என்ன விளையாடுறீங்களா…?
இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு நேத்துதான் ஊர் அறிய நிச்சயம் பண்ணீங்க.
அதுக்குள்ள இன்னைக்கு வந்து ‘இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்’ன்னு சொன்னா என்னங்க அர்த்தம்…?” என அந்த வீடே அதிரும் படி கத்தினார் பெண்ணின் தந்தை வாகீசன்… சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர்…
அங்கிருந்தவர்களுக்கு அது பெருத்த அவமானமாக இருந்தது… காசு பணத்தை விட மானம் மரியாதையை பெரிதாக கருதும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்…
இந்த விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் முடிக்க நினைக்காமல், விடுவதாக இல்லை வாகீசன்; ஏன் என்றால் இங்கு கேள்விக்குறியாவது அவரின் ஆசை, மகளின் வாழ்க்கை அல்லவா!
“சார்… உங்க கோபம் எங்களுக்குப் புரியுது.
சார்… உங்க கோபம் எங்களுக்குப் புரியுது.
ஆனா… பையன் தெளிவா ‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்’ன்னு சொல்றான். விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி வச்சா, இன்னைக்கு நல்லா இருக்கும், ஆனா நாளைக்கே இரண்டு பேருக்குள்ள செட்டாகலனா வீணாகப் போறது இரண்டு பேரோட வாழ்க்கையும் தான். அதுல உங்க பொண்ணு வாழ்க்கையும் அடங்கி இருக்கிறதால இவ்வளவு நேரம் பொறுமையா உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம்… என வாகீசனுக்கு மறைமுகக் கண்டனம் விடுத்தார் சிதம்பரம்…
ஆனால் அதற்காக அவர் கத்தவோ கோபப்படவோ இல்லை; தன்னுடைய கருத்தை அழுத்தமாகப் பதியும்படி பொருமையாகவே சொன்னார் அந்த மத்தியஸ்தர மனிதர்…
அதெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலையில் வாகீசன் இல்லை. அவர் மகளின் வாழ்க்கை இங்கு கத்தி மேல் தொங்குகிறது; உட்கார்ந்து பேச என்ன இருக்கிறது என்பது அவர் எண்ணம்.
“ஏன் சார் தெரியாமல் தான் கேட்கிறேன்…? நீங்களும் இரண்டு பொண்ணைப் பெத்தவர்தானே… உங்களுக்குக் கூடவா என் வலி புரியவில்லை?”
“இந்த மாதிரி ஒரு அயோக்கியனுக்கு சப்போர்ட் பண்ணிப் பேச உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என்றவரின் வேதனை வார்த்தைகளில் பிரதிபலித்தது.
வாகீசனின் கேள்வியில் சிதம்பரம் தலை தொங்கிப் போனார்.
ஒரு பெயர் பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருக்கும் அவரை… இதுவரை யாரும் இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்டதில்லை. அதற்கான சூழலும் உருவாகியதில்லை.
அப்படிப்பட்டவர் இன்று ஒருவனுக்காக…
தன் சுயமரியாதையையே பின்னுக்குத் தள்ளி, பொறுமையாக நின்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றால்…
அந்த யுகேந்திரன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்…?
“உங்ககிட்ட எனக்கு என்ன சார் பேச்சு…?”
“நான் பையனைப் பெத்தவங்ககிட்டயே பேசிக்கிறேன்…”
என்று முகத்தில் அடித்தது போல் சிதம்பரத்தை உதாசீனம் செய்தவர்,
பார்வையை அங்கு முடங்கிப் போய் மூளையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த யுகேந்திரனின் தாய் வைதேகி பக்கம் திருப்பினார்.
“இப்போ முடிவா என்னதான்மா சொல்றீங்க…?”
“உங்க பையன் என் பொண்ணை கட்டுவானா… மாட்டானா…?”
