காதல் செய்யாதே இராவணா -19

வெல்டன்..!! ராவணா…!! உங்க மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்திட்டீங்க.. என பாராட்டினார் உயர் அதிகாரி..

பட்.. நீங்க அவங்க கிட்ட லஞ்சம் வாங்கிட்டீங்கன்னு கேட்டதும் உங்கமேல ஒரு அதிருப்தி ஏற்பட்டுச்சு.. இப்போ இல்லை..! அதுசரி பயிற்சில உங்க செயல்திறனை வச்சி உங்க கிட்ட இருந்து ஒரு ‘அதிரடியான அக்ஷன்’ எதிர்பார்த்தேன்.. ஆனா சிம்பிளா போய் உங்க வேலைய முடிப்பீங்கன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கல…!

அவருக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தவன் அவரிடம் விடை பெற்று சென்று விட்டான்..

ராவணன் பொறுப்பேற்ற பின் அங்கு குற்றங்கள் வெகுவாக குறையத் துவங்கியது.. அப்போது அவனுக்கு வழங்கப்பட்ட கேஸ் ‘ஆரோஹி’ என்ற பள்ளி மாணவி காணாமல் போன வழக்கு..

முதலில் சாதாரணமாக சென்றது வழக்கு.. வழக்கு விசாரிக்க ஆரம்பித்த நான்கு நாட்களுக்குள் மாணவியின் உடல் கண்டு எடுக்கப்பட்டது.. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என முடித்து வைக்கப்பட்டது…!!

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த பெற்றோர்களால் மேல்முறையீடு செய்யப்பட்டு ராவணனிடம் வந்தது…

சொல்லுங்க சார்.. என்ன சந்தேகம் உங்களுக்கு..?

சார்.. எங்களுக்கு ஒரே பொண்ணு சார்.. அவளுக்கு நாங்க எந்த குறையும் வச்சதில்ல சார்..!! அவ கேட்கிறதுக்கு முன்னாடி நாங்க வாங்கி கொடுத்துடுவோம் சார்..! அவளை இதுவரை நாங்க எதுக்குமே திட்டுனதில்ல சார்…!! ஆனா படிக்கலைனு நாங்க திட்டுனோம்னு தற்கொலை பண்ணிகிட்டதா லெட்டர்ல இருக்கு… சார்… என உடைந்து அழுதனர் பெற்றோர்கள்..

எங்களால…. எங்க பொண்ணு இல்லைங்கிறதையே… ஏத்துக்க முடியல சார்… “டாடி…! நான் டியூஷன் விட்டு வரும்போது புது டிரஸ் வாங்கி வைங்கன்னு..!” கன்னத்துல முத்தம் குடுத்துட்டு போன பொண்ணு… முத்தம் ஈரம் கூட காயல சார் அவளை… ஐயோ…எங்களுக்கு பிணமா தான் சார் கிடைச்சா…! என கதறினார்கள் உயிர்கொடுத்தவர்கள்.

அவர்கள் இருவருக்கும் தண்ணீர் அளித்து ஆசுவாசப்படுத்திய பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கினான்.

“இங்க பாருங்க சார்.. எங்க பொண்ணு..?” என சில புகைப்படங்களைக் கொடுத்தனர்…

அதில் பால் மணம் மாறாத சிரிப்புடன், பன்னீர் ரோஜா மொட்டாக இருந்தாள் ஆரோஹி.. அடுத்ததில் கசக்கி எறியப்பட்டு உடல் முழுக்க வெள்ளை துணிகளால் சுற்றப்பட்ட பிரேதமாக அவளைப் பார்ப்பவர்களின் இதயம் கனத்துதான் போகும்…!!!

