அப்படி என்னதான்டா செஞ்சான் இவன்… என அவிநாசியும் குழப்பமாகக் கேட்க…
என்ன செஞ்சானா…??? அப்பா இவன் குட்டி குட்டி முயலுக்கு எல்லாம் கலர் சாயம் போட்டு நம்ம பாப்பாகிட்ட கலர் முயல்னு ஏமாத்தி வித்திருக்கான் பா…என சொல்லக் கேட்டதுமே…
ஏதே கடேய் கலர் முயல் வித்ததுக்காடா கட்டி வச்சி அடிப்பீங்க டேய் ரொம்ப ஓவரா போறீங்கடா என நினைக்க மட்டுமே முடிந்தது அவனின் நட்பு வட்டத்தினால்… வெளில சொன்னாக்கா வாயிலே வெட்டு விழும்னு தெரியுமே…
இந்த நாய்தானா அது என அவிநாசி முயல் விற்றவன் நெஞ்சிலே எட்டி மிதித்தார்…
ஐயோ அம்மா சாமி நான் புள்ள குட்டிகாரன் என்னை ஒன்னும் செஞ்சுடாதீங்க என எட்டி உதைத்த வேகத்திலே ரப்பர் பந்தாக திரும்பவும் வந்து அவிநாசி காலைக் கட்டிக் கொண்டு கெஞ்சினான் முயல் வியாபாரி…
ஏன்டா நாயே உன் புள்ள குட்டி மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுதா?? உன் சுயநலத்துக்காக பிஞ்சு குட்டிய தாயிடம் இருந்து பிரிச்சு அதுக்கு கலர் சாயம் என்கிற பேர்ல ரசாயன விஷம் பூசி விக்கிறியே உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா…
நீ ரசாயனம் பூசி வித்த முயலை என் பொண்ணு வாங்கின ரெண்டே நாள்ல அது செத்துப் போச்சிடா… அதை நினைச்சி நினைச்சி என் பொண்ணு இரவும் பகலும் தூங்காம சாப்பிடாம எப்படி துடிச்சி துடிச்சி அழுதா தெரியுமா… உன்னை என கோவத்தில் நாக்கை கடித்தவர்
டேய் தம்பி மத்தவங்கள விட்டாலும் பரவால்ல இவனை மட்டும் சும்மா விட்டுடாத நம்ம புள்ள சிந்தின கண்ணீர்க்கு இவன் பதில் சொல்லியே ஆகணும் என தீர்ப்பாக சொல்ல திகைத்து போயினர் மற்ற அனைவரும்…
இவனுங்க பொண்ணு பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா என்பதை மட்டும் எண்ண முடிந்தது அங்கிருந்தவர்களால்…
அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை ஊரையே தன் கைக்குள் வைத்து இருக்கும் இவர்களையும் ஒருத்தி தன் அன்புக்குள் கட்டி வைத்திருக்கிறாள் என்று அவள் சிரித்தாள் இவர்களும் சிரிப்பார்கள் அவள் அழுதால் இவங்க அழுவாங்கன்னு தானே எதிர்பார்க்கிறீங்க ம்ஹும் அதுதான் இல்லை ஊரையே அழ வச்சி வேடிக்கை பார்ப்பானுங்க… பாசத்துல சுத்துறவங்க முட்டா பீஸ் கோவத்துல முரட்டு பீஸ் ஆக மொத்தம் இவனுங்க முரட்டு முட்டாப் பய பீசுங்கள்…இதுகளையே ஆட்டி படைக்கும் அவள் எப்படியோ…??
