ஏய் நில்லுடி…
உன்னை தான் கூப்பிடக் கூப்பிட நிக்காமல் போற… உனக்கு என்ன அவ்ளோ திமிரா என தன் எதிரே வந்து தீரனை ஏரெடுத்து பார்த்தவள்… சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு என்னையா கூப்பிட்டிங்க என ஆட்கட்டி விரலை கொண்டு சகையால் கேட்டாள் ஓவியப் பாவை…
ஏன் அம்மணி வாய் திறந்து பேசினாள், முத்து கொட்டிவிடுமோ என அதற்கும் குட்டினான் தீரன்…
இல்லை… என தேன்மொழி முத்தவிழ்த்தாள்…
என்ன இல்லை, ருத்ரனின் தங்கச்சி என்கிற தைரியமா… என தீரன் அதட்டவும்…
தேன்மொழி திடுக்கிட்டுப் போனாள்; ஏன் என்றால், இதுவரை எவருமே அவளிடத்தில் குரலை உயர்த்திப் பேசியதே கிடையாது…
பேதையவளின் மிரண்ட விழிகளில் சற்றே கவரப்பட்டான் தீரன்…
உன் மனசுல என்ன, நீ பெரிய உலக அழகின்னு நெனப்பியா…? என தீரன் கேட்டதும், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திருத்திரு என முழித்தாள் தேன்மொழி…
என்ன ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முழிக்கிற…
எங்களு ஒருத்தன் உன்னை சைட் அடிச்சதுக்கு உங்க அண்ணன் கிட்ட போட்டுக் கொடுத்து அடி வாங்க வச்சுட்டியாமே…?? என்றதும், தீரனைப் பந்தயத்தில் தேன்மொழியோடு கோர்த்து விட்டவன், ஏற்கனவே தேனுவிடம் வாலாட்டி வாங்கிக் கட்டியவன் தான்; அவனை அங்கே பார்த்ததும் உறுத்து விழித்தாள்…
“ஸ்ஸ்பா! என்ன பார்வைடா சாமி!” என தீரனால் வியக்காமல் இருக்க முடியவில்லை…
“இங்க பாரு, நாலு பேர் உன் பின்னால சுத்தி வர்றதால உனக்கு அவ்ளோ சீன் எல்லாம் கிடையாது. நீ அப்படி ஒன்னும் பிரமாதமான அழகு எல்லாம் இல்ல; சப்பை மூக்கு, டொக்கு கண்ணு, நிறம் கூட கம்மி தான்… மொத்தத்துல நீ சுமார்லையும் சுமார் மூஞ்சி தான்…” என வார்த்தைகளை அள்ளி வீசினான்.
ஆஹான்! அப்புறம் ஏன் ராசா? வந்ததுல இருந்து அந்தப் பிள்ளை மூஞ்சியை வச்ச கண்ணு வாங்காம பார்த்தியாம்… அவன் வாய் தான் சுமார் என்றதே ஒழிய, அவன் கண்கள் பாவாடை சட்டையில் நின்றவளை வஞ்சனையின்றி மேய்ந்தன…
தீரன் திட்டியதைக் கேட்டு தேன் கண்ணில் முணுமுணுவெனக் கண்ணீர் அரும்பி விட்டது… அவள் அப்படி ஒன்றும் பேரழகில்லை என்பது அவளுக்கே தெரியும், ஆனால்…
இப்படி பத்து பேர் முன்னிலையில் நிறுத்தி…
தன் தோற்றத்தைக் குறை சொல்லி அவமானப்படுத்தியது…
அந்தப் பேதையின் பூஞ்சை நெஞ்சை வெகுவாகக் காயப்படுத்தியது…
அழுகையோடு அங்கிருந்து ஓடிச் சென்றாள் தேன்மொழி…
அவள் தோற்றம் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து நின்ற தீரனின் தோளில் கை வைத்தான் பம்பரமிட்டாய்…
“என்னடா, அந்தப் பிள்ளையை கரெக்ட் பண்றேன்னு சொல்லிட்டு எப்படி அழ வைச்சிட்டே?”
“அவ அழுதுட்டுப் போனா அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்…?”
எனத் தோளைக் குலுக்கினான்…
என்னடா இப்படிச் சொல்ற? அந்தப் பொண்ணு மட்டும் போய் அவங்க அண்ணன்கிட்ட போட்டுக்கொடுத்துட்டா என்னடா பண்ணுவ?
“சொன்னா சொல்லட்டுமே…”
என்றவன் அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்…
“அண்ணா, என்ன பெரிய கொம்பனா வந்தா வரட்டும், பார்த்துக்கலாம். வாங்கடா” என்று நண்பர்களை அழைத்துக் கொண்டு நகர்ந்தான் தீரன்…
ஆனால், அவன் மனமோ அழுதபடியே சென்ற அந்தப் புள்ளிமானிடமே இருந்தது.
