பார்த்த விழி
பார்த்தபடி பூத்துக் இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காணக் கிடைக்க
என இளம் வயதுத் தீரன் தேன்மொழியின் வரவிற்காகக் காத்திருந்தான்…
தேன்மொழி வயதிற்கு வந்ததில் இருந்து அவளைப் பார்க்கவே முடிவதில்லை; எந்நேரமும் அவள் வீட்டுக்குள்ளே பொத்தி வைக்கப் பட்டிருந்தாள்… மூடி வைக்க மூடி வைக்க ஆசை கூடிப் போனது; எப்படியாவது அவளை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று அவள் வரும் திசையில் தவம் கிடந்தான்…
ஆம், தவம் என்றுதான் சொல்ல வேண்டும்; ஒவ்வொரு விடியலும் இன்றாவது அவளது முகத்தைக் காட்டிவிடாதா என்றே கால் கடுக்க காலை முதல் மாலை வரை காத்திருந்தான்… ஏன் என்று கேட்டால் பதில் தெரியாது…
உள்நோக்கத்துடன் தொடங்கிய ஆட்டம், எப்போது அவள் உள்ளே புகுந்தாள் என்று தெரியவில்லை… முதல் முதலில் சேலை கட்டி பெண்ணாக அவள் உட்கார்ந்து இருந்ததைப் பார்த்ததும், இனி அவள் என்னுடையவள் என்று முடிவு எடுத்துவிட்டான்…
தேன்மொழி நீண்ட நாள் கழித்து தன் அன்னையோடு கோவிலுக்குச் சென்றாள்…
அங்கு அவளுக்கு முன்பே வால் இல்லாத மந்தி கூட்டம் மரக் கிளையில் தொங்கித் கிடந்தது… வேற யாரு எல்லாம் தீரன் அண்ட் கோ தான்…
இங்க பாரு தேனு, நீ முன்ன மாதிரி சின்ன பொண்ணு கிடையாது, பெரிய மனுஷி ஆகிட்ட; அதுனால கவனமா இருக்கணும், முக்கியமா ஆம்பளை பசங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்… என ஆனந்தவள்ளி தன் மகளுக்குத் தாயாக சில போதனைகளை வழங்கிட… அதை எல்லாம் நல்ல பிள்ளையாகத் தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக் கொண்டே வந்தவள்… எதிரில் கோவில் சுவற்றில் அமர்ந்து இருந்த தீரனை கண்டு ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தன…
என்ன என்னவோ காரணத்தைச் சொல்லி தாயைச் சரிகட்டி, பூஜைக் கூடையைத் தூக்கிக் கொண்டு தீரனைச் சந்திக்க வந்தாள்…
இங்க தான இருந்தாங்க எங்க போனாங்க என விழிகளால் அவனை தேடியப் படி வந்தவள் முன்னால் தொப்பு என்று எதோ குதிக்க…
ஆஆஆ என தேன்மொழி பூஜைக் கூடையுடன் கீழே விழ ஒரு ஆணின் கரம் அவளைத் தாங்கி பிடித்தது
பயத்துடன் மெல்ல தன்னைத் தாங்கிப் பிடித்த தீரனை ஏறிட்டாள்… இமைகள் படபடவென பட்டாம்பூச்சி போல் துடிக்க, அன்றைய முத்தத்திற்குப் பிறகு இன்றுதான் தீரனை வெகு அருகில் மீண்டும் காண்கிறாள்… புதிதாகப் பூத்த பெண்மை என்னவோ செய்ய, சட்டென்று அவனிடம் இருந்து விலகி நின்றவளின் தாவணி சரிந்து போனது… அதை கவனிக்காதவள்… “நீங்க இங்க பண்றீங்க…” என தான் சாதாரணமாக இருப்பது போல் கேட்டாள்
இலைமறையாகத் தெரிந்த மாபிஞ்சைப் பார்த்தவனுக்கு மூச்சுப் பேச்சு நின்று போனது… அப்புறம் ‘எங்கே?’ என்று தேன்மொழி கேட்டது அவன் காதில் விழுந்தது… வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றவனை question ஆகப் பார்த்தவள், சட்டென தன்னை கவனித்ததைக் கண்டு பட்டென்று தீரனுக்கு முதுகு காட்டியபடி நின்று தன் தாவணியைச் சரி செய்தவளுக்கு உள்ளூர ஏதோ படபடப்பு…
தேன்மொழி தன்னை கண்டுவிட்டதை நினைத்து உதடு கடித்து, தன் புரந்தலையில் தானே தட்டிக் கொண்டவன், வெறும் தரையை காலால் எட்டி உதைத்து என்ன என்னவோ செய்தான். கேட்டால் வெட்கம் என்பான், எதுக்கு நமக்கு…
தேன்மொழி இன்னும் திரும்பாமல் இருக்கவும்…
க்கும் என கரகரத்த தொண்டையைச் செருமி அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான்…
என்னவோ கேட்டியா? என்ன கேட்ட? என வரவழைத்த குரலில் தேன்மொழி பக்கம் சென்றான்…