சுட்டெரிக்கும் சூரியனின் சூடு தாங்காமல் மக்கள் போனாப் போகுதுனு இந்த பூமியில் தங்கிடுவோமா இல்லை செவ்வாய் கிரகத்துக்கு சிட்டிஸன்ஷிப் வாங்கிடலாமா என்ற யோசனையை நாம் கிடப்பில் விட்டு விட்டு கதைக்கு போவோம் வாங்க
கொளுத்தும் கொடை வெயில் காரணமாக அரை நாளிலே கல்லூரி முடிந்து விட
மஞ்சள் வண்ணப் பேருந்துகள் தேனீக்களாக சாலையை நிறைத்துக் கொண்டு இருந்தன… அதில் இருந்து வண்ண வண்ண மலர்களாக வந்து இறங்கினர் யுவதிகள்…
எப்போதும் அவர்களின் முகம் வாடாமல் இருப்பதால் வாடாமல்லி என்று பெயர் வந்ததோ…
தார் சாலையைக் கடந்து வந்து அவர்களின் தங்கபாதங்கள் மண் சாலையில் தொட்டதும் பொன்னாக மாறிய அதிசயம் தான் என்ன…?? தங்கம் விக்கிற விலைக்கு உனக்கு இதெல்லாம் தேவையா அதான…
கேலியும் கிண்டலுமாக அந்த பருவத்திற்கே உரிய துறுதுறுப்புடன் கலகலத்து வந்தது அல்லி மலர் கூட்டம்…
யாரோ ஒருத்தி அடித்த விட்டில் அனைவரும் வாய் விட்டு சிரிக்கும் கூட்டத்தின் மத்தியில் எல்லாவற்றிற்கும் மென்னகை மட்டுமே புரியும் அவள்… கண்களில் அப்படி ஒரு கனிவு முகத்தில் அப்படி ஒரு பணிவு… எதற்கும் மிஞ்சியது அல்ல அவள் துணிவு…
மீமிகை மலர்களில் இருந்து அவளைத் தனித்து காட்டுவது அவளது பொறுமை தான் என்றால் அது மிகையல்ல… சாத்வீகமான முகம்… அவள் அப்படி ஒன்றும் பேரழகியாக தெரியாவிட்டாலும் அவளும் ஈர்ப்பு விதிக்கு உட்பட்டவளே… ஒருமுறை பார்த்தால் மனதிலே பச்சக் என பதியும் ரகம்… அதிர்ந்து பேசவோ நடக்கவோ அவளுக்கு தெரியுமா என்பதே கேள்விக்குறி தான்… அவளின் நிதானம் பொறுமையை கடந்தவர்களால் அவளின் அமைதியை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு யாராலும் கடக்க முடியாது…
அத்தனை சாந்த சொரூபிணி அவள்… அவள் தேன்மொழி – தா/பெ அவிநாசி…
என்ன எள்ளு எனும் முன் எட்டி உதைக்கிற குடும்பத்துல இப்படி ஒரு பச்ச புள்ளையான்னு தான யோசிக்கிறீங்க…??
வேற வழி எல்லாம் டிசைன்ல அப்படி இருக்கு நாம ஒன்னும் செய்ய முடியாது… ருத்ரன் அவன் தந்தையின் குணத்தைப் பெற்று வந்தான் என்றால்…தேன்மொழி அவள் அம்மா குணம் நீங்கள் எதிர்பார்ப்பீங்க அது தான் இல்லை… இப்போஇருக்குற ஆனந்தவள்ளி பக்குவப்பட்ட பெண், ஆனால் இளமையில் அவர் ரேஞ்சே வேற… அவிநாசியின் சட்டையைப் பிடித்து காதல் சொன்னவர் ஆகிற்றே… அவரின் குணம் கால் வாசிக் கூட தேன்மொழியிடம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
அவள் யாரை மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக அவளைப் படைத்தவனே ஏன் இந்த குடும்பத்தில் இந்தப் பிள்ளையை கோர்த்து விட்டோம் என்று கலங்கும் அளவுக்குனா பார்த்துக்கோங்க.
காலையில் கண்ணு முழிச்சதும் எல்லோரும் காபி குடிக்கலாமா, டீ குடிக்கலாமா என்று யோசிப்பார்கள். ஆனால் ருத்ரன் குடும்பத்தில் மட்டும் கண்ணு முழிப்பதே இன்னைக்கு எங்கே கலவரம் பண்ணலாம் என்கிற எண்ணத்தோட தான்.
காலையில் இரண்டு இட்லிக்கு கெட்டி சட்னி வைப்போமா இல்லை தக்காளி சட்னி வைப்போமா என்று யோசிக்கிற சாதாரண மக்கள் மத்தியில…
அந்த ரெண்டு இட்லிக்கு ரெண்டு ஊரே ரெண்டாகப் பட்டுப் போகும் அளவுக்கு சம்பவம் பண்ணா அது அவிநாசி அண்ட் பாய்ஸ் தானுங்க. கையிஸ் இவங்க நம்மள போல சாதாரண பீப்பிள் கிடையாது
ஆனால் எல்லா ஆற்றலுக்கும் ஓர் எதிர்வினை ஆற்றல் இருக்குமே. அதாவது நம்ம தலைவர் ஸ்டைலில் சொல்லணும்னா “வெர் தேர் இஸ் ஆக்ஷன், தேர் இஸ் அன் ஈக்வல் அண்ட் ஒப்போசிட் ரியாக்ஷன்…”
