ஹான் சொல்லுங்க பா…
என்னமா நந்தினி எங்கு இருக்க…??
இதோ வந்துட்டே இருக்கேன் பா… இப்போ தான் பஸ் டிப்போ தாண்டி வந்துட்டே இருக்கேன்…!!
சீக்கரம் வந்துடுமா மாப்பிளை பாவம் உனக்காக அவர் அம்மா கிட்ட எதிர்த்து சண்டை போட்டுக்கிட்டு வந்து நம்ம வீட்ல இருக்கார்… அவரை ரொம்ப காக்க வைக்காதே, அவரை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமைதானே…!!” என கூறிய தந்தையின் குரலில் வருத்தம், சந்தோஷம், ஆறுதல், கடிதல் அனைத்துமே அடங்கி இருந்தது…
இது நல்லா இருக்கே விச்சுவ ஸ்ஸ் உங்க மாப்பிளையை எனக்காக எதுக்கு காத்துக்கிட்டு இருக்க சொன்னது… போய் அவர் வேலை பார்க்க சொல்லுங்கோ…!!” என வெடுக்கு என்று கூறி வைத்தவளுக்கு தெரியாதா தன் கணவனை பற்றி.. திருமணம் முடிந்து ஆறு வருடங்களில் அறுவது வருடங்கள் வாழ்ந்த இணைவு… ஒரே மனம் ஒத்த அனியோன்ய தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், அவர்களை பொறுத்த வரை அவர்கள் வாழ்க்கையில் குறை என ஒன்றும் இல்லை… ஆனால் ஊரையும் உறவுகளையும் பொருத்தவரை பிள்ளை இல்லாத தம்பதிகள்…. அதிலும் அவளுக்கு மலடி பட்டம் வேறு….
வாழ்வில் எல்லாம் நிறைவாக கிடைத்த நந்தினிக்கு தாய்மை என்னும் வரம் மட்டும் அத்தனை எளிதாக கிடைக்கவில்லை விளைவு…
விச்சு என்கிற விஷ்வாவின் தாயும் நந்தினி மாமியாரான ஜானகி, நந்தினி கழித்து கட்டி விட்டு தன் மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தார்…
அதை ஒப்பாத விச்சு, தாயிடம் மனைவிக்காக பரிந்து கெஞ்சி கொஞ்சி பேசியும் பலனில்லாமல்…
எங்களுக்கு பிள்ளை இல்லாமல் போனதுக்கு அவள் மட்டும் தான் காரணம், எப்படி பழி சொல்றிங்க, ஏன் எனக்கு குறை இருக்காதா…?? குழந்தை பெத்துக்காத மகன் மட்டும் எதுக்கு நானும் போறேன்…. ?? என கோவித்து கொண்டு மனைவியை மாமியார் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்…
இதோ அதோ என மேலும் ஒருவருடம் ஓடி விட்டது…
அது ஒரு மிக பெரிய பெண்கள் கருத்தரிப்பு மருத்துவமனை… நந்தினி இங்கு தான் சிகிச்சை எடுத்து வருகிறாள்… இன்று அவளுக்கு அக்னி பரீட்சை…
கணவனுக்காக தீயில் நடந்தது அந்த காலம், குழந்தைக்காக நடக்க வேண்டியது இந்த காலம்… காலங்கள் மாறினாலும் பெண்களின் நிலை மாறப் போவதில்லை…
ரிசல்ட் வந்தது சிறகில்லா ஆனந்தம், அதை நேரில் சென்று கணவன் கண் பார்த்து அவன் கை கோர்த்து, “ஏன்னா நம்ம இதனை நாள் தவத்துக்கு பலன் கிடைச்சுடுத்துனா….” என கத்தி உரக்க கூற வேண்டும், அதனால் அவன் அடையும் மட்டற்ற மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என ஆசையாக கிளம்பி வர…
கோடையின் உச்சில் வெயில் தலைக்கு மேல்… விஸ்தாரமான சாலை எங்கும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் “ஹோவ்” என்று இருந்தது… தனிமை சற்று திகில் கொடுத்தாலும் தைரியமாக பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றாள்…
திடீரெனப் மழை பெய்ய, அவசரமாக பேருந்தின் நிழற்குடைக்குள் நுழைந்தவள், விசித்திரமாக உணர்ந்தாள், “என்ன இது வெயிலும் மழையும் ஒரே நேரத்தில் …!!’
