அத்தியாயம் – 1
வரண்ட பாலைவன நிலத்தில் பசுமையான மரங்களுக்கு மாற்றாக வானுயர்ந்த கட்டிடங்கள் அடர்ந்து கான்கிரீட் காடாக மாற்றி இருந்தான் விஞ்ஞான மனிதன்… அவன் ஆசைக்குத்தான் அளவே இல்லையே… கால் வைத்த இடம் எல்லாம் கணினியாகவும், கை தொடும் இடமெல்லாம் இயந்திரமாகவும் விளங்கும் “ஹை டெக்” நகரம் அது…
வளர்ந்து நிற்கும் கண்ணாடி சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் பதினான்காவது மாடி ஒன்றில்..
பிளாக் வுட்டால் செய்யப்பட்ட மர மேஜையில் அமர்ந்த சூழல் நாற்காலியில் ஸ்டைலாக அமர்ந்த வண்ணம் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன் முதுகின் பின்னால் வந்து நின்றான் அவன் பர்சனல் அசிஸ்டன்ட் என்னும் பி.ஏ. (ஹீரோக்களுக்கு பில்டப் கொடுக்க இவர்களின் சேவை தேவை)
“பாஸ்… டன்…!” என இரண்டே சொல்… கம்பராமாயணத்தில் அனுமன் கூட “கண்டேன் சீதையை” என குறிப்பு உணர்ந்து ராமனின் துயர் நீக்க சொன்ன சொற்கள் அவை… அதே போல் தான் இவனும் அவனின் பாஸ்க்கு ஏற்ற பக்தன்… வளவள, கொழகொழ இவர்கள் அகராதியிலே இல்லை…
சுருக்கு எழுத்தில் கூட சேராத சுருங்க சொல் அவன் என்றால் “அந்த பாஸ்” எப்படியோ…??
ம்ம்… என ஒற்றை ஓசையிலே கேள்வி, பதில், கட்டளை, கோபம், மகிழ்ச்சி, வருத்தம் என எல்லாவற்றையும் அந்த ஒற்றை எழுத்தில் முன்னிறுத்தும் மாயவன் அவன்…
ம்ம்ம் என அவன் இரண்டாவதாக பிறப்பித்தது கட்டளையே புரிந்து கொண்டவன்… வள்ளுவனுக்கேற்ற வாசுகி என நினைப்பு… அடேய் அவங்க கூட புருஷன் பொண்டாட்டி டா..
உடனே தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு கொடுத்தவன் அவர்கள் இணைப்பில் இணையும் வரை பொறுத்து இருந்து தன் பாஸிடம் நீட்ட,
அதை பார்க்காமலே பின்னால் இருந்து கையை நீட்டி வாங்கிக் கொண்டவன் காதில் வைத்தவன் ஹாஹா என அரக்கத்தனமான சிரிப்பில் எதிரிக்கு “தான்” எனப் பறைசாற்றினான்…
என்ன தீரன், காண்ட்ராக்ட் கையவிட்டு போன விரக்தியில் பைத்தியம் ஆகிட்டியா என்ன…?? தோற்றவன் சிரிக்க கூடாது ராஜா, அழணும்… என எதிர் முனையில் இருந்த வர்மா சீண்டிவிட,
அந்த பக்கம் இருந்த தீரனை அது சிறிதும் பாதிக்கவில்லையோ, ஏன்னா தீரன் மேலும் மேலும் பலமாக சிரித்து தான் மெண்டல் தான் என எதிரிக்கு நிரூபிக்க துடித்தான் போல்…
அது அப்படி இல்லையோ, எதிர் முனையில் நிலவிய பதட்டத்தை வைத்து பார்த்தால் ஆள் அப்பாட்டக்கர் தான் போலயே…
வேணாம் தீரன்… நோ… திஸ் இஸ் நாட் ஃபேர்… பிசினஸ்ல வெற்றி தோல்வி சகஜம்… அதுக்காக எல்லாம் நீ இப்படி பண்ணக்கூடாது தீரன்… வேணாம்… அவங்க பாவம்… விட்டுடு… என வர்மாவின் கணினி திரையில் தெரிந்த காட்சியை கண்டு அலறிவிட்டான்…
பின்னே இவன் துபாயில் இருந்துக் கொண்டு இந்தியாவில் இருக்கும் வர்மாவின் குடும்பத்தையே மொத்தமாக தூக்கிவிட்டான்… பலே கில்லாடி… பல்லு முளைக்காத பிள்ளை முதல் பல்லு போன கிழவி வரை அதில் அடக்கம் என்றால் பாருங்களேன்…
ஐயோ தீரன்… என் தாதிமாக்கு அடுத்த சில மாதங்களில் வயசு நூறு… இப்படி செஞ்சுரி அடிக்க வேண்டியவங்களை ஸ்ட்ரெச்சரில் ஏத்திடாத… உனக்கு என்ன அந்த காண்ட்ராக்ட் தான் வேணும்… நான் வேணாம்னு குவிட் பண்ணிடுறேன்… தயவு செய்து அவங்களை விட்டுடு… என வர்மாவை கலங்க வைத்த பெருமை எருமை எல்லாம் நம் தீரனையே சாரும்…
