இடம்: ஹைதராபாத்…
லோட்டஸ் பெண்கள் விடுதி…
நேரம்: நள்ளிரவு 11:50
புறகதிர் வீசும் ஆதவன் மங்கி, இருள் கமழும் இரவு வேளை…
நான்கு மாடி கட்டிடம்; அதில் நான்காவது தளத்திலிருந்து மெல்ல மெல்ல இருவர் பாதங்கள் படிகள் இறங்கி ஒரு அறைக்குள் நுழைய… அந்த அறை முழுவதும் கும் இருளில் மூழ்கி கிடந்தது…
அங்கு தன்னந்தனியாக கட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்த உருவத்தை அருகே ஓசை எழுப்பாமல் அணுகினர் அவ்விருவரும்…
“பேய்… ஏஏஏஏ…” என உரத்த குரலில் அந்த உருவத்தின் காதில் கத்த…
“அம்மாஆஆஆஆ… பேய்ய்ய்ய்ய்ய்ய்…!!” என அலறித் துடித்து எழுந்தாள் கயல்…
“கத்தாதடி! அப்புறம் அந்த வார்டன் எழுந்து வந்துட்டா, கேக்ல சின்ன துண்டு கூட விட்டு வைக்க மாட்டாங்க. மலை விழுந்துடுச்சு மஹாதேவி அது…!!” என கயல் வாயை பொத்தினாள். மஹா…
மஹாவின் குரலைக் கேட்ட பின்பு பயம் தெளிந்தாள். “என்னடி இந்த நேரத்துல…?” என கேட்டு கொட்டாவி விட்டவள், நித்திரை கலையாமல் மீண்டும் தூங்கி விழப் போனவள் முதுகில் ஒன்று போட்டாள் சத்யா…
“கயல், உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… நைட் டைம்ல கதவை இப்படி திறந்து போட்டுட்டு தூங்காதன்னு… என்ன பழக்கம் இது…?” என சத்யா வழக்கம்போல் அர்ச்சிக்க…
“ஸ்ஸ்ஆஆ… வலிக்குதுடி…!!” என கயல் சிணுங்கினாள்…
கயலின் முதுகைத் தேய்த்த மஹா… “விடு சத்யா, அவளைப் பற்றித் தான் தெரியும்ல… இன்னைக்குப் பிள்ளைக்குப் பிறந்தநாள் வேற, பாவம் போனா போகட்டும், இன்னிக்கு ஒரு நாள் விட்டுடு, நாளைக்குச் சேர்த்து வச்சுப் பார்த்துக்கலாம்…!!”
“ஆஹா…. திட்ட மாட்டாங்களாமே… இதுக்கே வருஷம் முழுக்கப் பிறந்தநாளா இருந்தா எப்படி இருக்கும்…!!” என கயல் யோசிக்க…
“வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை…!!!” என சத்யா, மஹா இருவரும் கோரமாகச் கூற… திகைத்தாள் கயல்….
“ஹா… வழக்கம் போல நான் மனசுல நினைக்குறது உங்களுக்குக் கேட்டுருச்சா…??” என கயல் முழிக்க…
“திருத்த முடியாதுடி உன்னலாம், திருத்தவே முடியாது…!!” என சத்யா சாடியதும்… முகம் விழுந்துவிட்டது கயல்விழிக்கு…
அதைக்கண்ட சத்யாவிற்கே…. இரக்கமாகி விட… கயலின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு… “உன் நல்லதுக்குத்தான் கயல் சொல்றேன்… நீ இப்படி.. அப்பாவியா இருந்தா உனக்கு மட்டும் இல்லை… உன்கூட இருக்குற எங்களுக்கும் தான் கஷ்டம்டா, புரிஞ்சிக்கோ சரியா…??” என கொஞ்சிச் சொன்னவளைப் பார்த்து அழகாகச் சிரிக்க…..
“சரி வா, கேக் கட் பண்ணலாம்…!!” என அழைத்தாள்
கயல் முகம் கழுவிக்கொண்டு தயாராகி வரவும்… அவர்கள் தங்கி இருக்கும் பெண்கள் விடுதியின் மற்ற பெண்களும் அனைவரும் ஹாலில் குழுமியிருந்தனர்….
இறுதியாக அப்பாவி கயல்… என்ன அப்பாவியா…??? ஆம், அவள் அப்பாவி என்பதற்கான காரணம் இதோ….
