வாசுகி மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும், மேலும் கடத்தப்பட்ட மற்ற பெண்களின் வாக்குமூலத்திலும், ‘அரிமா’ என்னும் நபரைப் பிடித்தால் மட்டுமே போதை கடத்தலில் ஈடுபட்டவர்களை முழுமையாக ஒழிக்க முடியும்.
யாரிந்த அரிமா என தேடித்தேடி களைத்ததுதான் மிச்சம். கையில் சிகரெட்டுடன் மடியில் தீவிரமாக சிந்தனையில் இருந்தவனைக் கலைத்தது அழுகுரல். யாரென்று தேடிச் சென்று பார்க்கையில்…
”மாதுரி” கையில் இருந்த பொருளைப் பார்த்தபடி அழுதுகொண்டு இருந்தாள்.
”குட்டி..?”
”ஹான்… அங்கிள்..” என அவனைக் கண்டதும் மேலும் மேலும் அழுகை கூட, அருகில் சென்று அவள் வைத்திருக்கும் பொருளை வாங்கிப் பார்த்தவன் அதிர்ந்தான்…
”இது உன்கிட்ட எப்படிம்மா கிடைச்சுது..?”
”அஞ்சு அக்கா அன்னைக்கு மறந்து என்கிட்ட குடுத்துட்டு போய்ட்டா..” எனத் தேம்பினாள்.
”அதுல அதுல… அஞ்சு.. அஞ்சு அக்காவ… நான் பார்த்தேன்..!!” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் தவித்தவளை…
ஆறுதலாக அணைத்து முதுகில் தேய்த்து விட்டபடி…
”அஞ்சு அக்காவ கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கித் தரலாமா குட்டி…”
”ஆமா… அங்கிள் அவங்களுக்கு பெரிய தண்டனை வாங்கித் தரணும். அவங்க.. அவங்கிட்ட.. அஞ்சு அக்கா.. விட்ருங்க.. விட்ருங்க.. கெஞ்சுனாங்க அங்கிள்… அப்பாவும்…” எனத் துடித்தவள், ”யாரையும் விடாதீங்க அங்கிள். அஞ்சு அக்கா ரொம்ப ரொம்ப நல்லவங்க…”
ஒருத்தர் விடாம எல்லாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்போம்… சரியா, நீங்க என்கிட்ட சொல்லிட்டீங்கல்ல, இனி நான் பார்த்துக்கிறேன்… இது என்கிட்டயே இருக்கட்டும்… இதைப் பத்தி யார்கிட்டயும், முக்கியமா ஃப்ரண்ட்ஸ்கிட்ட கூட சொல்லிக்க வேண்டாம்… சரியா…
ம்ம்ம்…!
அங்கிள்…?
என்ன குட்டிமா…?
நீங்க மகிழ லவ் பண்றீங்களா…?
எப்படி?? என வியப்பாக ஏறிட்டவனை…
அன்னைக்கு, பத்து லைக்ஸ் கூட வராத அவ ரீல்ஸுக்கு ரசிகர்னு சொன்னீங்கல்ல, அப்போவே சந்தேகப்பட்டேன்… இன்னைக்கு உங்க போன் ஸ்கிரீன் சேவர்ல மகிழ் போட்டோவ பார்த்து கெஸ் பண்ணேன், சரியா அங்கிள்… (ப்பா என்ன ஷார்ப் மைண்டா சாமி..)
ம்ம்ம்… ஸ்மார்ட் கேர்ள்…! என அவள் தலை கலைத்து விட…
அங்கிள்…! ஒன்னு சொல்லவா…
ம்ம்ம்…!
நீங்க ரொம்ப நல்லவர்…!!
ஹாஹா… உங்க அக்காவ லவ் பண்ணதுக்கா குட்டிமா…? (அதுக்கு தியாகி பட்டம் தானடா கொடுக்கனும்..)
இல்லை… நீங்க ஒரு குட்டி பாப்பாவை தூக்கிட்டு வந்துட்டீங்கன்னு அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க…!
