காதல் செய்யாதே இராவணா -15

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது சில குறிப்பிட்ட நாள்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவதே. வருடம் முழுவதும் உழைத்து களைப்பவர்கள் இளைப்பாற வகுக்கப்பட்டவையே திருவிழாக்களும், பண்டிகைகளும்.

இம்மாதிரியான ஒரு திருவிழா சமயம் அது.

ராஜதுரை இளவட்ட வயதில் இருந்த சமயம், மற்ற இளந்தாரி பயல்களுடன் சேர்ந்து கொண்டு திருவிழாவிற்கு வந்து போகும் பெண்களை கிண்டல் செய்த வண்ணம் இருக்க…

யே..!! புள்ள வள்ளி..! என்ன மச்சானை கண்டுக்காம போறவ..

யாரு யாருக்கு மச்சான்..? இந்தாருங்க.!! என்கிட்ட உரண்டை இழுத்திங்க..? எங்க ஐய்யன் கிட்ட சொல்லிடுவேன்..!

டேய், அதுவே சோள பொம்மைக்கு தாவணி சுத்தி விட்ட மாதிரி இருக்கு. அவள போய் ஏன்டா வம்பு இழுக்குற..!! என்றது நம்ம வருங்கால தலைவர் வீராசாமியே தான்.

அது எல்லாம் உனக்கு சொன்னா புரியாது டே…?? இப்போ நாம கூட கிண்டல் பண்ணலைனா புள்ள மனசு ஏங்கி போய்டகூடாது பாரு அதுக்கே தான் மாப்புள…(என்ன ஒரு உயர்ந்த உள்ளம்..)

மச்சான் எவ்ளோ நல்லவன்டா நீ..?? உன் மனசு தங்கம் டா ராஜதுரை.. ஆனா பாரு உங்க அய்யனுக்கு அது தெரிய மாட்டேங்குது.

இந்த நேரத்துல அந்த ஆளை பத்தி ஏன் பேசுற..!!

டேய்.!! மச்சான், அங்க பாருடா.. யாருடா அந்த பொண்ணு..?? பார்க்க அப்படியே நடிகை வாணிஸ்ரீ மாதிரியே இருக்கா.

இருக்கும்டி மாப்பிள்ளை அது வேற மாதிரி பொண்ணு…

வேற மாதிரினா..??

அது ஊருக்கு புதுசா குமஸ்தாவா வந்து இருக்காரே சிவசங்கரன் அவன் தங்கச்சி பேரு வடிவு.

வடிவு..!!! பேருக்கு ஏத்த மாதிரி நல்ல வடிவா தான் இருக்கு அந்த புள்ள..!!

மச்சான் ஆளு பார்க்க தான் சாந்த சொரூபி.. அசப்புல ராணி மங்கம்மா டா..போன கிழமை கிணத்தடியில வச்சி நம்ம கணேசன் அந்த புள்ள கிட்ட ஓரண்டு இழுத்து இருப்பான் போல…இந்த புள்ள விட்ட அடில ரெண்டு பல்லு தெறிச்சு போச்சு டே..!!

ஒ..!!! அப்போ ராணி மங்கம்மா தான்..!! நமக்கு எதுக்கு வம்பு டே..நமக்கு ஏத்த மாதிரி வாடாமல்லி..!! செண்டு மல்லினு..! பார்த்துப்போம் டே… என சொல்லிவிட்டாலும் ராஜதுரையின் மனதில் பொக்கிஷமாக பொதிந்து போனாள் வடிவு.

அதேதான் மாப்புள.. இந்தா நம்ம மரிகொழுந்தே வருது வா… போவோம்..!! என வடிவைப் பற்றிய எண்ணங்களை அங்கேயே விட்டுவிட்டு பூஜை நடக்கும் கோவிலை நோக்கி சென்றது அவர்களின் பட்டாளம்…

வழி எங்கும் எதிர்வரும் கன்னியர்களை கிண்டலடித்த வண்ணம் அவர்கள் செல்ல…

அவர்களை கடந்து சென்ற வடிவு

“பளார்…!!!” என்ற சத்தத்துடன் ராஜதுரையை அறைந்திருந்தாள்…மொத்த கூட்டமும் ஸ்தம்பித்து நின்றது… ஒரு கணம் மட்டுமே..