இல்லை, இதுவரைக்கும் உங்கள இங்க பார்த்தது இல்லை, அதான் என்ன திடீர்னு கோவில் பக்கம் வந்து இருக்கீங்கன்னு கேட்டேன்… என்றவளும் இயல்புக்குத் திரும்பி இருந்தாள்…
பெருசா ஒன்னுமில்லை, பசங்க கூப்பிட்டாங்க, சும்மா இந்த பக்கம் வந்தேன்… என்றவன் மனசாட்சியோ, ஏன்டா டேய் இப்படிப் புளுகுற… அவள் இந்த நேரத்தில் இங்கு வருவாள் என்று தெரிந்து தானா முன்னப்பின்னப் பார்க்காத கோவிலுக்கு நீ வந்த…
அது மட்டுமா, தனக்கு பாதுகாப்பாகப் பக்கபடையோடு தானே வந்தது… இவன் இங்கு இருக்கிறான், எங்க அவன் படை எனத் தேட…
தூரத்தில் சிதறு தேங்காயை உனக்கு, எனக்கு எனப் போட்டி போட்டுக் கொண்டு பொறுக்கிக் கூட்டத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது…
ஓ சரி… நீங்கள் சாமி கும்பிட்டீர்களா… இந்தாங்க பிரசாதம் எடுத்துக்கோங்க என தேன்மொழி தீரன் முன்பு கையில் இருந்த கோவில் பிரசாதத்தை நீட்டினாள்…
அவளை மேலும் கீழும் பார்த்தவன்… ப்ச் எனக்கு கடவுள் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை… என்றவன் அவள் பூஜை கூடையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து உரித்து தின்பதை பார்த்த குரங்கு கூட்டமோ அட மனிஷ பயலே என சண்டைக்கு வந்தது…
சு சு என அவைகளை விரட்டி விட்டு கோவில் சுவற்றில் ஏறி உட்கார்ந்து நானும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல் தின்று கொண்டு இருந்தான்…
“ஏன் அப்படி எல்லாம் சொல்றீங்க… எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில தான் நடக்குது… ப்ளீஸ் எனக்காக வச்சுக்கோங்க…” எனத் தலையைச் சரித்துச் சிட்டுக்குருவியாகக் கேட்டாள்…
அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன், “என்னவோ போ, நீ ஏதோ சொல்ற… சரி நீயே வச்சிடு,” என அவள் முன்னால் சரிந்து தன் நெற்றியைத் காட்டினான்…
தீரன் இப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காத தேன்மொழி தயங்கி நின்றாள்… அவள் தயங்குவதை உணர்ந்த தீரன்…
என்னமா யோசிக்கிற என் கை ரெண்டும் வாழைப் பழம் தின்னுறதுல பிசி அதனால உன்னை வச்சி விட சொன்னேன் விருப்பம் இல்லாட்டி பரவால ம்ஹும் ஒரு பொண்ணு கையால பிரசாதம் வச்சிக்க குடுப்பினை எனக்கு இல்லை அவ்ளோ தான் பழகன பாசம் பாயாசம் எல்லாம் நீ போ மா என தீரன் போலியாக முகத்தை திருப்பிக் கொள்ள
சரி… பிரசாதம் தானே…
என மனதைத் தேற்றிக் கொண்டவள்…
திருநீற்றை இரு விரல்களால் எடுத்து அவன் பட்டை நெற்றியில் பூசினாள்…
அந்த நொடி…
அவள் விரல்களின் மெல்லிய தீண்டல் என்னவோ இருவரின் உள்ளத்திலும் பெயர் தெரியாத ஒரு சலனத்தை எழுப்பியது…
அவன் இதழ்கள் தீண்டிய போது எழுந்ததை விட இது ஒருவிதமான சிலப்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது என்பது மெய்…
இருவரின் இதயமும்… காரணம் புரியாத இனிய படபடப்பில் தத்தளித்தது…
தேனு என ஆனந்தவள்ளியின் குரல் இருவரின் மோனநிலையை கலைத்தது…
அச்சச்சோ அம்மா கூப்பிடுறாங்க, நான் வரேன் என்று பதறிக்கொண்டு ஓடியவளின் கையை பிடித்து நிறுத்தியவன்…
ஏய் நில்லு, எங்க அதுக்குள்ள ஓடுற? உன்கிட்ட நிறைய பேச வேண்டியது இருக்கு என தீரன் அவளைத் தடுக்கும் போதே, தேன்மொழியைத் தேடிக்கொண்டு ஆனந்தவள்ளி அவ்விடம் வந்துகொண்டிருந்தார்…
ஐயோ விடுங்க, நம்மளை இப்படி அம்மா பார்த்தா அவ்ளோதான்…
சரி இந்தா, இதையாவது பிடி என அவள் கையில் கொலுசுகளைத் திணித்தான்…
என்ன இது எனப் புரியாமல் தேன்மொழி கேட்க…
“ப்ச், சும்மா தோணுச்சு, புடிச்சா போட்டுக்கோ, இல்ல இவன் கொடுத்தது வேணாம்னு நினைச்சா தூக்கிப் போட்டுடு…” என அசட்டையாகச் சொன்னவன், ஓரக்கண்ணால் தேன்மொழியின் முகத்தையே பார்த்தான்.
