சில வருடங்களுக்கு முன்பு
தொழிற்சாலைகளின் நகரமான புனேவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தான் சிதம்பரம் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.
பிழைப்பைத் தேடி இளம் வயதிலேயே புனே வந்தவர், இங்கேயே தங்கி வேலை பார்த்து முன்னேறி, பிறகு இதே ஊரிலேயே வீட்டையும் வாங்கிச் செட்டில் ஆகிவிட்டார்…
சிதம்பரத்தின் வாழ்க்கையில் பணம், புகழ் எல்லாம் இருந்தது; ஒன்றைத் தவிர அதுதான் ஆண் பிள்ளை என்கிற ஏக்கம். அந்த ஏக்கமும் யுகேந்திரனின் வருகையால் தீர்ந்து போனது…
அது கோடைக்கால விடுமுறை என்பதால், சிதம்பரம் தன் இரு மகள்களையும் தமிழ்நாட்டில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றிருந்தார்…
அச்சமயத்தில்தான் யுகேந்திரன் எதிர் வீட்டை விலைக்கு வாங்கி தன் குடும்பத்துடன் குடியேறினான்…
யுகேந்திரனின் தந்தை அவனது சிறு வயதிலேயே தொழிற்சாலையில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டார். அதனால் உறவுகளும் வஞ்சித்துவிட்டதால், வாழ்க்கையை வெறுத்துப்போன வைதேகி, தூரத்து உறவினர் ஒருவரின் உதவியோடு அவர்கள் வீட்டிலேயே தங்கி, சின்னச் சின்ன வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் வளர்த்தார்.
பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற போதிலும், தன் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தான். அங்கு அவனது சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர் மூலம் புனேவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான்…
அதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகு தாயை தன்னோடு அழைத்துச் செல்ல நினைத்தான் அந்த உத்தமப் புத்திரன்.
ஆனால் அந்தத் தூரத்து உறவினரோ, யுகேந்திரனின் பற்றி நன்கு அறிந்ததில் அவனை விட அவருக்கு மனமில்லாமல் தன் மகளை அவனுக்குக் கட்டி வைத்து அவனை பிடித்து வைக்க நினைத்தார். ஆனால் யுகேந்திரனோ,
இல்லை மாமா, என்னால் இப்போதைக்கு கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியாது. முதல்ல அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும், தம்பியைப் படிக்க வைக்கணும், எனக்கும் வாழ்க்கையில முன்னேறனும் நிறைய கனவுகள் இருக்கு மாமா என வெகுவாக மறுத்துவிட்டான்.
யுகேனின் மாமா அதை ஏற்றுக் கொள்ளாமல் தர்க்கம் பண்ண, யுகேன் வாதம் செய்ய கடைசியில் வார்த்தை முற்றி..
கஞ்சிக்கே வழியில்லாத பிச்சைக்காரன் உனக்கு இவ்வளவு திமிரா என கேட்டுவிட்டான்.
அவ்வளவுதான்; அன்று இரவே பெட்டி படுக்கையோடு தன் தாயையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு புனே வந்துவிட்டான்…
ரோஷமாக அழைத்து வந்துவிட்டானே தவிர, அவன் நினைத்தது போல் அவர்களை கௌரவமாக வாழ வைக்க பல எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தது…
அதுவும் அவனுக்கு அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை; ஒவ்வொரு முறையும் அவன் தட்டு தடுமாறி எழ வேண்டி இருந்தது. துன்பத்திலும் ஒரு நல்லதாகத்தான் யுகேந்திரனுக்கு சிதம்பரத்தின் அறிமுகம் கிடைத்தது..
தன்னுடைய உயர் அதிகாரிகளில் ஒருவர் சிதம்பரம், அதுவும் அவர் தமிழர் என்று தெரிந்ததும் அவனுக்கு சிறு நம்பிக்கையின் ஒளி பிறந்தது..
அவன் நம்பிக்கை பொய்யாகவில்லை; சிதம்பரமும் இளம் வயதிலேயே வேலையில் கெட்டிக்காரனாகவும், பணிவாகவும், விசுவாசமாகவும் இருக்கும் யுகேந்திரனைப் பிடித்துவிட தன்னால் ஆன மட்டும் அவன் முன்னேற பல உதவிகள் செய்தார் சிதம்பரம்.
