அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது…
வானம் புதுப் பெண்ணின் முகம் போலத் தெளிவாகக் காட்சி அளித்தது…
காலைத் தென்றல் பூமியை மென்மையாக வருடிச் சென்றது…
அவிநாசியின் வீடு மட்டும் வழக்கத்திற்கு மாறாகப் பரபரப்பாகக் காட்சி அளித்தது… வாசலில் செருப்புகள் குவிந்து கிடந்தன.
ஊர் பெரியவர்கள் அனைவரும் அவிநாசி வீட்டுத் கூடத்தில் குழுமியிருந்தனர்… ஏதோ காரசாரமான விவாதம் போய்க்கொண்டிருந்தது…
ஒருவேளை தீரனின் திருட்டுத் தனம் தெரிந்து போச்சோ? அதுக்கெல்லாம் சான்ஸ் இல்லையே, வாங்க எதுக்கும் கிட்ட போய் என்னனு கேட்போம்…
அப்புறம் இந்த வருஷம் திருவிழாவை விமர்சையா செஞ்சுபுடனம் அவிநாசி…
என ஊர் பெரியவர் சொல்ல…
ஆமா அண்ணே, இத்தனை வருஷமும் உனக்கு எனக்குன்னு ஊர் மரியாதைக்காக அடிச்சிக்கிட்டு, திருவிழாவைச் சரியா நடத்த முடியாம போய்டுச்சு… ஆனால் கடவுள் புண்ணியத்துல இந்த வருஷம் உங்களுக்கு ஊர் மரியாதை கிடைச்சது, அதுல எங்களுக்கும் சந்தோஷம் தான்…
இத்தனை வருஷம் தடைபட்டு போன திருவிழாவைச் சிறப்பா செஞ்சே ஆகணும்; மத்த ஊர்க்காரங்க முன்னாடி போன நம்ம ஊர் மானத்தை இந்த வருஷம் நாம தூக்கி நிறுத்தி ஆகணும் என்ன அண்ணேன்னு நான் சொல்றது, என பஞ்சாயத்து போர்டு தலைவர் ராசு சொல்ல,
அதனால என்ன ராசு, நீ நினைச்ச மாதிரி நம்ம ஊர் மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி இந்த வருஷத் திருவிழாவை ஜாம் ஜாம் செஞ்சுட்டா போகுது என அவிநாசி ஒப்புதல் கொடுத்தார்…
அப்புறம் என்னையவா அவிநாசியே சொல்லிட்டார், இனி ஆக வேண்டியது பார்க்க வேண்டியதுதான்… வீட்டுக்கு வீடு வசூல் பண்ணி வர காசுல இந்த வருஷ திருவிழாவை இதுவரைக்கும் நடத்தாத மாதிரி செய்றோம், என்னைய நான் சொல்றது சரிதான்… கடா மீசை கேட்க…
அண்ணே நீ ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லு, இந்த வருஷ திருவிழாவில தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சாட்டாம், கோலாட்டம், வானவேடிக்கை, நைட் ரெக்கார்ட் டான்ஸ்னு எல்லாத்தையும் போட்டு அசத்தி புடுங்குவோம் அண்ணே என அல்லக்கை ஒன்று முண்டியடிக்க…
எல்லாம் சரிதான்டா குப்பா, ஆனால் இதையெல்லாம் எடுத்து கட்டி செய்ய நமக்கு என்ன வயசா இருக்கு… என பல்லு செட் போட்ட போக்கை வாய் தாத்தா கேட்க…
அதுக்கு என்ன அண்ணே, நம்ம ஊர்ல இளந்தாரி பயலுகளுக்கா பஞ்சம்? அதான் தோதா நம்ம அவிநாசி அண்ணா மகன் ஆருத்ரன் இருக்கானே, அவன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சா அவன் கூட்டாளிகளோட சேர்த்து செஞ்சுட்டுப் போறான்…
காலம் போன காலத்துல இதுங்களுக்கு ரெக்கார்ட் டான்ஸ் கேக்குதாம். அந்த லோலாயி தலையனுக்கு லொள்ளு பார்த்தியா மச்சான் என நண்பர்களோடு சேர்ந்து கேலி பேசிக் கொண்டு இருந்தவனை கோர்த்து விட்டனர்…
அவிநாசி தன் மகனைப் ஓர் பார்வை பார்க்க ருத்ரனும் அதே சமையம் எதர்சையாக அவரைப் பார்த்தான்… தந்தையின் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், அவர் அழைக்காமலேயே அவர் அருகில் வந்தான்…
என்னப்பா…
இந்த வருஷத் திருவிழா ஏற்பாடு பொறுப்புகள் அனைத்தையும் நீதான் பார்த்துக்கணும்… நம்மள நம்பி கொடுத்து இருக்காங்க, அதுக்கான மரியாதையை காப்பாத்த வேண்டியது உன் பொறுப்பு.. நீ என்ன செஞ்சாலும் சரி, எப்படி செஞ்சாலும் சரி, அதுல நம்ம குடும்பக் கௌரவம் அடங்கியிருக்கு என்கிறத ஞாபகம் வச்சிக்கோ என்று அவிநாசி, உன்னால் முடியுமா என்று கேட்கவில்லை; நீ என்று மகனுக்குக் கட்டளையிட்டு முடித்து வைத்தார்…
