காதல் செய்யாதே இராவணா -18

அங்கு கூடி இருந்த யாரும் ராவணன் கூற வருவதை கொஞ்சம்கூட கேட்காமல், தவறு அவன் மீதே என்று முடிவுகட்டி விட்டனர்.

“நிறுத்துகிறீர்களா….எல்லாரும்?”

“இப்போ நான் தான் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டேன்னு சொன்னா, நீங்க என்ன பண்ணிடுவீங்க?” என அவர்களைப் பார்த்து கர்ஜித்தவன்…

“ஏய்….!!” “உன்கிட்ட நான் தப்பாவா நடந்துகிட்டேன்?” என கோரமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவனின் மீது கடலளவு பயம் இருந்தாலும், ‘பணம் பத்தும் செய்யுமாம்’ இவள் போல் ஆட்களிடம் கிடைத்தால், அதற்கு மேலயும் செய்வாள் என்பதால், உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டே “ஆம்” சொன்னதுதான் தாமதம், விட்டான் அறை.

“வீல்” என்று கத்தியபடி மயங்கி சரிந்தாள். (கும்ஸ் க்ளோஸ்). பதறிப்போய் நின்றனர் அனைவரும். “என்னப்பா இப்படி பொம்பள பிள்ளை மேல கை வைக்கிற? என்ன கேட்க ஆள் இல்லன்னு கை நீட்டுறியா?” என தயக்கத்துடனே கேட்டு வைத்தார்.

“ஷ்ஷ்..” என ஒரு விரலை வாய் மீது வைத்து அமைதியாக இருக்க சொல்ல, சிலர் பம்பினாலும், சிலர் துணிச்சலாக…

“இன்னைக்கு இந்த பொண்ணுக்கு வந்தது நாளைக்கு நம்ம வீட்டு பொண்ணுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்?”

“அதானே, பங்காளி நீ சொல்றதும் சரிதான். இதுக்கு இப்போவே ஒரு முடிவு எடுத்தே ஆகணும்!”

“என்ன பஞ்சாயத்து தலைவரே? அமைதியா இருந்தா எப்படி? சட்டு புட்டுன்னு ஒரு முடிவு எடுங்க!” என குள்ளநரிகளின் சலசலப்பு தாங்காமல்…

“ம்ம்..!! எப்படி சொல்ல, கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு. நம்ம ‘பெரிய ஐயா’ குடும்பம் எப்படிப்பட்டதுன்னு எல்லாருக்கும் தெரியும். அவங்க குடும்பத்துல இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. இருந்தாலும் தப்புன்னு தெரிஞ்சா, தண்டனை எல்லாருக்கும் ஒண்ணுதான். அதனால ராவணன் தம்பி ஊரை விட்…டு…” என இழுத்தவரை…

கண்கள் சிகப்பு மிளகாய் அரைத்து வைத்த நிறத்தில் இருக்க.. “நிறுத்துங்கய்யா..!! எவனுக்கு இங்க என்ன கேள்வி கேட்குற அருகதை இருக்கு.. உங்க வண்டவாளம் எல்லாம் வெளிய எடுத்தா நாறிடும்…நீங்க என்னடா என்ன தள்ளி வைக்கிறது.. எனக்கு நீங்க தேவையில்லடா…!!” என கர்ஜித்தவனைக் கண்டு அனைவருக்குமே ஜில்லிட்டது…

“நல்லா நியாபகம் வச்சிக்கோங்க..! பயந்து போய் ஊரை விட்டு போறதா நினைச்சிட போறீங்க..!! நான் இதே ஊருக்குள்ள திரும்பி வரும்போது.. இப்போ போனதை விட பல மடங்கு கெத்தோட வருவேன்..!!” என அரும்பு மீசையை நீவியபடி சொன்னான்…

“ராவணா என்னப்பா இது யாரோ என்னமோ சொன்னான்னு நீ ஏன் போகனும்…?? நீ இருப்பா நான் பேசிக்கிறேன்..” என்றவரை இடையிட்டு…

“போதும்…நிறுத்துங்க..!! நான் எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல.. நான் ஊரை விட்டு போகத்தான் போறேன். உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா…?? என் கூட கிளம்பி வாங்க உங்கள நான் நல்லா பார்த்துக்கறேன்..!!” என்றவனைப் பார்த்து ஒரு பரிதாப பார்வையை வீச.. அவர் கை மேல் தன் கையை வைத்து.. “எனக்கு தெரியும்… உங்களால இந்த ஊரை விட்டு வரமுடியாதுன்னு..!! அதுக்கு அம்மா தான் காரணம்னும் தெரியும்..!! ஆனா நானும் இல்லாம நீங்க எப்படி தனியா இருப்பீங்கனு தான் கூப்பிட்டேன்..!!” என்றவன்… தகப்பன் சாமியை ஆரத் தழுவிக்கொண்டான்..! கண்கள் கலங்க.. “நீங்க ரொம்ப நல்லவர் ஐயா..!” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் சென்று விட்டான்.