அவரது குரலில் கோபம் இருந்தாலும், அதைவிட அதிகமாக ஏமாற்றமே நிறைந்திருந்தது…
“நேத்து வரைக்கும் ‘என் மருமகளே… என் மருமகளே…’ன்னு வாய் நிறைய கூப்பிட்டு
இன்னைக்கு வந்து… ‘என் பையனுக்குப் பிடிக்கல’னு
“இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அதுக்கு என்னமா அர்த்தம்…? மாப்பிள்ளை இல்லாம நிச்சயதார்த்தம் நடக்கும் போதே சந்தேகப்பட்டு நான் உங்ககிட்ட கேட்டேனா இல்லையா? அதுக்கு நீங்க என்னமா சொன்னீங்க? ‘என் பையன் என் வார்த்தையை மீற மாட்டான்’னு சொன்னதை நம்பித் தான் நாங்க எல்லாம் பண்ணோம்… இப்போ நிச்சயம் வரைக்கும் வந்து இந்து கல்யாணம் நின்றால் என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும்?” என்று வெடித்தார் வாகீசன்.
அந்த நினைப்பே அவர் நெஞ்சை அழுத்த, “ஒரு சின்னப் பொண்ணு மனசுல இப்படி ஆசையை வளர்த்துட்டு…
ஏமாத்திட்டுப் போனா அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது.
“என் பொண்ணோட கண்ணீருக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லித்தான் ஆகணும்…” என்று வாகீசன் முதலில் கெஞ்சிப் பார்த்தார், மிஞ்சிப் பார்த்தார்; எதற்கும் அந்த யுகேந்திரன் அசைந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் வைதேகிக்கு வெடித்துக் கொண்டு வந்தது…
“இப்படி அடுத்தவங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்தத்தான், அப்பா இல்லாத உன்னை அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேனடா யுகேன்! ஏண்டா அமைதியா நிக்கிற, பேசுடா! அவர் கேக்குற ஒவ்வொரு நியாயமான கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா? உன்னை எவ்வளவு நம்பி இருந்தேன், இப்படி என்னை கழுத்தை அறுத்தீட்டியே பாவி!” என மாரில் அடித்துக் கொண்டு அழுதார் வைதேகி…
“சும்மா நடிக்காதீங்கமா! பிள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலை ஆடுற கதையா?? எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்போ வந்து உங்களுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிச்சா நான் ஏமாந்துடுவேனா? உங்க நாடகத்தைப் பார்க்க நான் இங்க வரல, எனக்குத் தேவை என் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு பதில்! இல்லாட்டி நான் போலீஸ்க்குப் போவேன்… உங்க குடும்பத்தல ஒருத்தரையும் நான் சும்மா விட மாட்டேன், எல்லாரையும் உள்ள தள்ளிடுவேன்” என இறுதியாக மிரட்டிப் பார்த்தார் வாகீசன்…
அவரது வார்த்தைகள் அந்த அறை முழுவதும் எதிரொலித்தன.
வைதேகி கண்கள் குளமாகத் தன் மகனைத் தான் பார்த்தார்…
“எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பார்த்தியா?” என்பது போல் மகனை முறைத்தார்…
தன் அன்னையின் பார்வையைத் தீட்சண்யமாகத் தாங்கி நின்றவனுக்குள் எந்தத் தடுமாற்றமும் பதற்றமும் இல்லை; சொல்லப்போனால் வைதேகியும் சிதம்பரமும் கலங்கும் அளவுக்குக் கூட அவன் கலங்கவில்லை…
“இந்தக் கல்யாணம் வேணும் வேணாம்னு என்கிறது என்னோட தனிப்பட்ட முடிவு… என்னோட வாழ்க்கையில முடிவு எடுக்கிற அதிகாரம் இங்க யாருக்கும் இல்லை…” எனத் திடமாகச் சொன்னவனை வெறித்துப்பார்த்தார் வாகீசன்…
“எது…?? உன் வாழ்க்கை உன் முடிவா…?”
வாகீசனின் கண்களில் கோபம் கொந்தளித்தது.
“அப்போ என் ***த்துக்குடா என் பொண்ணை நிச்சயம் பண்ணிங்க… உங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை இல்லாம நிச்சயம் பண்ணுவீங்க, அப்புறம் வேணாம் சொல்லுவீங்க. நீங்க விளையாட என் பொண்ணு வாழ்க்கை தான் கிடைச்சுதாடா பாவி!” என தாவி வந்து யுகேந்திரனின் சட்டையைப் பிடித்தார் வாகீசன்…
சிதம்பரமும் வைதேகியும் பதறிவிட்டனர்.
