தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே…17

இன்று…

அவிநாசியின் வீடு விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது…

ஆருத்ரனின் ஆருயிர் நண்பனான அறிவுக்கும் தேன்மொழிக்கும் இன்று ஊர் அறிய வெகு விமர்சனமாக நிச்சயம் நடந்தேறியது…

என்னது, நிச்சயமா…?

அப்போ தேன்மொழி அறிவைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாளா…? தீரனுக்கு இது தெரிந்தால் என்ன நடக்கும்? இதைத்தானா கேட்கப் போறீங்க? இருங்க, நானே சொல்றேன்…

அறிவுக்குத் தேன்மொழியைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்த பின்புதான், தன் நண்பனான அவனிடம் விஷத்தையே சொன்னான் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அவன் கொண்ட நட்பின் மேல் ஆருத்ரன் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையில், தந்தையிடம் வாக்கை கொடுத்துவிட்டான்…

ஆனால் தனியே அழைத்து நண்பனிடம் விஷயத்தைச் சொன்ன பின்பும் பேசாமல் இருந்த நண்பனைக் கண்டு ஆருத்ரனின் மனம் லேசாகத் தவித்தது. அவசரப்பட்டுவிட்டேனோ, அவன் விருப்பத்தைக் கேட்காமல் முடிவு பண்ணிவிட்டேனோ என எண்ணாமல் இல்லை… ஆயினும் தன் நட்பின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையை அவன் கொண்டிருந்தான்…

“என்னடா மச்சான்…”

“உன்னைக் கேட்காம இந்த கல்யாணத்தை முடிவு பண்ணிட்டேன்…”

“அதான் அமைதியா இருக்கியா…?”

“இல்ல…”

“ஊர்ல மத்தவங்க பேசுற மாதிரி…”

“நீயும் தேனைத் தப்பா நினைக்கிறியா…?” என்று ருத்ரன் தன் நண்பனைப் பொருளோடு பார்த்தான்…

“சே, என்ன ருத்ரா! நான் போய் தேனைத் தப்பா நினைப்பேனா…”

“அவள் வேற யாரோவா இருந்தாக்கூட சந்தேகப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கு…”

“ஆனால் என் நண்பன் ஆருத்ரனின் தங்கச்சி மேல எனக்கு அதீத நம்பிக்கை இருக்குடா மச்சான்…”

“எனக்குத் தேன்மொழியைத் கல்யாணம் பண்ணிக்க எந்தத் தயக்கமும் இல்லை. நீக் கூடத் தாலியைச் சொன்னா இப்போ கூடக் கட்ட நான் ரெடி தான், ஆனால்…” என இழுத்த அறிவை ருத்ரன் கலக்கமாய் பார்த்தான்…

“ஆனால் என்னடா…”

“தேனு, என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டியா…?”

“ஃப்யூ! இவ்வளவுதானா? நான் கூட வேற என்னவோ நினைச்சு டென்ஷன் ஆகிட்டேன். தேனு என் தங்கச்சிடா, நான் அவளுக்கு எப்பவும் நல்லதை மட்டும் தான் செய்வேன். அவளுக்கே தெரியும், நிச்சயமா என் வார்த்தையை அவள் மீற மாட்டாள்” என ஆருத்ரன் அடித்துச் சொன்னான்.

“புரியாமல் பேசாத பாசம் வேற, கல்யாணம் வேற… கல்யாணம் பண்ணி வைக்கிறதோட உன்னோட கடமை முடிஞ்சுது. ஆனால் வாழ்க்கை முழுக்க என்கூட வாழப் போறது அந்தப் பொண்ணு தான். முதல்ல அந்தப் பிள்ளைக்கு இதுல சம்மதம் சொல்லட்டும், அப்புறம் கல்யாணத்தைப் பற்றி பேசிக்கலாம்” என்று அறிவுரை வலியுறுத்தினான்…

சரிடா மச்சான், தேன்மொழி சம்மதம் சொன்னவுடனே அவள் கழுத்தில் தாலி கட்ட நான் ரெடி. அறிவு ருத்ரனின் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டான்…

இருவரும் நேராகச் சென்று தேன்மொழி வீட்டில் வைத்தவரைச் சந்தித்தனர்…

ருத்ரன் விஷயத்தைச் சொல்ல, தேன்மொழி வெகுவாக மிரண்டாள்…

அண்ணா நான்… என வார்த்தைகள் வராமல் தவித்தாள்…

என்னவென்று இந்தத் திருமணத்தை மறுப்பாள்? மறுப்புச் சொல்ல அவளிடம் சரியான காரணம் இருக்கிறதா இல்லையே எனத் தவிக்கும் போதே அறிவு தேன்மொழியிடம் வந்தான்…

இங்க பாரு தேனு, உன் விருப்பம் இல்லாமல் இங்க எதுவும் நடக்காது… நீ யாருக்கும் பயப்பட வேண்டாம்… என்றவன் தன் நண்பனை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு…

உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என அறிவு நேரடியாகக் கேட்டதும் தேன்மொழி ஸ்தம்பித்துப்போனாள்…