தீரன், தேன்மொழி தன்னைப்பற்றி நிச்சயம் ருத்ரனிடம் போட்டுக் கொடுத்திருப்பாள் என்று அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றதும் தீரனுக்குப் பரம திருப்தி; “பட்சி சிக்கிடுச்சு” என்று உள்ளுக்குள் கொண்டாட்டம் தான்…
இவன் மட்டும் நினைத்துவிட்டால் போதுமா? அங்கே தேன்மொழியோ, இனி தப்பித் தவறிக் கூட தீரன் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று அல்லவா உறுதி பூண்டு இருக்கிறாள்…
அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் தீரன் தேன்மொழியை வலைப் போட்டுத் தேட, அவளோ அவன் கண்ணிலே படாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள். அச்சமயத்தில் ஒருநாள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது; சன்னாசியின் பஞ்சாலைத் தீயால் திபுதிபுவென எரிந்து சம்பலானது. போலீஸ்க்குத் தகவல் கொடுக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடந்தேறியது…
அதனால் சன்னாசி பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். ஊரே அதைப்பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தது…
அந்தப் பேச்சுகள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தீரனின் நினைவில் மட்டும்…
முந்தைய இரவு பஞ்சாலைப் பக்கம் சென்ற ருத்ரனும் அவன் நண்பர்களும் தான் வந்து போனார்கள்…
இதற்கிடையில் ஒருநாள் தனியாக வந்த தேன்மொழி தீரனிடம் அகப்பட்டுக் கொண்டாள்…
தன் தோழி வீடு வரை சென்று வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவளைக் காத்திருந்து வழியிலே பிடித்துக் கொண்டான் அவன்…
ஒய், என்ன ரொம்ப நாளா என் கண்ணுலே படாமல் ஒளிஞ்சிக்கிட்டா, உன்னை விட்ருவேனா? எப்படிப் பொறி வச்சுப் புடிச்சேன் பார்த்தல்ல! எனத் தனந்தனியாகத் தீரனிடம் மாட்டிக் கொண்டதில் சற்றே பயந்து போனாள் தேன்மொழி.
ஏய், என்ன வேணும் சொல்லுங்க, நான் சீக்கிரம் போகணும், வீட்ல தேடுவாங்க என அச்சத்தில் வியர்த்துப் போய் வாய் தந்தி அடித்தது…
பொறு பொறு, நான் ஒன்னும் உன்னை கடிச்சுத் தின்னுட மாட்டேன், உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணுமே… என்றவன் தொடர்ந்து,
நாளைக்கு நான் சொல்ற இடத்துல… என அவன் முடிக்கவில்லை…
முடியாது என்ற மறுப்பு உடனே தேனுவிடம் இருந்து வந்தது…
அட, நான் சொல்லியே முடிக்கல, அதுக்குள்ள முடியாதுனா எப்படிமா… என்ற தீரனுக்கு ஆச்சரியமாக இருந்தது; அவனது பேச்சை ஒருத்தி மறுத்து விடக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை…
பொறு, நான் என்ன சொல்ல எனத் தீரன் மறுபடியும் தொடங்குவதற்கு முன்பே…
“முடியாதுன்னு சொல்றேன்ல, வழிய விடுங்க! நான் வீட்டுக்கு போகணும். இனிமேல் இந்த மாதிரி என்னை தொந்தரவு பண்ணாதீங்க. அப்புறம் என் அண்ணன் கிட்ட சொன்னா அவ்ளோ தான்…” என எச்சரித்தவள், அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல், மறித்து நின்ற தீரனைச் சுற்றிக் கொண்டு சென்றாள்…
அவள் எண்ணி நான்கு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்…
“அப்போ சரி, போலீஸ் உங்க அண்ணனைத் தேடிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். ஐயோ பாவம், உன்கிட்ட சொல்ல வந்தேன்…”
“நீ போமா, உனக்கே உங்க அண்ணன் மேல இல்லாத அக்கறை எனக்கு என்ன *** வந்துச்சு?” என அசட்டையாகச் சொன்னவன் திரும்பி நடக்க..
“இருங்க!” என அவன் முன்னால் வந்து வழி மறித்து நிற்கும் முறை தேன்மொழியுடையதாகியதே…
“எங்க அண்ணனை எதுக்கு போலீஸ் தேடணும்?” எனப் படபடப்புடன் கேட்டவளை ஏற இறங்கப் பார்த்தான் தீரன்…
“அதெல்லாம் உனக்கு எதுக்கு? உன்னத்தான் உன் வீட்டில் தேடுவாங்களா? சீக்கிரம் கிளம்புமா, இன்னைக்கு ஒரு நாள் தான் உங்க அண்ணனுக்கு டைம். நாளைக்கு எல்லாம் வந்து அவனைப் பிடிச்சிட்டுப் போய்டுவாங்களே…”
“எதுக்கு போலீஸ்? ஒரு தப்பும் செய்யாத எங்க அண்ணனை போலீஸ் புடிச்சிட்டுப் போகணும்? இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட விளையாடாதிங்க, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்…” என தேன்மொழிக்குள் இத்தனை ரோஷம் எங்கிருந்து வந்ததோ…
“யார் விளையாடுற பஞ்சாலைக்குத் தீ வச்சி கொளுத்தினா, போலீஸ் அரெஸ்ட் பண்ணாம வச்சி கொஞ்சுவாங்களா…??” என தீரனின் குரலில் தொனித்த நக்கலில் இருந்த தேன்மொழியால் எதையும் கணிக்க முடியவில்லை…
“பொய்..” என்று உரக்கவே சொன்னாள் அந்தச் சாது…
“என்ன பொய்? இங்க பார், இந்த காப்பு யாருடையதுன்னு தெரியுதா?…” என அவள் முன்னால் ஆட்டிக்காட்டினான்.