ஆனால் யுகேந்திரனோ அசராமல் அமைதியாகவே அவரைப் பார்த்தான்… “எனக்குத் திரும்பி உங்க சட்டையைப் பிடிக்க நொடிப் பொழுது ஆகாது சார்… நான் இந்த பிரச்சனையை அமைதியான முறையில் முடிக்கணும்னு நினைக்கிறேன், உங்களுக்கு எப்படி வசதி…” என்று சொன்ன போது அவனிடம் உறுதி இருந்தது…
தன்னை விட வயதில் சிறியவன் என்றாலும், தோற்றத்திலும் உடல் பலத்திலும் தன்னை விட இரண்டு மடங்கு பெரியவனாகத் தெரியும் யுகேந்திரனை கண்டு வாகீசன் சற்று மிரண்டு தான் போனார். அவனது பார்வையில் இருந்த கூர்மையை தாங்க முடியாமல் இறுதியில் அவரே தன் கைகளை அகற்றிக் கொள்ளும்படி ஆகிற்று…
அவமானத்தில் வாகீசனின் முகம் சிவந்தது.
“பையன் பொறுப்பானவன், திறமைசாலி; நீங்க சொன்னதை நம்பித் தான் சார் எங்க பொண்ணை கட்டி கொடுக்க சம்மதிச்சோம். இப்படி எங்கள நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டீங்களே!” என உடனே தன் கோபத்தை சிதம்பரத்தின் பக்கம் திருப்பினார் வாகீசன்.
உண்மைதான், தன்னுடன் பணிபுரியும் இளைஞன் வயதில் சிறியவனாக இருந்தாலும், வேலையில் அவன் காட்டும் முனைப்பும் மும்முரமும் கண்டு பலமுறை வியந்து இருக்கிறார்… எடுத்த காரியத்தில் பின்வாங்காமல் தானே முடித்து காட்டும் பொறுமைசாலியும் கூட! வேலைக்கு சேர்ந்த முதல் இன்றுவரை அவனது வளர்ச்சியைப் படிபடியாகக் கண்கூடாகப் பார்த்தவர் ஆகிற்றே! அது மட்டுமா?
தொடக்கத்தில் அவர் காட்டிய வழியில் இன்று வரை அச்சு பிசகாமல் நடக்கும் மானசீகச் சிஷ்யன் ஆகிற்றே! அதனால் தானே!
வைதேகி யுகேந்திரனுக்குத் திருமணம் செய்ய சிதம்பரத்தின் உதவியை நாடியபோது, வசதியான வாகீசன் குடும்பத்தை வைதேகிக்கு அறிமுகம் செய்து வைத்தார்…
தான் மட்டும் சென்று பெண்ணைப் பார்த்து, வைதேகி வாகீசனின் பின்புலம், ஆஸ்தி எல்லாம் அறிந்துக் கொண்ட வரை அவருக்குப் பரம திருப்தி…. பணக்காரச் சம்மந்தம் கைவிட்டுப் போகக் கூடாது என்று மகனைக்கூட ஒரு வார்த்தை கேட்காமல் நிச்சயம் செய்தார்…
ஒரு தாயாக மகனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணியவர், மகனிடமும் ஒரு வார்த்தை பிடித்து இருக்கிறதா என்று கேட்டிருக்கலாம்; அதுதான் இல்லையே! ‘என் மகன் என் வார்த்தையை மீற மாட்டான்’ என நம்பும் பெரும்பாலான இந்தியத் தாய்மார்களைப் போன்றே வைதேகியும் எண்ணியதுதான் இங்கு தவறாக முடிந்து விட்டது…
சிதம்பரம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வைதேகியைப் பார்க்க, அவரும் சங்கடத்துடன் சிதம்பரத்தைப் பார்த்தார்…
எதுக்கும் யுகேனிடம் ஒரு வார்த்தை கேட்டுடுங்க அக்கா என்று நேற்று நிச்சயம் செய்யும் முன்பும் கூட வைதேகியிடம் சிதம்பரம் அறிவுறுத்தினார்…
அப்போது அவரின் பேச்சைத் தட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்…
கூனிக்குறுகிப் போய் வைதேகி தலைகுனிய… வேறு வழியின்றி தன்னால் வந்த பிரச்சனையைத் தான் தான் தீர்க்க வேண்டும் என சிதம்பரம் முடிவு எடுத்த சமயம்…
முன்னால் வந்தான் யுகேந்திரன்…
இங்க பாருங்க சார், நிச்சயம் வரைக்கும் வந்த பிறகு, கல்யாணம் வேண்டாம்னு சொல்றது என்னுடைய தப்பு தான்… அதை நான் மறுக்கல, ஒத்துக்கிறேன்… அதுக்காக உங்ககிட்டயும்… உங்க பொண்ணுகிட்டயும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.
