தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே.-10

காரிருள் கவ்வியே மேகத்தினை சிறைபிடிக்கவே வந்தான் சூர்யதேவன்…

கீச்… கீச்… என்ற குருவியின் சத்தத்தில் மெல்லக் கண் மலர்ந்தாள் தேன்மொழி… அவள் செவ்வரளி கண்களின் ஓரம் காய்ந்த கண்ணீரின் அடையாளம் நேற்றைய எச்சமாக இருந்தது…

கனவின் தாக்கம் இன்னும் முழுதாக விலகாமல் இருந்ததால்… அவள் உடல் சோர்வைக் காட்டியது… இடையிலும் மார்பிலும் இன்னும் ஆணின் சூடு தனியாமல் தகித்தது… ஒருவேளை கனவில்லையோ என்று தன் உடலை முழுவதும் ஆராய்ந்தவள், ஒன்றும் ஆகவில்லை என்று முழுதாக அறிந்த பின்பே ஆசுவாசம் அடைந்தாள்; போதாத குறைக்கு அவள் அறைக்குள் ஆள் வந்து சென்றதற்கான எந்தச் சுவடும் இல்லை… சாற்றிய ஜன்னல் கதவுகள் உட்புறமாகத்தான் பூட்டப்பட்டிருந்தன…

நல்லவேளை கனவுதான், ஆனால் எப்படிப்பட்ட கனவு அது! அதன் தாக்கம் இன்னுமும் அவள் உடலில் எஞ்சி இருக்க, கண்ணை மூடி நிதானித்தவளின் செவிகளில் தீரனின் சிரிப்புச் சப்தமும்,

அவனது கரகரப்பான குரலும் இன்னுமும் அவள் செவியோரம் ஒலிப்பது போல இருந்தது…

“கனவு…” என்று தனக்குத்தானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டவள் பெருமூச்சு விட்டாள்…

க்விக் க்விக் என ஆர்ப்பரிக்கும் குருவியைக் கவனித்தாள்; ஆம், அன்று அவள் காப்பாற்றிய அதே குருவிதான்… அதைத் காப்பாற்றித் தன்னிடத்திலே அதற்கு அடைக்கலமும் அளித்து விட்டாள்… அது அவள் அறையில் எங்கும் சுற்றித் திரிந்து விளையாடிக்கொண்டிருந்தது…

அதற்கென ருத்ரன் கூண்டு வாங்கி வந்த போது… “வேணாம் அண்ணா, பறவையா இருந்தாலும் அதற்கும் சுதந்திரம் உண்டு… அது விருப்பம் போல என் அறையிலே இருக்கட்டும், நான் பார்த்துக்கிறேன்…” என்றுவிட, அதற்குப் பிறகு அக்குருவிக்கு கட்டுப்பாடு விதிப்பவர்கள் யார் இருக்கப் போகிறார்கள்? சர்வ சுதந்திரம் தான்…

சிறக்கொடிந்த காலத்திலே தேன்மொழி அதை பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்டதால்… அவ்வீட்டையே தன்னுடைய இடமாகப் பழகிக் கொண்டது… பகலில் எங்கு பறந்து திரிந்தாலும் சரி…

மாலை வந்ததும் தவறாமல் அவள் ஜன்னலைத் தேடி வந்துவிடும்… இரவு அவளுடைய பாதுகாப்பில் தூங்கியே பழகிவிட்டது… ஓரிவு ஜீவனிடம் இருக்கும் இந்த நன்றிக் கூட மனிதப் பிறவிகளில் சிலருக்கு இருப்பதில்லை…

காலையில் தேன்மொழி ஜன்னலைத் திறந்து விடும்படி அவளை எழுப்புவதும் அதன் வழக்கமாக ஆகிவிட்டது, இன்றும் அப்படித் தான்…

தேன்மொழி இன்று சற்று தாமதமாக எழுந்ததால், குருவி கூச்சலிடுகிறது போல என நினைத்துக் கொண்டு

“என்ன குட்டி, உனக்கு ஊர் சுற்ற நேரம் ஆகிடுச்சா…?”

