தீஞ்சுவை தந்திரன் காதல் இந்திரன் -7

டேய் அவன விட்டுடாதடா… போட்டுத் தள்ளு. இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்!

“யோவ் சேர் தூக்கிப் போடாதீங்கயா… டேமேஜ் பைன் வரும்டா…!”

“அய்யோ ஆஃபீசர் மேலயே தூக்கிப் போடுறாங்களே…”

ஒரு பக்கம் ருத்ரனும் தீரனும் கட்டிக்கொண்டு புரள…

மற்றொரு பக்கம் அவர்களோட ஆளுங்க “எங்க ஆளு ஜெயிச்சிட்டான்…” என கத்திக்கொண்டு அடிதடியில் இறங்கி இருந்தனர்…

ஓரமாக குத்த வைத்து அமர்ந்த அதிகாரி தலையில் கையை வைத்துக்கொண்டார். “இவர்களுக்கு டெண்டர் கொடுக்க வந்தேன், கடைசில என்ன wwe மேட்ச் பார்க்க விட்டானுகளே” என வாய்விட்டே புலம்பியவர்…

ஒரு முடிவோடு எழுந்து, “இப்போ நிறுத்துறீங்களா இல்ல நான் போலீஸ கூப்பிடுவேன்” என அவரின் எச்சரிக்கையை எவனுமே காதில் வாங்கவில்லை… ஆளாளுக்கு கத்திக்கொண்டு அடித்து பிடித்துக் கொண்டிருக்க இது வேலைக்காகாது என்று நினைத்தவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது உசிதமான ஒரு செயல்…

போலீஸ் வந்து நடந்ததை விசாரித்து விட்டு அதிகாரியின் அறிவுறுத்தலின் படி நடந்துக் கொள்ள சொன்னார். அப்போதும் மதிக்காமல் சலம்பி கொண்டு இருந்த சன்னாசி அவிநாசி தரப்பினரை அடித்து விரட்டி விட்டு அவர்கள் இருவரிடமும்…

“இங்க பாருங்க நீங்கள் இரண்டு பேரும் ஊருக்குள்ள பெரிய மனுஷன்தான். ரெண்டு பேரும் போட்டி போட்டீங்க ஆனால் ஒருத்தருக்கு தான் டெண்டர் கிடைச்சு இருக்கு. அதனால மற்றவர் தோல்விய ஏத்துக்கிட்டு ஒதுங்கி போறது நல்லது. இல்லனா…??

“இல்லனா…?? இரண்டு பக்கமும் கோரசாக கேட்டது…

வேலை செய்ய வந்த அரசாங்க அதிகாரியை அவர் வேலைய செய்ய விடாமல் தடுத்தீங்கன்னு உங்க ரெண்டு பேரையும் உள்ள பிடிச்சி போட்டா அப்புறம் காலத்துக்கும் உங்களால் எந்த டெண்டரும் எடுக்க முடியாது நியாபகம் வச்சிக்கோங்க” என காவல் அதிகாரி மிரட்ட

எகிறிய இளசுகளை அடக்கியது இரு பெருசுகளும்… ஒருவரை ஒருவர் முறைத்தப்படி கலைந்து சென்றனர் ருத்ரனும் தீரனும்…

அன்றளவில் அந்த சண்டையே அங்கேயே முடிந்தது என அனைவரும் நினைத்து இருக்க… அது அப்படி அல்ல என்பதை ருத்ரனும் தீரனும் போட்டி போட்டு கொண்டு அடுத்த அத்தியாயம் தொடங்க போகின்றனர். அதுவே அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போடப் போகும் புயலின் ஆரம்பம் என்பதை அறியாமல்…

விடு விடுவென வீட்டிற்குள் புகுந்த தீரன் தன் செருப்பில் தொடங்கி கண்ணில் பட்ட அத்தனை பொருட்கள் மீதும் கோபத்தை காட்டினான்… இல்லை… கொட்டினான்…

வாசலில் இருந்த பூ தொட்டி அவன் கை பட்ட வேகத்தில் தரையில் சிதறியது…

சோபா மீது இருந்த தலையணைகள் எல்லாம் காற்றில் பறந்தது. அடுக்கி வைத்த பொருள் எல்லாம் எடுத்து எறியப்பட்டது…

“தீரா…!”

