
ஊரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் முன்பு அணிவகுத்து நின்றன நான்கு சக்கர வாகனங்கள்…
ஊரில் உள்ள முக்கிய தலைக்கட்டுகள் அனைத்தும் ஒன்று கூடி உள்ளே அமர்ந்து இருந்தனர் எதற்காக…??
எல்லாம் கவர்மெண்டில் விட்ட ரூரல் டெவலப்மென்ட் அண்ட் வாட்டர் இரிகேஷன் டெண்டரை எடுக்க தான்…
பச்சை துணி மூடிய மேஜையின் மீது அடுக்கி வைக்கப்பட்ட கோப்புகள் அருகில் ஊராட்சி அலுவலக அதிகாரிகளும் அமர்ந்து இருந்தனர்…
எல்லா பெரிய மனுஷங்களும் வந்தாச்சா அப்போ டெண்டரை ஆரம்பிக்கலாமா என அதிகாரி அலுவலரை கேட்க…
கொஞ்சம் பொறுங்க சார் முக்கிய தலைக்கட்டு ரெண்டு மிஸ்ஸிங்… அவங்க வந்ததுக்கு அப்புறம் ஆரம்பிக்கலாம்… இல்லாட்டி இந்த டெண்டரை நடக்க விடாதபடி ஊடே புகுந்து கலைச்சுடுவாங்க சார்…
யோவ் என்னய்யா நீ இவனுங்களுக்கு எல்லாம் பயந்துட்டு இருக்க ஒரு அரசாங்க அதிகாரி மாதிரி பேசுற
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க இதுவே மூணாவது முறை விடுற டெண்டர் சார் ஏற்கனவே அவங்க இல்லாம நடத்தினதுக்கு தான் ஒருமுறை டெண்டரில் ஊழல் சொல்லி முன்னால் அதிகாரியையும் தலைவரையும் தூக்கிட்டாங்க…அடுத்த முறை என அந்த அலுவலர் தயங்கி இழுக்கவும்…
அடுத்த முறை என்னவென்று தான் சொல்லேன்யா…?? என அந்த உயர் அதிகாரி பொறுக்க முடியாமல் கேட்டார்…
அதை நான் சொல்கிறேன் சார் என அருகில் இருந்த டிரைவர் சொல்ல…
உனக்கும் தெரியுமாயா…?? எங்கே சொல்லு, இரண்டாவது முறை டெண்டரை இவங்க எப்படித்தான் நிறுத்தினாங்கன்னு தெரிஞ்சுப்போம்…என ஆர்வமாக கேட்க காரணம் சக அலுவலரின் தயக்கம் மட்டுமல்ல, அந்த ஓட்டுநர் முகத்தில் தெரிந்த என்னவென்று குறிப்பிட முடியாத முகபாவனையும் சேர்த்தே தான்…
சார், இரண்டாவது முறையும் இவங்களுக்கு டெண்டர் கிடைக்கவில்லை என்ற கடுப்புல கைய புடிச்சு இழுத்துட்டான், அதிகாரி மேல கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க சார்…அதுவும் யார் கையை தெரியுமா சார்…??? என ஓட்டுநர் சஸ்பென்ஸோடு முடிக்கவும் அருகில் அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரிக்கவும் அந்த அதிகாரிக்கும் அறிந்து கொள்ளும் ஆவல் பெருகெடுத்தது…
நீ சொல்றத வச்சு பார்த்தா கிழவி கையை புடிச்சு இழுத்துட்டாங்கன்னு சொல்லுவ போலயே… என்றவர் தன்னுடைய அனுமானத்தின் அடிப்படையில் கூறினார்…
அப்படி சொல்லி இருந்தாக் கூட ஏதோ ஒரு வகையில் மனசை தேற்றி இருக்கலாம். இந்த படுபாவிங்க அந்த அதிகாரி ஒரு ஆம்பளை கையை புடிச்சி இழுத்துட்டான்னு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டானுங்க… என ஓட்டுநர் சொல்லி முடிக்கவும் மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கவும் சரியாக இருந்தது… அதில் ஒரு சிலர் உருண்டு புரண்டு சிரித்தத்தில் நாற்காலிகள் உடைந்தது தான் பாக்கி…
அப்புறம் என்னய்யா ஆச்சு என அதிகாரி வித்தியாசமாகக் கேட்க…
அப்புறம் என்ன சார் அவர் மேல என்கொயரி வச்சு படுத்தி எடுத்துட்டாங்க. விஷயம் அந்த சாரோட வீட்டுக்கு தெரிஞ்சி அவங்க பொண்டாட்டி அவரை விட்டுப் போய் ஒரே அசிங்கமா போச்சு. இப்போ ஆளே வெளியில் தலை காட்ட முடியாம கிடக்கிறார் சார்… என ஓட்டுநர் முடிக்கவும்… அந்த அதிகாரிக்கு வியர்த்து விட்டது. உடனே அருகில் வைத்திருந்த தண்ணீரை மடக்கு மடக்கு என்று குடித்தவர்… வழிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்து எடுத்தவர்…