‘வெறும் கையோடு’ ஊரை விட்டு செல்லும் மகனை மலங்க மலங்க விழித்தபடியே தடுக்க இயலாமல் நின்று இருந்தார். ஆதரவற்ற குழந்தை போல்…

வளவன் கடினமாகப் படித்து காவலர் பணி நியமனத் தேர்வு எழுதினான். ஆனால், தொடர் தோல்வியே கிட்டியது. இருந்தும் ‘ராபர்ட் புரூஸ்’ போல் மனம் தளராமல் இலக்கை எட்டிப் பிடித்தான்.

இதுவரை எந்த கொள்கையும் இல்லாமல், ராஜா வீட்டு காளையாக இருந்த ராவணன், வளவனுக்கு எதிராக நிற்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தவன், லட்சியத்தையும் அவ்வாறே அமைத்துக்கொண்டான்.

தன்னைத் தானே செதுக்கும் சிற்பத்தின் பிம்பமாக ராவணனும், பல கரடுமுரடான பாதைகளைக் கடந்து வாழ்க்கையின் பாடங்களைச் சுயமாகப் படித்து, இந்திய காவல் பணித் தேர்வு எழுதி வெற்றியும் கண்டு…

ராவணன் ஐ. பி. எஸ். என்னும் அடையாளத்தை சுயமரியாதைகாரன் தானே உருவாக்கிக் கொண்டான்.

ராவணனின் முதல் போஸ்டிங் உத்திர பிரதேசத்தில் உள்ள ஜான்சியில்..!!

ராவணன் பதவி ஏற்றதில் இருந்து அங்கு நடக்கும் கலவரங்கள், கடத்தல்கள், கொலை, கொள்ளை போன்ற எதையும் அவன் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ராவணனுக்கு அஞ்சி இருந்த சின்ன சில்லறைகள் (அதான் பிட் பாக்கெட் திருடர்கள்) முதல் பெரிய பெரிய தாதாக்கள் வரை அவன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், “சாப் ஆப் ஹமாரா ஆத்மீ ஹைன்” (சார், நீங்க நம்ம ஆள்) என அவனைத் தேடி சென்று ‘கையூட்டு’ கொடுத்து….

“பஹூத் அச்சா சாப், இன்னிக்கு எங்கள் சார்பா சாப்க்கு பார்ட்டி இருக்குது, அதில் சாப் கண்டிப்பா கலந்துகனும்” என தமிழ் தெரிந்த தாதா பான்பராக் போட்டு இத்துப்போன பல்லை காண்பித்து பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தான்.

பயிற்சியின்போது ராவணனின் ஈடுபாட்டை கண்டு அவன் மீது நம்பிக்கை வைத்திருந்த அவன் உயர் அதிகாரிகளுக்கு, ராவணன் கையூட்டு பெற்ற செய்தி அதிருப்தியை அளித்தது.

அந்த உயர்தர பாரில் மொத்த சில்லறை கூட்டமும் கையில் மது பாட்டிலுடனும் கிளர்ச்சியூட்டும் மாதுவுடனும் இருந்த வண்ணம் போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தனர்.

கண்களை கூசச் செய்யும் வெளிச்சத்துடன் கதவை தன் பராக்கிரமம் பொருந்திய கரங்களால் திறந்து கொண்டு… தொடர் பயிற்சியில் முறுக்கேறிய புஜங்கள், சட்டைக்குள் அடங்காத திண்ணிய மார்பு, செதுக்கிய தேக்கு மர கால்கள் என ஆறடிக்கும் குறையாமல் நின்ற ராவணனை கண்டு அசப்பில் வந்த ராட்சஷன் என ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் போயினர்.

