டமால் டுமீல் என வேட்டு சத்தம் காதை கிழிக்க, என்ன ஏது என்று வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகத் திரண்டனர்…
பச்சை பசேல் என்று வளர்ந்து நின்ற நெற்கதிர்களைத் தொட்டு உரசிச் சென்றது தென்றல் காற்றும்…
தூரத்தில் மேளத் தாளம் முழங்க ஆர்ப்பாட்டமாய் வந்து கொண்டு இருந்தது அக்குடும்பம்…
பட்டு ஆடைகள் பளபளக்க, தங்க நகைகள் சலசலக்க, கையில் கும்பம் ஏந்தியபடி வந்தார் அவிநாசி, கூடவே அவர் குடும்பமும்…
டெண்டர் கிடைத்ததற்கு நன்றி செலுத்திட கோவிலுக்குக் கிளம்பிச் சென்றனர்… அவர் தலைமையில் அன்னதானம் அறிவித்து இருக்க, அங்கு ஊரே கூடி இருந்தது…
என்னாலே திருவிழா வர இன்னும் நாள் இருக்கே, அதுக்குள்ளவா ஆரம்பிச்சிடுச்சு? சும்மா கச்சேரி கலைக்கட்டுதே என கண்ணு தெரியாத முதியவர் ஒருவர் கேட்க,
அட தாத்தா, இது ஊர் திருவிழா, கச்சேரி இல்லை! நம்ம அவிநாசி அய்யா இருக்காருல்ல, அவரு முதல் மரியாதையை ஜெயிச்சிட்டாருல்ல, அதுக்குத்தான் இந்த தடப்புடல் கொண்டாட்டம்…
எது அவிநாசியா? பரவால்லடே, அவன் பாட்டன் பூட்டன்னால செய்ய முடியாதத அவன் சாதிச்சு புட்டான்ல்லே என மீசையைத் திருகியபடி சொல்ல, அவை தெளிவாக அவிநாசியின் காதில் பட்டது…
அவர் முகத்தில் குலப் பெருமையைக் காப்பாற்றிய கர்வமும் மிடுக்கும் குடிகொண்டிருந்தது…
அவிநாசியும் ஆனந்தவள்ளியும் கோவிலின் உள்ளே சென்று நேர்த்தியைச் செலுத்திிக் கொண்டு இருந்தனர். ருத்ரன் அவன் சகாக்களோடு அன்னதானம் நடக்கும் இடத்தை மேற்பார்வை செய்து கொண்டு இருந்தான்… தேன்மொழி அருகில் உள்ள குளத்தில் இருந்து அபிஷேகத்திற்கு நீர் எடுக்கச் சென்றாள்… முதலில் ஆனந்தவள்ளி தான் செல்வதாக இருந்தது, ஆனால் அவரைத் தடுத்துத் தானே எடுத்து வருவதாகக் கூறி தேன்மொழி சென்றாள்…
அந்த நேரம்… கொண்டாட்டத்தின் நடுவே கூட்டத்தைப் பிளந்து கொண்டு தீரனின் ஜீப் வந்தது…
அதைப் பார்த்த நொடி அங்கிருந்த சிலரின் முகம் மாறியது.