அப்பா திடீர்னு மழை பிடிச்சிடுச்சி, மழை விட்ட அப்புறம் வரேன்…!” என தந்தைக்கு தகவல் கொடுத்து விட்டாள்.. தன் மேல் விழுந்த மழைத்துளியை துடைத்த வண்ணம்… எதார்த்தமாக திரும்பி பார்க்க, அங்கு ஒரு சிருவன் பள்ளி சீருடையில் அமர்ந்து நந்தினியை வெறித்து பார்த்து இருந்தான்…
முதலில் திடுக்கிட்டு பார்த்தவள், பின் சிறுவர் அருகில் அமர்ந்து பேச்சு கொடுக்கலானால்…
உன் பெயர் என்ன கண்ணா…??
உங்க வீடு இங்க தான் இருக்கா..?
உங்க அப்பா அம்மா…??” என நந்தினி கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை…
அப்பொழுது மாடார் என்று இடி விழும் சத்தம் கேட்டு, அச்சிறுவன் பயந்து நந்தினி வயிற்றோடு சேர்த்து கட்டிப்பிடித்து நடுங்கி போனான்…
அந்த சிறு அணைப்பில் தாயாக பிறந்தவள் சிறுவனை அணைத்து
நான் உன் கூடவே இருப்பேன் கண்ணா, பயப்படாத…!!” என முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்தாள் நந்தினி…
அப்பொழுது அவர்களை தாண்டி சென்றது ஒரு பள்ளி பேருந்து, அப்பேருந்தை வெறித்து பார்த்தான் அச்சிறுவன்… அதிலிருந்த மாணவ மாணவிகள் போன்றதொரு சீருடையை அணிந்து இருந்தான் அச்சிறுவன்…
அதை நந்தினி பார்க்காமல் அவள் கவனத்தை தன் மீது சாமர்த்தியமாக ஈர்த்துக்கொண்டான் அச்சிறுவன்…
“ஜோ” என்று மழை பெய்து அடங்கிய பின் நந்தினி நடந்தே கிளம்ப நினைத்து எழ… அவள் பின்னாலே சிறுவனும் தொடர்ந்து வருவதை கவனித்தவள்… நிச்சயம் இவன் பெற்றோரை தொலைத்த குழந்தை என முடிவு செய்தவள் அவனை அருகில் இருந்த காவல் நிலையத்தில் சென்று ஒப்படைக்க நினைத்து அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்…
பிள்ளையின் அருமை தொலைத்தவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் மட்டும்தான் தெரியும் அல்லவா…
“சார்…??” என காவல் நிலையத்தின் உள்ளே அமர்ந்திருந்த ரைட்டர் சுந்தரத்தை அழைத்தாள் நந்தினி…
“யார்..?” என நிமிர்ந்து பார்க்க..
“யாரம்மா நீ…?? எதுக்கு இங்க வந்த…?? என்ன வேணும் உனக்கு…?” என சற்றே வயதானவராக இருந்தாலும் அவரிடம் இருந்து வந்த கணீர் குரலில் பயந்துதான் போனாள் நந்தினி…
சற்றே பயத்தோடு “இந்த பையன்…” என அதுவரை தன் கைப்பிடியில் நின்றிருந்த சிறுவனை அவர்களிடம் ஒப்படைக்க நினைத்து தேட… அங்கு அவன் இல்லை… அதில் திகைத்தவள் சுற்றுமுற்றும் பார்த்து தேடி சோர்ந்து போக…
“ஏம்மா உன்னை தான் கேட்கிறேன் இது ஒன்னும் சத்திரம் சாவடி இல்லை போலீஸ் ஸ்டேஷன் என்ன விஷயமா வந்த…?” என கறாராக கேட்டார் ரைட்டர் சுந்தரம்…