ஹ்ஹ்ம்ம்ம் டெண்டர் அவங்க வந்த பிறகு ஆரம்பிக்கலாம்யா… என தொண்டையை செருமிக்கொண்டே சொன்னவருக்கு விக்கு மண்டை எல்லாம் வியர்த்து விட்டது பாவம்…
அதே நேரம் மண்டபத்தின் வாயிலில் சறுக்கிக்கொண்டு வந்து நின்றது முதலாவது வண்டி. அதிலிருந்து அவிநாசியும் ருத்ரனும் இறங்கி வந்தனர்…
இரண்டாவது காரில் இருந்து இறங்கினார் அவிநாசியின் வயதை ஒத்த சன்னாசி…
சார், அவங்க வந்துட்டாங்க போல என வாசல் பக்கம் பார்க்க…
இவங்க தானா அது…!! ஆமாம், அது நம்ம ரைட்டர் அறிமுகம் படுத்தி வச்ச மில் ஓனர் அவிநாசியும் அவர் மகன் ருத்ரனும் தானே…
அவங்களே தான் சார்.
அது யார்யா இன்னொரு ஆள் புதுசா இருக்கே…
சார், நீங்கள் ஊருக்குப் புதுசு அதான் உங்களுக்கு அவரைத் தெரியல. அவர் பேர் தான் சார் சன்னாசி…
இவரும் ஊருக்குள்ள முக்கிய தலைக்கட்டு தான் சார்…
என அலுவலர் அறிமுகப்படுத்தி வைக்கவும் சன்னாசியும் அவிநாசியும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் மண்டபத்திற்குள் காலடி எடுத்து வைக்கவும் இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது…
ருத்ரா தோற்கப் போறவனுக்கு எதுக்கு இவ்ளோ அவசரம்… எப்படியும் டெண்டர் முடிஞ்சதும் கடைசியா சேர் தூக்கிப் போடத்தான் ஆள் தேவைப்படும் அதுவரை வெளியே நிக்க சொல்லு… என அவிநாசி அவரை இளக்காரமாகப் பேச…
உள்ள போனால் தானே தெரியும் யார் தோக்கப் போறா யார் ஜெயிக்கப் போறான்னு அப்புறம் தம்பி உங்க அப்பாகிட்ட சொல்லுங்க சேரை தூக்கிப் போடுற வேலை ஒன்னும் அவமானம் இல்ல, சேரை தூக்கிட்டு போகாம இருந்தா சரிதான் ஏன்னா தூக்கிட்டு போறதெல்லாம் உங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லையே… என சன்னாசி அவரது பாணியிலேயே அவருக்கு பதிலடி கொடுத்தார்…
சன்னாசி சொன்னதன் அர்த்தம் புரிய அவிநாசி முகம் கருத்தது, ருத்ரன் முகம் சிவந்தது…
என்னையா சொன்ன என ருத்ரன் அண்ணாசியின் சட்டையைப் பிடிக்கப் போக இருவரின் நடுவில் குறுக்கே பாய்ந்தான் தீரன்…
தன் தந்தைக்குக் கேடயமாக நின்று கொண்டவன்… பேச்சு பேச்சாக இருக்கும்போது கை நீளக் கூடாது ராஜா… என் அப்பா அப்படி ஒன்னும் இல்லாததைச் சொல்லி உண்மையைத் தானே சொன்னாரு…****
டேய் உன்னை… என்று ருத்ரன் தீரனைப் பார்த்து பற்களை நர நர என்று கடித்தவன்… அவன் மேல் பாய… இருவரும் கட்டிப்பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்… பெரியவர்கள் வாய் வார்த்தையாக ஆரம்பித்து வைத்ததை இவர்கள் இருவரும் கைகலப்பாக மாற்றி இருந்தனர்…
டெண்டர் எடுக்க வந்தவர்களும் அதிகாரிகளும் சேர்ந்து இருவரின் சண்டையையும் விலக்கினர்… ஒரு வார சமாதானம் செய்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று எதிர் எதிர் திசைகளில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர்…
யோவ் என்னய்யா இது??? இங்க இப்படி ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குற அளவுக்கு இவங்களுக்குள்ள என்ன பிரச்சனை…