கயல் பிறந்த பின்பு கயலின் தாய் அன்னக்கொடி நோயால் பாதிக்கப்பட்டு விட்டார்… அறுவடைக்காகக் காத்திருந்த பயிர்களும் எவனோ தூக்கிப் போட்ட பீடித் துண்டால் பற்றி எரிந்து கருகிவிட்டன… மேலும், அவர்களின் போதாத நேரமோ என்னமோ சினையாக இருந்த அவர்களின் வீட்டுப் பசுவும் இறந்துவிட்டது…
காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக… கயல் பிறந்த பின்பு நடந்த அசம்பாவிதங்களால் நொந்து போன கயலின் தந்தை குமாரவேல்… ஜோதிடரிடம் சென்று கேட்க…
அந்த வீணான வெங்கலக் கிண்ணி… வீட்டில் பொண்டாட்டி அடித்த கடுப்பில்… கயலுக்கு ஏதோ தோஷம் இருப்பதாகவும், அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் ஆகாது என்றும், தாயையும் பிள்ளையையும் பிரித்து விட வேண்டும், இல்லையென்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என்று அள்ளிவிட்டார்கள்…
ஒன்றும் ஒன்றும் மூன்று என கணக்கு போட்டவர்… (தல கணக்கு பாடத்தில் வீக் போல…)
பால்குடி மாறாத கயலை அன்னக்கொடியிடம் இருந்து பிரித்து… மாமியார் நாகவல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியார்கள்…
ஐந்து வயது வரை பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த கயல்… அவளது ஆறாவது வயதில்… அன்னக்கொடி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு மரித்துப் போனார்…
அதன் பின் நாகவல்லி கயலை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையுடன் தனியாக நிற்கும் மருமகனுக்கு உதவியாக அவர் கூடவே சென்றுவிட மறுக்காமல் அவர்களை ஏற்றுக் கொண்டாலும், கயலை மட்டும் ஒதுக்கியே வைத்தார். இன்றுவரை…
பிஞ்சு வயதில் தாய் தந்தை பாசத்திற்காக ஏங்கிய கயலை கவனிக்க யாரும் இல்லாத நிலையில், பள்ளித் தோழிகளாக அறிமுகமான சத்யா மற்றும் மஹாவும் அவளுக்கு நட்புக்கரம் நீட்டினர். அன்று பற்றி கொண்டவள் தான் இன்று வரை அவர்களின் கையை பிடித்து கொண்டு எட்டிய தூரம் தான் இது என்றால் மிகையல்ல…
அடுத்து மகாவிற்கு ஊட்டி விட்டாள்… மற்ற அனைவர்க்கும் பிரித்து கொடுத்து விட்டு, தோழிகளின் இருவரின் புறமும் கையை நீட்டி நிற்க…
“என்ன…?” என இருவரும் கோரசாக கேட்க,
“மச்சிஸ், என் கிஃப்ட் எங்க…?” என பல்லை காட்டி கேட்க,
“ஐய சின்ன பாப்பாடி… நீ உனக்கு கிஃப்ட்லாம் வாங்கலை போடி…!” என சத்யா சொல்ல,
“சரி சரி, நடிச்சது போதும்டி… என் பரிச எங்க வச்சி இருக்கிங்க? நானே கண்டு பிடிக்குறேன்…!” என சுற்றிலும் தேடியவள், சத்யாவின் தலையணை பின்னால் மறைத்து வைத்திருந்த பரிசை எடுத்து ஆர்வமாக பிரிக்கலானாள்…
அதில் தங்க இழையால் அழகிய வேலைப்பாடு செய்யப்பட்ட ஊதா வண்ணப் பட்டுப் புடவை இருந்தது; அதைத் தொட்டுப் பார்த்தவள் நெகிழ்ந்து போய், கண்ணில் நீர் வடியச் சமைந்து போனாள்… அவள் இருபுறமும் வந்து நின்றார்கள்….
சத்யாவும் மஹாவும் அவள் தோளில் கை போட, அவர்கள் கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவள்… கண்களில் உள்ள கண்ணீரும், வார்த்தைகள் சொல்லாத நன்றியையும் கயலின் கண்கள் வெளிப்படுத்தின… காரணம்….
கயலுக்குக் கிடையவே கிடையாது என முடிவான நிலையில், அவள் அன்னையின் முகூர்த்தப் புடவை போன்றே அவளுக்கு வாங்கிக் கொடுத்து இருந்தனர் இருவரும்….
“ஏய் என்னங்கடி, கேக் மட்டும் கொடுத்து ஏமாத்தப் போறீங்களா… என்ன..??” என கூட்டத்தில் ஒருத்தி கேட்க….
“அதன… நம்ம ஹாஸ்டல்ல எவளுக்குப் பிறந்தநாள் வந்தாலும் மொத்த ஹாஸ்டலுக்கும் ட்ரீட் வைக்கணும்னு சட்டம் போட்டவளுங்களே, மறக்கலாமா… கேளுங்கடி… நியாயத்தை…?” என மற்றொருவள் ஓசி ட்ரீட்டுக்காக முழங்க, அதையே மற்ற பெண்களும் “ஆமாம் சாமி” என ஆதரித்தனர்….
“ஏ மகிமா…. என்ன இப்போ ட்ரீட் தானடி உங்களுக்கு வேணும், நாளைக்கு வெள்ளி கிழமை வீக் எண்ட் வேற… கயல் பிறந்தநாள் பார்ட்டியை ஒரு கை பார்த்துடலாம்…!!” என சத்யாவே சொல்லிவிட..
“ஏஏஏஏஏஏஏஏ..” என அவர்கள் துள்ளிக்குதித்தனர்… நிலநடுக்கத்தைக் கண்டது போல் அந்தக் கட்டிடமே ஆடி அதிர்ந்தது… அக்கம்பக்கத்தினர் பதறிப் போயினர்….
இதை கண்டிக்க வேண்டிய ஹாஸ்டல் வார்டனோ.. குவாட்டர் அடிச்சிட்டு குப்புறப் படுத்துத் தூங்குற கும்பகர்ணியா தூங்கிட்டு கிடக்கு…
இவர்கள் குதூகலமாக கொண்டாடப் போகும் கயலின் பிறந்தநாள் விழா தான்… இந்த மூவரின் தலையெழுத்தையும் தலைகீழாக மாற்றப்போகும் நாள் எனத் தெரியாமல் போனதுதான் துரதிஷ்டமோ…???
கன்னிகளுக்குக் காத்திருக்கும் கண்ணிகள் என்னவோ…??