“அது அது…?” என பயந்தவள்… இல்லாத சிறுவனை பற்றி கூறினால் பைத்தியம் என முடிவு கட்டி விடுவார்களோ, ஏற்கனவே இருக்கும் பட்டம் போதாது இதில் பைத்தியம் வேறா .. என நினைத்து “சார் என்னை ரெண்டு திருட்டு பசங்க துரத்திட்டு வந்தாங்க… அவங்ககிட்ட இருந்து தப்பித்து ஓடி வந்தேன், அப்போ போலீஸ் ஸ்டேஷனை பார்த்தேன் அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று உள்ளே வந்தேன்…!!” என திக்கி திக்கி ஒருவழியாக சொல்லி முடித்தாள் …
“அப்படியா இரு நான் யாருனு பார்க்குறேன்…” என வெளியே சென்று தெரு முனை வரை பார்த்து வந்தார்… அங்கு யாரும் இல்லாததால் திரும்பி வந்தார்…
“ஏன்மா அங்க யாரையும் காணோமே ஒருவேளை போலீஸ் ஸ்டேஷன் பார்த்து பயந்து போய் இருக்கலாம் எதுக்கும் நீ உடனே போக வேணாம் உள்ள கொஞ்சம் நேரம் உட்காரு..!” என அழைத்து சென்றார்…
அங்கு போலீஸ் ஸ்டேஷன் மொத்தமும் காலியாக இருந்ததை பார்த்து குழப்பமும் பயமும் ஒரு சேர கால்கள் நடுங்க நின்றாள் நந்தினி…
‘இந்தாம்மா உன் பெயர் என்ன…?” ஓங்கி ஒலித்த குரலில்… பதட்டத்துடன் அவரை பார்க்க… அனுபவஸ்தர் அவள் நிலையை உணர்ந்து கொண்டு…
“அதுவா பக்கத்துல ஒரு ஸ்கூல்ல பிரச்சனை அதுக்குதான் பந்தோபஸ்துக்கு எல்லா போலீசும் போயிருக்காங்க இங்கே வந்து உட்காரு உன்ன பத்தி தகவல் சொல்லு…!!”
“உன் பெயர் என்ன…?”
“ந..நந்தினி…”
“உன் வீடு எங்க இருக்கு…?”
நுங்கம்பாக்கம்… என அவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தாள்…
இப்போதெல்லாம் காலம் ரொம்ப கெட்டுப் போச்சும்மா, பொம்பள புள்ளைங்க வெளியில் வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்குக் கூட உன்னை விட சின்ன வயசுல ரெண்டு பொட்ட பிள்ளைங்க இருக்கு, எப்படி அதுங்களை கரை சேர்க்கப் போறேன்னு தெரியல. எங்க, யாருக்கு என்ன நடக்கும்னே சொல்ல முடியலை. தோ.. நேத்து பாரு லட்ச லட்சமா பிசக் கட்டி பிள்ளைகளை படிக்க அனுப்புறாங்க, யாரோ ஒருத்தரோட அலட்சியத்தில் நேத்து ஸ்கூல் பஸ்சில் இருந்து சின்ன பையன் தவறி விழுந்து செத்துட்டான். பெத்தவங்க நினைச்சு இருப்பாங்களா காலைல நல்லா போன பையன் பிணமாக வருவான்னு, எல்லாம் விதி, தலையெழுத்து என்ன செய்ய…? என நேற்றைய செய்தித்தாளை நந்தினியின் முன்னால் எடுத்து போட்டவர், இன்னைக்கு அங்க தான் மத்த பசங்க பெத்தவங்க போராட்டம் பண்றாங்க, அதுக்குதான் பந்த பாசத்திற்கு எல்லாம் கிளம்பி போய் இருக்காங்க…!! எனக்கு பேசிக்கொண்டே அவர் வேலை செய்ய…
செய்தித்தாளில் இறந்த சிறுவனின் புகைப்படத்தைப் பார்த்த நந்தினி திகைத்துப் போனாள். காரணம், பேருந்து நிலையத்திலிருந்து அவள் கூடவே வந்த சிறுவனும் இதில் இருப்பவனும் ஒருவரே… அந்த பேருந்தில் கூட அச்சிறுவனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது…
“ரொம்ப நேரமா ஆகிப்போச்சு காளி. பசங்க இருக்க மாட்டாங்க கிளம்பு..!!” என்றார்.
