கபடி.. கபடி..
டேய்.. மாப்புள!! நல்லா இறங்கி வரட்டும் டே.. உள்ள விடு..
டேய்.. இந்த தடவையும் அவன ஜெயிக்க விடக்கூடாதுடே.. இறங்கி அடி மாப்புள.. என பின்னால் இருந்த நண்பர்கள் கூற, களத்தில் இறங்கினான் ராவணன்.
ஒரு முறையிலே எதிரணியில் இருக்கும் அனைவரையும் தோற்கடித்து வெளியேற்ற, களத்தில் எஞ்சி இருந்தது வளவனும் ராவணனும் மட்டுமே…
தன்னை விட்டுவிட்டு வளவனிடம் தாய்க்கு அக்கறை இருப்பதாக எண்ணிக்கொண்ட ராவணனும், தன் அத்தையை கலங்க வைத்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் வளவனும் என இருவருமே ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே கருதி வந்தனர்.
வளவன் எங்கு சென்றாலும் எதிர் அணியில் ராவணன் நிச்சயமாக இருப்பான்… இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் உரிமைப் போரானது சிறுவயது தொடக்கம் இன்று வரை வளர்ந்து வருகிறது.
வளவன் நேர்மையாக இருந்து வெற்றியை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ராவணனோ இதற்கு நேர் எதிர். வெற்றியை அடைய எந்த முறையையும் கையாளலாம் என்கிற கொள்கை உடையவன். ஆகையால் பெரும்பாலும் ராவணனே வெற்றி வாகை சூடுவான். இம்முறையும் அப்படியே.
முடிந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற இராவணன் கோப்பையைப் பெற்றுக்கொண்டு, வளவனை ஏளனமாகப் பார்த்து வைத்தான்.
“மச்சான்!!! கலக்கிட்ட டா. இந்தத் தடவையும் நீயே ஜெயிச்சு அவன் மூஞ்சில கரியைப் பூசிட்டே…” அப்புறம் இதுக்கு பார்ட்டியும் குடுத்துப்புடு டே.
“அதெல்லாம் சாயங்காலம் தோப்பு வீட்டுக்கு வந்துடுங்கடே. எல்லாம் ரெடியா இருக்கும். நம்ம மாரி கிட்ட சொல்லி வச்சிருக்கேன்லே, அவன் மிச்சத்தைப் பார்த்துப்பான்…” என அவர்களுக்கான ஏற்பாட்டைக் கூறியவன் தந்தையை காணச் சென்றான்.
“ஐயா…!!”
“ம்ம்ம்…?”
இந்தத் தடவையும் நானே ஜெயிச்சிட்டேன்..!! அதுக்கு பயலுகளுக்கு நம்ம தோட்டத்து வீட்ல தண்ணி பார்ட்டி வச்சிருக்கேன். நீங்க அன்னமா அக்காவ சாப்பாடு தர சொல்லி சாப்பிட்டுக்கோங்க.. நான் அங்கேயே தங்கிட்டு காத்தால வரேன்..” என சொன்னவன் அவரின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி சென்றுவிட்டான்.
செல்லும் மகனை இயலாமையுடன் பார்த்து இருந்தவர் மனதில் அவனைப் பற்றிய எண்ணங்களே..
“தன் சாபம் தன் மகனையும் தாக்குதோ..? நான் தான் அன்னை இல்லாமல் வளர்ந்தேன் இவனுக்கு இருந்தும் இல்லாமலும் போனதே… இவனை வளர்ப்பதில் எந்த இடத்தில் சறுக்கினேன்..?” என நினைத்தவர் தொய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தார்.
“மாப்பிள..வாடா.. டேய் நீ தள்ளிப் போடா ராவணன் உக்காரட்டும்..” அருகில் இருந்தவனை விலக சொல்ல ராவணனை தன் அருகில் அமர்த்திகொண்டான் பாண்டி…
என்னடா.. எல்லாம் ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கு…
ஆமாடி… மாப்பிள்ளை நீ வரதுக்கு நேரமாச்சுன்னு நாங்களே ஆரம்பிச்சிட்டோம்..!!
அப்புறம் மாப்பிள்ளை இன்னைக்கு அந்த வளவனை வச்சி செஞ்சிட்ட போல.. அவனுக்கு வேணும்.. எப்ப பாரு நியாயம், நீதி, தர்மம் பேசிகிட்டு அவனெல்லாம் *** மாப்பிள்ளை… என அவன் முடிக்கும் முன் ஓங்கி மிதித்து இருந்தான் ராவணன்..