என அவனின் தாய் அமிர்தவள்ளி பதறியபடி வந்தார்…

வீட்டின் வேலை ஆட்களோ சுவரோடு ஒட்டி நின்றனர்… அவன் கோபத்திற்கு முன்னால் எல்லாருமே சமம் தானே… உள்ளே புகுந்தால் அவர்கள் கதி என்னவோ…? எனவே ஒதுங்கியே நின்றனர்…

அவன் கோபத்திற்கான காரணம் தெரியாமல் எல்லாரும் அயர்ந்து நிற்க…

அவன் பின்னாலே மெதுவாக உள்ளே வந்தார் சன்னாசி, அவர் முகத்திலும் கலை இல்லை. “என்ன ஆச்சுங்க?” என அமிர்தவள்ளி கேட்க…

“டெண்டர்…”

என்று ஒற்றை வார்த்தையில் விஷயத்தைச் சொல்லி முடிக்க… அத்தனை வருடம் தாம்பத்தியம் நடத்திய அமிர்தவள்ளிக்குப் புரிந்து கொண்டதில் ஆச்சர்யம் இல்லையே…

“டெண்டரா…?” என இன்னும் பொங்கி எழுந்தான் தீரன்.

“ச்சீ… இப்படி அசிங்கமா தோற்று போய் நிக்கிறேனே…!” என மேஜையை ஓங்கி உதைத்தான். மேஜை இரண்டு மைல் தொலைவில் சென்று விழுந்தது.

“டேய்…” என சன்னாசி அவன் கோபத்தைக் கண்டு அழுத்தமாக அழைக்க…

“என்னப்பா…!” என வெடுக்கென்று கேட்டவன் திரும்பி அவர் முகத்தைப் பார்த்து…

“இதுக்கா…?? இப்படி அசிங்கமா அவனுங்க கிட்ட தோற்கத்தான் என்னை அவசரமா புறப்பட்டு வரச் சொன்னீங்களாப்பா?” எனக் கேட்டவன் கண்கள் இன்னும் எரிந்துகொண்டே இருந்தன…

எனில் வெற்றி பெற்றது அவிநாசி அண்ட் கோவா…!! ஆமாம்ப்பா, ஆமாம்…

“தீரா உனக்கு மட்டுமா கோவம், டெண்டர் கைவிட்டு போனதுல எனக்கும் தான் கோவம்… என்ன இந்த டெண்டர் கிடைச்சா ஊருக்குள்ள நம்ம மரியாதை உயரும்னு பார்த்தேன், அது நடக்கலைங்கிற வருத்தம் தான் எனக்கு மெய்யாகவே வருத்தம்” தொய்ந்த குரலில் சொன்னவர் முகத்தை கூர்ந்து பார்த்தான் தீரன்.

“என்ன சொல்றீங்கப்பா…?”

என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான் தீரன்.

சன்னாசி மெதுவாக சோபாவில் அமர்ந்தார்.

“டேய்… நீ என்ன நினைச்சே, வெறும் ஒரு டெண்டருக்காக தான் இத்தனை போட்டினா? இல்லைடா??? இங்க விஷயம் அது இல்ல, “ஊர் மரியாதை…”

அந்த வார்த்தையில் தீரனின் பார்வை கூர்மையானது.

இத்தனை வருஷமா இந்த ஊருல யாருக்கும் கிடைக்காத முதல் மரியாதை டெண்டர்ல ஜெயிச்சா அந்த அவிநாசிக்கு கொடுக்க போறாங்க… இனி அந்த ருத்ரன் பையன் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு திரிவான்” என்று மெதுவாக சொன்னவர்…

“இனி இந்த ஊர்ல எது நடந்தாலும் முதல் அழைப்பு அவனுக்கு…

கோவில் திருவிழால முதல் மாலை அவனுக்கு…

முதல் தாம்பூலம் அவனுக்கு…”

என்று ஒவ்வொன்றாக அழுத்தமாக சொல்ல சொல்ல தீரனின் முகம் இருண்டது…

“போதும் பா…” என சன்னாசி மேலே தொடரும் முன் தடுத்தான் தீரன்.

“இப்போ என்ன…? ஊர் மரியாதை அந்த ருத்ரன் குடும்பத்துக்கு போகுது… அவ்ளோ தான…” என அவன் அவ்வளவு சாதாரணமாக சொல்ல…

சன்னாசியே ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்தார்.

என்னடா இவ்வளவு அசால்டாக சொல்ற…?