தந்தையின் குரலில் இருந்த கடினத்தன்மையை உணர்ந்த ருத்ரன்…
“பொறுப்பை என்கிட்ட விட்டுட்டீங்க, இல்லை, நீங்கள் எல்லாம் கவலை இல்லாம நடக்க போறதை வேடிக்கை பாருங்க, இனி திருவிழா எங்க பொறுப்பு…” எனச் சொன்னத் தோரணையே தோரணை தான்…
அன்று வழக்கத்தை விட வெகு தாமதமாக எழுந்தாள் தேன்மொழி. கல்லூரி விடுமுறை என்பதாலோ என்னவோ அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை…
கண் விழித்தவளுக்கு ஏனோ எழுந்து நடமாடவே பிடிக்கவில்லை… உடலும் உள்ளமும் அவளுக்கே பாரமாகிப் போனது… அவள் அசையும் போதெல்லாம் ஜல் ஜல் என்று எழும் கொலுசின் மணியோசை அவள் மனதை இன்னும் கலவரப்படுத்தியது… எங்கே எழுந்து நடமாடினால் கண்டுபிடித்து விடுவார்களோ என்று தானே அவள் உறங்குவது போல் நாடகமாடியது… எத்தனை நேரம் இப்படியே இருப்பது? இன்னும் சிறிது நேரத்தில் எழுந்து செல்லாவிட்டால் நிச்சயம் அண்ணனும் தந்தையும் அவளைப் பார்க்க மேலே வந்து விடுவார்கள்; எனவே வேண்டா வெறுப்பாக எழுந்து தயாராகி கீழே சென்றாள்…
கள்ளத்தனமாகப் பாலைக் குடிக்க வரும் பூனையைப் போல் பதுங்கிப் பதுங்கி வந்தாள் தேன்மொழி. எங்கே காலை அழுத்தி ஊன்றினால் கூட கொலுசு சத்தம் கேட்டுவிடுமோ என்கிற பயம் அவளுக்கு… எப்படியோ வெகு கவனமாக, பிறர் கவனத்தை ஈர்க்காமல் சோஃபா மீது அமர்ந்து, காலைப் பிறர் பார்க்காத வண்ணம் மறைத்துக் கொண்டவளுக்கே புரியவில்லை, எதற்காக இத்தனை கள்ளத்தனம் என்று…
கொலுசு சிந்தனையில் இருந்தவள், அருகே ருத்ரன் வந்து அமர்ந்ததை கவனிக்கவில்லை…
“பாப்பா…” என ருத்ரன் உறக்கத்திலிருந்து அழைக்க, திடுக்கிட்டுப் போய் மலங்க மலங்க விழித்தவள்…
“என்னண்ணா…?”
என இயல்பாகக் கேட்க முயன்றாலும்…
குரலில் இருந்த தடுமாற்றம் ருத்ரனின் கவனத்திலிருந்து தப்பவில்லை…
“உடம்பு சரியில்லையா பாப்பா…?” என பரிவுடன் கேட்டான்…
“இல்லையே அண்ணா…” என அவசரமாக மறுத்தாள்…
“இல்லையே, முகமே சரியில்லையே… கண்ணு ரெண்டும் சிவந்து கிடக்கு…”
“ராத்திரி சரியா தூங்கலையா…?” என நேரடியாகக் கேட்க…
தேன்மொழியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது…
நேற்றிரவு நினைவுகள்…
மின்னல் போல அவள் மனதில் தோன்றி மறைந்தன…
“அது… கொசு… மூட்டைப் பூச்சி… தூக்கம்…” என வார்த்தைகளைத் தேடினாள்…
அவளின் தடுமாற்றத்தைக் கவனித்த ருத்ரன்…
“பாப்பா, நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. உனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உனக்கு அண்ணன் நான் இருக்கிறேன். என்கிட்ட தயங்காமல் சொல்லு, நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன்” என ருத்ரன் தன் தங்கையின் தலையை பரிவோடு வருடி விட்டான்…
அவன் அக்கறையில் தேன்மொழியின் மனம் மேலும் கனத்து போனது… எதையும் சொல்ல முடியாத நிலையில் பாவியாக நிற்க வைத்த விதியை அந்த நொடி அறவே வெறுத்தாள்…
“நீ இருக்கும் போது எனக்கு என்ன அண்ணா, பிரச்சனை வரப் போகுது?” என இயல்பாகப் பேசி மறைக்க முயன்றாள்… அவள் கண்களை ஆழமாகப் பார்த்த ருத்ரன்…