“இவனெதுக்குடா இப்போ வந்திருக்கான்…”
என ருத்ரனின் சகா கிசுகிசுப்பைக் கேட்டது தீரனின் காதிலும் விழுந்ததோ…
சட்டென அவ்விடத்தைப் பார்த்தான்… தீரனின் கூர்விழியும் ருத்ரனின் அம்பேறியும் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதி நின்றன…
பார்வை சற்றும் தாழ்த்தாமல், முதுகுத் தண்டு நிமிர்வோடு வண்டியிலிருந்து இறங்கிய தீரன், கோவில் நோக்கி நடக்கத் தொடங்கினான்…
அவனது வரவை அங்கிருந்து யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அனைவரது பார்வையும் அடித்துச் சொல்லியது… மேலும், தோற்றவன் நிச்சயம் ஆட்களோடு வந்து ஏதோ ஒரு தகராறு செய்வான் என்று எதிர்பார்க்க, அவன் ஒற்றை ஆளாக வந்தது வியப்பையும் குழப்பத்தையும் ஒருசேர விடுத்தது… ஆக, மொத்தத்தில் தீரனின் வருகை அங்கிருந்தவர்களைச் சலனப்படுத்தியது என்பது உண்மை…
சுற்றி நின்று தன்னை ஒரு பொருட்காட்சியைப் பார்ப்பது போல் வெறித்துப் பார்த்தவர்களைத் தூச்சமாக கடந்து சென்றவனுக்கு முன்பு, வழி மறித்து நின்றான் ருத்ரன்…
டேய் நில்லு… எதுக்குடா இங்க வந்திருக்க…? என கேட்க…
தீரன் அவனை மேலும் கீழும் நக்கலான பார்வையால் பார்த்தான்…
மச்சான் நீ ம்ம்ம் சொல்லு, இவனை இங்கயே போட்டுத் தள்ளிடுறேன் என ருத்ரனின் விழுதுகளில் ஒரு விழுது சொல்ல…
“டேய் டேய் அடங்குங்கடா, இது ஜனநாயக நாடு! இங்க கோவில் எல்லாருக்கும் பொதுவானது, யார் வேணாலும் வரலாம், போலாம். அதக் கேக்க உங்க தலைவனுக்கே ரைட்ஸ் கிடையாது… அப்படி ஓரமா போய் குத்த வச்சி உட்கார்ந்து பொறிஉருண்டை தின்னுங்கடா!” என கூலாகச் சொல்லிவிட்டு கோவிலே உள்ளே சென்றான் தீரன்…
“ஏன்டா மச்சான்… அவன் இவ்ளோ பேசிட்டுப் போறான்… அவனை எதுவும் செய்யாம அமைதியா இருக்க…?”
என அறிவு கேட்க…
ருத்ரன் தீரன் சென்ற திசையைப் பார்த்தபடி,
“அவன் இப்போ தோத்த காண்டுல இருக்கான்… இந்த நேரத்துல நாம பதிலுக்கு ஏதாவது செஞ்சா…
‘ஜெயிச்ச திமிர்ல பண்றானுங்க’ன்னு ஊரே பேசும்… அது அப்பாக்குத் தான் அவமரியாதை ஆகிப் போகும்” என அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அறிவு அமைதியாக அவனைப் பார்த்தான்.
அப்போ அவனைச் சும்மா விடப் போறியா…?
“ம்ஹும் டேய், நீங்கள் இரண்டு பேரும் அவனைப் பின் தொடர்ந்து போங்க. ஏதாவது எடக்கு மடக்கு பண்ணா அங்கையே வச்சி அவனை முடிச்சிடுங்க” என்று அவன் விழுதல்களை ஏவி விட்டான்…
அவர்களும் தீரன் பின்னாலே வால் பிடித்துச் சென்றனர்…
“பொல்லொவ் பண்றீங்களாடா பாடி சோடா?” என்று தீரன் அவர்களைக் கண்டுவிட்டான்… பின்னே அவனுக்கே தெரியாமல் அவனைத் தொடர்கிறார்களாம். அவன் போகும் இடம் எல்லாம் தகவல் சொல்லி கொண்டே செல்லும் இலட்சணம்; அப்படி மண்டை மேல இருந்த கொண்டையை மறந்து விட்டனர் போலும்… தீரன் அறிவாளி, உடனே கண்டுவிட்டான்…