பின்னர் கூட்டத்தின் தலைவன்… “ஆஹ்.. சாப்.. நீங்களா..!! வாங்கோ வாங்கோ.. அரே தோஸ்தோ..!! இது நம் ஆள் ராவணன் சாப் தான்..!!” என அனைவர்க்கும் அறிமுக படலம் நடத்த…

ராவணன் அவர்களை கடந்து சென்று மையமாக அமர்ந்து கொண்டு பார் அட்டெண்டரிடம் தனக்கு தேவையான பானத்தை கூறியவன் இவர்களிடம் திரும்பி…

“அப்புறம்.. உன் பேர் என்ன சொன்ன.. நிம்மியா..?? அம்மியா…??”

ஹிஹி.. சாப்… அது நிமல் ராஜ்..!!

சரி நி….மல்.. ராஜ்.. காலையில மொத்தமா காச வச்சிட்டு போய்ட்டீங்களா..?? அதுல யாரோடது எவ்வளவு பங்கு சொல்லவே இல்லையே…!! சோ.. இப்போ பங்கு பிரிச்சிடலாமா.. என வார்த்தைகளை அழுத்தி கேட்ட ராவணனிடம்…

தலையை சொரிந்தவாறே.. “என்ன சொல்றிங்க சாப்..” புரியாமல் கேட்டான் தாதாக்களின் தலைவன்..

அதாவத.. அவங்க அவங்க குற்றத்துக்கு ஏத்த மாதிரி காச கூட்டவோ குறைக்கவோ பண்ணிக்கலாம்னு இருக்கேன்..!!

சா…ஆப்..!!!! நீங்க எங்கேயோ போயிட்டீங்க சாப்..! எங்களை மிதிச்சு மதிச்சு எங்களுக்காக நினைக்குறீங்களே அந்த மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க சாப்.. இல்ல நாங்க வர வைப்போம்.. கியா தோஸ்து..??.. ஹாம் சஹி ஹெனா..!!

சரி என்றனர் அவரவர் முறையில்…

சரி.. யார் யார் என்ன தப்பு பண்ணாங்கன்னு எப்படி நியாபகம் வச்சி பங்கு பிரிக்கிறது… என ராவணன் தூண்டில் போட..

அதுவும் சரிதான்.. என்ன பண்ணலாம் நீயே சொல்லு சாப் நீதான் எங்களுக்கு குரு இனிமே..!! என்றான் நெகிழ்ச்சியாக…!!

எல்லாத்தையும் அவங்களையே எழுதி எடுத்துட்டு வர சொல்லு….!!

ஹா… கியூன் சாப்.? என ஜெர்க்கானான்…

ப்ச்.. பாத்தியா..!! அவங்க அவங்க செஞ்ச தப்பு என்ன அதுக்கு ஏத்த மாதிரி பில் போடலாம்னு கேட்டா.. “என்னையே சந்தேகப்படுறியா..” உங்கள உள்ள வச்சு என் ஸ்டைல்ல கேக்காம இறங்கி வந்து பேசுனா இப்படித்தான் கேப்பிங்க நீங்க குடுத்து பிச்ச காச பொறுக்கிட்டு போங்கடா.. என கோவமாக எழுந்து செல்ல போனவனை…

ஐயோ சாப்.. எங்களை மன்னிச்சிடு குறுக்கு புத்தி சாப்..!! அதான் உன்ன சந்தேகப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சிக்கோ சாப்… இப்போ உங்களுக்கு யார் யார் என்ன தப்பு பண்ணா அது தானே வேணும்.. இப்போ எழுதி அவங்க கையெழுத்தோட போட்டு தர சொல்றேன்.. நீங்க உக்காருங்க சாப்..!

அரே பையா..!! சாப்க்கு ஸ்டராங்கா சரக்கு குடு.. கூல் ஆகிடுவாரு.. என்றவன் சென்று அனைவரின் வாக்குமூலமும் பெற்று ராவணனிடம் தந்தான்…

அவர்கள் எழுதி தராவிட்டாலும் தன் பாணியில் வாங்கிக்கொள்ளும் திறமை அவனிடம் இருந்தது. முட்டாள்கள் கூட்டமாக வந்துவிட்டால் மட்டும் போதும், வைத்து செய்ய முடிவு எடுத்தே இந்த விளையாட்டு…!!