அவரிடம் தன் வாழ்க்கை பக்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் அவன் ஒருபோதும் தயங்கியதில்லை; அப்படிதான் ஒருமுறை வாடகை வீட்டில் அவன் அனுபவிக்கும் இன்னல்களை அவரிடம் பகிர்ந்த போது…
“ஏன் யுகேன், உங்க அப்பா இறந்ததற்கு கம்பெனியில் இருந்து பணம் கொடுத்ததாகச் சொன்னியே ஏன் அந்தப் பணத்தை வைத்து நீ இங்கேயே ஒரு வீடு வாங்கக்கூடாது?” என அவர் யோசனை கொடுக்க,
யுகேன் சற்றே சிந்தித்தான். ஊரிலும் சொல்லிக் கொள்ளும்படி உறவு என்று யாருமில்லை அத்தோடு பல வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சமீபத்தில் தான் அந்தப் பணம் கிடைத்தது; அதை வைத்து அவன் என்ன செய்யலாம் என இதுவரை யோசித்தது இல்லை. யுகேன் மேல் உள்ள நம்பிக்கையில் வைதேகி மொத்தப் பணத்தையும் யுகேனிடம் ஒப்படைத்துவிட, அவனுக்கு சிதம்பரம் சொன்ன யோசனை சரியாகப் படவே புனேவிலேயே வீடு வாங்க முன் வந்தான்.
அவனுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த சிதம்பரம், தன் வீட்டிற்கு விலைக்கு வந்த எதிர் வீட்டை அவனுக்கு விலைக்குப் பேசி முடித்துவிட, அமோகமாக அவருக்கு எதிரிலேயே குடிபுகுந்தான் யுகேந்திரன்.
விடுமுறை முடிந்து தங்கள் வீட்டிற்கு சந்தோஷமாகத் திரும்பிய சகோதரிகளுக்கு அப்போது தெரியவில்லை, தங்களது சுதந்திரத்திற்கு மொத்தமாக ஆப்பு வைக்கப் போகும் ஆசாமி ஒருவன் வந்து இருக்கிறான் என்று.
பாவாடை சட்டையில் பளிச்சிடும் சிரிப்புடன் பருவ சிட்டாக உள்ளே ஓடிச் சென்ற சஞ்சு, தங்கள் வீட்டின் கூடத்தில் புதியதாக அமர்ந்து இருந்தவனைப் கண்டு கண்களைச் சுருக்கினாள்.
“ஹே மிஸ்டர், யார் நீங்க? எங்க வீட்ல என்ன பண்றீங்க?” எனத் தைரியமாகக் கேட்டாள் அந்த இரட்டை ஜடைக்காரி. அவளுக்குப் பயம் என்பதே அறியாத வயது அது.
சஞ்சனா நின்ற தோரணையும் அவள் கேட்ட விதமும் யுகேந்திரனுக்கு வியப்பாக இருந்தது.
யுகேந்திரன் பதில் அளிக்கும் முன்பே அங்கு வந்தாள் வாசுகி.
“வாடி வாயாடி! வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா? அவர் உங்க அப்பாவோட வேலை பார்ப்பவர்,” என வாசுகி எதார்த்தமாகச் சொன்னாள்.
“ஓஓ, அப்பாவோட வேலை செய்யுறவாரா? நான் இதுக்கு முன்னப் பார்த்தது இல்லையே, அதான் கேட்டேன்,” என அன்று சமாதானம் சொன்னவள், யுகேந்திரனிடம் திரும்பி மன்னிப்பு கோரும் விதமாக,
“சாரி அங்கிள்,” என்றாளே பார்க்கலாம்.
யுகேந்திரன் குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறி விட்டது, “க்ஹு க்ஹு ஹுக்”..
“நான் அப்புறம் வரேங்க சார், வந்தா நான் வந்தேன் சொல்லிடுங்க” என்றவன், வாழ்க்கையில் முதல் முறையாக தன்னை விட ஆறு வயது சிறிய பெண்ணிடம் பயந்து ஓடினான்.
வசுந்தராவிற்கும், மகள் யுகேந்திரனை அங்கிள் என்று அழைத்தது சங்கடத்தை ஏற்படுத்தியது.
“என்னமா அந்த அங்கிள் இப்படி ஒடுறார்?” என சஞ்சனா மேலே ஏதோ கூற வரும் முன், வசுந்தரா அவளைத் தனியே இழுத்துச் சென்று, யுகேந்திரனுக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை ஜீப் போட்டு விளக்குவது போல விளக்கினார்.
சஞ்சனாவிற்கு அது புரிந்தாலும், ஏனோ ‘அங்கிள்’ என்ற அழைப்பைக் கேட்டுத் தலைதெறிக்க ஓடும் யுகேந்திரனைக் கண்டதும் அலாதி குஷி பிறக்க, மெல்ல அவளின் துடுக்குத்தனம் தலைதூக்கியது. அன்றிலிருந்து யுகேந்திரனைக் கண்டாலே வேண்டும் என்றே அவனை ‘அங்கிள்’ என்று அழைக்க ஆரம்பித்தாள்.
“அப்படி கூப்பிடாத சஞ்சு” என்று சொன்னாலும் அவள் அடங்கவில்லை; மாறாக அவளின் குறும்புத்தனம் எல்லை கடக்க, சிதம்பரம் அவளைத் தனியே அழைத்து கண்டித்த பின் தான் அவள் அடங்கினாள்.
அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான், மற்றபடி அவள் குறும்புகாரியாகவே அடங்காமல் சுற்றினாள்.
