்த குழியைச் சுற்றி நிற்க நேர்ந்தது…

திக் திக் நிமிடங்கள் அவை… பதுங்கு குழியில் பதுங்கி இருந்த மூவருக்கும்… அவர்களின் இதயமே காட்டிவிடும் அளவிற்கு “தொம் தொம்” என வேகமாகத் துடித்து வெடிக்கத் தயாரானது…

மூவரும் தலையைக் குனிந்து கொண்டு மேலும் பூமியில் புதையுண்டு… ஏற்கனவே கையில் அடிபட்ட உருவம்… வலி பொறுக்க முடியாமல் கத்தி கதற வாயைத் திறக்க… அதன் வாயில் கை வைத்து… “கடிக்கிக்கோ ப்ளீஸ்… தயவு செஞ்சி கத்திடாதே…!!” என கண்களால் கெஞ்ச… நிலைமை புரிந்தாலும் வலியால் வாயில் இருந்த கையை அழுத்தி கடித்து அடக்க முயன்றது… அதில் கூரான பல் பட்டு அந்தப் பிஞ்சி கரம் கிழிந்து குருதி கொட்டியது…

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்… வலியை உதடு கடித்து அடக்கி… தங்கள் உயிரைக் காக்க… போராடினர்…

கீழே மூன்று ஜீவன்களின் உயிர் வாழும் போராட்டம் கண்டு கடவுளும் மனம் இரங்கினார் போலும்… அந்த கயவர் கூட்டம்… இவர்களைத் தேடி வேறு திசை நோக்கி நகர்ந்தது…

ஆசுவாசம் கொள்ளக் கூட நேரம் இல்லாமல்… அந்த குழியை விட்டு வெளியே வந்தவர்கள்… திரும்பி கூடப் பார்க்காமல்… கயவர்களிடம் மாட்டாமல் இருக்க வேண்டி மீண்டும் தலைதெறிக்க… ஓடினர்…

தூரத்தில் தெரிந்த வெளிச்சம்… ஹைதராபாத் ஹைவே அருகே வந்துவிட்டதை அறிந்து… குருட்டு நம்பிக்கையில் வெளிச்சம் வந்த திசையை நோக்கி ஓடினர்…

நாவுகள் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து பின்… உயிர் மூச்சு நெஞ்சை அடைக்க… உடல் தளர்ந்து தள்ளாடி அருகில் இருந்த மரங்களைப் பிடித்துக்கொண்டு நிற்க… ஹைவே விளக்கு வெளிச்சத்தில் அம்மூவரின் முகம் தெரியத் தொடங்கியது…

காடு மேடு என எதையும் பாராது தறி கெட்டு ஓடியதில் மரக்கிளையில் சிக்கி அங்கங்க ஆடை கிழிந்து… வியர்வையோடும் இரத்தக் கரையினூடே நனைந்து… விடாது துரத்தும் காலானிடமிருந்து தப்பிக்க கல் கண்ணாடி காலில் குத்தி, வெண்பாதங்களின் விரல்களில் உள்ள நகங்கள் பெயர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட… அந்த அலங்கோலத் தோற்றத்திலும்… தேவலோக மங்கையாக மிளிர்ந்த மங்கைகள்… எனில்

மூவரும் பெண்களா…???

ஆம் எனில்… யார் இவர்கள்…???

ஓடி வந்த வேகத்தில் துடிக்கும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலது பக்கம் நிற்பவள் மஹா… என்கிற மஹாலக்ஷ்மி…

இடது பக்கம் மரக்கிளையில் குத்திய காயத்தோடு மயங்கி இப்போதே சரியத் தயாராக இருப்பவள்… கயல்… என்கிற கயல்விழி… தன் மேல் சரிந்து நின்ற இருவரையும் தாங்கிப் பிடித்தபடி தூணாக நடுவில் நிற்பவள் சத்யா… என்கிற சத்யவர்ஷினி.

மூவரும் சுத்தத் தமிழ் பெண்கள்… மூவருக்கும் அகவை இருபத்தி மூன்று… மாதங்கள் முன்னே பின்னே இருக்கலாம்… இவர்கள் மூவரும் ஹைதெராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான… மென்பொருள் நிறுவனத்தில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம் மென்பொறியாளர்கள்…

எனில் எதற்காக அந்த கள்வர்கள் இவர்களைத் துரத்துகிறார்கள்…? இப்பெண்களைக் கொல்ல நினைக்கும் அளவிற்கு என்ன காரணம் இருக்கக்கூடும்…? இவர்களைக் கண்ணி வைத்துப் பிடிக்கப் போகும் கள்வர்கள் தான் யாரோ…?

ஒரே திகிலா இருக்கா மக்களே…?? எனக்கு அப்படி தான் இருக்கு… அதுக்காக பேய் கதை இல்லை, பூஜ்ஜிஸ் கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லர் கதை, புதிய முயற்சி ஹிஹி… அடுத்த எபிசோடில் தெரிஞ்சிக்கலாம் இவங்க வரலாறு என்ன..?? வாய்க்கா தகராறு என்னனு…….??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே -1

Yadhu nandhini
Completed Novel
Thriller
27

Chapters

13

Views

3

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top