“நீதான் வேணும்” என்று தீரன் சொன்னதும்…
“என்னது நானா..??” என விதிர்த்துப் போனாள் தேன்மொழி; தன் மார்பை இரு கரங்களால் பொத்திப் பிடித்துக்கொண்டு அவள் பயந்து பின்வாங்கினாள்.
தீரனுக்கு வந்ததே கோபம்… “நங்” என தேன்மொழி தலையில் கொட்டிவிட்டான்.
“முளைச்சி மூணு இலை விடல, அதுக்குள்ள புத்தி போகுது பார்! புத்தி அப்படியே ஒன்னு போட்டேன்வை..” என்றவன் கோபத்தில் மிரண்டு போய் தலையைத் தேய்த்துக் கொண்டே, அவனைப் பாவமாகப் பார்த்தாள் தேன்மொழி.
“ஆ வலிக்குது! நீங்கள் தான ‘நீ தான் வேணும்’ கேட்டீங்க…” வலியால் கண்கள் குளமாகிவிட்டன.
“அடியே, நீதான்னா நீயே அர்த்தம் இல்லடி! உன்னால எனக்கு சில காரியங்கள் ஆக வேண்டி இருக்கு, அதைத்தான் அப்படிச் சொன்னேன்…” என தீரன் ஜிஃபி போட்டு விளக்கிட, தெளிந்தாள் பெண்ணவள்.
“ஓ…” என நீண்ட மூச்சு விட்டவள்…
தான் நினைத்ததை எண்ணித் தானே வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டாள்…
அவள் முகத்தில் வந்து போன பாவனைகளைப் பார்த்த தீரனுக்கோ…
சிரிப்பை அடக்க முடியவில்லை…
இருந்தாலும் அவள் முன் இளகிவிடக் கூடாது என்று பிடிவாதத்தோடு வாயை இறுக மூடிக்கொண்டவன்…
“என்ன, நான் சொல்ற மாதிரி செய்யுறியா? இல்லை இந்த எவிடென்ஸ் கொண்டு போய் போலீஸ் கிட்ட கொடுக்கவா?” என விறைப்பாகவே கேட்டான்…
ஐயோ வேணாங்க, நீங்கள் என்ன சொன்னாலும் நான் அப்படியே கேட்டுக்குறேன் என வேகமாக பதில் சொன்னாள்…
என்ன சொன்னாலுமா…? என ஒரு மாதிரியாக தீரன் கேட்க…
ஏற்கனவே கண்டப்படி யோசித்து அவனிடம் வாங்கி கட்டிக்கொண்டது போதாதா… மீண்டும் மீண்டும் அவனிடம் குட்டு பட வேண்டுமா அதான் அந்த மாதிரி எண்ணம் இல்லைன்னு அவன் வாயாலே சொல்லிட்டானே அவனும் கொஞ்சம் நல்லவன் தான் போல அப்புறம் என்ன என நினைத்தவள் தீரனை முழுமையாக நம்பி அவன் வலையில் விழுந்தால் பொன் வண்டு… நீங்கள் என்ன சொன்னாலும் கேக்குறேன் போதுமா…
அப்புறம் வார்த்தை மாற மாட்டியே என தீரன் நக்கலாக கேட்க…
அதெல்லாம் வாக்கு தவறுகிற பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது என ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது தேன்மொழி…
நீ சொன்னால் சரிதான் என நக்கலை கைவிடாதவன்… சில வேலைகளை தேன்மொழியிடம் ஒப்படைத்து இருந்தான்…
தேன்மொழிக்கு அவன் சொன்ன வேலைகளைக் கேட்டு குழப்பம் தான் எஞ்சியிருந்தது… இருப்பினும் ஏன், எதற்கு என்று கேட்காமல் செய்வதாக ஒப்புக் கொண்டாளே! மேலும் அப்படி அவன் கேட்ட பொருளும் இட்ட வேலைகளும் அவளுக்கு ஒன்றும் தவறானதாகத் தெரியவில்லை… கொஞ்சம் யோசித்திருக்கலாம்! ம்ஹும், என்ன பண்ண விதி வலிது…
அன்று முதல் தீரன் சொல்வதையெல்லாம் தேன்மொழி செய்து கொடுத்தாள். அப்படியே நாட்களும் நகர ஆரம்பித்தன…
முதலில் பயத்தில் தொடங்கிய அந்த ஒப்பந்தம்… நாளடைவில் இருவருக்குள்ளும் ஒரு வித்தியாசமான பழக்கத்தை உருவாக்கியிருந்தது… அவனை எங்கு கண்டாலும் அவனுக்கு வணக்கம் வைக்கத் தவற மாட்டாள் தேன்மொழி; அதேபோல் அவனும் அவளை எங்கு கண்டாலும் நின்று பேசிவிட்டுச் செல்வான் அல்லது புன்னகையுடனே கடந்து விடுவான்…
அவர்களின் பழக்கத்தை நட்பு என்றோ காதல் என்றோ வரையறுக்க முடியாது… இன்னதென்று சொல்ல முடியாவிட்டாலும் அவர்களுக்கு இடையில் விகற்பமில்லாத ஒரு நெருக்கம் ஓடிக்கொண்டிருந்தது…