தூ..தெறிக்க.. யார பார்த்து..? என்ன வார்த்தை டா சொன்ன..?? அடிங் ஓசி குடி வாங்கி குடிக்க வந்த நாயே..! அவனை பத்தி பேசுற அருகதை கூட உனக்கு கிடையாது.. என அவன் நெஞ்சில் எட்டி மிதித்தவன்.. அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான்…
கீழே விழுந்தவனை பக்கத்தில் இருப்பவன் தூக்கி விட… அவனைத் தடுத்துத் தள்ளியவன்.. தானே எழுந்து நின்றான்.
“என்னடா..?? நீ சொல்றதைத்தான் கேட்பான் அது..? இதுன்னு.. சொன்ன..?”. இப்போ உன்னையே அடிச்சிட்டு போறான்..ஹா..ஹா..!! பார்த்துக்கடி அவன் உன் கைய விட்டு போனா.. இந்த பவுசு..! பந்தா..! பண்ணிக்கிட்டு சுத்த முடியாதுடியே..!!” என பாண்டி மீது ஏற்கனவே பொறாமையில் இருந்தவர்கள் இப்போது வாய்ப்பு கிடைத்ததும் ஏளனம் செய்திட…
முகம் கறுக்க நின்றவன் நெஞ்சில் வன்மம் செந்தணலாக கொழுந்து விட்டு எரிய…
“உன்னை அவ்ளோ சீக்கிரம் விடமாட்டேன் ராவணா..!! என் மேலயே கைவச்சிட்டல்ல…??” என அவன் அணிந்திருந்த சட்டையில் நெஞ்சுப் பகுதியில் இருந்து ராவணனின் கால் தடத்தை தொட்டு.. “இதுக்கு பதில் சொல்ல வைக்கலைன்னா நான் பாண்டி இல்லடே..!!” என கறுவினான்…
“டேய்ய்ய்ய்ய்ய்ய்..!! ராவணா.. எங்கடா இருக்க..?? வெளிய வாடாஆஆஆஆ…!!”
“ராவணாஆஆஆ…!!” என கத்தியபடி வீடு முழுவதும் ராவணனை கொலைவெறியுடன் தேடினான் வளவன்.
“என்னப்பா வளவா..?? என்னாச்சு ஏன்பா ராவணனை தேடுற..??” என வந்தார் ராஜதுரை…
“எங்க.. உங்க தறுதலை புள்ள..? நேர்மையா ஜெயிக்க துப்பில்லாம ஏமாத்தி ஜெயிச்ச நாய்க்கு…! என்ன மெத்தப்புல..?? யாரு மேல கை வைக்குறான்… அதும் ஆள் இல்லாத நேரம் பார்த்து பேடி மாதிரி, பின்னாடி இருந்து அடிச்சிருக்கான்… எங்க அவன்.. என்ன நான் வரேன்னு ஒளிஞ்சிகிட்டானா..***..”
தம்பிஈஈஈ…!!! வார்த்தைய விடாதப்பா.. அவன் நிச்சயமா நீ சொல்ற மாதிரி பண்ணி இருக்க மாட்டான்..!! அவன் நீ நினைக்கிற மாதிரி இல்ல..! என்றவரை இடைமறித்தான்…
போதும்..!! அவன் புகழ் பாடறத பத்தி கேட்க வரல… உங்க புள்ள உங்கள மாதிரி தான இருப்பான்..?? அவன் யோக்கியதை என்னனு ஊருக்கே தெரியுமே..!!
எவன்டாஆ…? அது காலையிலேயே நடு வீட்டுக்குள்ள வந்து சலம்பிகிட்டு இருக்குறது… எப்ப்பா…!! நைட் அடிச்ச சரக்க இப்படி கத்தியே தெளியவச்சிட்டானே..ஆ..!! என தலையில் கை வைத்தபடி கீழே இறங்கி வந்த ராவணனை பாய்ந்து சென்று அவன் சட்டையை கொத்தாக பற்றினான் வளவன்…
எவ்ளோ திமிரு இருந்தா..? எங்க அப்பா மேல கை வச்சி இருப்ப நாயே..!! என அவன் சட்டை காலரைப் பிடித்து தரதரவென படிகளில் இழுத்து வந்து ஹாலில் தள்ளினான்.