ஊர் மரியாதை என்பது எவ்வளவு பெரிய கௌரவம் தெரியுமா…? அது நமக்கு கிடைக்கவில்லையே…” என்று வருத்தமாக சொல்ல…

தீரன் மெதுவாக சிரித்தான்…

விடுங்கப்பா…

என்று சோபாவின் கைப்பிடியில் அமர்ந்தான்,

நம்ம கையை விட்டு போன அதே ஊர் மரியாதை… திரும்ப நமக்கே வரும்…

சன்னாசிக்கு புரியாமல் புருவம் சுருக்கினார்.

எப்படி…?

அவர் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த தீரன்…

பின் மெதுவாக தலை நிமிர்ந்தவன் இதழ் ஓரத்தில் ஆபத்தான புன்னகை விரிந்தது.

அதுவும்…

அந்த அவிநாசி கையாலேயே நமக்கு கிடைக்கிற மாதிரி நான் செய்யலை என்றால்,

நான் தீரன் இல்லப்பா…

என்று நிதானமாக சொல்லியவன் கண்களில் மின்னியது முழுக்க முழுக்க தந்திரம் தான்…

மறுபக்கம்…

அவிநாசி வீடு மட்டும் அந்த டெண்டர் வெற்றியால் திருவிழாக் கோலம் பூண்டது போல இருந்தது…

வாசலில் அவரது ஆதரவாளர்கள் வரிசை கட்டி நின்றனர்.

“வாழ்த்துக்கள் அண்ணே…”

“இந்த தடவை முதல் மரியாதை உங்களுக்கு கிடைச்சது எங்க எல்லாருக்கும் சந்தோசம்” என சொல்ல…

அனைத்தையும் தலையசைத்து ஏற்று கொண்டவர், “எல்லாரும் சாப்பிட்டு போங்க” என்றவருக்கு நன்கு தெரியும், இந்நேரம் அவர் மனைவி ஆனந்தவள்ளி தடபுடலாக விருந்து தயாரித்து இருப்பார் என்று…

வாசலில் ஓர் ஓரமாக நின்று நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி…

அவிநாசி உள்ளே வந்ததும் அவருடனே உள்ளே வந்தவள்.

தந்தை முகத்தில் இருந்த அபரிவிதமான சந்தோஷத்தை பார்த்ததும்…

அவள் இதழ் ஓரத்தில் மென்மையான சிரிப்பு விரிந்தது…

தாமதம் ஆயிடுச்சாப்பா என மெதுவாக கேட்டாள்…

ஆமா பாப்பா போன இடத்துல ரொம்ப இழுத்தடிச்சிட்டானுங்க என்றவர் ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்தார்… அவர் கூடவே ருத்ரனும் அமர்ந்தான்…

உடனே சமையல் அறைக்கு சென்று ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள் தேன்மொழி…

அவிநாசி அதை வாங்கி பருகியபடி மகளை பார்த்து…

“என்னம்மா… வாசல்ல இவ்ளோ ஆர்ப்பாட்டம் நடக்குது நீ எதுவுமே கேட்க மாட்டியா…?”

தேன்மொழி புன்னகைத்தாள்.

“உங்க முகம் பார்த்தாலே தெரியுதுப்பா டெண்டர்ல நீங்கள் ஜெயிச்சிட்டீங்கன்னு. வாழ்த்துக்கள்பா…” என அவளும் உளமார்ந்த மகிழ்ச்சியுடன் சொன்னாள்…

அந்த வரியில் அவிநாசியின் முகமே மென்மையாக மாறியது.

“பார்த்தியாடா ருத்ரா…” என அருகில் வந்த ருத்ரனை அழைத்தவர்,

“என் பொண்ணு நான் சொல்லாமலே எப்படி கண்டுபிடிச்சிட்டாள்ன்னு… அவள் அப்படியே எங்க அம்மை மாதிரிடா. என் மூஞ்சைப் பார்த்தே என் மனசப் படிப்பாள்” எனப் பெருமையாகச் சொன்னவர் முகத்தில் அத்தனை பூரிப்பு…

ருத்ரன் அவளை மேலும் கீழும் பார்த்து “அம்மாவா…?? அப்பா சும்மாவே பாட்டி மாதிரிதான் இவள் பேசுவாள். இதுல நீங்கள் வேற ஏத்தி விடாதீங்க. அப்புறம் இவள் முழுநேரமும் பாட்டியாவே மாறி நம்மளை மிரட்டுவாள்” என அவளைக் கிண்டல் செய்தவன் குரலில் அத்தனை வலுவில்லையோ…

என்ன அண்ணா இது…? குரல் ஒரு மாதிரி இருக்கு… முகம் கூட சோர்ந்தாற்போல இருக்கு… மதியம் சாப்பிட்டியா இல்லையா நீ…?