அப்போ… அப்பா தான் சொன்னார்… எத்தனை பேருக்கு ‘இந்த மனசு’ வரும் இப்படி ஒரு குழந்தைய வளர்க்க… ஊர்ல சின்ன நல்லத பண்ணிட்டு தம்பட்டம் அடிக்கிறவங்களுக்கு மத்தியில… அவர் செய்ற நல்லதை வெளிப்படுத்திக்காம… அதனால வர கெட்ட பெயரை பத்தி கூட கவலை படாம இருக்குற நல்ல மனசு யாருக்கும் வராதுன்னு சொன்னாங்க… அது மட்டும் இல்லாம…!!!
அபிகுட்டிய நீங்க எப்படி பார்த்துக்கறீங்கன்னு நானும் அக்காவும் தான் தினமும் பார்க்குறோமே…! அதனாலேயே நீங்க ரொம்ப நல்லவர் தான் அங்கிள்… ஆனா இந்த மகிழுக்கு உங்கள பத்தி பேசுனாலே கோவப்பட்டு சண்டைக்கு வரா… ஏன் அங்கிள்..?
ஓ.. சண்டை போடுறாளா… ம்ம்ம்.. கேஸ் முடியட்டும் வச்சிக்கிறேன் கச்சேரிய.. என மனதுக்குள் நினைத்தவன்…
அவ உன் அளவுக்கு ஸ்மார்ட் இல்லையே மது குட்டி … அதுவும் இல்லாம அவ ஒரு டியூப் லைட் தான போக போக புரிஞ்சிப்பா குட்டி… இல்லனாலும் நான் பார்த்துக்குறேன்…
அங்கிள்..? அஞ்சு அக்கா…!
நானும் உங்க அப்பாவும் பேசி கண்டிப்பா தண்டனை வாங்கித் தருவோம். இப்போ ரொம்ப டைம் ஆகிடுச்சு. இனிமே இது மாதிரி தனியா வரக்கூடாது, சரியா குட்டிமா…!!
எனப் பொறுப்பாக அவளை அனுப்பிவிட்டு வந்தவன் மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைத் தீர்மானித்துக்கொண்டு உறங்கிப் போனான்…
மறுநாள்…
தயாநிதியிடம் மாதுரி குறித்துப் பேசினான்.
நீங்க சொல்றது புரியுது சார்… ஆனா குட்டிமா ரொம்ப சின்ன பொண்ணு, அவ எப்படி சார்..? இதெல்லாம் சரியா வருமா.. என தயங்கினார் மகளைப் பெற்ற தந்தையாக…
இது இதோட நிக்கப் போறதில்ல. நேத்து ஆரோஹி, இன்னைக்கு அஞ்சு… நாளைக்கு இன்னொரு பொண்ணு, பையன்னு போயிட்டே இருக்கும் சார்…!
இத வளர விடாம பண்ண வேண்டியது நம்ம கடமை தான சார். சட்டத்தை காப்பாத்த வேண்டிய நாமளே இப்படி தயங்குனா, சாதாரண மக்கள் எப்படி நம்மள நம்பி சாட்சி சொல்ல வருவாங்க…!! என வில் வித்தையில் தேர்ந்த அர்ஜுனனாக சொல் அம்பை எய்ய…
சரிங்க சார், நீங்க இவ்ளோ சொல்றதால இதுக்கு நான் சம்மதிக்கிறேன்… என குறிதவறாமல் இலக்கை எட்டியது.
பரபரப்பாக போய்க்கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியில் திடீரென பின்னணி இசையோடு ஒளிபரப்பப்பட்டது “பிளாஷ் நியூஸ்..”
“சற்று முன் கிடைத்த தகவல்..
“நிழல் உலக தாதாவும், போதை பொருள் கடத்தல் மன்னனுமாக இருக்கும் அரிமா என்பது எம். எல். ஏ. அழகு சுந்தரம் தான் என ஆதாரத்துடன் பிடிபட்டுள்ள நிலையில், திரு. ஏ. சி. பி ரவாணன் அவர்களால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார். இது பற்றி மேலும் தகவல் அறிய தொடர்ந்து இருங்கள். நமது செய்தி தொலைக்காட்சியுடன்..!!!”