அதிர்ச்சியில் விழிவிரித்தாள் தேன்மொழி…
காரணம், அது அவள் அண்ணன் ருத்ரனின் காப்பேதான்; அதுவும் அவள் கைகளால் அவனுக்குப் போட்டுவிட்ட அதே காப்பு தீரனின் கைகளில் எப்படி…?? எனப் பேச்சிழந்து நின்றாள்…
“இது மட்டுமில்ல, ஆலை தீப்பிடித்து எரியும் போது உங்க அண்ணனும் அவன் நண்பர்களும் அங்க இருந்ததை பார்த்த சாட்சி இருக்கு… ஏன், நானே உங்க அண்ணனை அங்க பார்த்தேன்…” எனத் தீரன் சொன்னதும்…
அன்றைய நாளில் கரி, அப்பிய முகத்துடன் எதிரே வந்த ருத்ரனிடம் பதறி கேட்டதற்கு, “எனக்கு ஒண்ணுமில்ல, பழைய கணக்கை தீர்த்து வச்சிட்டு வந்தேன்” என ஒரு மார்க்கமாகச் சொன்னவனின் நிழல் பிம்பம் தேன்மொழியின் மனக்கண்ணில் வந்து போனான்… தவறே செய்திருந்தாலும் அவளால் அவள் அண்ணனை
விட்டுக்கொடுக்க முடியாதே…” தன் நினைவில் மூழ்கி இருந்த வேளையில் இடையிட்டது தீரனின் குரல்…
ஒத்துக்கிறேன், எங்க ரெண்டு பேருக்கும் இடையில் போட்டி, சண்டை எல்லாம் இருக்குன்னு; ஆனால் அதுக்காக உங்க அண்ணன் இப்படி இறங்குவான் என்று நான் நினைச்சு கூட பார்க்கல. நான் மட்டும் நினைச்சு இருந்தா, இந்த ஆதாரத்தை போலீஸ் கிட்ட கொடுத்து உங்க அண்ணனை உள்ள தள்ளி கம்பி எண்ண வைக்க முடியும்…!! தேன்மொழியின் கண்ணீரை கண்டு தீரன் நிறுத்த…
ஐயோ, அப்படி எதுவும் பண்ணிடாதீங்க, தயவு செய்து நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. என் அண்ணா முரடன் தான், ஒத்துகிறேன்… ஆனால் இப்படி ஒரு கொடுமை செய்யுற அளவுக்கு பாவி கிடையாது, என்னை நம்புங்க. நிச்சயம் அண்ணன் இந்த தப்பை பண்ணி இருக்க மாட்டான்… என கை எடுத்து வேண்டிக் நின்றாள் தேன்மொழி…
அவன் பண்ணானோ இல்லையோ அது எனக்குத் தேவையில்லை, அவனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு எனக்குப் பதில் வேண்டும்… என்று தீரன் கறாராகக் கேட்டான்…
ஒரு நிமிடம் நின்று யோசித்துவிட்டு, பின் சட்டென்று தன் கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கழற்றித் தீரனிடம் கொடுத்தாள்…
அடிங்கப் பொட்டப் பிள்ளைக் கிட்ட வாங்கித் தான் வாழ வேண்டும் என்கிற அவசியம் எங்க பரம்பரைக்கே இல்லை… வழிவழியாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து வளர்ந்தவங்கடி நாங்க… வந்துட்டா பெருசா நகையை கழட்டிட்டு… என்று தீரனின் கோபத்தில் விக்கித்துப்போனாள் பேதை…
நகை வேணாம் என்றால் அப்புறம் வேற என்ன தான் வேணும்… என்றவளுக்கு உள்ளூர தன் அண்ணனுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே…
தேன்மொழி கேட்டதுதான் தாமதம், பட்டென்று பதில் வந்தது தீரனிடமிருந்து…
நீதான் வேண்டும்…
அந்தப் பதிலில்…
தேன்மொழியின் முகம் இரத்தப்பசை தெரியாமல் வெளிறிப் போனது…
தன் பழியைத் தீர்த்துக் கொள்ள…
அந்தப் பேதையின் வாழ்வோடு விளையாடவும்…
அவளைப் பகடைக்காயாக மாற்றவும்…
துணிந்துவிட்டானா தீரன்…