அப்படியான ஒரு நாளில் தான் தேன்மொழி தன் தோழியோடு சேர்ந்து ஆற்று கண்மாய் அருகே சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டு இருந்தாள்…
“ஏய் கெட்டியா பிடிங்கடி, உன்னை நம்பி தான் இருக்கேன்” என்றவளின் குரல் நடுங்கி வந்தது…
“நீ முதல்ல பின்னாடி திரும்பிப் பார்க்காம நேரா பார்த்து ஓட்டுடி…”
“முதுகை வளைக்காத, கையை ஆட்டாம ஓட்டுறாள பாரு…” என அவளுக்கு சைக்கிள் ஓட்டப் பயிற்சி கொடுத்துக் கொண்டு இருந்தாள் அவள் தோழி அம்சா என்ற அம்சவேணி… கறாரான ஆசிரியர் தான்…
“என்னடி இடுப்பப் போட்டு இந்த ஆட்டு ஆட்டுற?” என தேன்மொழி இடுப்பில் ஒன்று வைத்தாள்…
“ஏய் அடிக்காம சொல்லி கொடுடி!”
“பின்ன என்னடி, எழு கழுதை! வயசாகப் போகுது, நீ இப்போதான் அரை பெடல் அடிக்கவே கத்துக்கிட்டு இருக்க… இதுல இப்படி வளைச்சு வளைச்சு ஓட்டினா இந்த ஜென்மத்துல நீ கத்துக்கிட்ட மாதிரி தான்…”
“நான் நேரத்தான்டி போறேன், இந்த ரோடு தான் வளைஞ்சு வளைஞ்சு போகுது…” என தேன்மொழி அப்பாவியாகச் சொன்னாள்.
இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு… உன்னை விட வயசுல சின்ன பிள்ளைங்க எல்லாம் எப்படி சைக்கிள் ஓட்டுறாங்க, நீ ஏன் இப்படி பயந்து சாகுற… உன் அப்பா, அண்ணன் கிட்ட இருந்து கொஞ்சமாவது தைரியத்தை வாங்கி வந்திருக்கலாம் நீ… சைக்கிள் ஓட்ட சொன்னா சைக்கிள்ல கோலம் போட்டுட்டு இருக்காளென அம்சா அலுத்துக்கொண்டார்…
ஏய், ரொம்ப ஓட்டாதடி நீ! வேணா பாரு, நானும் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு உங்க முன்னாடியே என் சைக்கிள்ல வலம் வரல, நான் தேனு இல்லடி… எனச் சொன்னவளுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது…
அம்சா அதற்கு மறுவார்த்தை கூறும் முன்பே…
“அம்சவேணி அடியே! அம்ச எங்கடி போய் தொலைஞ்ச? உன்னை மாட்டுக்கு கஞ்சி வைக்க அடுப்பு பத்தவைக்க சொன்னா, எங்கடி போய் தொலைஞ்ச அடியே! **** சிறுக்கி மகளே!” அம்சா என அம்சவேணியின் தாயாரின் சத்தம் ஊர் கோடி வரை முழங்கியது…
“ஐயயோ! தேனு, எங்க அம்மா தேடுதுடி!” என பதறிய அம்சவேணி.
“நீ கூப்பிட்டதும் வேலைய அப்படியே விட்டு வந்துட்டேன். போச்சு… நான் இப்போ போலனா அவ்ளோ தான், எங்க அம்மா என்னை உப்பு கண்டம் போட்டுடும். நான் போயிட்டு உடனே வந்துடறேன்டி. நீ அதுவரை பெடல் அடிச்சு பழகு. நீயா ஓட்டுறேன்னு கீழ கீழ விழுந்து கை காலை ஒடச்சு நிக்காத, அப்புறம் உங்க அண்ணனுக்கு என்னால பதில் சொல்ல முடியாது… நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்…” என அம்சா அறிவுறுத்தி விட்டுப் போக…
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு அதன் மீது ஏறி அமர்ந்த தேனு பெடல் அடித்து பழக… திடீரென்று சைக்கிளில் பாரம் ஏறியதை உணர்ந்து என்னவென்று திரும்பிப் பார்த்தவளை…
உதடு வளைய கண்ணில் ஏளனம் பொங்க சைக்கிளின் பின்புற கேரியரை பிடித்தபடி நின்றான் தீரன்…
“நீங்களா…?? இங்க என்ன பண்றீங்க…??” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் தேன்மொழி…
“ஏன்மா, நான் எல்லாம் இங்க வரக்கூடாதுன்னு சட்டம் ஏதாவது போட்டு இருக்கா என்ன..??” எனத் தீரன் குறும்பாகக் கேட்க…
“அச்சோ, அப்படி எல்லாம் இல்லை… இந்த நேரத்துல உங்கள இங்க எதிர்பார்க்கல, அவ்வளவுதான்…” எனத் தேன்மொழி பதறியபடி சொல்ல…
“அது இருக்கட்டும், இப்படி யாருமே இல்லாத இடத்துல நீ மட்டும் தனியா என்ன பண்ணிட்டு இருக்க?”
