காதல் செய்யாதே இராவணா-29

அடுத்து என்ன பண்றது மாப்புள..???

அவனை அடிச்சி தூக்கிட்டு நம்ம ஆளுங்களை காப்பாத்துறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. அவனையும் நல்லவன் நினைச்சுட்டு இருக்காங்க பாரு அவங்களுக்காக இவனை புடிச்சி ஜெயில்ல போடணும்..!!!

அவன மாதிரி ஆளுங்க நாட்டுல நடமாடவே கூடாது…மாப்புளை ..! என சிற்றத்துடன் கூறிய வளவனை ஆழ்ந்து பார்த்தவன்…

செஞ்சிடுவோம் மச்சான்..!!

ம்ம்ம்…??

அவனை நடமாடவே முடியாம செஞ்சிடுவோம்…!!!

இங்க இருக்குற லோக்கல் ஸ்டேஷன்ல வர சொல்லி பாடிய எடுத்துட்டு போக சொல்லிடு.. அப்படியே மேலதிகாரிக்கு தகவலையும் சொல்லணும்.. என அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை கட்டளையிட்டபடி சென்றவனை தடுத்தார்.. ராஜதுரை…

தம்பி இருயா…!! நானும் உங்க கூட வரேன்…!!

ஐயா.. நீங்க எதுக்கு அங்க? என்ன ஆபத்து வேணும்னாலும் வரலாம்…நாங்க ரெண்டு பேர் இருக்கோமே, நாங்க பார்த்துக்குறோம்.. இருங்க…!!

இல்லயா, நான் வந்து பேசுனா என் தம்பி கேப்பான்…!! என உள்ளுறைந்த அன்பில் சொன்னவரை

இன்னுமும் அவங்களை நம்புறீங்களா ஐயா..? என இயலாமையோடு கேட்டான்…

….. மௌனத்தை பதிலாக தர

சரி வாங்க.. ஆனா அங்க உங்க நம்பிக்கை சுக்கு நூறாக உடைய போறத நினைச்சா தான் கஷ்டமா இருக்கு..மஹ்ஹம்..!! என்றவன் சில ஏற்பாடுகளை மேற்கொண்டவன் அவரையும் அழைத்து கொண்டு ஊருக்கு வெளியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு சென்றான்…

“வா ராவணா வா… ஓ கூடவே ராஜதுரையையும் கூட்டிட்டு வந்துட்ட போல… அதுவும் நல்லதுக்கு தான் மொத்த குடும்பத்தையும் மேல அனுப்பிட வேண்டியது தான்.. உங்கள பிரிச்ச பாவம் எங்களுக்கு எதுக்கு என்னடா மகனே..?” என வெஞ்சினமாகப் பேசினார் குணசீலன்…

“சரியா சொன்னீங்கப்பா…!” என்றவன் தன் அடியாட்களுக்கு செய்கை மூலம் ஏவினான்…

உள்ளே வந்த மூன்று பேரையும் சுற்றி வளைத்தனர் அடி ஆட்கள்…

“என்னடா சீலா இது… நீயாடா இப்படி நடந்துக்குற… என் மகன் சொன்னபோது கூட நான் நம்பலை… ஆனா..!” என வருத்தமாகப் பேசியவரை…

“ஹாஹாஹா.. நீ நம்புனா அதுக்கு நான் என்னடா பண்றது.. ஆடு தானா வந்து மாட்டுன கசப்பு போடத்தான வேணும்….!!”

“சீலா… ஏன் டா??”

“ஏன்னு உனக்கு தெரியாது… உங்க அப்பாவும் எங்க அப்பாவும் ஒரே வீட்ல தானடா பொறந்தாங்க.. அப்புறம் ஏன் உங்க அப்பாவுக்கு கிடைச்ச செல்வாக்கும் மரியாதையும் ஏன் எங்களுக்கு கிடைக்கல… எல்லா இடத்துலயும் ரெண்டாம் பட்சம்தான் கிடைச்சுது. அதான் எனக்கான இடத்தை நானே எடுத்துக்கிட்டேன்…உனக்கு பயந்துட்டு இருந்தேன்னு நினைச்சியா… உன்கூடவே இருந்து உன்னை வளரவிடாம பண்ணேன்டா.. உன்னை உதவாக்கரையாய் காமிச்சு நான் நல்லவன் ஆனேன்டா…ஹாஹா..!!!