அதிர்ந்த நிலையில் இருந்த நந்தினியின் முகத்தைக் கண்டு பயந்து இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டவர்…
“சரி வாம்மா, நானே உன் கூட வந்து பஸ் ஏத்தி விடுறேன்…!!” என கனிவுடன் அவளை அழைத்து வந்தவர் பேருந்தில் ஏற்றியும் விட்டார்…
பேருந்தில் இருந்த அனைவரும் நந்தினியையும் ரைட்டர் சுந்தரத்தையும் பேய் அறைந்தது போல் பார்த்திருந்தனர்… காரணம் புரியாமல் அதை ஒதுக்கி வைத்தவர்…
“பார்த்து பத்திரமா போம்மா… இனி யார் துணையில்லாம தனியா வராத…!!” என அறிவுரை வழங்கினார்…
தன்னிலை மீண்டவள் “சரிங்க சார், நான் போய்க்கிறேன். நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்… நீங்க போங்க…!!’ என அவர் சென்றதும் பேருந்து நகர, அதன் பின்னாலும் அச்சிறுவனின் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்…
சில நாட்கள் கழித்து ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவை பழுது பார்க்கும் பொருட்டு சோதிக்க, அதில் கண்ட காட்சிகளைப் பார்த்து பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ரைட்டர் சுந்தரத்தை அழைத்து விசாரிக்க, அன்று நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார். அதில் அதிர்ந்து போயினர் அனைவரும். காரணம், அன்றைய நாள் சிசிடிவி கேமராவில் சுந்தரம் மட்டுமே பதிவாகி இருக்க, அவர் வந்ததாக சொன்ன நந்தினியின் உருவம் பதிவாகவில்லை. அதைத் தொடர்ந்து நந்தினி பற்றிய குறிப்பு எழுதி இருந்ததை மேலதிகாரியிடம் காட்ட, அவர் அந்த முகவரியில் சென்று விசாரிக்க சொல்ல…
அங்கு சென்றவர் அடுத்த காட்சியில் பேய் அறைந்தவர் போல் நின்றார்.
காரணம், அங்கு நட்ட நடு ஹாலில் நந்தினியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்க, அதில் மலர் மாலை மாட்டி, பொட்டு வைத்து, கீழே விளக்கு ஏற்றி வைத்து அவள் இந்தப் புவியில் இல்லாததை எடுத்துரைத்தது.
இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு என்ன இது என்று விசாரிக்க… மருத்துவமனைக்குச் சென்று வந்த நந்தினி ஆள் இல்லாத ரோட்டில் வருவதைக் கண்ட இரண்டு வாலிபர்கள் அவள் கழுத்தில் இருந்த தாலி செயினைப் பறிக்க முயல, பதறிய நந்தினி அதை பிடிவாதமாக தர மறுத்து அவர்களோடு போராட, அதில் கோபமடைந்தவர்கள் அவளை வேகமாக இழுக்க, நந்தினி அதில் தடுமாறி கீழே விழுந்து தலையிலும் வயிற்றிலும் அடிபட்டு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு ஆள் அரவமற்ற சாலையில் கேட்பாரற்று இறந்து இருந்தாள். அவளோடு சேர்ந்து உருவாகும் முன்பாகவே இறந்துவிட்டது அவளின் இரண்டு மாத ருது. அதுவும் ஒரு மாதம் முன்பாகவே…. அதைக் கேட்டவர் இதயம் நின்று துடித்தது, வியர்த்து வழிந்து தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருக்க…வேகமாக அங்கிருந்து வெளியேறினார்… மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்…
சில நாட்கள் கழித்து…
அதே ஆள் அரவமற்ற அதே போக்குவரத்து சாலை…அதில் நந்தினி உருவம் நடந்து செல்ல கூடவே அவள் கையை பிடித்து கொண்டு நடந்து சென்றான் சிறுவனான கிருஷ் பள்ளி சீருடையில்… புன்சிரிப்பு மாறவில்லை இருவர் முகத்திலும்… அவர்கள் கால்கள் சென்று மறையும் இடத்தில் மலர் இதழ்கள் பூத்தது… ஊனும் இல்லாது உயிரும் இல்லாது உருவாகிய உறவிது உறுதியானது…. அவர்கள் கடந்து சென்ற பாதையில்
மழைநீர் சகதியாக நிறைந்த பள்ளத்தில் உதிர்ந்த இரு மஞ்சள் பூக்கள் சேர்ந்தது…


