வானுயர உருண்டு வந்த பொன் நிற ஆதவனின் கதிர்கள், அந்த உயரத்தில் நின்ற தென்னை மரங்களின் ஊடே ஏற்படுத்தும் ஒளிச் சிதறல்கள் யாவும் தங்கப் பொற்காசுகளாக மின்னின…
அதிகாலையிலேயே விழித்து, தலை குளித்து, புதுப் புடவை கட்டி கொண்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கையெடுத்து வணங்கினாள் முகில்.
கார் கூந்தலில் இருந்து ஈரம் சொட்டச் சொட்ட நின்று பூஜை செய்யும் மருமகளுக்கு, நெற்றி வகுட்டிலும் அவள் கொண்ட தாலியிலும் குங்குமம் வைத்து வாழ்த்தி முடித்த கையோடு, மருமகளின் தலையைத் தடவி விடலானார். சகுந்தலா தாயின் அன்புக்கு ஈடு இணை ஏது…
“உன் கோபம் நியாயமானது தான் ராசாத்தி… உன் உணர்வை நாங்கள் மதிக்கிறோம் கண்ணு. ஆனா நீ நினைக்குற மாதிரி தம்பி ஒன்னும் அவ்ளோ மோசமானவன் கிடையாதுடாமா… உங்களுக்குள்ள என்ன பிரச்சனை எனக்குத் தெரியாது தாயி, அவனுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்தா… உன் கோவத்தை விட்டு அவன் கூட சந்தோசமா வாழ நீ என்ன கேட்டாலும் நான் செய்யுறேன் தாயீ… உனக்குத் துணையா நான் எப்பவும் நிப்பேன் தா.”
… எனக்கு வேண்டியது எல்லாம் நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழனும், அம்புட்டு தான்…!!” என்றவரை முகில் திரும்பிப் பார்த்தாள்…
“என்ன கண்ணு அப்படிப் பார்க்கிற? எனக்கு நீயும் பெரியவனும் ஒன்னும் தான் தாயீ…!!” என்றவர் கையால் முகிலின் தலைக்குச் சம்புராணி போட்டுச் சிக்கு உடைத்துத் தளரப் பின்னி விட்டு இருந்தார்…
முகிலுக்குத்தான் அவர் செயலிலும் சொல்லிலும் தலை நிமிர முடியாமல் போய்விட்டது. நேற்று அவள் பேசியது என்ன, இன்று அவர் வாஞ்சையாக நடந்து கொள்வது என்ன… எத்தனை அன்பான வெள்ளந்தியான பெண்மணியின் மனதை நோகடித்து விட்டோம் என்ற குற்ற உணர்வில் வாடினாள் முகில்… சகுந்தலாவின் அன்பின் முன்னே அவள் பழிவெறி எல்லாம் நமத்து போன பட்டாசாகத் தோன்றியது…
“அவ்ளோ தான் முடிஞ்சிது வா கண்ணு, எல்லாரும் சாப்பிட வந்து இருப்பாங்க…!!” என ஜாதி மல்லிச் சரத்தைத் அவளுக்கு வைத்துவிட்டு அழைத்தவர்… அவள் மதி கொஞ்சும் முகத்தைப் பார்த்து “என் அழகு ராசாத்தி…!” என நெற்றி முறித்தார் சகுந்தலா…
“எந்த ஊர்லயும் இல்லாத அதிசயம் இங்க நம்ப வீட்ல தான் நடக்கும் போல… நேத்து இவள் தான் உன்கிட்ட அந்தப் பேச்சு பேசுனா, இன்னைக்கு என்னடா மானம் கெட்டுப் போய் நீயே கொஞ்சிக்கிட்டு நிக்கிற? இங்க பாரு சகுந்தலா, இவளை ஆரம்பத்திலே வைக்க வேண்டிய இடத்துல வச்சா தான் உனக்கு மரியாதை, இல்லனா இது எங்க கொண்டு போய் விடும்னு தெரியாது, பார்த்து சுத்தமா இருந்திருக்க…!!!” என்றபடி வந்தார் சமூண்டீஸ்வரி… அவருக்குத் தென்றல் மீது கோபம் தான்…
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அத்தை, ராசாத்தி சாமர்த்தியமா பொழப்புக்கு புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமா இருந்தா போதும், நான் வேற எதுவும் எதிர்பார்க்கலைங்க அத்தை… வா கண்ணு, நேரம் ஆச்சு, ஆம்பளைங்க எல்லாம் சாப்பிட உட்கார்ந்து இருப்பாங்க அத்தை, நாங்க போய் எடுத்து பரிமாறி வைக்கிறோம்… நீங்க மெல்ல வாங்க…!!!” என்றவர் சாமர்த்தியமாக தன் மருமகளை மாமியாரிடம் இருந்து காப்பாற்றி, கை பிடித்து அழைத்துச் சென்றார்…
சகுந்தலாவின் எதிர்பார்ப்பற்ற அன்பில் கூனிகுறுகி போன முகில், அவர் கையை பிடித்து… “நேத்து நா… நான் கோவத்துல எதையும் யோசிக்காம பேசிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க அம்மா… அ… அத்தை…!!!” என தடுமாறினாலும், உண்மையாகவே மனம் வருந்தி தான் மன்னிப்பு கேட்டாள் முகில்… இதுவே அவளின் உண்மையான குணம்.