யே.. பார்த்து…!!! எதுக்குடா இப்போ சட்டைய கசக்குன..? என அவன் கோவத்தை அலட்சியம் செய்து சட்டையே முக்கியம் என்பது போல் அதை நீவினான்…
அவன் செயல் வளவனை மேலும் கடுப்பாக்கியது…
நர நரவென பற்களை கடித்தபடியே உன்னை… என ராவணனை அடிக்கப் பாய்ந்தான்…
நிறுத்து..!! இப்போ எதுக்கு இங்க வந்து வீணா சலம்புறவன்…
என அவன் தாக்குதலை ஒற்றை கையால் அனாயாசமாக தடுத்தான்.
எதுக்குடா என் அப்பா மேல கைவச்ச..? என மீண்டும் ராவணன் சட்டையை பற்ற..
அவன் கைகளை தட்டி விட்டவாறு “சொன்னா.. கேளு..? எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! ஆமா நான் எதுக்குடா அசிங்கமா தோத்தவனை அடிக்கனும்..!!”
உனக்கு நேர்மையாக விளையாடி ஜெயிக்கத் துப்பில்லையா? ஏமாற்றி ஜெயித்துவிட்டு உனக்கு இவ்வளவு ஏத்தமா??
பாருடா..!! ஜெயிக்கத் துப்பில்லாதவன் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கிட்டு இருப்பான்.. சாதிக்கிறவன் சத்தம் போடாம போயிட்டே இருப்பான்.. நீ வெறும் சவடால் கேஸ், ஒன்றுக்கும் ஆகாதவன்..!
“ஓ…அப்போ நான் சாதிக்க மாட்டேன்னு சொல்றியா.. அது சரி என்ன விடு, சார் இவ்ளோ போட்டில ஏமாத்தி ஜெயிச்சிங்கள்ள.. உன்னால என்ன கிழிக்க முடிஞ்சது.. அவ்ளோ ஏன் உனக்கு ஊருக்குள்ள என்ன கூப்பிடுறாங்கன்னு தெரியுமா.. “தறுதலை.” இந்த மாதிரி நிறைய இருக்கு.. ஆனா உன்ன மாதிரி இல்ல.. இப்போ படிச்சு முடிச்சிட்டு அடுத்து ஒரு நல்ல உத்தியோகம்னு மேல மேல போயிட்டே இருப்பேன்.. ஆனா நீ..அத நான் சொல்லி தான் தெரியணுமா என்ன..?? மலைய பார்த்து நாய் குரைக்குதுன்னா மலைக்கு மவுசு குறைஞ்சிடுமா என்ன?” என நிதானமாக கேட்டு வைத்தான் வளவன்…
ஏய்…. யாரைப் பார்த்து நாயினு சொல்ற.. நீ மலையா..?? அப்போ உன்னை விட ஒரு படி மேல நான் வரல… ம்.. ம்.. ம்…. வந்து காட்டுவேன்.. இதை சவாலாக வச்சிக்கோ.. இப்போ இங்க இருந்து கிளம்பு..!!
இங்க ஒன்னும் விருந்து சாப்பிட வரல.. வந்த மஹாலக்ஷ்மி வச்சி வாழ தெரியாதவன் வீட்டுக்கு வரனும்னு எனக்கு என்ன தலையெழுத்து.. எங்க அப்பாக்காக தான் வந்தேன்.. நீ தான் காரணம்னு தெரிஞ்சுது அப்போ உன் முன்னாடி நின்னு இப்படி பேசமாட்டேன் அருவா தான் பேசும்…!!
முடிச்சாச்சுனா கிளம்பு..!
என தாடை இறுக கூறினான் ராவணன்.
ஏல மக்கா…! ராவணன் கோவமா இங்கதான்டா வந்துட்டு இருக்கான்…!! அவன் கையில கிடைச்சோம் செத்தோம்டி..!!” என சிலர் தெறித்து ஓட…
புயல் என அங்கே வந்தவன் இருந்தவர்களைப் போட்டு வெளுத்து எடுக்க..
“எவன்ல.. எவன்ல..? அது என் மாமன் மேல கைய வச்சது..” என அங்கு இருந்தவர்களைப் பந்தாடினான்..
“ஐயோ..! மாப்புள..! சத்தியமா நாங்க எதுவும் பண்ணலடே. நீ அன்னைக்கு சொல்லும் போதே.. அவங்க உனக்கு எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சு போச்சு… அதுக்கு அப்புறம் அவங்க மேல கை வைக்கிற தைரியம் எங்களுக்கு இல்லலே” என அவன் காலைப் பிடித்துக் கொண்டு பாண்டி கதற..