என்று விரிந்த முகமாக அதன் அருகே சென்றாள்…

அங்கே மேஜை மீது அமர்ந்து இருந்த குருவியின் காலில் ஏதோ பலமான பொருள் கட்டப்பட்டிருந்ததால், அதனால் பறக்க முடியாமல் தவித்தது… என்ன அது என்று அதன் காலில் மின்னிய பொருளைக் கண்டு திடுக்கிட்டாள் தேன்மொழி…

அது வெள்ளி கொலுசு…

நேற்று வரை இல்லாத ஒன்று… இன்று எப்படி என நடுங்கிய கரத்தோடு குருவியைத் தூக்கிப் பார்த்தவளுக்கு…

இதயம் ஒரு நொடி நின்றே போனது…

ஏனெனில்…

அந்தக் கொலுசை அவள் ஏற்கனவே பார்த்து இருக்கிறாள்… மேலும் அது வெறும் கொலுசு மட்டுமல்லவே… அதன் அருகில் இருந்த ஒரு சிறு காகிதத் துண்டு ஒன்றை நடுங்கிய கைகளோடு பிரித்து வாசித்தவளுக்கு உலகமே இருண்டது..

“அடைபட்ட குருவி போல்…

உன்னையும் விரைவில் சிறைபிடிப்பேன்…”

“காத்திரு – தீரன்” என்று எழுதி இருந்ததைக் கண்டவளுக்கு, அந்த வார்த்தைகள் அவள் செவி அருகே தீரனின் குரலில் ஒலித்தது… திடுக்கிட்டுப் பார்த்தவளுக்கு அறையில் யாரும் இல்லை…

இதில் நேற்று குளக்கரையில் நடந்த சம்பவம் மின்னல் போல நினைவுக்கு வந்து போனது… அதன் தொடர்ச்சியாக வந்த கனவும்…?? கனவு என்று நம்பியவள் தன் முட்டாள்தனத்தை அறவே வெறுத்தாள்…

நிச்சயமாகத் தீரன் நேற்று இரவு தன் அறைக்குள் வந்துருக்கிறான்…

ஐயோ என அலறியது அவள் மனம்…


தீரனின் வருகையை நினைத்து தனக்குள்ளாகவே மருகிக் கொண்டு இருந்தவள்…

இயந்திரம் போல் தயாராகி கீழே இறங்கி வந்தாள்…

வீடு வழக்கம் போலவே இயங்கிக் கொண்டு இருந்தது…

ஆனந்தவள்ளி சமையலில் மும்முரமாக இருந்தார்…

அவிநாசி செய்தித்தாளில் மூழ்கி இருந்தார்…

ருத்ரன் எதையோ தன் சகாக்களோடு மும்முரமாகப் பேசிக் கொண்டு இருந்தான்…

எல்லாமே வழக்கம் போலத்தான் இருந்தது…

ஆனால்…

அவளால் மட்டும் அவர்களைப் போல் இயல்பாக இருக்க முடியவில்லை…அவளுள் பெரும் பூகம்பம் ஒன்று மௌனமாக அரங்கேறிக் கொண்டு இருந்தது…அந்த நடுக்கத்தை வெளியே காட்டாமல் மறைக்க அவள் போராட வேண்டியிருந்தது…

ஆனந்தவள்ளி உணவைக் கொண்டு வந்து மேஜையில் வைக்கவும், தேன்மொழி வரவும் சரியாக இருந்தது…

தேன்மொழி வந்ததும் அனைவருமே ஒன்றாகச் சாப்பிட அமர்ந்தனர்…

“அப்பா… டெண்டர் வேலை எவ்வளவு தூரம் வந்திருக்கிறது…?”என ருத்ரன் பேச்சைத் தொடங்க,

“இன்னும் இரண்டு நாள்ல ஆரம்பிச்சிடலாம் ருத்ரா…”என அவிநாசி சொல்ல,

அதற்கு மேல் அதைப் பற்றி இருவரும் தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்… அப்போது எதார்த்தமாகத் தேன்மொழியைப் பார்த்தான் ருத்ரன்…

உணவைத் தட்டில் வைத்துக்கொண்டு அளந்தபடி இருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான்… பொதுவாகவே தேனுக்குச் சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து தொழில் பற்றிப் பேசினால் பிடிக்காது…