ஏய்ய்ய்.!! யாரு மேல கைவச்ச. நான் யாருனு தெரியுமா..??

“நீ யாராக இருந்தா எனக்கென்ன..!! பொம்பள புள்ள மேல கைவச்ச பொறுக்கிதான நீ..!”

“அடிங் யார பார்த்து பொறுக்கி சொல்ற.?” என எகிறிய ராஜதுரையை கண்டு சிறிதும் அஞ்சாமல் நின்ற வடிவை அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.. (ரண களத்துலையும் இவருக்கு குதூகலம் கேக்குது பா..)

உன்ன பார்த்து தான்..!! என ராஜதுரையை கை நீட்டி பேசியவரை..

ஏய்.! யார்டா கைநீட்டி பேசுற முத்துவேல் பேரன்டி..நீட்டுன கைய வெட்டி போட்டுருவேன்..!!

வெட்டுவீங்க.. வெட்டுவீங்க.. பண்றது பொறுக்கி தனம் தட்டி கேட்டா வெட்டுவீங்களா… என இருவரும் மாறி மாறி சண்டையிட.. திருவிழாவிற்கு வந்த கூட்டம் இவர்களுக்காக கூடியது..

கூட்டத்தை விலக்கியபடி உள்ளே வந்த சிவசங்கரன்.. “அம்மாடி வடிவு..?? இங்க என்னம்மா பண்ற..?”..

யோவ்.. சங்கரா சொல்லிவை உன் தங்கச்சி கிட்ட ஆள் தெரியாம கைவைக்குது..ராஜதுரைய பத்தி தெரியும்ல..

என்னம்மா வடிவு இதெல்லாம்…

பொம்பள புள்ள மேல கைவச்ச அடிக்காம என்ன அண்ணா செய்வாங்க..

எது நான் உன் மேல கை வச்சேனா அடியே.. சீமை தக்காளி..!! யார் மேல என்ன பழி சொல்றவ..?? நான் செஞ்சா ஆமா நான்தான் செஞ்சேன் நெஞ்ச நிமித்தி தைரியமா சொல்லுவேன்..!! என்னையா சங்கரா பேச விட்டு மூஞ்ச பார்த்துட்டு நிக்கற..!.நான் நெனச்சா என் மேல கை வச்சதுக்கு உன் தங்கச்சிய தூக்கிட்டு போய் என்ன வேணாலும் பண்ண முடியும் தெரியும்ல..!!ஆனா என் தகுதிக்கு இவளாம் ஈடானு தான் பார்க்குறேன்..!!

என்னப்பா துரை இப்படி பேசுற அது அறியா புள்ள எதோ தெரியாம பண்ணிடுச்சு.. நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. என ராஜதுரையிடம் மன்னிப்பு கேட்க..

அண்ணே..!! என்ன பண்ற..? போற வர புள்ளைங்க கிட்ட வம்பு இழுத்துட்டு இருக்குற அந்த ஆள் கிட்ட நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற..

நீ கொஞ்சம் சும்மா இருமா நான் பேசிக்குறேன்..!! என்றவர் ராஜதுரையிடம் திரும்பி..

இங்க பாருப்பா துரை அது ஊருக்கு புதுசு.. உன்ன பத்தி தெரியாது.. அதனால அப்படி பண்ணிடுச்சு.. இனிமே உன் வழில வராம பார்த்துக்குறேன்.. தயவு செய்து மன்னிச்சுக்கோ பா..!! என்றவர் அதற்கு மேல் பிரச்சனையை பெரிது பண்ண விரும்பாமல் வடிவை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்..

போகும் வடிவையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜதுரை..