இது தான் தீரன்… அவனிடம் பேச்சு அவ்வளவாக இருக்காது… ஆனால் அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் அவன் செயலே எடுத்து காட்டிவிடும்… ஒரு மனிதனை உடைக்க அவன் உடலை தான் அடிக்க வேண்டும் என்பதில்லை… அவன் மனதை உடைத்தாலே போதும் என்பதை உறுதியாக நம்புபவன்…
அவனை எதிர்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவன் ஒரு தந்திரன்… நேர்வழியில் கிடைக்காத எதையும் அவனுக்கே உரிய வழியில் சென்று தட்டி பறிப்பதில் வல்லவன்…
எங்கும் எதிலும் தான் தான் முதன்மை வகிக்க வேண்டும் என சிந்தையில் மட்டும் அல்ல, அவன் உடல், பொருள், ஆவி எங்கும் ஊறிப் போன ஒன்று…
“தான்” என்கிற வார்த்தைக்குள் தன்னுடைய அடையாளமாக ஆணவத்தையும் அகந்தையையும் கொண்டவன்… தோல்வி என்ற சொல்லையே தோற்கடித்தவன்…
வெற்றி தேடி அவனாக ஒரு போதும் செல்லாதவன்… அந்த வெற்றியை தன் பின்னால் தானாக ஓடி வரும் படி செய்பவனும் அவனே… அவனே அனுதீரன்…
தன்னை வெல்ல ஒருவனும் இல்லை என மாமதையில் வாழ்பவனுக்கு, எங்கே தெரியப் போகிறது… வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது…
தமிழ்நாட்டில் ஒரு கோடியில்…
வீரசோழலிங்கபுரம் என்னும் அழகான பெயரை தாங்கி நின்று நம்மை வரவேற்கும் பெரிய டோல் கேட்…
அதை கடந்து சென்றால் ஆங்காங்கே அரிசி ஆலை, சர்க்கரை ஆலைகள் என நம்மை வரவேற்கும் விவசாய பூமி…
அருகில் உள்ள கிராமத்தில் நிலக்கிழாராக இருந்து வந்தவர் அவிநாசி…
அவருக்கு ஊருக்குள் ஏராளமான ஆஸ்தி, பாஸ்தியும் உண்டு… கூடவே கோபக்காரர், ஆனால் தங்க குணமானவர் என்கிற பெயரும் உண்டு…
ஒருபோதும் தானாக அவர் வம்பு சண்டைக்கு சென்றதில்லை… ஆனால் வந்த சண்டையை அவர் விட்டு வைத்ததும் இல்லை… ஊருக்கு ஒன்று என்றால் முன்னால் வந்து நிற்பவர்… அதே ஊருக்கு நல்லது என்றால் பின்புலமாக நிற்க தயங்காதவர்…
“அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே…!!”
என இந்த பாடலில் இடம் பெற்றது போன்ற ஓர் அன்பான மனைவி, அற்புதமான குடும்பம் அமைந்து, தனக்கென ஓர் அழகான சாம்ராஜ்யத்தில் வாழும் உன்னத குடும்பத் தலைவர்…
காலம் மத்தியானம் நெருங்கும் வேளை தன் வீடு நோக்கி வந்து சேர்ந்தார் அவிநாசி…
காலையில் ஆலைக்கு சென்று கணக்கு வழக்கு பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர், தன் வேலைகளை முடித்துக் கொண்டு இன்று வீடு திரும்ப தாமதமாகி விட்டது… அதற்கு காரணம் உண்டு…
இன்று தன் ஆலையில் பணிபுரியும் பணியாளர் ஒருவனின் தாய் தந்தை அவரை காண வந்தனர்… அங்கு வேலை செய்யும் அவர் மகன் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு சரியாக தருவதில்லை எனவும்… சம்பளம் முழுவதையும் குடித்து விட்டு கூத்தடிப்பதாகவும்… தட்டி கேட்ட தாய் தந்தையாரை வயதானவர்கள் என்றும் பாராமல் அடித்து விரட்டியதாக புகார் தெரிவித்தனர்…
நான் விசாரிக்கிறேன் என தெரிவித்தவர் அந்த பணியாளரை அழைத்து விசாரிக்க… அவன் வயது கோளாறில் செய்கிறான் என்று பார்த்தால் அவனே கோளாறு என்று தெரிந்துக் கொண்டார் அவனது திமிரான அணுகுமுறையில், பொறுமை உச்சத்தை கடக்க…