அவள் அந்த கொலுசுகளைப் பூஜைக் கூடையில் மறைத்து வைத்துக் கொண்டதற்கும் இவனுக்கு எதையோ வென்றுவிட்ட ஃபீல்…
அப்போ நான் வரேன் என்று தேன்மொழி நழுவுவதிலேயே குறியாக இருக்க…
“ஏய், என்ன சும்மா போறேன் போறேங்குற? இப்போ எல்லாம் நீ முன்ன மாதிரி வெளியேவே வரவே மாட்டேங்குற… எனக்கு உன்கிட்ட முக்கியமான விஷயத்தைச் சொல்லியே ஆகணும்…”
“சரி சரி, நான் அப்புறமா ஒருநாள் சொல்றேன், அப்போ பேசிக்கலாம். இப்போ கையை விடுங்க, அம்மா பார்த்துடப் போறாங்க, ப்ளீஸ்!” என இவள் கெஞ்சி, தீரன் பிடியில் இருந்து தன் கைகளை உருவிக்கொண்டு, ஆனந்தவள்ளி பார்த்துவிடும் முன்பே அவரிடம் சென்றுவிட்டாள்.
இவ்வளவு நேரம் எங்கடி போன என்று ஏதோ ஏதோ சொல்லி சமாளிக்க… அவளை நம்பாமல் மேலும் கடுகடுப்புடன் பார்த்து வைத்த ஆனந்தவள்ளிக்கு சந்தேகம் வந்து இருக்குமோ…
அப்படி மட்டும் சந்தேகம் வந்திருந்தால் அந்த நாளில் அவர் தேன்மொழியைத் தனியே விட்டு இருக்கவும் மாட்டார்… அதனால் அவர்களின் வாழ்க்கையில் நீங்காத வடுவையும் ஆறாத துயரத்தையும் அவர் சந்தித்திருக்கவே மாட்டார்…
எது எப்படியோ விதி தன் வேட்டையைத் தொடங்கி விட்டது…
இதோ அதோ என்று தீரன் தேன்மொழி சந்திப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது… இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லையென்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் தகவல்களை நண்பர்கள் விடு தூது மூலம் பரிமாறிக்கொண்டே தான் இருந்தனர்… அதன் மூலம் அவர்களின் உறவு உருப்பெறத் தொடங்கியது…
அந்த நேரத்தில்…
தீரன் தேன்மொழியைச் சந்திக்க விரும்புவதாகவும், மாலை தனியே அவளைத் தென்னந்தோப்பு பக்கம் வரும்படி தூது வந்தது…
தீரனைச் சந்திக்கப் போகிற ஆவலிலும் படபடப்பிலும், தூது அனுப்பியவரையும் தீரன் கொடுத்த கடிதத்தையும் சரிபார்க்கத் தவறிவிட்டாள்… சொந்தக் கதை, சோகக் கதை, எல்லாம் கண்ட கதை எனச் சொல்லிவிட்டு, பார்த்துப் பார்த்துத் தயாரான தேன்மொழி தீரனைக் காணச் சென்றாள்…
அப்போ இப்போ வருவான் தீரன் என்று அவன் வரவிற்காகக் காத்திருந்து காத்திருந்து, வானம் இருளத் தொடங்கியது தான் மிச்சம்…
நம்மள வரச் சொல்லிட்டு…
ஏன் இன்னும் அவங்க வரல…?