அதை ஏன் சார் கேக்குறீங்க இந்த சன்னாசியும் அவிநாசியும் இருக்காங்களே ரெண்டு பேருமே ஜென்ம விரோதிங்க ஆனால் நெருங்குன
சொந்தக்காரங்க தான் சார்…
என்னய்யா திரும்பவும் குழப்புற…
குழப்பல சார், தெளிவா சொல்றேன் கேளுங்க… பல தலைமுறைக்கு முன்னாடி இவங்க ரெண்டு குடும்பமும் ஒற்றுமையா நல்லாதான் சார் வாழ்ந்து வந்தாங்க. அப்போ சன்னாசியோட தாத்தாவுக்கு அவிநாசியோட பாட்டிய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அந்த கல்யாணத்துல ஏதோ குளறுபடி ஆனதால ரெண்டு குடும்பத்துக்கும் வாய்க்கா தகராறு ஆரம்பிச்சு ஜென்ம பகையா வந்து நிக்குது சார்…
இதுல கொடுமை என்ன தெரியுமா சார்… இவங்க ஒண்ணு பண்ணா அவங்க பண்ணாங்கன்னே ஏட்டிக்கு போட்டியா எதாவது ஒண்ணு பண்ணியே தீரணும் சார்… உதாரணத்துக்கு, இப்போ இவருக்கு அவிநாசின்னு பேரு வச்சதுனாலயே அவருக்கு சன்னாசின்னு பேர் வச்சாங்கன்னா பார்த்துக்கோங்க… அட அவ்ளோ ஏன் சார், இவர் பசுமாடு வாங்கினால் அவர் எருமை மாடு வாங்குவாரு, இவர் ரைஸ் மில் வச்சிருக்காருங்கறதுக்காகவே இவர் பஞ்சமில் ஆரம்பிச்சாரு… இப்படி இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் போட்டி போட்டுக்கிறதால ஊருக்கு தான் சார் ஒரே கொடைச்சல்…
ஏன்யா அப்படி சொல்ற…
பின்ன என்ன சார் இவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற நீ பெரியவனா இல்ல நான் பெரியவனாங்கிற போட்டியில மக்கள் மாட்டிகிட்டு திண்டாடுறாங்க சார்…
அவிநாசிக்கு சப்போர்ட் பண்ணா அவனுக்காடா சப்போர்ட் பண்றீங்கன்னு அவர் ஆளுங்க கரண்டைப் புடுங்கி விட்டுருவாங்க…
இவருக்கு சப்போர்ட் பண்ணா அவிநாசி ஆளுங்க குடி தண்ணீர பழுப்பா கட் பண்ணிடுவாங்க…
சரி போ ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பண்ணாம விட்டா???
விட்டா…??
ரெண்டு பேரும் சேர்ந்து மொத்த ஊரையே முடிச்சு விட்ருவானுங்க சார்… கேபிள் கனெக்ஷன் கட் பண்றது, செல் நெட்ஒர்க் சிக்னலை ஜாம் பண்றது, குப்பையை நம்ம வீட்டு வாசலுக்கு முன்னாடி கொட்றது, ஊருக்கு வர போஸ்ட் எல்லாம் திசை மாத்தி விடுறது, ஒன்னு விட மாட்டானுங்க சார்…
இருவர் பற்றியும் அனைத்தையும் கேட்டவர் சில நொடிகள் அமைதியில் ஆழ்ந்தார்… பின் ஒரு முடிவோடு நிமிர்ந்தவர்… எழுந்து நின்று சன்னாசியையும் அவிநாசியையும் பார்த்தவாறே…
உங்க எல்லாருக்கும் என்னோட வணக்கம்… நான் இந்த ஊருக்கு புதுசா வந்த பி.டி.ஓ ஆஃபீஸர்… நான் இந்த ஊருக்கு வேணா புதுசா இருக்கலாம், ஆனா உங்க எல்லாரோட தலை வரலாறுகள எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு தான் இங்க வந்து இருக்கேன்… அதனால இந்த டெண்டர நல்ல முறையில நடத்தி முடிக்க உங்களோட ஆதரவ கேக்குறேன்… இன்னைக்கு இந்த டெண்டர்ல யார் ஜெயிச்சாலும் சரி, மத்தவங்க அதை பெருந்தன்மையோட ஏத்துக்கிட்டு விட்டுக்கொடுத்து போகணும்னு கேட்டுக்குறேன்… இந்த பேச்சு பொதுப்படையா இருந்தாலும் பொருள் என்னவோ அவிநாசி சன்னாசிக்கான மறைமுக எச்சரிக்கையாகவே இருந்தது…
“”சார் அதை அவன்கிட்ட சொல்லுங்க, ஏன்னா தோல்வின்னா என்னன்னு எங்க பரம்பரைக்கே தெரியாது…” என தீரன் சற்று திமிராகவே சொன்னான்.