கையில் வைத்திருந்த மது கலவையை ரசித்தவாறே ஒவ்வொன்றாக படித்தவன் கண்கள் சிவப்பேறியது. அது அவன் குடித்த மதுவினால் அல்ல… அந்த கயவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தால்…

“ஆம்…!! அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதி கொடுத்த வாக்குமூலமே… பணத்துக்காக கொலை, கொள்ளை, கடத்தல் என்பதோடு, இந்த வெறி பிடித்த மிருகங்களின் இச்சைக்கு இரையான பச்சிளம் குருத்துகளை கொன்றது வரை அதில் இருக்கிறது…”

கணப்பொழுதில் தன் தோற்றத்தை மாற்றியவன், அருகில் இருந்த மேஜையை உடைக்க மிரண்டனர் அசுர கணங்கள்.

“சாப்.. கியா…” என வந்தவனை வாய் கிழிய, கிழிய அடித்து துவைத்தான்.

மற்றவர்கள் சுதாரித்துக்கொண்டு வந்து எதிர்க்க, அதில் பத்து பதினைந்து நபர்கள் ராவணன் பின்புறமாக நின்று

அவனை பிடித்து இழுக்க…

அவர்களையும் அனாயாசமாக இழுத்துக்கொண்டே எதிரில் வருவோரையும் பந்தாடியவன்… ஒரே உலுக்குதலில் பிடித்து இருந்தவர்கள் அனைவரும் பிரிந்து விழுந்தனர், அவர்களுக்கு ராவணன் அநீதியை எதிர்க்கும் வீரபத்திரனாகவே காட்சி அளித்தான்.

அனைவரையும் வெளுத்து துவைத்தவன், சாதாரண உடையில் வரவழைக்கப்பட்ட காவலர்களிடம் ஒப்படைத்தான். ராவணன் ஐ.பி.எஸ்., கடமை தவறாத காவல் அதிகாரி…!! குடித்த மதுவுக்கும் உடைத்த மேசைக்கும் சேர்த்து காசை வைத்தான்… நியாயமானவன்…!!

அனைவரையும் அழைத்து செல்லும் சமயம் வாயிலில் நின்று இருந்தவன், அருகே இழுத்து சென்றவர்களில் ஒருவனை இழுத்து…

“நீதானே நான் வந்தப்ப வாங்கோ..! வாங்கோ..! கூப்பிட்ட…!! என்ன நல்லா வாங்குனியா..? இல்லனா சொல்லு இருந்து வாங்கிட்டு போ..!” என விட்ட அறையில் அவன் காது செவிடானது.

அவன் பின்னால் பதுங்கியவனின் காலரை பிடித்து இழுத்து…

“எங்க ஓடுற.. நீதான… உன் நாத்தம் புடிச்ச வாய என் மூஞ்சிக்கு நேர கொண்டு வந்த.. எவ்ளோ தைரியம் உனக்கு…?” என ஏற்கனவே கிழிந்து தொங்கியவனை… ராவணனின் வன்கைகள் அவன் சில்லி மூக்கைப் பதம் பார்க்க.. அடுத்து உயிர் நாடியில் எத்து விட போக… “ஐயோ.. சாப்..! நான் புள்ள குட்டிக்காரன்..!” என அவன் காலில் விழ.. அவனை மற்ற காவலர்களிடம் தள்ளியவன்…

முகத்தில் தழும்போடு அரைகுறை உயிரோடு வந்தவனை மட்டும் ராவணனின் கண் அசைவில் விட்டுவிட்டு மற்றவர்களை அழைத்துச் சென்றனர்…


மறுநாள்…

ஜான்சி தலைப்பு செய்தி….!!

நீண்ட நாட்களாக… தேடப்பட்டு வந்த.. குழந்தையை பாலியல் வன்முறை செய்து கொன்ற கொலைகாரன்.. உடல்.. ஏரியில் கண்டெடுக்கப்பட்டது… அவனை கொடூரமாக துடிக்க வைத்து கொன்று உள்ளதாக தகவல் வந்த நிலையில் நமது நிரூபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராவணன்..

“தப்பு செஞ்சது யாராக இருந்தாலும்…?? நாங்க நடவடிக்கை எடுப்போம்..!” என அசட்டையாக சொன்னவனை..

கேள்வியால் துளைத்தனர் நிரூபர்கள்.. அவர்கள் அனைவரையும் ஒரு முறை அழுத்தமாக பார்த்து… “சட்டம் தன் கடமையைச் செய்யும்..” என்றவன் சிங்கத்தின் மூன்று முகம் தாங்கிய தொப்பியை கம்பீரமாக அணிந்த அனைவரையும் கடந்து ஜம்பமாக சென்றான்..


Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top