“சார்.. எம். எல். ஏ. மேல போதை பொருள் கடத்தப்பட்ட கேஸ்ல அவருக்கு எதிரா இருக்கும் ஆதாரம் என்ன..???? அவர் மேல வெறும் கடத்தல் வழக்கு மட்டும் தான..?”
“எம். எல். ஏ. மேல போன வாரம் நடந்த ரெண்டு கொலை கேஸ்லயும் சந்தேகப்படுறோம். அது மட்டும் இல்லாம அவருக்கு சொந்தமான ‘ஹார்பர் குடோன்ல’ இருந்து சில தடை செய்யப்பட்ட போதை பொருளையும் கைப்பற்றி இருக்கோம்…!! இது பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருது…” என டிவியில் பேட்டியளித்தவனை…
கையில் இருந்த பொருளை வீசி அந்த டிவியை உடைத்தவருக்குக் கோபம் தீராது.. கீழே விழுந்த டிவியை தன் கால்களால் எட்டி மிதித்து சுக்கு நூறாக உடைத்தெறிந்தும் ஆத்திரம் தீராது இருந்தது.. மேலும் உடைக்கப் பொருளைச் சுற்றித் தேட… ஓடி வந்து பிடித்துக் கொண்டனர் அவரின் அடியாட்கள்…
“பெரிய அய்யா உங்களை கோவப்படக்கூடாதுன்னு சின்னய்யா சொல்லி இருக்காரு.. கொஞ்சம் அமைதியா இருங்க..!!!” என்றவனின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார்…
“யார்டா அமைதியா இருக்க சொல்ற என்னைய..? அங்க பாருடா…? அங்க பாரு..? இத்தனை வருஷமா எத்தனை கஷ்டப்பட்டு கட்டுன கோட்டைய ஆட்டம் காண வச்சுட்டான்… இவனை சும்மா விட சொல்றியா…???? நீ.. நீ.. உடனே தம்பிக்கு போன் போட்டு.. நம்ம ஆள் மேல கை வச்சவன கொல்லச் சொல்லு.. ம்..ஹும்..!! அவனை துண்டு துண்டா வெட்டிப் போட சொல்லு அப்போ தான் நம்ம மேல ஒரு பயம் இருக்கும் மத்தவங்களுக்கும்..!!” என விடாமல் அரற்றிக் கொண்டு இருந்தவரை சமாதானம் செய்து.. தகவலை ‘அந்த தம்பிக்கு’ அனுப்ப…
தெரியும் அவர டென்ஷன் ஆகாம இருக்க சொல்லு. அந்த ராவணனை ஏற்கனவே அழிக்கப் போய்தான் விட்ருச்சாமே, வளர்ந்து நிக்குறான். அவனை வேற வழில பார்த்துக்கலாம். இப்போதைக்கு அந்த எம். எல். ஏ. வாயத் திறந்தா நமக்கு தான் ஆபத்து. அதுக்கு முன்னாடி அவனை போட்ருங்க. கூடவே சாட்சி சொல்லப் போற ஹெட் கான்ஸ்டேபிள் பொண்ணையும், இல்ல தனியா வேண்டாம் மொத்த குடும்பத்தையும் ஒன்னா தூக்கிடு என கட்டளையிட்டான்.
ராவணாஆஆ… உன்னை எத்தனை தடவை தான்டா அழிக்கிறது? நீயும் விடாம மீண்டு வர்றியேடா. இந்த தடவை நீ திரும்பி வரவே முடியாத இடத்துக்கு அனுப்பறேன்டா! என சூளுரைத்தான் அந்த வஞ்சகன்.
யாரிவர்கள்? இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் ஏற்படப் போகும் விபரீதங்களை எவ்வாறு முறியடிப்பான்?