“தினமும் எங்க கனவுல வந்து என்ன விட்டுடீங்களேன்னு கேட்க்கறா சார்.. எங்களால தாங்க முடியல சார்… ப்ளீஸ்..நீங்கதான் சார் எங்க பொண்ணு சாவுக்கு ஒரு நியாயம் வாங்கித் தரணும்…” என காலில் விழச் சென்றவர்களைத் தடுத்து நம்பிக்கை அளித்து அனுப்பி வைத்தான்…

முதல் கட்ட விசாரணையின் அறிக்கையில் 100 சதவீதம் ‘தற்கொலை’ என்றே உறுதியானது. இருந்தும் ஏதோ பிடிப்படாமல் இருப்பதாகவே ராவணனுக்கு தோன்றியது. ஆரோஹியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு புகைத்தபடி அமர்ந்து இருந்தான். திடீரென்று கையில் உள்ள புகைப்படத்தை போட்டுவிட்டு பிரேத பரிசோதனை அறிக்கையை எடுத்து சரி பார்த்தவன் நேராக சென்றது பரிசோதனை செய்த மருத்துவரிடம் தான்…

நீங்க தான் ஆரோஹி கேஸ் பார்த்தது…?

ஆமாம் சார்…!

இந்த ரிப்போர்ட்ஸ்ல சில சந்தேகங்கள் இருக்கின்றன கேக்கலாமா..??

கண்டிப்பா சொல்றேன்..! உள்ள வாங்க..!

என அழைத்து சென்று அவர் அளித்த தகவல்களை கொண்டு சில நபர்களிடம் விசாரணை நடத்தியவன் முன்னால்..

கண்கள் கட்டப்பட்ட நிலையில் நான்கு பேர் அமர்வில் இருந்தனர்…

சொல்லுங்க.. உங்களுக்கும் ஆரோஹிக்கும் என்ன சம்பந்தம்..?

எங்களுக்கு அவளை தெரியவே தெரியாது..?

என்றான் முதலாமவன்.

எதுக்கு எங்கள இப்படி கட்டி வச்சி இருக்கீங்க எங்க அப்பாக்கு மட்டும் தெரிஞ்சா..?

உங்கள சும்மா விட மாட்டார்… ஒழுங்கா எங்கள விடுங்க..

என்றான் மூன்றாமவன்…

சார்.. ப்ளீஸ் எங்கள விட்ருங்க..!

என அழ தொடங்கிவிட்டான்.. இரண்டாமவன்..

டேய்..ஆரூப்..! நீ ஏன்டா.. பயப்படுற இவங்களால நம்மள ஒன்னும் முடியாது டா முட்டாள்….!

என அகந்தையாக கூறினான் நான்காமவன்…

கை முட்டிகள் இறுக..

ஒ… எங்களால என்ன முடியும் முடியாதுன்னு..பாரு..

என…

ஆஆஆஆ.. மா.. ஆஆஆஆ!!

மூன்றாவதாக இருந்தவன் அலறும் சத்தம் கேட்டு மற்ற மூவருக்கும் பீதி ஆக்கியது..

இஷான்…!!இஷான்.. டேய் உனக்கு என்னடா ஆச்சு… சொல்லுடா உன்ன என்ன பண்ணாங்க அவங்களை சும்மா விடமாட்டேன்..!!

இருந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தான் நாலாவதாக இருந்த ‘ரெஹான்’..

சார்… ப்ளீஸ்…..எங்கள விட்ருங்க அவனை அடிக்காதிங்க சார்.!

என ஆரூப் மற்றும் பிரணவ்.. இருவரும் பதறினர்..

நீங்களா உண்மைய ஒத்துக்கிட்டா விட்டுடுறேன்.. இல்லனா அடுத்து உனக்கு விழும்..

ஐயோ சார் என்ன விட்ருங்க எங்களுக்கு ஆரோஹிய நல்லாவே தெரியும் சார்..!

குட்.. இதே மாதிரி ஆரோஹிய என்ன பண்ணீங்க அதையும் சொல்லிடுங்க.. இல்ல..