உட்கார்ந்து பேச அவ்வளவு இடம் இருக்கும் போது உங்களுக்குச் சாப்பாடு மேஜை தான் கிடைச்சதா என்பவள்… இன்று இவ்வளவு பேசிய பிறகும் அதை கவனிக்காமல் எதைப் பற்றி யோசிட்டுக் இருக்கிறாள்…

“தேனு…”என்ற ருத்ரனின் கணீர் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்…

“என்ன அண்ணா…?”என பதறியபடி கேட்டவளை வினோதமாகப் பார்த்தவன்…

“என்னடா ஆச்சு…? உன் முகமே சரியில்லையே…” என அக்கறையுடன் கேட்டான்…

“ஒ… ஒன்னும் இல்லண்ணா…”என்று அவசரமாக மறுத்தவள்…

“நேத்து கோவில்ல ரொம்ப நேரம் நின்னேன்ல… மேள சத்தம் எல்லாம் சேர்த்து, கொஞ்சம் தலைவலி, அசதி அதான் அண்ணா…” என பொய்யைச் சொல்லி சமாளித்தாள்…

“அசதியா இருந்தா காலேஜ்ல லீவ் போட வேண்டியதுதானே பாப்பா…” எனக் கரிசனையாகச் சொல்லவும்…

தேன்மொழி முனுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. அவள் முகம் பார்த்து, கண் பார்த்து அவள் தேவைகளைத் தீர்த்து வைக்கும் உறவுகளிடமே அவள் பொய் சொல்ல வேண்டி வரும் என்று ஒருநாளும் அவள் நினைக்கவில்லை…

“இல்லை அண்ணா, இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான பிராக்டிகல் இருக்கு, நான் பார்த்துக்கிறேன் அண்ணா” என்று மேலும் தொடர்ந்து நின்றாள். எங்கே அவளே உண்மையை கூறி விடுவாளோ என்று பயந்து கல்லூரிக்கு ஓடினாள்…

“ஏங்க, நம்ம தேனுக்கு ஒரு நல்ல வரன் வந்து இருக்கு. பேசி நீங்கள் ஒரு வார்த்தை சொன்னா முடிச்சிடலாம்” என்றபடி வந்தார் ஆனந்தவள்ளி…

“இப்போ என் பொண்ணுக்கு என்ன வயசு ஆயிடுச்சுன்னு, அவளுக்கு கல்யாணம் பண்ணச் சொல்ற…” என அவிநாசி ஆதங்கம் கொள்ள,

“நல்லா சொன்னிங்க போங்க… விட்டா நேத்து பிறந்த குழந்தைன்னு மடியில் போட்டு தாலாட்டுவீங்க போல… அவளுக்கு படிப்பும் முடியப் போகுது. நல்ல வரன் வரும் போதே பேசி முடிச்சிரலாம்ங்க…” என ஆனந்தவள்ளி கூற,

“ம்ம்ம்…” என அவிநாசி யோசிக்க,

“என்னங்க யோசிக்கிறீங்க?”

“அதுக்கிள்ள வள்ளி, அது இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கேன்னு தான் யோசிக்கிறேன்…” என்றவரின் பார்வை கல்லூரிக்கு கிளம்பி செல்லும் மகளை வாஞ்சையாகப் பார்த்தது…

“அதெல்லாம் கட்டிக்கொடுத்த பிள்ளை பெக்குற வயசு தான்… நம்ம கண்ணுக்கு மட்டும் தாங்க அவ குழந்தை, ஊருக்கு அவள் குமரி தான்… இன்னும் எத்தனை நாளுக்கு வயசு பிள்ளையை வீட்ல வச்சிக்க முடியும் சொல்லுங்க… அது அந்த நேரத்துல தான் பண்ணனும்…” என்ற ஆனந்தவள்ளிக்கு, எப்படியாவது அவிநாசி சம்மதம் சொல்லிவிட்டால் போதும், பந்தக்கால் முதல் மறுவீடு வரை அவரே எல்லாவற்றையும் தானே நடத்தி விடுவார் போல …

“அம்மா சொல்றதும் சரிதானப்பா, என்னைக்கா இருந்தாலும் நம்ம தேனுக்கு கல்யாணம் பண்ணி தான் ஆகணும்…” என ருத்ரனும் ஆனந்தவள்ளிக்குத் துணைக்கு வர, அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை…