என கனிவான அக்கறையோடு கேட்டாள் தேன்மொழி…

அவள் கேள்வியில் ருத்ரனே ஒரு நொடி திகைத்து தான் போனான்… அவனே நடந்த நிகழ்வில் அவன் மறந்ததை தங்கை கவனித்து கேட்டு விட்டாளே…

ஏனென்றால் வீட்டில் இத்தனை பேர் இருந்தும் அவன் முகத்தில் இருந்த அந்த சின்ன சோர்வை கூட கவனித்தது அவள் மட்டும் தான்… அவிநாசிகூட அதை கவனிக்கவில்லையே…

இது பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்த வரமா சாபமா தெரியாது.

ஒரு உயிரை தன் வயிற்றில் சுமக்கப் போகிறவள் என்பதாலோ என்னவோ…

அவர்களுக்குள் தாய்மை உணர்வு விதையாகவே புதைந்து கிடக்கும்…

அதனால்தான், தான் நேசிக்கிறவர்களின் முகத்தில் சிறு மாற்றம் கண்டாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்…

அந்த அக்கறையில் “சாப்பிட்டாயா…?” என்ற கேள்வி பெண்களின் இதழ்களில் தானாக வந்து விடுகிறது…

ருத்ரன் பேசாமல் இருப்பதை கண்டு…

என்ன அண்ணா, சாப்பிட்டியான்னு கேட்டா பதில் சொல்லாம முழிக்கிற… என தேன்மொழியிடம் இருந்து அதட்டல் வந்ததோ…

அது வேலை என்று ருத்ரன் இழுக்க…

என்ன வேலை இருந்தாலும் என்ன… நேரத்துக்குச் சாப்பிடாம அப்படி என்ன வேலை வேண்டி கிடக்கு… ஆ ஊ ன்னா மூக்குக்கு மேல கோவம் மட்டும் வருது… வயிற்றை இப்படிப் பட்டினி போட்டா அப்புறம் பார்க்கிற வேலையில எரிச்சலும் கோவமும் தான் வரும்… நீ முதல்ல எழுந்து சாப்பிட வா அண்ணா என அக்கறையாகச் சொன்னவளைக் கண்டு வெடித்து சிரித்தான் ருத்ரன்…

என்ன என புரியாமல் தந்தை, மகள் விழிக்கவும்…

நான் சொன்னேன்ல பா இவள் பாட்டி மாதிரி பேசுவாள்ன்னு… சொன்ன மாதிரியே பேசிட்டா பாருங்க, கொஞ்சம் விட்டா பாட்டி மாதிரி புடவை கட்டி வெத்தலை பாக்கு போட்டு இடிக்கிறதுக்கு பதிலா நம்மள போட்டு இடிக்க போறாள் என கேலி செய்ய…

அண்ணா…!”

என தேன்மொழி சிணுங்க…

அதைப் பார்த்த அவிநாசி வயிறு குலுங்க சிரித்தார்… அவர் சிரிப்பு சத்தத்தில் அந்த வீடே நிறைந்தது…

போதுமா சிரிச்சாச்சா? விட்டா நீ இன்னைக்கு ஃபுல்லா என்னை வச்சி கிண்டல் பண்ணிட்டு இருப்ப. எழுந்து வந்து சாப்பிடு என்றவள் ருத்ரனின் கையை பிடித்து இழுத்துச் செல்ல, அந்த மலையூர் மம்பட்டியாணும் அவள் இழுப்புக்கு அடங்கி பின்னாலே சென்றான்…

அவிநாசியும் ருத்ரனும் அமர்ந்து இருக்க, ஆனந்தவள்ளியும் தேன்மொழியும் இருவருக்கும் பரிமாறிட… பேச்சும் சிரிப்பும் அவ்வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பிரதிபலித்தது…

அந்த நொடி அவ்வீடு முழுக்க அன்பும் பாசமும் மட்டுமே நிரம்பி இருந்தது…

நிலை மாறும் உலகில் எதுவும் நிரந்தரமில்லை…

இன்றைய மகிழ்ச்சி நாளைய கண்ணீராகவும்…

இன்றைய தோல்வி நாளைய வெற்றியாகவும் மாறலாம் …

எனில் இவர்களுக்கு காத்திருப்பது எதுவோ…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top