இல்லனா என்ன சார்… என்ன எங்கள மிரட்டி ஒத்துக்க வைக்கிறீங்களா இது அஃபென்ஸ் தெரியுமா.. டேய் ஆரூப், பிரணவ் இவங்க கிட்ட நீங்க எதுவும் சொல்லத் தேவையில்ல இவங்க கிட்ட நமக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்ல.. என துணிச்சலாக கூறியவனிடம்…

ஏன் இல்ல.. உங்களுக்கு எதிரா வலுவான ஆதாரம் இருக்கு…

இல்ல.. இல்ல.. பொய் சொல்றார்.. நம்பாதீங்க…

கண்டிப்பா இருக்கு.. அது உங்க டியூஷன் சென்டர்ல இருந்து எடுத்த சி.சி. டிவி.. ஃபுட்டேஜ்…!

நோ.. ஒஒஒஒஒ.. இல்ல வாய்ப்பில்லை…?

இருக்கு…!

நான்தான் இல்ல சொல்றேன்ல…?

இருக்குன்னு நான் சொல்றேன்.. !

இல்ல.. இல்ல.. அத எங்க அப்பா எப்பவோ அழிச்சிட்டார்..!

அது வெறும் டூப்ளிகேட்.. ஒரிஜினல் எங்க கிட்ட இருக்கு.. என்றதும் அனைவரின் சப்த நாடியும் அடங்கி பயத்தில் உறைந்து இருந்தனர்…

நீங்களா உண்மைய சொல்லிட்டா… உங்கள விட்ருவேன்…

எங்கள விட்ருவீங்களா சார்..

நோ.. ஆரூப்..?

ப்ளீஸ் சும்மா இரு ரிஹான்…

சார், ஆரோஹி எங்க கூட படிக்கிற பொண்ணுதான் சார். நாங்க டிரக்ஸ் யூஸ் பண்ணும்போது பாத்துட்டா. எங்கள பத்தி போலீஸ்கிட்ட சொல்லிடுவேன்னு சொன்னா. அப்போ எங்களுக்கு வேற வழி தெரியாம அவளுக்கு டிரக்ஸ் கொடுத்து மயங்க வச்சு கூட்டிட்டு போனோம்…!!

எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல சார். ஆரோஹி வெளியில போனா எங்கள பத்தி சொல்லிடுவாளோன்னு பயந்துட்டுதான் அவ மயக்கத்துல இருக்கும்போதே பில்டிங் மேல இருந்து தள்ளி விட்டுட்டோம். போதையில இருக்கும்போது தெரியாம செஞ்சிட்டோம் சார். போதை தெளிஞ்சதுக்கு அப்புறம்தான் நாங்க பண்ணது எங்களுக்கே தெரிஞ்சது. பயந்து போய் எங்க அப்பா அம்மா கிட்ட சொன்னோம்…!!

அவங்கதான் கொலை பார்த்த வாட்ச்மேனையும், சிசிடிவி ஃபுட்டேஜையும் எல்லா தடயத்தையும் அழிச்சிட்டாங்க. ஆரோஹி தற்கொலை பண்ணிக்கிட்டான்னு மாத்திட்டாங்க…!! ஆனாலும் என்னால நைட்ல நிம்மதியா தூங்க முடியல சார். ஆரோஹி அப்பா அம்மா கதறுறது காதுல கேட்டுட்டே இருக்கு சார். அந்த பழா போன டிரக்ஸ் எடுக்காமலே இருந்திருக்கலாம்னு தினம் தினம் குற்ற உணர்ச்சியில சாகுறேன் சார்… எங்களை காப்பாத்துங்க…!’ என கதறினான்.

மெல்ல இமைதட்டி எதிரில் இருப்பவர்களை கிரகித்தவர்களின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன…

“ஆம்..!” அங்கே இந்த நால்வரின் பெற்றோருடன் சீஃப் ஜஸ்டிஸ் மற்றும் பத்திரிகைக்காரர்களுடன் அவர்களுடன் ஆரோஹியின் பெற்றோரும் இருந்தனர்.