“என்னவோ நீ சொன்னால் சரி, எனக்கு ஊர் திருவிழா வேலை இருக்கிறது, நான் கிளம்புகிறேன்” என எழுந்தவன் கண்கள், நொடிக்கும் மேல் தேன்மொழியின் பாதத்தில் பதிந்தது… அண்ணன் எங்கே கண்டுகொள்வானோ என்கிற பயத்தில் தன் கால்களை மடித்து சோஃபா அடியில் சாமர்த்தியமாக மறைத்தாள்…
அவனும் எதுவும் கவனிக்காதவன் போல் சாதாரணமாக வெளியேறப் போனவன், வாசல் அருகில் நின்று திரும்பி, “தேனு, இனிமேல் உன்னை எந்த கொசுவோ மூட்டைப் பூச்சியோ தொந்தரவு செய்யாது. அதற்குப் பூச்சி மருந்து அடித்துத் தீர்க்க ஏற்பாடு பண்ணியாச்சு. இனி நிம்மதியா தூங்கலாம்,” என்றவன் வார்த்தையில் வாயில் கை வைத்து அரண்டு போய் முழித்தாள்…
ருத்ரன் சொல்லிச் சென்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் அவளுக்குப் புரியாமல் போகுமா…? எனில், ருத்ரன் தீரனைக் கண்டு விட்டானா…? இல்லையே, கண்டு இருந்தால் நிச்சயம் இந்நேரம் இங்கு ஒரு கலவரமே வெடித்துக இருக்குமே… ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக அண்ணன் அமைதியாகத் தானே இருக்கிறான்… என்று குழம்பினாள், தேன்மொழிக்கு எங்கே தெரியும்
ருத்ரனின் அமைதிக்கு பின்னால் ஒரு புயல் வீசக் காத்திருக்கிறது என்பதை அப்பேதை அறிவாளா? அந்தப் புயலில் அவளது மொத்த வாழ்க்கையும் சுருட்டி எடுத்துச் செல்லப்படும் என்பதை அவள் அறிந்து இருக்கவே மாட்டாள்…
ருத்ரன் வீட்டிலிருந்து நேராகச் சென்று தன் தந்தையைச் சந்தித்தான்…
“என்னப்பா, திருவிழா வேலை தலைக்கு மேலே இருக்கு, நீ இங்க வந்து நிக்கிறனா ஏதாவது முக்கியமான காரணம் இருக்குமே, என்னனு சொல்லு ருத்ரா…” என்றுவரை உள்வாங்கியபடி எதிரே அமர்ந்து இருந்தான் ஆருத்ரன்…
“நம்ம தேனுக் கல்யாணத்தைப் பற்றி பேசணும்ப்பா…”
“அதான் ஏற்கனவே திருவிழா முடிஞ்சதும் பேசலாம் சொல்லி இருந்தேனே ருத்ரா…”
“அது வரைக்கும் நாம பொறுமையா இருக்க முடியாதுப்பா… எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் தேனுக்கு வீட்டோட மாப்பிளையைப் பார்க்கிறது நல்லது” என ருத்ரன் பூடகமாகப் பேசினான்…
“எதுக்கு ருத்ரா இவ்வளவு அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அவள் இன்னும் சின்னப் பிள்ளையா இருக்காடா…” எனத் தகப்பனாகப் பேசினார்.
“ப்ச் அப்பா! நீங்கள் அவளைச் சின்னப் பிள்ளையாத்தான் பார்க்கிறீங்க, ஆனால் நம்ம பிள்ளையோட வாழ்க்கையில இன்னொரு களங்கம் ஏற்படாம இருக்க, அவளைப் பத்திரமா கரை சேர்த்திடணும்னு நினைக்கிறேன்…” என ருத்ரன் தீவிரமாகச் சொன்னான்…
அவன் முகத்தை கூர்ந்து பார்த்தவர், என்ன என்பது போல் கேட்டார்…
“தீரன்” என ஒற்றைச் சொல் ஓராயிரம் விளக்கங்களைத் தந்துவிட… கண்களை ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்தவர்
உன் இஷ்டப்படியே செய் ருத்ரா… ஆனால் தேனுக்கு நீ பார்க்கிற மாப்பிள்ளையில் எந்த விதத்திலும் சிறு குறை இருக்கக் கூடாது… எனச் சிறு கண்டிப்புடன் சொன்னார்…
கவலையே படாதீங்கப்பா, தேனுக்கு நான் பார்த்த மாப்பிள்ளை அந்தஸ்தலிலும் சரி, குணத்திலும் சரி, நம்ம வீட்டுக்கு எல்லா வகையிலும் பொருந்திப் போகிற பையன் தான். அதைவிட நம்ம தேனுவை அவன் கண்ணும் கருத்துமா நிச்சயமா பார்த்துப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என அறுதியிட்டுச் சொன்னான்…
யார் ருத்ரா அது என அவிநாசி வியந்து கேட்க…
நம்ம அறிவு தான்…