தீரன் அவர்களை வைத்து விளையாட ஆரம்பித்து விட்டான்… ஒன்று இரண்டு என முதல் தூண் மறைவில் ஒதுங்கி, இரண்டாவது தூண் வழியாக வெளியே வந்து போக்கு கட்டிச் சுத்தலில் விட்டவன், எளிதில் அவர்கள் கண் மறைந்து குளக்கரைக்கு ஓடி வந்தான்…
“சில்லி பாய்ஸ்” என அவர்களை ஏமாற்றி விட்ட களிப்பில் இருந்தான்…
அந்நேரம் ஜல் ஜல் என்று வெள்ளி கொலுசு சிணுங்க யார் என்று பார்த்தவன், எதிரே வந்த உருவத்தை கண்கள் சுருக்கிப் பார்த்தான்…
தளர பின்னிய பின்னலில் விழுந்து முல்லைச் சரம் பாதி அவள் கழுத்தோரம் இருக்க, தாவணியில் பளிச்சிடும் அழகுடன் பருவப் பெண் ஒருத்தி கையில் குடத்துடன் வந்தால், அவள் யார் என்று முதலில் அடையாளம் தெரியாமல் பார்த்தவனுக்கு அவள் பயந்த விழிகள் ஒரு செய்தியைச் சொன்னது…
குளத்தில் உள்ள தண்ணீரில் சிறிது விளையாடி விட்டு, குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலேறியவள் எதிரே வந்த உருவத்தைக் கண்டு வெகுவாக மிரண்டாள்… இவனா….??
தீரனைக் கண்ட மாத்திரத்தில் தேன்மொழியின் கையில் இருந்த குடம் வழுவி விழப் போக, தரையில் காலை ஊன்றி சமாளித்தவளுள் இன்னமும் மெல்லிய நடுக்கம் இருந்தது…
அவளைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் வளைய, கண்கள் பளபளக்க, அவளை நோக்கியபடி ஒவ்வொரு படியாக இறங்கினான் தீரன்…
தன்னை நோக்கி தீரன் வருவதைக் கண்ட தேன்மொழி, துணைக்கு யாருமில்லாமல் தனியே அவனிடம் மாட்டிக்கொண்ட மடத்தனத்தை நினைத்து நொந்துக் கொண்டாள்…
வல்லுரு தன் இரையை கொத்தித் தின்னும் பார்வையோடு தேன்மொழியை நெருங்கினான் தீரன்…
தீரனின் பார்வையைத் தாங்க முடியாமல் தேன்மொழியின் தளிர் கால்கள் தள்ளாடின…
அவள் கரங்கள் குடத்தை இன்னும் இறுக்கமாகப் பற்றியபடி, கவனமாகத் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். ஏனோ அங்கிருந்து நகர வேண்டும் என்று துடித்த மூளையின் கட்டளையை அவள் கால்கள் ஏற்க மறுத்து, அங்கேயே வேரூன்றி நின்றன…
மிக அருகில் வந்த தீரன், தேன்மொழியின் குனிந்த தலை அருகே குனிந்து அவள் காது மடலை உரசிச் சொன்ன சொற்களால் அவள் விக்கித்துப்போய் பார்க்க… அவனை ஏறிட்டுப் பார்த்தவளை அவன் ஏளனமாகப் பார்த்தான்… அவள் முகத்தில் படர்ந்த அச்சம் அவனுக்குக் குரூரத் திருப்தியைத் தந்து, அங்கிருந்து வெற்றி களிப்புடன் சென்றான் தீரன்…
தீரன் கண்ணிழுத்து மறையும் வரை பார்த்தவளுக்கு, அவன் கூறிச் சென்ற வார்த்தைகளின் வீரியம் தாங்காது, குடத்தை ‘தொப்’ என்று வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டாள்… அவள் உடல் இன்னமும் அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளால் நடுங்கிக் கொண்டே இருந்தது…
அப்படி தீரன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் என்ன…? ருத்ரனிடம் தோற்றதை இந்தப் பேதை பெண்ணிடம் சாதிக்க முயல்கிறானா தந்திரன்…? அவன் எண்ணம் பலிக்குமா அல்லது நரி வளையில் சிக்குமா சருகுமான்…?