அதற்கு அவிநாசி மறுமொழி சொல்ல வரும்போதே அவரை தடுத்தான் ருத்ரன்.
“டேய்… தோல்வின்னா என்னன்னு தெரிஞ்சுக்க குறைந்தபட்சம் போட்டியிலயாவது நின்னு இருக்கணும்… சார், நீங்கள் இவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் ஏன்னா அவுட் ஆகப் போறேன்னு தெரிஞ்சாலே ஆட்டத்த கலைச்சுடுவானுங்க சார்…”
“எப்படி விளையாடினா என்ன?? தோற்கிறவன் தாண்டா எப்பவுமே காரணத்தைத் தேடுவான்…!!”
“ஜெயிக்கிறவனுக்கு எந்த காரணமும் தேவையில்லை…!! நான் ஜெயிக்கப் பிறந்தவன்டா… நீ என்கிட்ட தோற்கப் பிறந்தவன்…!!” என எள்ளி நகையாடினான் தீரன்…
“சோ… ஒரே வசனத்தை இன்னும் எத்தனை வருஷத்துக்குடா பேசிட்டுத் திரியப் போற…?”
என்று ருத்ரன் நக்கலாகச் சிரித்தான்.
“வருஷா வருஷம் ஒவ்வொரு போட்டியிலயும் இதே dialogue…
அப்புறம் எங்ககிட்ட தோத்துப் போறது…
தோல்வியை ஏத்துக்க முடியாம சலம்புறது…
சமாளிக்க முடியாம துண்டக் காணோம் துணியக் காணோம்னு நீயும் உன் கூட்டமும் ஓடிப் போறது…”
என்று தோளைக் குலுக்கியவன், ஒரே வேடிக்கையா இல்லை என ருத்ரன் பதிலடி கொடுக்கவும்…
“ஏய்ய்ய்…!”
பொறுக்க முடியாமல் தீரன் இருக்கையிலிருந்து பொங்கி எழுந்தான்…
அவன் எழுந்த வேகத்தில் நாற்காலியே பின்னால் சரிந்து விழுந்தது.
“வாடா…!” என ருத்ரனும் சட்டென்று எழுந்து நின்றவன், தன் முன் இருந்த நாற்காலியை எட்டி உதைத்தபடி முன்னே வந்தான்…
இருவரும் நேருக்கு நேர் நின்ற அந்த நொடி மண்டபமே பதற்றத்தில் உறைந்தது…
“டேய் ருத்ரா…” என அவிநாசி அடக்க முயல…
“தீரா… உட்காருடா…” என சன்னாசியும் மகனைப் பிடிக்க முனைந்தார்.
ஆனால், இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கிழித்துத் தின்னும் அளவுக்கு அனல் பறந்தது.
முட்டிக்கொண்டு நின்ற இருவரையும் பார்த்த அலுவலர் கடுப்பாக எழுந்து நின்றார்…
“இப்போ நீங்க ரெண்டு பேரும் போய் அமைதியா உட்காருறீங்களா… இல்ல இந்த டெண்டர் மொத்தத்தையும் நான் கேன்சல் பண்ணவா…?”
அந்த ஒரு வார்த்தையில் மண்டபமே அமைதியானது.
ருத்ரன் இன்னும் தீரனை முறைத்தபடி நின்றான்.
தீரனும் பார்வையை மாற்றவில்லை.
“என்னடா…?” என சன்னாசி மெதுவாக மகனின் தோளைப் பிடிக்க…
அவிநாசியும் ருத்ரனைப் பார்த்து,
“உக்காரு ருத்ரா…” என்றார் அழுத்தமாக.