இப்படி இருந்த சமையல் தான், சஞ்சு தன் பள்ளித் தோழியோடு விளையாடும் ஆர்வத்தில் வீட்டில் கூட சொல்லாமல் கொள்ளாமல் அவளோடு கிளம்பிச் சென்று விட்டாள்.
வழக்கமான நேரத்தில் வீடு திரும்பாத மகளைக் காணாமல் சிதம்பரமும் வாசுகியும் பதறித் துடித்து விட்டனர்.
இரவு எட்டு மணிக்கு மேல் சாவகாசமாக வீட்டிற்கு வந்தாளே பார்க்கலாம்.
பளார் என்று ஒரு அறை விட்டார் சிதம்பரம்; அத்தனை நேர மன உளைச்சலும், அவளைக் காணாமல் அவர் பட்ட துன்பமும் எல்லாம் அந்த ஒரு அறையில் வடிந்து விட்டது போல் தொப் என்று தரையில் சரிந்து உட்கார்ந்தார்.
இதுவரை தன்னை அடிக்காத தந்தை தன்னை இன்று அடித்ததும் அவளுக்கும் ரோஷம் பொத்துக் கொண்டு வர, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தாள்
அவளின் போதாத நேரமோ அல்லது விதியின் சதியோ, அந்த காலாண்டுப் பரீட்சையில் அவள் பெரும் தோல்வி அடைந்தாள்.
உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு, பெத்தவங்க கிட்ட மரியாதையும் பயமும் துளி கூட இல்லை, இனியும் உன்னை விட்டா சரி வராது என்று சிதம்பரம் அவளை இழுத்துச் சென்று நிறுத்தியது யுகேந்திரனிடம் தான்.
“நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ, இவள் உன்னைப்போல பொறுப்பான பிள்ளையாக மாற வேண்டும்; அதற்கு நீதான் பொறுப்பு” என்று சஞ்சுவை யுகேந்திரின் கையில் அன்று ஒப்படைத்தார்.
அப்புறம் என்ன, யுகேந்திரனுக்குக் கொண்டாட்டம் தான்! எப்போது இவள் சிக்குவாள் என காத்திருக்க, தானாகவே வாய்ப்பு கனிந்தது. தன்னை அங்கிள் என்று அழைத்து வெறுப்பு ஏற்றியவளை சும்மாவா விடுவான்? வச்சு செய்தான்.
ஆரம்பத்தில் தொல்லையாகத் தெரிந்த சஞ்சுவின் பொறுப்பு, போகப் போக எப்போது அவனது உயிர் மூச்சாக மாறியது என்று அவனுக்கே தெரியவில்லை.
அவனின் முதல் கடமை அவளுக்கே, அவனின் முழு உரிமையும் அவளுக்கே என்று எப்போது மாறியது?
அவனுக்கு டைபாய்டு வந்து படுத்திருக்கும் போது, அவன் பட்டை நெற்றியில் தன் மெல்லிய விரல்களால் குங்குமம் இட்டு, “பயப்படாதீங்க, சீக்கிரம் சரியாகிடும்” என்று கூறிய போதுதானா அல்லது?
ஹீட்டர் ஷாக் அடித்து சஞ்சு மயங்கி விழுந்த போது, தன் கைகளிலே ஏந்தியவாறே அவளைத் தூக்கி கொண்டு மருத்துவமனை வரை ஓடினானே, அப்போதா அல்லது?
யுகேந்திரனிடம் சண்டை போட்ட ஷுக்லாவை சூசகமாக கோர்த்து விட்டு அவரின் பல்லை பிடிங்கினாளே அப்போதா அல்லது
வீடு வரை வந்த வெள்ளத்தில் தத்தளிக்கும் போது தன்னுடைய உணவை அவனோடு பகிர்ந்து கொண்டாளே அப்போதா???
எங்கேயோ எப்போதோ எப்படியோ என்று தெரியவில்லை, ஆனால் யுகேந்திரனின் உலகம் சஞ்சனாவைச் சுற்றியே இயங்கியது…
இங்கு யுகேந்திரன்
என் மூச்சவள் பேச்சவள்
பேர் சொல்லும் அழகவள்
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவள் என்று சஞ்சுவின் காதல் நினைவில் பாட்டுப் படிக்க, அங்கு அவளோ யுகேந்திரனின் பெயரை எடுத்தாலே படபடவென வெடியும் பட்டாசாய் பொறிபவளை வைத்து என்ன செய்யவானோ…
ஹாய் டார்லிங்ஸ் ❤️
உங்களுக்கு இந்தக் கதை பிடிச்சிருந்தா, மறக்காம ஒரு Like போட்டு, உங்க கருத்தை Comment-ல சொல்லுங்க. 🥹❤️
உங்க ஒவ்வொரு Comment-உம் எனக்கு எழுதுறதுக்கான அடுத்தடுத்த வரிகளுக்கே ஒரு பெரிய Feel & Motivation. 🫶✨
நீங்க கொடுக்குற அந்த சின்ன அன்புதான்… நான் தொடர்ந்து எழுதுறதுக்கான பெரிய காரணம். ❤️