“நல்லா சொல்லு ருத்ரா!” என அவர் பங்காகச் சொல்ல,

கேள்வியாக மகனைப் பார்க்க…

“என்னப்பா யோசிக்கிறீங்க? கல்யாணம் பண்ணா தேனு நம்மள விட்டு பிரிஞ்சு போயிடுவான்னு தான் வருத்தப்படுறீங்க? கவலை விடுங்க, தேனுக்கு நாம வீட்டோட மாப்பிளையாவே பார்ப்போம். என்ன சொல்றீங்கப்பா…?” என மகனும் சளைக்காமல் தந்தையைப் பார்த்தான்…

ஆனந்தவள்ளிக்கு பகீரென்றது… பின்னே அவர் தேனை கட்டி கொடுத்து ஒரு டிக்கெட்டைத் தள்ளி விடலாம் என்று பார்த்தால், அப்பாவும் மகனும் இன்னொரு டிக்கெட்டை உள்ளே கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கே… என எல்லா மகள்களையும் பெற்ற அம்மாவைப் போல் அவரும் பதறித்தான் போனார்… ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவிநாசி எல்லாவற்றையும் சிந்தித்து விட்டு ஒரு முடிவு எடுத்தவளாக,

திருவிழா முடிந்ததும் தேனுவின் கல்யாணத்தைப் பற்றிப் பார்க்கலாம் என்று ருத்ரா என்றதும்…

ருத்ரனுக்கும் ஆனந்தவள்ளிக்கும் நிம்மதியாக இருந்தது…

ஆனந்தவள்ளியைப் பொறுத்தவரையில் மகளுக்குத் திருமணம் முடிந்தால் போதும்; ஆகையால் ஆத்தோட போனா என்ன… குளத்தோட போனா என்ன… எப்படியோ கரை சேர்ந்தால் சரி.

இவர்கள் பேசியது அனைத்தும், பையை மறந்துவிட்டுச் சென்று மீண்டும் அதை எடுக்க வந்த தேன்மொழி காதிலும் விழத்தான் செய்தது…

கல்யாணம் என்கிற அந்த ஒற்றை வார்த்தை தேன்மொழியை மேலும் கலங்கடித்தது…

இங்கே தீரன் இல்லத்தில்

இரவு வெளியே சென்ற தீரன் விடிந்த பின்பே வீட்டுக்கு வந்தான்… வந்ததும் ஓய்வெடுக்காமல் வந்த கையோடு வெளியே கிளம்பத் தயாராக அமர்ந்திருந்தது அல்லிக்குச் சரியாகப் படவில்லை…

என்னவென்று கேட்கும்படி தன் கணவனை ஏவினார்…

அவர் சொல்லுக்குத்தான் மகன் மதிப்பதே இல்லையே…

பொறு… கேட்கிறேன் என்பது போல் சைகை காட்டியவர்…

தயாராகி கீழே வந்த தீரனிடம்…

“தீரா… நேத்து முழுக்க நீ வீட்டுக்கே வரலையாமே…”

“எங்கப்பா போன…?”எனக் கேட்டார்…

“அதான் சொன்னேன்ல பா…அந்த டெண்டரை உங்களுக்கு வாங்கித் தரேன்னு…அது விஷயமாத்தான் நேத்து வெளில தங்க வேண்டியதா போச்சு…என பொய்யை அள்ளி வீசினான்…அந்த பொய்யில் புலவன்…

அதை கேட்ட சன்னாசியின் முகத்தில் திருப்தி பரவியது, இருப்பினும்…

“டெண்டர் முக்கியம் தான் தீரா, அதுக்காக ராத்திரி முழுக்க வேலை செஞ்சு உடம்பை கெடுத்துக்காத. நீயே ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் வீட்டுக்கு வந்து இருக்க… கொஞ்ச நாள் வீட்டுல இருந்துட்டு அம்மா கையால சாப்பிட்டு ஓய்வெடு…”என்றார் சன்னாசி அக்கறையாக…

அவரின் அக்கறையெல்லாம் அவர் மகனைச் சென்றடைந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்…

அவனைப் பொறுத்தவரை வெற்றி ஒன்றே இலக்கு…

அதற்காக எந்த எல்லை வரை செல்லவும் அவன் தயங்கப் போவதில்லை…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top