எனச் சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டாள் தேன்மொழி… அவன் வாங்கித் கொடுத்த கொலுசை அவள் அணிந்து இருப்பதைக்கண்டால் என்ன செய்வான் என இனிய கற்பனையில் பொழுது கழிந்தது; இன்னும் அவன் வந்தபாடில்லை…
இருட்டு வேற ஆரம்பிச்சிடுச்சு… வரச் சொன்னதை மறந்து இருப்பாங்களோ? ஒருவேளை வேற ஏதாவதொரு வேலை இருந்து இருக்குமோ… ப்ச்!
பேசாம வீட்டுக்கே போயிடுவோமா…?
என நினைத்தவள், அதற்கு மேல் தீரன் வருவதற்கான சுவடே இல்லாததால் வந்த வழியே திரும்பி நடக்கினாள்…
சுற்றிப் படர்ந்திருந்த இருளும்…
அசாதாரண நிசப்தமும்… தேன்மொழிக்கு சிறு நடுக்கத்தைக் கொடுத்தது… தன்னந்தனியாக வந்ததை நினைத்து முதல் முறையாக அச்சம் துளிர்விட்டது…
இப்போ வருந்தி என்ன பயன்… எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று வேகமாக எட்டு வைத்து நடக்கும் வேளையில் சரக்… சரக்…
என்ற காலடி சத்தம்… அவள் செவிகளை உரசியது…
ஒரு நொடி…
அவள் கால்கள் தானாக நின்று போயின… அது தன்னைத் துரத்தி வரும் மிதியோசை என்பதை உணர்ந்ததும். அவள் இதயம் படபடவென்று துடிக்கத் தொடங்கியது… ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அதற்கு மேல் அங்கு ஒரு நொடிக்கூட இருக்கக் கூடாது எனத் தோன்றியது…
ஜல் ஜல் என அவள் கொலுசுமணி அதிர ஓட்டம் எடுத்தாள்…
அவளைத் துரத்தி வருவது யார் என்று தெரியவில்லை; நின்று அறிந்து கொள்ளும் எண்ணமும் அவளுக்கு இல்லை… திடீரென்று அவளைத் துரத்தி வரும் காலடி ஓசை நின்று போனதை உணர்ந்தவள், மூச்சு வாங்கியபடியே மெல்லத் திரும்பிப் பார்த்தாள். சுற்றிலும் கும் இருட்டு; பகலில் பெரிதாகத் தெரிந்த தென்னை மரங்கள் எல்லாம் இப்போது கருப்பு உருவங்களாக அவளை அச்சுறுத்தின… யாரும் அவளைத் துரத்தி வருவது போல் தெரியாததால் சற்றே ஆசுவாசமடைந்தவள், நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில் அவள் தோளில் படிந்தது அந்த கரம்….
பயத்தில் வீறிட்டுத் கதறிவிட்டாள்… தோளில் படிந்த அந்த கரம் தேன்மொழியின் வாயைப் பொத்தி ஏதோ செய்ய முற்படும் போதே, சாமர்த்தியமாக அதன் பிடியிலிருந்து தப்பி ஓடியவளின் தாவணி நுனி அந்த கருப்பு உருவத்தின் கையில்…
தாவணியா மானமா என்ற போராட்டத்தில் மானத்தைத் தேர்ந்தெடுத்தவள், மார்பை இரு கைகளால் இறுக மறைத்துக்கொண்டு கண்மண் தெரியாமல் தேன்மொழி ஓட… பின்னே அந்த உருவம் அவளை விடாமல் துரத்தியது…
தூரத்தில் மோட்டார் ரூமில் குண்டு பல்பு எரியவும், அங்கு ஆட்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வெளிச்சத்தை நோக்கி உயிரைக் கையில் பிடித்தபடி ஓடினாள்…
காப்பாத்துங்க…
காப்பாத்துங்க…
தன்னால் முடிந்தவரைகத்திக் கொண்டே ஓடியவள், கால் தட்டிவிட்டுத் தலைக் குப்புறப் போய் கிணற்றில் விழுந்தாள்…
நீச்சல் தெரியாமல் அவள் நீருக்குள் சுயநினைவை இழக்கும் தருவாயில், கிணறு அருகே குண்டு பல்பு வெளிச்சத்தில் தீரன் முகத்தையும் அவன் கைகளில் இருந்த அவளின் தாவணியையும் தெரிந்த மறு நொடியே, நீருக்கு அடியில் மூழ்கிப் போனாள்…
கூடவே தீரன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையும், அவன் மேல் துளிர்விட்ட நேசமும்…