அவள் நிலையைப் பற்றி அறியாதவனோ…

பிடிக்கலனாலும் பரவால்ல, தைரியமா சொல்லு தேனு… எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்லை. ஆனால் ஒன்னை மட்டும் என்னால சொல்ல முடியும்…

தலையில வச்சி தாங்குவேன், தங்கமா பார்த்துப்பேன், எல்லாம் சொல்ல மாட்டேன், கூட வந்தா உயிரா மதிப்பேன், உள்ளத்தில வச்சி பார்த்துப்பேன் என்று என்னை நம்பி வரும் பிள்ளைக்கு நான் கொடுக்கிற வாக்கு…

அப்பொழுதும் தேன்மொழி தயங்கி நிற்பதைக் கண்டவன்…

எனக்கு உன்னோட கடந்த காலத்தைப் பற்றி எந்த கவலையும் கிடையாது… அதனால உன்னை காயப்படுத்துவேன் என்று கட்டுப்படுதேவன் நினைக்கவில்லை, என்னை பொறுத்தவரை அது ஒரு கூந்தலுக்குப் பெறாத விஷயம்…

அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி எங்களுக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு தேனு. என் ருத்ரன் தங்கச்சி எப்படியும் தப்பு பண்ண மாட்டாள் என்று எனக்கு ரொம்பவே உறுதி… நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன், முடிவு உன் கையில்… என்றவன் தேன்மொழியிக்குச் சிந்திக்க வாய்ப்பு அளித்து பொறுமையாகக் காத்தான்…

சில நிமிடங்கள் அங்கு மௌனம் நிலவியது…

எல்லாம் தெரிந்த பின்பும் தனக்காக பார்க்கிறானே என்று தேன்மொழி நினைக்க அவளின் அமைதியை தவறாக புரிந்துக் கொண்டவன்

“சரிடா மச்சான், தேனுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிடுச்சு. அதுனால இந்த பேச்சை இத்தோட விட்ரு… நீ ஒன்னும் ஃபீல் பண்ணிக்காத, இதுனால நம்ம நட்புக்குள்ள எந்தப் பாதிப்பும் கிடையாது. சாயங்காலம் வழக்கம் போல நம்ம இடத்துக்கு வந்துடு மச்சான். நான் போய் திருவிழா வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பார்க்கிறேன்,” என அறிவு ருத்தரனிடம் விடைபெற்றுச் செல்ல

“சம்மதம்” என தேன்மொழியின் வார்த்தை இரு ஆண்களையும் திகைக்க வைத்தது…

“என்ன சொன்ன தேனு? எனக்கு புரியல,” என அறிவு தான் கேட்டான். “பிரம்மையோ?” என்று கேட்டான்…

“எனக்கு உங்க… கல்யாணம் பண்ணிக்க சம்மதம்,” என தேனு சொன்னதும் அறிவுக்குப் பேரதிர்ச்சி… சிலையாக மாறுவது அவனுடைய முறையாகிற்று…

“டேய் மச்சான், என்னடா ஃப்ரீஸ் ஆகிட்டியா? நான் தான் சொன்னேன்ல…” என ருத்ரன் நண்பனை கேலி செய்தாலும், பொறுப்புள்ள அண்ணனாகத் தங்கையின் திருமணத்திற்கு ஆவன செய்தான்.

முதலில் தனியாகச் சென்று அறிவின் தந்தையிடம் திருமணம் குறித்துப் பேசினான். எல்லாம் சரியாக அமைந்த பின், முறைப்படி பெரியவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்கிற எண்ணம் தான் அவனுக்கு. எடுத்த காரியத்தை முடித்து வைப்பதில் விஜயன் அவன்…

ஆனால் அதுதான் அவனுக்கே மாபாதகமாக அமையப் போவதை அவன் அறிந்து இருக்கவில்லை.

“உன் தங்கச்சியை அறிவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ருத்ரா, ஆனால் அறிவை வீட்டோட மாப்பிளையா கேக்குறது தான் யோசிக்க வேண்டி இருக்கு” என இழுத்தார் சதாசிவம்.

என்ன மாமா யோசிக்கிறீங்க?

நீங்கள் அறிவை எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கத் தயங்குறீங்கன்னு புரியுது… அறிவு எங்க வீட்டோட மாப்பிளையா வந்தாலும் அவனுடைய கௌரவத்துக்கு ஒரு குறையும் வராது, இல்லை அவன் பேர்ல எழுதி வைக்கப் போறோம். அப்புறம் உங்களையும் அத்தையையும் பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு… என மேலே தொடர்ந்த ருத்ரன், சதாசிவத்தின் முகத்தைக் கண்டு,

