கொடியவர்கள் கொடுத்த காயம், வலி, வேதனை, தவிப்பு, உயிர் வாழும் போராட்டம் இவை அனைத்தும் சேர்ந்து சத்யாவை சோர்ந்து விழச் செய்தது…
உயிர்ப்பற்ற சத்யாவைத் தன் மடியில் தாங்கிக்கொண்ட மஹாவும் கயலும் கதறி அழ, கனகமும் தன் இரைச்சலை நிறுத்தித் தன் பங்கிற்காக மௌன அஞ்சலி செலுத்தியது…
இவர்களின் ஓலம் கேட்டு என்னவாயிற்று என்ற பதட்டத்துடன் திரும்பி வந்த கலாபர்களைப் பார்த்து மேலும் கத்தி கதற…
அதில் பதட்டம் அவர்களையும் தொற்றிக்கொள்ள, மயங்கி கிடந்த சத்யாவின் நாடியை கரிகாலன் சோதித்தான்…
“நாடித் துடிப்பு இன்னும் இருக்கு… உடனே ஃபர்ஸ்ட் எய்டு பண்ணனும்…??” – கரிகாலன்
“இந்தக் காட்டில் எங்க எப்படி பண்ண…??” – கெளதம்…
“அவங்கள தூக்குங்க, என் ஜீப்ல ஒரு ஃபர்ஸ்ட் எய்டு கிட் இருக்கு…!” – பரத்..
கயலும் மகாவும் சத்யாவைத் தூக்க முயல… ஏற்கனவே அடிபட்டிருந்தவர்களால் சத்யாவைத் தூக்க முடியாமல் சோர்ந்து விழ, அவர்களைப் பதறிப் பிடித்துக் கொண்டான் கரிகாலனும் பரத்தும்…
“உங்களுக்குத்தான் அடிபட்டு இருக்கு… விடுங்க நாங்க பார்த்துக்கிறோம்…!!” என்றிட அதற்குமேல் மறுக்காமல் வழிவிட்டனர். சத்யாவை கௌதம் தூக்கிக் கொண்டு நடக்க… மஹாவிற்குத் தலையில் அடிபட்டுள்ள காரணத்தால் தலை கிறுகிறுக்க நின்றவளைப் பரத் தன் கை வளைவில் அணைத்துக் கொண்டு நடக்க…
“ஹா…ஸ்ஸ்…!!” என ஓசை எழுப்பிக்கொண்டு அருகில் நடந்து வந்த கயலிடம் என்னவென்று கரிகாலன் கேட்க…
“கை வலிக்குது…!!” என வலியால் முகத்தைச் சுளிக்க…
அவள் காயத்தைப் பார்த்தவன், “கையைத் தொங்க விடக் கூடாது, வேணுமானால் என் தோள் மேலே கையை வைத்துக் கொள்கிறாயா…!!” என கேட்டவனிடம் எந்தத் தயக்கமும் இன்றி அடிபட்ட கையை அவன் தோளில் போட்டுக்கொண்டாள்…
அவன் உயரத்திற்கு கயலால் எட்ட முடியாமல் நடக்க… அதைப்பார்த்தவன் கொஞ்சம் குனிந்து கயலின் இடையை தன்னோடு சேர்த்து இறுக அணைத்துப்பிடித்துக்கொண்டு நடக்க… மீண்டும் ஒருமுறை பூத்தாள் பூம்பாவை…
ஜீப்பில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து அதிலிருந்து மருந்தை எடுத்தவர்கள் பெண்களுக்கு மருந்திடத் தொடங்கினர். கௌதம் மயங்கிய சத்யாவை ஜீப்பின் பின்னிருக்கையில் படுக்க வைத்து, அவள் காலில் ஏற்பட்ட காயங்களைச் சுத்தம் செய்து மருந்திட்டுப் கட்டுப் போடத் தொடங்கினான்…
கயலைத் தாங்கியபடி வந்த கரிகாலன், நிழல் தரும் பெரிய மரத்தின் பின்னால் அமர வைத்தான். கயலுக்கு மருந்திட முனைந்தபோது, பலவந்தம் செய்ய முனைந்தவர்களிடம் இருந்து விடுபடப் போராடியதில் கயலின் ஆடை முதுகுப் புறத்தில் கிழிந்து இருந்தது. தோள் பட்டையில் மரக்கிளை குத்திய காயத்தில் மருந்திட வசதியாக கரிகாலன் டார்டை (Duct tape) கிழிக்க…
“ஹா, என்ன பண்றீங்க…?” என மங்கை பதறவே…
“ப்ஸ்! காயம்மேல துணி பட்டா செப்டிக் ஆகலாம்… மருந்து போடவா வேணாம்மா?” என, “ஆ… ஊன்னு மனுஷன நம்பாம கத்திக்கிட்டு…” என எரிச்சல் குரலில் கேட்க…
“போட்டுருக்க ட்ரெஸ் கிழிஞ்சிடுச்சேனு கேட்டேன், அதுக்கு ஏன் திட்டுறீங்க? மருந்து போட்டு விடுங்க…!!” என இறங்கிய குரலில் கெஞ்ச… கடுப்புடன் மருந்து போட முனைந்த கரிகாலன், எதிரில் இருப்பவர் முகம் காட்டும் பளிங்கு போன்ற முதுகைப் பார்த்து மூச்சை அடக்கி நின்றான். இதயம் தாறுமாறாகத் துடிக்க… பெரும் பிரயத்தனம் கொண்டு சிந்தையை அடக்கியவன், மருந்திட ஆடை இல்லாத வெண்ணிற மேனியில் ஆணின் கரமும் அவனின் வெப்பக் காற்றும் போட்டி போட கிறங்கினால் மாது…
ஒருவாறு மருந்திட்டு முடித்த கரிகாலன்… திரும்பி நின்று தன் மேல் இருந்த சட்டையைக் கழட்டி கயலுக்கு உடுத்தக் கொடுக்க… அவனைப் பார்க்காமலே அவளும் வாங்கி அணிந்து கொள்ள… கயல் மேல் அங்கம் மறைத்த கரிகாலனின் ஆடையில் ஆண்மையின் கதகதப்பும் வாசமும் உணர்ந்து வெட்கினாள் மங்கை…
முதலுதவி அளித்த பின்பும் சத்யா கண் விழிக்காமல் மயக்கத்திலேயே இருந்ததைக் கண்டு அவர்கள் அச்சமடைந்தனர்.