“நீங்க செய்யலைன்னா எவன்டா அத செஞ்சது..!”
“எங்களை நம்பு மாப்புள. உன்கூடவே இத்தனை வருஷமா சுத்துறோமே. எங்களை இவ்ளோ தானா புரிஞ்சி வச்சி இருக்க..?” என பாண்டி கூறியதும் ஓங்கிய கையை உதறிவிட்டு சென்று ஓர் இடத்தில் அமர்ந்து விட்டான்…
“மாப்புள என்னடா..?”
‘ப்ச்.. நான் தான் அவங்க அப்பனா ஆள் வச்சி அடிச்சேன்னு வந்து கத்திட்டு போறான்..’
“சரி விடு…! மாப்புள, சரக்கு அடிச்சா எல்லாம் சரியாகிடும். நம்ம முத்து தங்கச்சிக்கு கண்ணாலம்ன்னு பெரிய பார்ட்டி வச்சு இருக்கான்.. அங்க நம்ம ‘கும்ஸ்’ ஓட ஆட்டம் கூட ஏற்பாடு பண்ணி இருக்கான்.. “என பல்லை இளித்து கொண்டு சொன்னதும்… ராவணன் அவனை முறைக்க…
இரு கன்னத்தில் கை வைத்து பிடித்துக் கொண்டு, “உனக்கு பிடிக்காது தெரியும் மாப்பிள்ளை. அதனால நீ சும்மா வந்து சரக்கு மட்டும் அடி மாப்பிள்ளை. அவன் யாரு, நமக்காக எல்லா வேலையும் செய்றவன். நீயே வரலைனா எப்படி?” என நயமாக பேசி ராவணனை அழைத்து சென்றான்.
காது அருகில் கேட்ட ஒப்பாரி சத்தத்தில் கண்களை திறக்க முடியாமல் புரண்டு படுத்தவன், மீண்டும் விடாது சத்தம் கேட்க சிரமப்பட்டு இமைகளை பிரித்துப் பார்க்க, அவன் அருகில் அரைகுறை ஆடையில் கும்ஸ் அழுது கொண்டு இருக்க, கொஞ்சம் தள்ளி ஊர் மக்கள் அனைவரும் நிற்க,
“என்னம்மா கும்ஸ், காலையிலே அடுத்த கச்சேரிக்கு ஒத்திகை பாக்குறியா? அது சரி என்ன ஒப்பாரி படுற? ஓஓஓஓ ஏதாவது எழவு வீட்ல ஆட போறியா…!!”
“ஐயோ..! என்ன நாசம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறானே.. இத தட்டி கேக்க யாருமே இல்லையா..?” என கும்ஸ் குமுறிக் கொண்டு அழ,
“ஏப்பா.. ராவணா… என்னய்யா இதெல்லாம்.. உங்ககிட்ட இருந்து இத எதிர்பார்க்கவே இல்ல…”
யோவ்..! என்னை இவ என்னனா ஒப்பாரி வைக்குறா..?? நீங்க என்னனா இப்படி பண்ணிட்டீங்க… நோப்புடி பண்ணிட்டேன் நு.. காலையில கடுப்பு ஏத்திகிட்டு.. எனது தலை வலி பாரம் தாங்காமல் கத்த…
என்னப்பா ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற.. நீ தான் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்டதா சொல்லுது…
எவ அவ..!
என்றபடி கும்ஸை பார்க்க..
திருட்டு முழி முழித்தபடி நின்றவள் சுதாரித்து கொண்டு மக்கள் முன்பு போய்… ‘ஐயா.. நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க.. என முறையிட…
அவர்கள் வாய்க்கு அவலாக கிடைத்தான் ராவணன்… அவன் செய்து இருப்பான் என ஒரு தரப்பினரும்… அப்பா கிட்ட வளர்ந்த புள்ள அப்படித்தான் இருப்பான் என சிலரும் பேச…
இதில் ஏற்கனவே பெண்கள் விடயத்தில் ராவணானிடம் தலையில் அடிவாங்கியவன்.. இதுதான் சந்தர்ப்பம் என்று அவனுக்கு எதிராக சாட்சி கூற.. ராவணனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக முடிவு எடுக்க…
வெடிக்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டு இருந்தான் இராவணன். “தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும்” ஓர் ஆத்மாவின் கோபம் அது!!! சூழ இருப்போரின் சூழ்ச்சியால் பழிச்சொல் ஏற்றுச் சென்றான் இராவணன்.