“நேத்து நடந்த நிச்சயதார்த்தத்திற்கு நீங்க எவ்வளவு செலவு பண்ணிருக்கீங்களோ… கணக்கு போட்டு சொல்லுங்க. அதை நானே திருப்பி கொடுத்துடுறேன்” என பொறுப்புணர்வுடன் சொன்னான்.
அவன் நினைத்திருந்தால், என்னை கேட்காமல் எடுத்த முடிவு என்று எளிதாகத் தள்ளிவிட்டு இருக்கலாம்; ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லையே, சிறு வயதிலிருந்தே அவன் தந்தை விட்டுச் சென்ற பொறுப்பை ஏற்றுத் தன் தோளில் சுமந்தவன்…
தான் யாருக்கும் பாரமாக அமைந்துவிடக்கூடாது என்று தன் வேலைகளையும், கடமைகளையும், தன் வலிகளையும் தானே சுமந்தவன், அடுத்தவர்க்கு அநீதி நினைக்கமாட்டான்…
அவன் வார்த்தையில் இருந்த பொறுப்பு, வாகீசனைக் தணிப்பதற்குப் பதிலாகத் தூண்டிவிட்டது…
“யாருக்கு வேணும்டா உன் மன்னிப்பு…?” என்று வாகீசன் ஆவேசமாக எழுந்தார்.
“நாளைக்கு நாலு பேர் வந்து, நிச்சயமான உன் பொண்ணோட கல்யாணம் நின்னு போச்சாமேன்னு கேட்டா நான் என்னடா பதில் சொல்வேன்?” அவரின் குரலில் ஒரு தந்தையின் வேதனை இருந்தது.
யுகேந்திரன் நிதானமாகப் பதில் அளித்தான்.
“உங்க பொண்ணை வேண்டாம்னு சொல்ல எனக்கு ஆயிரம் காரணம் இருக்கு. ஆனா அந்த காரணங்களைச் சொல்லி ஒரு பொண்ணோட வாழ்க்கையையும், மரியாதையையும் கேள்விக்குறியாக்க நான் விரும்பல. தேவையில்லாத சிக்கல் வராம இருக்க, இந்த மாப்பிள்ளை மோசமானவன் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சதால கல்யாணத்தை நிறுத்திட்டேன் சொல்லிடுங்க…” என்றான் அந்தத் தாராள மனசுக்காரன்…
அடுத்தவர்களுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் மனம் எத்தனை பேருக்கு வரும் எனச் சிதம்பரம் அந்த நேரத்திலும் யுகேந்திரன் சொன்னதைக் கேட்டு மெச்சாமல் இருக்க முடியவில்லை.
“ஆனா இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது…” என்று வாகீசனை நேராகப் பார்த்துச் சொன்னான். அவன் வார்த்தைகளில் மட்டும் அல்ல, அவனுடைய பார்வையிலும், நிற்கும் விதத்திலும் அந்த முடிவின் உறுதி தெரிந்தது…
“அதை நீ என்னடா சொல்றது…?” என்று ஆத்திரத்துடன் வெடித்தார்.
“ச்சை… தரக்குறைவான குடும்பத்துல பொண்ணை கொடுக்க வந்தேன் பாரு… என்னைச் சொல்லணும்!” என்று வாய்க்கு வந்தபடி பேசினார்…
“செலவு பண்ண கணக்கைச் சொல்லி அனுப்புறேன். பணத்தை எடுத்து வை. சல்லிப் பைசா குறைஞ்சாலும்… உன்னைச் சும்மா விட மாட்டேன்.”
என்று எச்சரித்தவர், ஆற்றாமையுடன் புலம்பிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினார் வாகீசன்…
யார் இந்த யுகேந்திரன்?
ஒரு அப்பாவித் தந்தையின் கதறலுக்குக் கூட அசையாத இவன் அரக்கனா? அல்லது தன் வாழ்க்கை தன் முடிவு என்று வாழும் ஆதிக்கனா?