இன்னும் என்ன மாமா??? எதுவா இருந்தாலும் தயங்காமல் கேளுங்க, என் தங்கச்சிக்காக நான் எதை வேணாலும் செய்வேன்… என வாக்காளித்தவனுக்குத் தெரியவில்லை. அவன் கொடுத்த வாக்கு தான் பின்னர் அவனையே சிக்க வைக்கும் என்றும் அவன் கனவிலும் நினைத்து இருக்க மாட்டான்… அன்று தசரதன் கொடுத்த வாக்கு இராமனின் விதியை மாற்றியது, அதே போல் இன்று ருத்ரன் கொடுத்த வாக்கு அனைவரின் விதியையும் மாற்றப் போகிறதோ…

“இந்த வார்த்தை போதும் ருத்ரா, உன் தங்கச்சியை எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க நாங்க தயார்” என்றதும் ருத்ரனின் முகம் மகிழ்ச்சியில் விகசித்தது…

ஆனால் தொடர்ந்து சதாசிவம் சொன்ன வார்த்தை அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை மொத்தமாக வழித்து எரிந்து விட்டது…

“அப்படி என்ன சொன்னார்? தான கேக்குறீங்க… அது வேற ஒன்னுமில்லை…”

“உன் தங்கச்சியை என் பையனுக்கு கொடுக்கிற மாதிரி, என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாரே, பார்க்கலாம்…

“அப்பா! என்ன பேசுறீங்க? புரிஞ்சு தான் பேசுறீங்களா?” என ருத்ரனுக்கு முன்பாக பொங்கி எழுந்தான் அறிவு…

அடேயப்பா! அப்படி என்னடா நான் தப்பா கேட்டுட்டேன்? நீ இப்படி குத்திகிற… நீ இவன் தங்கச்சியை கட்டிக்கிட்டு எனக்கு என்னனு போய்டுவா? உனக்கு அடுத்து தங்கச்சி இருக்கா இல்லையா? நாங்க அவளை பார்க்க வேணாமா? எப்படி இருந்தாலும் உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் உன் கல்யாணம் நடக்கும்.

பொறுடா, பேசிட்டு இருக்கேன்ல! என இடையே ஏதோ கூற வந்த அறிவை அடக்கியவர்…

“எங்க விட்டேன் ஆன் அப்படி யாருக்கோ கட்டிக்கொடுக்கப் போறது? ருத்ரன் கட்டிக்கிட்டா என்ன தப்பு? நாளைக்கே எவனுக்கோ என் பொண்ணைக் கொடுத்து அவள் கண்ணை கசக்கிக்கிட்டு வந்து நின்னா என்னால என்ன செய்ய முடியும்? அதுவே இவனுக்கு என் பொண்ணைக் கொடுத்தா அண்ணன் காரன் நீயே பார்த்துக்குவ, இல்லை அதுக்குத்தான்… நான் என்ன பெருசா ஆசைப்பட்டுட்டேன்? என் பொண்ணும் புள்ளையும் ஒரே இடத்துல சந்தோஷமா வாழனும், அதை என் கண்ணாரப் பார்க்கணும், அவ்ளோதான். மத்தபடி எதுவும் எனக்குத் பெருசில்லை, ஏன்னா அந்தஸ்துல நாங்களும் ஒன்னும் குறைஞ்சவங்க இல்லையே, உனக்கே தெரியுமேபா!” என்று போட்டு உடைத்தார் சதாசிவம்…

அவர் பேச்சில் இருந்த நியாயம் ருத்ரனை மௌனமாக்கியது… அறிவு சங்கடத்தில் முழ்கிட அந்த இடமே மையான அமைதி பூண்டது…

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல், ‘சரிங்க மாமா, அப்போ நான் கிளம்புறேன்… எதுக்கும் நீங்கள் பொறுமையா யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க’ என நாசுக்காக கிளம்பி விட நினைக்க…

இதுல யோசிக்க ஒன்னும் இல்லை ருத்ரா, ஒன்னு நடந்தா ரெண்டு கல்யாணம் இல்லாட்டி ஒத்து வராதுனா மொத்தமா விட்ரு, புரியுதா? என சதாசிவம் இறுதியாக முடித்து விட…

பேச்சாற்று நின்ற ருத்ரன் கன நேர மௌனத்திற்கு பின்பு…

சரிங்க மாமா, அப்போ நீங்களே ஒரு நல்ல நாள் குறிச்சிடுங்க, இரண்டு நிச்சயத்தையும் ஒண்ணா வச்சிக்கலாம் என ருத்ரன் தன் சம்மதத்தைச் சொல்லவும் சதாசிவத்திற்கு வெற்றி களிப்பு.

ருத்ரா, நீயா? என அறிவு அதிர்ந்தான்…

“என் தங்கச்சி நல்லா வாழ நான் எதுவும் செய்வேன் மச்சான்!” எனத் திடமாகக் கூறியவன்… மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றுக்கு ஆவன செய்தான் தேன்மொழியின் ஆருயிர் தமையன்…

பாசமிகு அண்ணனாக… தன் தங்கையின் எதிர்காலத்திற்காக ருத்ரன் தியாகம் செய்தது தன் வாழ்வை மட்டும் அல்ல… உலகம் அறியாமல், அவனுக்குள்ளே உயிராய் வாழ்ந்த காதலையும் தான்…!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top