“சத்யா… எழுந்திரு ப்ளீஸ் எழுந்திரிடி…” என மஹாவும் கயலும் எழுப்ப முயன்று தோற்று, “சத்யா கண்ணைத் திறந்து பாருடி…!!” என இருவரும் சத்யாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கலங்கினர்.
“அவளுடைய காலில் காயம் ரொம்ப ஆழமா இருக்கு, ரத்தம் வேற நிறைய போயிருக்கு. உடனே உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தே ஆகணும், இல்லனா என்ன வேணாலும் அதாவது உயிருக்கே கூட ஆபத்து வரலாம்…!!” என கரிகாலன் கூறினான்.
“ஐயோ சத்யா ஆ…!!” என அவர்கள் பதறினர்.
“ப்ளீஸ் அவளை காப்பாத்துங்க, உங்கள கை எடுத்து கும்பிட்டு கேக்குறோம், ப்ளீஸ் அவளை காப்பாத்துங்க…!!” என கயலும் மஹாவும் கெஞ்சினர்.
அவர்கள் மீது இரக்கம் கொண்ட ஆண்கள் உதவி செய்ய முன்வந்தனர்.
“நாம இப்போ ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உடைய காட்டுக்கு நடுவுல இருக்கோம்… இங்க இருந்து வெளியே போயி மெயின் ரோட்டை பிடிச்சு சிட்டிக்குப் போறதுக்கு நிச்சயம் ஒரு நாள் ஆகும், ஆனா அதுக்குள்ள இவங்கள நிலைமை முன்னிலும் மோசமாகக்கூடும்…!!” என கரிகாலன் எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் கூறிவிட,
“அப்போ இவ.. இவங்கள காப்பாத்த வேற வழியே இல்லையா…?” என கெளதம் பெண்களை முந்தி கொண்டு கேட்க…
“இல்லக் கெளதம், இந்த காட்டை விட்டு வெளியே போய் காப்பற்ற அதுக்கு வேற குறுக்கு வழியும் இல்லை. ஆனால் இந்த காட்டுக்குள்ளே ஒரு பழங்குடி கிராமம் இருக்கு, அங்க மூலிகை வைத்தியம் பார்ப்பாங்க… மனிதனோட எந்த விதமான பிரச்சினையோட வந்தாலும் அவங்க பூரணமாக சரிப்படுத்தி அனுப்பிடுவாங்க… அங்க இவங்களை கூட்டிட்டுப் போலாம்னு நினைக்குறேன்… அது உங்களுக்கு விருப்பமா…!!” என கரிகாலன் கேட்க,
“ஐயோ சார், எங்களுக்கு சத்யா குணமானால் அதுவே போதும், நீங்க சொல்ற இடத்துக்கே போவோம்…” என சம்மதித்து உடன் சென்றனர் பெண்கள்.
அனைவரும் ஜீப்பில் ஏறியதும், ஜீப்பை பரத் ஓட்ட கரிகாலன் அவன் அருகில் அமர்ந்து வழி காட்டிய வண்ணம் வர,
பின்னால் அமர்ந்த கெளதம், சத்யாவை கீழே விழாமல் மடியில் அவளைப் பத்திரமாகப் பிடித்துக்கொள்ள, கயலும் மகாவும் அவளை வருத்தத்துடன் பார்த்தபடி வந்தனர்.
“சார், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? இவள் இன்னும் கண்ணை கூடத் திறக்கவே இல்லையே சார்…?” என வருத்தத்துடன் வினவ,