“பார்த்தா தெரியலையா, சைக்கிள் ஓட்டிட்டு இருக்கேன்,” என வேகமாக பெடல் அடித்தவளின் முகத்தில் அத்தனை சிறுபிள்ளைத்தனம்…
“அது தெரியுது, இப்படி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு ஓட்டுற அறிவாளிய இப்போதான் பார்க்கிறேன்… நீ நல்லா தானே இருக்க? அடிக்கிற வெயில்ல மூளை எதுவும் கலங்கிப் போயிடலையே…?” என முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு கிண்டல் குரலில் கேட்டான்…
“ஏ, இந்த நக்கல் தான வேணாங்கிறது! நானே இப்போதான் எங்க அண்ணனுக்குத் தெரியாம சைக்கிள் ஓட்டக் கத்துக்கிறேன்…”
“என்ன, உங்க அண்ணனுக்குத் தெரியாமலா…?? உங்க அண்ணன் என்ன அவ்வளவு மோசமானவனா?” என்ற தீரனின் வார்த்தைகள் ஆழம் பார்த்தன…
தேன்மொழியின் முகம் சுருங்கிவிட்டது…
“என் அண்ணன் ஒன்னும் மோசமானவர் இல்லை, பாசமானவர். எங்க நான் சைக்கிள் ஓட்டி கீழ விழுந்து கை கால் உடைச்சுக்குவேனோ என்று பயம்… ஆனாலும் நான் கேட்டேன், இந்த சைக்கிள் வாங்கித் தந்துட்டார்…”
“ஓ… ரொம்ப பாசமோ!” உன் அண்ணனுக்கு எனத் தீரன் நக்கல் தொனியில் கேட்டாலும்…
“ஆமாம், என் அண்ணனுக்கு என்மேல கொள்ளை பாசம். அதே போல என் அண்ணண்ணா எனக்கு உயிர்” என முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவளை ஆழ்ந்து பார்த்தான் தீரன்…
அவள் உதடுகள் சொன்ன வார்த்தையை விட, அவள் கண்கள் சொன்ன உணர்வுகள் அதிகம்…
அந்த வயதில், தேன்மொழியின் உலகம் மிகவும் சிறியது…
அதில்… அவளின் அப்பா, அம்மா, அண்ணன் என சிலரே இருந்தாலும்… அவள் உயிரின் மையமாக இருந்தது ‘பாப்பா பாப்பா’ என அவளையே சுற்றி வரும் அவளின் தமையனான ருத்ரன் தான்.. தன் மனதில் இருந்ததை குழந்தைத்தனமாக உளறிக் கொண்டிருந்தாள் பேதை…
ஆனால்… அவளின் ஒவ்வொரு வார்த்தையும்… தீரன் மனதில் மிகக் கவனமாகப் பதியப்பட்டு கொண்டு இருந்தது…
“எப்படியோ இருந்துட்டு போகட்டும். இப்படியே ஸ்டாண்ட் போட்டு ஓட்டினா, எப்போ நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்குவ? சைக்கிளோ, நீச்சலோ சொல்லிக் கொடுத்தா வராது… எல்லாம்தன்னால வரணும், அதனால…” என ஒரு மார்க்கமாகச் சொன்னவன்…
எப்படி எனப் புரியாமல் தீரனைப் பார்த்தாள் தேன்மொழி கேட்டதும்…
“இதோ இப்படி” என அவள் பெடல் அடித்துக்கொண்டு இருந்த சைக்கிளின் ஸ்டாண்டை வடிவேல் நகைச்சுவை பாணியில் எடுத்துவிட்டு, அவளை சைக்கிளோடு தள்ளிவிட்டான்…
“ஏஏஏ என்ன பண்றீங்க… ஆஆஅ அம்மா!” என பெடல் அடித்துக்கொண்டு சிறிது தூரம் வரை சென்றவள், சைக்கிளோடு சேர்ந்து கண்மாயில் விழுந்துவிட்டாள்…
அவளது போதாத நேரமோ அல்லது முந்தின நாள் பெய்த மழையின் காரணமாகவோ கண்மாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது…
“காப்பாத்துங்க காப்பாத்துங்க… எனக்கு நீச்சல் தெரியாது!” என கத்தியபடியே தேன்மொழி நீருக்குள் முழ்கிப்போனாள்…
அதை கண்ட தீரன் சில நொடிகள் உறைந்து போனான். அவன் விளையாட்டாக செய்தது வினையாக முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை…
துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கண்மாயில் குதித்து சாகசம் எல்லாம் செய்து தேன்மொழியை காப்பாற்றி கரை சேர்த்தான்…
அப்போதும் தேன்மொழி கண் விழிக்காமல் போகவும் பயந்து போனவன், அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப முயன்றான். “தேனு, தேனு, ஏய் தேனு, இங்க பாரு தேனு, கண்ணைத் திறடி !” என்று அழைத்தான். எதற்கும் பலனளிக்காமல் போகவே… வெகுவாக மிரண்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவன், அவள் தண்ணீர் குடித்து இருக்கலாம் என்று யூகித்து, அங்கிருந்த சலவைக்கல் மீது அவளைக் குப்புறத் தள்ளி, அவள் முதுகில் பலம் கொடுத்து அவள் வயிற்றில் இருக்கும் நீரை வெளியேற்ற முயன்றான்…
அப்போதும் மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடந்தவளைக் கண்டு அதிர்ச்சியடைந்து போனான். என்ன செய்றது, என்ன செய்றது என யோசித்தவன், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று நினைத்தவன்… அவர்கள் இருவரையும் பார்த்தால் நிச்சயம் தவறாக நினைக்கக்கூடும் என்று அந்த யோசனையை அப்போதே கைவிட்டான்…
ஐயோ, என்ன தான் செய்வது என மண்டையை உடைத்துக் கொண்டவன்… மூளையில் மின்னல் வெட்டாக அந்த யோசனை உதித்தது…
செய்யலாமா வேண்டாமா, செஞ்சால் ஏதாவது பிரச்சனையாகுமா என்று யோசிப்பதற்கு எல்லாம் நேரமில்லாமல், டக் என்று குனிந்து தேன்மொழியின் உதட்டின் மேல் தன் உதட்டை வைத்து, அவன் வாய் மூலமாக அவளுக்குப் பிரணவாயுவை கடத்தியவன் சிந்தையில் நிச்சயம் எந்த வித கெட்ட எண்ணமும் இல்லை; எப்படியாவது தேன்மொழியை காப்பாற்றி விட வேண்டும் என்கிற தவிப்பு மட்டும் தான்…
அவன் முயற்சிக்கு பலன் கிடைத்தது… தேன்மொழி மெல்லக் கண் விழித்தாள்… விழித்தவளின் முகத்திற்கு வெகு அருகே தீரனின் முகத்தைக் கண்டு புருவத்தைச் சுருக்கியவள்… அவன் முகம் குவிந்த நிலையில் இருந்த அவனது உதட்டையும் பார்த்துத் துணுகுற்றவளுக்கு எல்லாம் புரியவும்… அவள் வயிற்றில் சுரீர் என்று வலி எடுக்கவும் பட்டென்று தீரனைத் தள்ளிவிட்டாள்…
தேனு, நான் வேண்டுமென்றே பண்ணல, நான் சொல்றதைக் கேளு என தீரன் கத்தியது; எதையும் காதில் வாங்காமல் சென்று மறைந்தாள்…
அதன் பின் வந்த நாட்களில் தேன்மொழியைத் தீரனால் சந்திக்கவே முடியவில்லை.
எங்கே அவள் தன்னைத் தவறாக நினைத்துவிடுவாளோ என கவலையில் இருந்தவனின் காதுகளில் எட்டியது அந்தச் செய்தி… தேன்மொழி பூப்பெய்தி இருந்தாள் என்று…
விஷயம் கேட்டதும் தீரன் எப்படியாவது அவளைச் சந்தித்துத் தன்னிலை விளக்கம் கொடுத்தாக வேண்டும் என்றுதான் அவன் மரம் எல்லாம் ஏறிச் சென்றான்; ஆனால் அங்கே முதல் முறை அந்தத் தேவதை பெண்ணை தாவணியில் பார்த்ததும்…
பார்த்தவன் பார்த்த இடத்திலே விழுந்தான்…
கிளையில் இருந்து மட்டும் அல்ல…
இதுவரை நிமிர்ந்து நின்ற அவன் இதயமும் அந்தத் தாவணி பெண்ணின் தாமரை பாதத்தில் விழுந்தது…