சில நொடிகள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே பின்னோக்கி நகர்ந்தனர்.
ருத்ரன் நாற்காலியை இழுத்து அமரும்போதும் பார்வை தீரன் மேல் தான் இருந்தது.
தீரனும் சட்டென சேரை திருப்பி அமர்ந்தவன்,
“சார்… டெண்டரை ஆரம்பிங்க…
டைம் வேஸ்ட் ஆகுது…”
ருத்ரன் உடனே சிரித்தான்.
“ஆமா சார்…
சில பேருக்கு தோற்பதில் கூட அவசரம் இருக்கு போல…”
என்றதும் தீரன் அவனை வெட்டுவது போல் பார்த்தான்…
இருவருக்கும் நடுவே மீண்டும் அனல் பறக்க…
“இங்க பாருங்க…!”
என அதிகாரி குரலை உயர்த்தவும் மண்டபமே அமைதியானது.
யாரு ஜெயிக்கிறீங்கங்கிறது இங்க முக்கியம் இல்ல…
உங்களில் யார் ஜெயிச்சாலும் இந்த ஊருக்கு நன்மை கிடைக்கணும்… அது தான் இங்க ரொம்ப முக்கியம்…
என்று அழுத்தமாக சொன்னவர் மேஜை மேல் இருந்த கோப்புகளைப் பார்த்தார்.
“இந்த ப்ராஜெக்ட்ல வர்ற தண்ணி இந்த ஊரு வயல்ல பாயணும்…
இங்க இருக்குற மக்கள் வாழ்க்கை முன்னேறணும்…
அதை விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் ஈகோ பார்த்துக்கிட்டு சண்டை போட்டா கடைசில நஷ்டம் ஊருக்கு மட்டும் இல்லை, உங்களுக்கு சேர்த்து தான்…
அவிநாசியும் சன்னாசியும் அமைதியாக இருந்தனர்.
அதிகாரி மீண்டும் தொடர்ந்தார்.
சோ…
இன்னைக்கு இந்த டெண்டர்ல யார் வின் பண்ணாலும் மற்றவர் பெருந்தன்மையா நடந்துக்கணும்…
பிரச்சனை, சண்டை, கலவரம் எதுவும் வேண்டாம்…”
என்று இறுதியாக இருவரையும் எச்சரிக்கை பார்வையால் பார்த்தவர்,
“இப்போ… டெண்டரை ஆரம்பிக்கலாமா…?” என்றதும் அனைவரும் அமைதியாக இருந்தனர்… அவர்களின் அமைதியை ஒப்புதலாக எடுத்துக் கொண்டவர்… தன் முன்னாடி இருந்த கோப்பை திறந்தார்…
மண்டபமே அப்போது விசித்திரமான அமைதிக்குள் மூழ்கி இருந்தது…
காற்றில் சுற்றிய மின்விசிறியின் சத்தம் கூட தெளிவாக கேட்கும் அளவுக்கு…
ருத்ரன் நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றியிருந்தான்…
தீரன் மேஜை மீது விரல்களால் மெதுவாக தட்டிக் கொண்டிருந்தான்…
அவிநாசியும் சன்னாசியும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நேராக அதிகாரியின் உதடுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்…
கோப்பையைத் திறந்த அதிகாரி அதிலிருந்த பெயரைப் படித்தவர் கண்கள் ஒரு நொடி ஆச்சரியத்தில் விரிந்தது…
அடுத்த நொடி தன்னைச் சமாளித்துக்கொண்டவர்,
“இந்த ரூரல் டெவலப்மென்ட் அண்ட் வாட்டர் இரிகேஷன் டெண்டரை வென்றது…”
என்று சொல்லி முடிக்கும்போதே அந்த மண்டபமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது…
எல்லாம் ஒரே ஒரு நொடிதான், அதற்குப் பின் இரு தரப்பினரும் கட்டிக்கொண்டு புரள ஆரம்பித்துவிட்டனர்…
எனில் வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்தவர் யார்…?? ஒரு நிமிடம்…
ஐயோ சார், பறந்து வருது குனிஞ்சிக்கோங்க…
ச்ச்… ஜஸ்ட் மிஸ்.
முதல்ல இந்த மண்டபம் மிஞ்சுமானே தெரியல… இவனுங்க கூட கமிட் ஆனதுக்கு டேமேஜ் காஸ்ட் கட்டியே நான் காலி ஆகிடுவேன் போலையே…