அவ்வளவு தான்… அடித்து விலாசி விட்டார் அந்த இளைஞனை… அதில் அவனின் பல் பட்டு, அவரது நரம்பு கிழிந்து ரத்தமே வந்து விட்டது என்றால்… அடி வாங்கினவன் உசுரோட இருப்பான்னு நினைக்கிறிங்களா மக்கா…
அவனை அடித்த கையோடு, உன்னை பெத்து வளர்த்தவன், படிக்க வைத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்ட பெற்றவர்களையே அடிக்கிற அளவுக்கு உனக்கு இறுமாப்பு கூடிப் போச்சா… இனி நீ செய்யும் வேலைக்கான சம்பளம் மொத்தமும் உன் அப்பா அம்மா கைக்கு தான் போகணும்… புரிஞ்சிதா… என்றவர் உடனே பெற்றோர் பக்கம் திரும்பி…
அவனை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை… பெற்றவங்க உங்க மேலையும் தப்பு இருக்கு… நம்ம பிள்ளைக்கு நல்லது கெட்டது நாம தான் சொல்லி வளர்க்கணும்… அதை விட்டு அவன் செய்றதே சரி என்று விட்டா இப்படி தான் ஆடுவான்…
செல்லம் கொடுக்கிறது தப்பில்லை…
அவன் கெட்டு போற அளவுக்கு செல்லம் கொடுக்கிறது தான் தப்பு… அவன் முதல் மாதம் சம்பளம் கொடுக்கும் போதே அவன் கிட்ட கேள்வி கேட்டிருந்தா இந்த நிலைமை உங்களுக்கு வந்து இருக்குமா…
நாம் பட்ட கஷ்டம் நம்ம பிள்ளைங்க படக்கூடாது நினைக்கிறது தப்பில்லை… ஆனா கஷ்டம் என்னன்னே தெரியாம பிள்ளையை வளர்த்தா நாளைக்கு அவன் இப்படி தான் வந்து நிப்பான்…
எனக்கும் ஒரு புள்ள இருக்கான்யா… சிறுத்தை மாதிரி… நான் எள்ள எனும் முன்னே எண்ணெய்யா இல்லை தீயா வந்து நிப்பான்…
பெற்றவங்க மேல அப்படி ஒரு மதிப்பு… கூட பிறந்தவங்க மேல் அப்படி ஒரு பிடிப்பு… பாசத்துல மட்டும் இல்லை… பகையிலும் கூட அவனை யாராலும் மிஞ்ச முடியாது…
நான் கிழிச்ச கோட்டை இதுவரை அவன் தாண்டுனதும் இல்லை… அப்படியான சூழ்நிலையை ஒரு அப்பனாக என் பிள்ளைக்கு கொடுத்ததும் இல்லை… இனியும் கொடுக்க போறதும் இல்லை…
பிள்ளைகளை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை… பெற்றவங்க நாம சரியா இருக்கோமா என்பதும் இங்க முக்கியம்… என்று அவர் அறிவுரை வழங்க…
அந்த இளைஞனும் தன் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டு பெற்றோரோடு சமாதானமாக சென்றான்…
இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த புதிதாக வேலைக்கு சேர்ந்த ஆளை பார்த்து பணியாளர்களில் ஒருவன்…
என்னடா இவர் இந்த விஷயத்துக்கெல்லாம் இப்படி கோபப்படுறாரு… யார் இவர்…???புதியவன் கேட்க
அதை கேட்ட அந்த ஊர்காரரோ திடுக்கிட்டு போய் “அடேய் சத்தத்தை குறை… இவர் தான் நம்ம பெரிய முதலாளி… அவர் எப்பவும் இப்படி தான்… அநியாயத்தை கண்டா பொறுத்துப் போக மாட்டார்…
அதுக்குன்னு இப்படியா… போட்ட மாடு மாதிரி அடிப்பாரு… பாவம்டா அந்த பையன்… என உச்சுக் கொட்டினான் அந்த புதியவன்…
இதுக்கே இப்படின்னா… இவர் பையன் எங்க சின்ன முதலாளி ருத்ரனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிதுன்னா… அவன் தலையை எடுத்து இருப்பார்…
ஐயோ அப்படின்னா உங்க சின்னையா பெரிய சண்டியர்னு சொல்றியா…??? புதியவன்…
அவரு ம்ஹும்… அவரைப் பற்றி நான் சொல்வதை விட நம்ம ரைட்டர் அம்மா கதையை படிச்சு தெரிஞ்சிக்கோ…
என்ன மக்கா ருத்ரனை பற்றி தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா… இல்லனாலும் சொல்லுவேன் ஆனா இப்போ இல்லை அடுத்த எபில எப்புடி
அடிங்…ஹாஹா…