அதே போல தான் இவர்கள் நெருப்பு என்றால் அவள் நீர்… இவர்கள் இரும்பு என்றால் அவள் மென்பனி… அவர்கள் கோவத்தின் உச்சம் என்றால் இவள் அமைதியின் மறுவடிவம்… அவர்கள் அடிதடி என்றால் இவள் கருணையின் காரிகை…
தன் தோழிகள் பேசிக் கொண்டு வர பொறுமையாய் கேட்டுக்கொண்டே வந்தாள் தேன்மொழி…
அவர்கள் செல்லும் பாதையில் வாவ்.. வ்வாவ் என சில நாய்கள் ஒன்று கூடி நின்று ஒரு குருவியை குறி வைத்து துரத்தி வந்தன…
அந்த குருவியோ மிகவும் சோர்வுடன் தன் கடைசி மூச்சு வரை நாய்களிடம் போராடி போராடி தன்னால் முடிந்த மட்டும் உடைந்த தன் சிறகை வைத்து பறந்து பறந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பார்த்தது பாவம்…கிவிக் கிவிக்…
ஆனால் அதன் முறிந்த சிறகை வைத்து அப்பறவையால் சில அடிகள் தூரம் மட்டுமே பறக்க முடிந்தது… அது படும் போராட்டம் கண்டு தேன்மொழியின் உள்ளே இரக்கம் சுரந்தது… ஆபத்தில் இருக்கும் குருவியை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என முடிவு செய்தாள் அவள் நினைத்தாள் போதுமா அதற்கு அந்த நாய்கள் விட வேண்டுமே…
வேட்டையாடும் வெறியில் தங்கள் கூறிய பற்களை கடித்து கொண்டு… கிட்ட வராதே வந்தால் உன்னையும் கடித்து குதறுவேன் என்று பல்லை பல்லை காட்ட இவளுக்கு உள்ளூர உதறல் எடுத்தது…
தயங்கி தயங்கி அவள் குருவியை நோக்கி போவதை அவளது தோழிகளும் அந்த வெறி நாய்களும் வேடிக்கை பார்த்தன…
அவள் அந்த குருவி அருகே குனிந்ததும் மொத்த நாய்களும் ஒன்று சேர்ந்து அவளை பார்த்து குறைத்து கடிக்க தயாராக…
ஐயோ தேனு என அவள் தோழிகள் பதற…
தேனுக்கும் மரண பீதி தான் நிற்கவா தூக்கவா ஓடவா …என்பது தெரியாமல் அவள் கலங்க அவள் தோழி கூட்டத்தில் ஒருத்தி மட்டும்…
அந்த இடத்தை விட்டு நகராத தேனு நீ ஓடினா மொத்தக் கூட்டமும் உன்னை தான் துரத்தும் நீ பயப்படாம இரு…
ஏய் லூசாடி அவள் நின்னாலும் அதுங்க அவளை கடிக்கும் நீ வேகமா ஓடுடி தேனு என இன்னொருத்தி சொல்ல
ஓடினா கடிக்கும் வேணாம்
ஓடு கடிக்காது போ…
கடிக்கும்
கடிக்காது
என இவர்களுக்குள் சண்டை போட… அட நம்மள விட மோசமா அடிச்சிக்குதுங்களே என்ன வகை பிராணிகள் இதுவோ என்பது போல் நாய்கள் அவர்களை பார்க்க…
ஏய் சி நிறுத்துங்கடி அந்த நாய்கள் கிட்ட இருந்து எப்படி அவளை காப்பாற்றனும் எனக்கு தெரியும் தள்ளுங்கடி என்றபடி முன்னால் வந்த அம்சா…
தேனுவிடம் வந்து நாய்களை பார்த்தபடி
ஏய் ச்சு ச்சி என விரட்டி விட அது அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாய்கள் உர்ர்ர் என்று தேனவையும் அவள் அருகில் வந்த அம்சாவையும் பார்த்து பாயத் தயாராக நின்றன…
இங்க பாருங்க நீங்களா போனா உங்களுக்கு நல்லது இவள் அண்ணன் கிட்ட போட்டு கொடுத்துடுவேன் இவள் அண்ணன் யாருன்னு தெரியும்ல ருத்ரன்… ஆருத்ரன் என அம்சா சொன்னது தான் தாமதம் …
உய்ய்ய் உய்ய் லெய் ஐயோ அந்த எமப் பையன் தங்கச்சியா நீ… உன்னை பார்த்து குறைச்சேன் தெரிஞ்சாலே என் கரண்ட புடிங்கிடுவானே அந்த நாசமா போறவன்… டேய் ஒடுங்கடா ஒடுங்கடா அவன் கிட்ட சிக்கினா நமக்கு சில்றேன் பிராப்தம் இல்லாம பண்ணிடுவாண்டா என வாவ்ஊஉய்ய்ய் உய்ய்…
ருத்ரன் பெயரை கேட்டதும் நாய்கள் கூட்டம் மொத்தமும் புழுதி பறக்க ஓடியே விட்டது…
நாய்களை ஓட விட்ட எங்கள் நாயகன்னு பிளக்ஸ் போட்டுற வேண்டியது தான்.