“என்ன மாப்பிள்ளை மங்கம்மா கிட்ட மயங்கிட்ட போல..!! விட்ட அறை மறந்து போச்சோ..??..”

“இல்லடே அமைதியா இருக்குற பொண்ணுங்க தான் அழகுன்னு நெனச்சேன்.. கோவப்படுற பொண்ணுங்க தனி அழகுன்னு இந்த புள்ள காட்டிப்புடுச்சுலே..”

காட்டும்டே..!காட்டும்..!! அங்க உன் ஐயா உனக்காகத்தான் காத்துட்டு இருக்காக.. அவருக்கு இது தெரிஞ்சா அவரும் உனக்கு காட்டுவாருடே.. வா போகலாம்.. என கோவிலை நோக்கி சென்றனர்..

ஏன் அண்ணா அங்கிருந்து கூட்டிட்டு வந்த? என் மேலயே கைய வச்சவனுக்கு நல்ல பாடத்தை சொல்லி கொடுத்திருப்பேன்.. நீ வந்து காப்பாத்திட்ட… என மனமாறாமல் பொங்கினார் வடிவு..

சேறுனு தெரிஞ்சும் அதுல கல் எறிஞ்சா சேறு நம்ம மேல தான் தெறிக்கும்.. அது போல தான் அவனும், நல்லவங்க இல்லன்னு தெரிஞ்சா ஒதுங்கி போகனும் டா.. வடிவு..

சரி அண்ணே..!! என்று சொன்னாலும் அவர் மனதில் ராஜதுரை வில்லனாக பதிந்து போனான்..

இந்த நிகழ்வுக்குப் பிறகு இருவருக்கும் “ஏழாம் பொருத்தம்..!” என்பது போல எங்கு இருவரும் இருந்தாலும் அங்கு ஒரு பஞ்சாயத்து நிச்சயம்..(இவங்களுக்கு பஞ்சாயத்துக்கும் அப்படி என்ன ராசியோ இன்னும் போய்ட்டு இருக்கு..)

“என்னடா மாப்புள..?? அந்த மங்கம்மா எங்க போனாலும் உன்னைய தேடி வந்து ஓரண்டு இழுக்குது…!!” என விரசாமி மற்ற நண்பர்களோடு கள்ளு குடித்த வண்ணம் கேட்க..

அதே தான் மச்சான்.. நானும் போனப்போகுது பொட்ட புள்ளனு பார்த்தா..?? எனக்கே ஆட்டம் காட்டுறா..இவளால எங்க அய்யன் கூட என்ன கேவலமா பாக்குறாருடே..இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி பழிவாங்கல நான் ராஜதுரை இல்லடே என கறுவினார்..

ஏலே மாப்புள..!! விடுறே அந்த புள்ளைக்கு கொஞ்ச நாள்ல கண்ணாலம் பண்ணிட்டு போக போது..அதுக்கு அப்புறம் நாம தான்லே எல்லாம்..விடு பார்த்துகிடுவோம்…

ம்ம்ம்..!! என அப்போது சொன்னாலும் ராஜதுரைக்கு மனம் ஆறவில்லை.. என்பதே உண்மை…

ஏத்தா வடிவு..!!

சொல்லுங்க அத்தாச்சி..

இன்னும் ரெண்டு நாளுல கண்ணாலத்த வச்சிக்கிட்டு எங்கத்தா ஒத்தைல போறவ..

அது ஒண்ணுமில்ல அத்தாச்சி..!! மறுவீட்டுக்கு விருந்துக்கு பவளத்துகிட்ட சொல்லி வைக்க சொல்லி அண்ணன் சொல்லுச்சு அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…!!

அது சரி கல்யாண பொண்ணு.. பாத்து சூதானமா போய்ட்டு வா கண்ணு..!!

ஆகட்டும் அத்தாச்சி.. என விடை பெற்று சென்ற வடிவை காணவில்லை என அந்த கிராமம் முழுவதும் சல்லடையிட்டு தேடப்பட்டார்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top