இயல்பிலேயே இளகிய மனம் கொண்டவள் தான் முகில், ஆனால் தன்னவர்களுக்கு ஒன்று நேரும் என்றால் பழுதும் பாம்பாகுமே; அப்படி இருக்க முகில் மட்டும் விதிவிளக்க என்ன…??
தன்மீதே உள்ள குற்ற உணர்வால் அவளின் இயல்பான குணம் தலைதூக்கியது… மன்னிப்பை உடனே கேட்டுவிட்டாள்…
“அத்தைன்னு கூப்பிடு கண்ணு, என்னை பேச உனக்கு இல்லாத உரிமையா… இந்த சின்ன குட்டி பேசாததையா நீ பேசிட போற…!!” என்றவர்க்கு மாமியார் பதவியின் அருமை பெருமை தெரியவில்லையோ? அது சரி, இவங்கள கூட்டி வந்து நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு பயிற்சி கொடுத்துட வேண்டியது தான் என்னாங்கிறேன்…
அங்கு உணவு மேஜையில் உட்கார்ந்து இருந்த அனைவரும் ஆவென வாயைப் பிளந்து வேடிக்கை பார்க்கும் படி வளைய வந்தனர் மாமியாரும் மருமகளும்…
“என்ன அத்தை, இன்னைக்கு உங்க மூஞ்சி பளிச்சுன்னு இருக்கு, புது மருமகள் வந்த ஜோரோ…?” என்ற குறிஞ்சி, முகிலை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி கேட்க,
“எல்லாம் என் மருமகள் வந்த பூரிப்பு தான்…” என விகற்பம் இன்றி கூறினார்… அவருக்கு இந்தச் சூதுவாது எல்லாம் வைத்துப் பேசவும் தெரியாது, பேசினால் கண்டு பிடிக்கவும் தெரியாது…
“பார்க்கிறேன் பார்க்கிறேன், இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஜோரு…!!” குறிஞ்சி வெட்டின வார்த்தை…
“நல்லா பாருடியம்மா, இப்போ சாப்பிடு…!!” என்று சகுந்தலா அவளுக்குப் பிடித்த இனிப்பை அள்ளி வைத்தார். அவர் சந்தோஷத்துக்கு அளவே இல்லை, அதை இப்படித்தான் காட்டுவார்…
“அத்தை, நீங்க உட்காருங்க, நான் உங்க எல்லாருக்கும் பரிமாறுறேன்…!!” என்ற முகிலை எல்லோரும் வினோதமாகத்தான் பார்த்து வைத்தனர்… பின்னே நேத்து அந்த கத்து கத்தியவள் இன்று குழைந்தால் வினோதமாகத் தானே இருக்கும்… அதிலும் அவள் சகோதரனாக உடன் வந்தவனுக்கு அவளின் இந்த நடத்தை, சப்டைட்டில் இல்லாமல் கொரியன் படத்தை பார்த்தது போல இருந்தது… எழவு ஒன்னுமே புரியல…
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீதான் இப்ப புதுப் பொண்ணு, போய் தம்பி பக்கத்துல உட்காரு. உங்க ரெண்டு பேருக்கும் நான் எடுத்து வைக்கிறேன்…!!” என்றவர் முகிலை விஜயேந்திரனுக்குப் பக்கத்தில் உட்கார வைத்தவர்.. இருவருக்கும் பரிமாற…
குனிந்த தலை நிமிராமல் உண்டவளைத் தான் விஜயேந்திரனின் ஆழ்ந்த பார்வை துளைத்தது.
முகில் தட்டில் இருக்கும் குறிப்பிட்ட பதார்த்தம் மட்டும் காலியாவதையும், அவள் அதை விரும்பி உண்பதையும் பார்த்தவன், தன் தட்டில் இருந்து எடுத்து அவளுக்கு வைக்க… ஒரே நாளில் இரண்டாவது ஷாக்கை அடைந்தது பூபதி குடும்பம்… (ஷாக்கை விட ஷாக்!)
“க்கும் பெரிய அத்தான், நாங்களும் இங்க தான் இருக்கோம். விட்டா எங்க முன்னாடியே ஊட்டி விட்ருங்க போலயே உங்க பொண்டாட்டிக்கு…!” என குறிஞ்சி நக்கலாகக் கேட்க..