அதுவும் எனக்கு பத்தலை. உன்னை பொம்பள பொறுக்கியா மாத்தி ஊரை விட்டு அடிச்சு துரத்தனும்னுதான் வடிவை கடத்தி கெடுத்து கொன்னுட்டு உன்னை மாட்டி விட நினைச்சேன்.. ஆனா எப்படியோ தப்பிச்சிட்ட.. உன்னை அழிக்கனும்னு நினைச்ச என் கண்ணு முன்னாடியே சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா விடுவேனா நான்… அதான் கொஞ்சம் கொஞ்சமா உன் பொண்டாட்டி மனசுல நஞ்ச கலந்து விட்டேன்… அப்புறம் சரக்கு வாங்கி கொடுத்து உன்னை உளற வச்சு பிரிச்சிவிட்டேன்…!!

உன்னைக் கொல்லணும்னு தான் பார்த்தேன்.. ஆனா நீ பொண்டாட்டி இல்லாம தனிமரமா சுத்துறத பார்க்க எனக்கு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு… ப்ச் அப்பவும் உன் பையன கொன்னு உனக்கு புத்திர சோகத்தைக் காட்டலாம்னு இருந்தேன்.. அவனும் தப்பிச்சிட்டான்… அதான் உன்ன மாதிரியே உன் பையனையும் மாத்தலாம்னு நினைச்சு ஊர் முன்னாடி கெட்டவனா காட்டி அடிச்சு விரட்டுனேன்… ஆனா பாரு அவன் போலீஸா மாறி என்னோட எல்லா குற்றத்தையும் கண்டுபிடிச்சி வந்து நிக்கிறான்…!!!

அது தப்பாச்சே…? அதான் என்ன நல்லவனா காமிக்க நீங்க தேவை பட்டிங்க அதனால உங்களை விட்டு வச்சேன். இப்போ தான் நான் யாருனு தெரிஞ்சு போச்சே, உங்களை இதுக்கு மேல விட்டு வைக்க தேவை இல்லையே, அதான் கூண்டோட அனுப்பி வைக்க போறேன்… என இரக்கமில்லாமல் கூறியவரை அதிர்ச்சியாக பார்த்தனர்…

என்ன பார்க்குற எல்லாரும் ஜோடியா சாகப் போறாங்க, உன்னை மட்டும் தனியா அனுப்பப் போறேன்னா… சே… சே… அந்த அளவுக்கு நான் மோசமானவன் இல்ல… அதோ அங்க பாரு உன் பொண்டாட்டிய…!!!!” என அவன் காட்டிய திசையில்…

வடிவு, மாதுரி, மகிழினி, சாம்பவி, சிவசங்கரன், அபி என அனைவரையும் கட்டி வைத்திருந்தான்…

ஏய்… அவங்கள விட்டுடுடா, உனக்கு என் மேல தான கோவம், என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோடா…!!” என மன்றாடினார், நல்ல கணவனாக மனைவியை காக்கும் பொருட்டு.

இந்த நேரத்திலும் தன்னை காக்க நினைக்கும் கணவரின் காதலில் நெக்குருகிப் போனார் வடிவு…

ஹா ஹா நீ இப்படி கெஞ்சுறது கூட எனக்கு பிடிச்சிருக்குடா…!!!!” என கொக்கரித்தான் நயவஞ்சகன்.

“இன்னும் என்னடா மகனே பார்க்குற மொத்தமாக எல்லாரையும் பரலோகம் அனுப்பி வை…. நேரமாகுதுல்ல பிரேசிலுக்கு தப்பிச்சு போகும் முன்ன இவங்கள பலி கொடுத்துட்டு போன மாதிரி இருக்கும். சரியா…!!!”

என அருகில் இருக்கும் தன் மகனிடம் திட்டத்தை ஒருமுறை தெளிவுபடுத்திக் கொண்டார்.

ஹாஹா…!!!

என இடையிட்டது ராவணனின் சிரிப்பு…

“என்னடா சாகப் போறோம்னு மூளை குழம்பி போச்சா..!!!”

என அவன் சிரித்த கடுப்பில் குணசீலன் கேட்க…

“ஹாஹா சிரிப்பு காட்டாத சித்தப்பு… பழமையான பங்களா, சுத்தி ஒரு இருபது அடியாட்கள்னு இன்னும் நீ பழைய வில்லனாவே இருக்கியே சித்தப்பு…!!”

“என்னடா சொல்ற..???”

என ஒன்றும் புரியாமல் கேட்க

“கூடவே இருக்கியே செவ்வாழை நீயாவது அவருக்கு ட்ரெண்டிங் சொல்லி கொடுக்கக் கூடாது… பாரு இன்னும் அந்த காலத்துலே இருக்காரு…!!”

என மனோவை கேட்டு வைக்க.. அவன் யோசனையுடன்…

“டேய் அவனை சோதனை பண்ணுங்க…!!”

பரவால்ல நீயாவது ஷார்ப்பா இருக்கியே… ப்ச் ஆனா என்ன பிரயோஜனம்.. இந்நேரம் எல்லாம் டெலிகாஸ்ட் ஆகிடுச்சு பங்காளி…!!