“இதுவரை என்ன நடந்ததுன்னு அவங்க வாயாலேயே சொன்னாங்க.. கேட்டு இருப்பீங்க.. இதுக்கு மேல நான் சொல்றேன்..!!”

“ஆரோஹியோட பாடில எந்த காயமும் இல்ல ஆனா உதட்டுல கிரீன் கலர்ல இருந்தத பார்த்தேன்.. அது பத்தி ரிப்போர்ட்ஸ்ல எதுவுமே இல்ல அத பத்தி விசாரிக்க தான் அறிக்கைய தந்த டாக்டர போய் பார்த்தேன்….!! அவர் சொன்னதுக்கு அப்புறம் தான் ஆரோஹிக்கு டிரக்ஸ் குடுத்து இருக்காங்க.. அதுமட்டும் இல்லாம அத பத்தி ரிப்போர்ட்ல வர விடாம பண்ணி இருக்காங்கனும் தெரிய வந்தது..

“தொடர்ந்து ஆரோஹி படிச்ச டியூஷன் சென்டர்ல விசாரிச்ச போது பொண்ணு காணாம போன அன்னைக்கான ஃபுட்டேஜ் மட்டும் அழிக்கப்பட்டு இருந்தது..!!! அங்க இருக்கற யாரோ தான் குற்றவாளின்னு நிச்சயமா தெரிஞ்சது….!!! அப்போ தான் ஆரோஹி காணாம போன நாள்ல இருந்து டியூஷனுக்கு வராத இந்த நாலு பேர் மேலயும் சந்தேகம் வந்தது. இதைப் பத்தி விசாரிக்கப் போனபோது அவங்க சரியா ஒத்துழைக்காதனாலயும்…!!

இவங்க மைனர் விக்டீம்ங்கிறதாலயும்..!! இவங்கள கஸ்டடியில் எடுத்து விசாரிக்கக் கூடாதுன்னு இவங்க பேரண்ட்ஸ் போட்ட பெட்டிஷனுக்காக சீஃப் ஜஸ்டிஸ் முன்னாடியும் உங்க எல்லாரோட ஒத்துழைப்பாலையும் உண்மை வெளிக்கொண்டு வந்தாச்சு..!! என்று ராவணன் தொடர்ந்து…

பிள்ளைங்க என்ன பண்றாங்கன்னே தெரியாம அவங்க கேட்கும்போது எல்லாம் பணத்தை ஏன், எதுக்குன்னு கேட்காம தூக்கிக் கொடுத்தா பசங்க எப்படி ஆவாங்கன்னு அப்படிங்கிறதுக்கு இந்த நாலு பசங்களோட வாழ்க்கை ஒரு பாடம்..!!!

இளைய தலைமுறைகள் இந்த மாதிரி போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி அவங்க வாழ்க்கையை தொலைக்கிறாங்க. இதைப் பத்தி நீங்க என்ன சார் நினைக்கிறீங்க..?” என நிரூபர் கேட்ட கேள்விக்கு…

நான் இருக்கும் வரை இனி போதை மருந்துன்னு ஒன்னு இருக்க விட மாட்டேன்..!!”என உறுதியாகக் கூறிவன்…

அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டான். எத்தனை நபர்களைப் பிடித்தாலும் இதற்கான ஆணிவேர் எங்கு எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாட்டுபவர்களை வைத்து இவர்களுடைய சரக்கு விநியோகம் மும்பையில் நடப்பது வரை கண்டுபிடித்தாயிற்று… ஆனால் மும்பையைத் தலைகீழாகத் தேடிப் பார்த்தாலும் தலைமையை பிடிக்க முடியாமல் திணறிய சமயத்தில்…

சென்னையில் டன் கணக்கில் போதை மருந்து சிக்கியதாக தகவல் வந்ததை அடுத்து, ராவணன் சென்னைக்கு மாற்றலானான்.

ராவணனின் சென்னை வருகை எந்த மாதிரியான மாற்றங்களை அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்பதை வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top