என்ன மச்சான் இவன் இப்படி பண்ணிட்டான் நானும் கிளைமாக்ஸ் பைட் செமையா செய்யலாம்னு ஆசைப்பட்டேன் ம்ஹும்…!!!

விடு மாப்புள இவனுங்கள அடிச்சா நமக்கு தான் கேவலம்..!!! இரு நான் போர்ஸ உள்ள கூப்பிடுறேன்… என அவர்களை வளவன் அழைக்க…

உள்ளே வந்தவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்து செல்ல… கடைசியாக வந்த மனோ ராவணன் அருகில்…

தப்பு பண்ணிட்ட ராவணா….!! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட…! என்க…

ஆமாடா, அத்தனை பசங்க வாழ்க்கைய நாசம் பண்ண உன்ன கொல்லாம விட்டு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான்.. நடடா..!! என வளவன் அவனை அழைத்து கொண்டு சென்று விட…

ராஜதுரை சென்று அனைவரது கட்டுக்களையும் அவிழ்த்து விட வடிவு விரைந்து வந்து ராஜதுரையின் காலில் விழுந்தார்…

என்ன மன்னிச்சிடுங்க, உங்க கூட வாழ்ந்தும் உங்கள புரிஞ்சிக்காம உங்க மனச நோக அடிச்ச இந்த பாவிய மன்னிச்சிடுங்க…!! என வருந்தி மன்னிப்பு வேண்டிட…

விடு வடிவு, இப்போதாவது என்ன புரிஞ்சுகிட்டியே எனக்கு அது போதும்…!! என பெருந்தன்மையாக சொன்ன கணவரை, இத்தனை நாள் நிந்தித்தோம் என்கிற வேதனையில் கண் கலங்கியவரை தோளோடு அணைத்து கொண்டார் ராஜதுரை…

கைதிகளை ஒப்படைத்து விட்டு திரும்பிய வளவன் தாய் பறவையாக மாறி சாம்பவியை அணைத்து கொள்ள…

பயந்துட்டியா… பவி மா..??

ம்ம்ம்.. அந்த கட்டைல போறவன் உனக்கு அடிபட்டு சீரியஸா இருக்கேன்னு சொன்னான் மச்சான்..!! என கேவியவளை ஆறுதல் படுத்த

எப்பா வளவா.. இங்க வேணாம், வாங்க வீட்டுக்கு போய் பேசிப்போம்..!!

சரிங்கப்பா..!!

எல்லாரும் நம்ம வீட்டுக்கு வாங்க.. என ராஜதுரை அழைக்க, பிறகு வருவதாக கூறிய சிவசங்கரன் குடும்பம் சென்றுவிட.

தன் மனைவி, மகன், மருமகள் என குடும்ப சமேதமாக அவர்கள் அரண்மனைக்குள் நுழைய, அங்கிருந்த பணியாளர்கள் அனைவர் கண்களிலும் ஒரு நிறைவு தெரிந்தது.

பேச அவர்களுக்குள் ஆயிரம் இருந்தாலும், அனைவரும் ஒன்றாக இருக்கும் நிறைவான மனநிலையை கெடுக்க விரும்பாமல் அவரவர் அறைக்குள் சென்று முடங்கினர்.

அறைக்குள் வந்த ராஜதுரை கட்டிலில் சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார். அவர் மடிமீது தலை சாய்த்து அமர்ந்தாள் வடிவு… தன்னிச்சையாக மேலேழுந்த கைகள் மனைவியின் தலையை வருடிக்கொண்டிருக்க… மூடிய கண்களின் வழியே வழிந்த கண்ணீர் மனைவியின் கன்னத்தில் பட்டுத் தெறிக்க… அது அங்கே வடிவின் கண்ணீருடன் கலந்து சங்கமித்தது… கணவன் மனைவிக்கு இடையிலான ஆறுதல், ஒருவர் அருகில் மற்றவர் என அவர்களின் அருகாமையில் வார்த்தைகள் இன்றி மௌனமாக நிகழ்ந்தது.

அபியை பசியாற்றி பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு, பயந்து இருந்த மாதுரியை சமாதானம் படுத்தி உறங்க வைத்துவிட்டு அவர்கள் அறைக்கு சென்ற மகிழுக்கு ஏனோ கால்கள் பின்னின.

பின்ன பேசுனா பேச்சும் செஞ்ச செயலும் கண்ணு முன்னாடி வந்தா போகுமா இல்லையா..!!

அவ்ளோ சீக்கிரம் ராவணன் மறந்துடுவானா என்ன.. இல்லை மறக்க விட்ருவோமா..

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top