“அதுதான் உன் ஆசைனா…? செஞ்சிடுவோம்…!” என்றவன் தன் தட்டில் இருந்த பதார்த்தத்தை எடுத்து முகிலுக்கு ஊட்ட… பொறை ஏறிக் கொண்டது… நீங்க நினைக்கிற மாதிரி முகிலுக்கோ குறிஞ்சிக்கோ அல்ல, எல்லாம் அந்த தீவட்டி தடியன் வீர்க்கு தான்…
அவனை விஜயேந்திரன் முறைக்க
“டேய் பெரியவனே சும்மா முறைக்காதடா… நீயாடா இப்படி எல்லாம் பண்ற…எப்போ பாரு முறுக்கி விட்ட முனீஸ் மாதிரி திரிஞ்சிட்டு இருந்தவன் திடீர்னு ஓவர் நைட்ல லவ்வர் பாய் ரெமோவா மாறினா… அதிர்ச்சி இருக்குமா இல்லையா…?” என வீர் கூறிய தோரணையில் அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். அதில் முகிலின் வெள்ளி கொலுசு மணி குலுங்கும் சிரிப்பில் தன்னை மறந்து லாயித்து போனான் விஜயேந்திரன்… எதார்த்தமாக விஜயேந்திரனை திரும்பி பார்த்த முகில், அவன் பார்வையில் மூச்சிழந்து போனாள் அம்ம்மா காதல் பார்வையா அல்லது காமன் பார்வையா…?? அது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்து…!!
அன்று முழுவதும் முகில் சகுந்தலாவுடன் வால் பிடித்துக்கொண்டு வளைய வந்தால், அவள் சகோதரனால் முகிலை நெருங்க முடியவில்லை; இல்லை, விஜயேந்திரன் விடவில்லை…
வெய்யோன் மறைந்து முழு நிலவு வானில் உதித்த நேரம்… பூபதி மளிகையில் தடபுடலாக அரங்கேறியது அலங்காரம் எதுக்கா…??
“என்ன கேள்வி கேட்டுட்டீங்க மக்கா… வெட்கம், வேதனை, துக்கம்ம்…!!”
“தே ச்சே! தெரிஞ்சா சொல்லு கடுப்ப கிளப்பமா… அதான்… ஹிஹி! வேற எதுக்கு, விஜயேந்திரன் முகில் முதலிரவுக்கு தான்…”
“எதே முதலிரவா? அப்போ நேத்து நைட் என்ன நடந்தது…?” “அதுவா… அது வந்து… வந்துஉஉஉ…”
“எதே! இப்போ நீ சொல்ல போறியா, கட்டை தூக்கவா…”
சரி சொல்றேன், இருங்க…
நேற்று இரவு முகிலின் அறைக்குள் தடலாடியாக நுழைந்த விஜயேந்திரன், கதவை உள் பக்கமாகத் தாழ் போட முயன்றபோது, அவன் பலத்தால் அது உடைந்து பல்லி மாதிரில கதவிலத் தொங்கிட்டு கிடக்கு…
விஜயேந்திரனின் அதிரடியால் பயந்து எழுந்து நின்றாள் முகிலினி…
காலில் தட்டிய வேட்டியை காலால் எத்தி ஒரு கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டவன், மறு கையால் மீசையை முறுக்கிவிட்டபடி முகிலை நோக்கி நெருங்க, அவள் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் நகர்ந்து வந்து சுவற்றில் முட்டி நிற்க… அவளை அணைப்பது போல் ஒண்டி நின்றவன்…
சுருள் முடியும் கருத்தடர்ந்த புருவமும் மீசையும், அழுந்த தடித்த செவந்த உதடுகளும், ஆளைத் துவம்சம் செய்யும் பார்வையும் அவன் மமுதன் தான் என அடித்துச் சொல்லியது…
“நீ யாரா இருந்தாலும் சரி, எப்படிப்பட்டவளா இருந்தாலும் சரி, எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, இப்போ நீதான் இந்த விஜயேந்திரனின் மனைவி…!!” என்றவன், அவள் சேலை மறைவுக்குள் கை விட்டுத் தாலியை வெளியே எடுத்துப் போட… ஆடிப் போனாள் முகில்… அவன் செயல்கள் யாவையும் தடுக்கத் தோன்றாமல் பனிச் சிற்பமாக உறைந்து நின்றவளின் காதருகே குனிந்தவன்…
“முழிக்காதடி மனுஷனுக்கு மூடு மாறுது…!!” என்றவன் முத்தமிட முனைய, அதற்கு முரண்பட்டு முகத்தைத் திருப்பி முகமறுப்பு தெரிவிக்க… அவள் தாடையை இறுகப் பிடித்து, தன்னை நேராகக் காணச் செய்தவன்…
“இந்த முகத்தைத் திருப்புறதும், மூடி வைப்பதும் எல்லாம் இனி என்கிட்ட கூடாது… நடக்காது…!!” என்றான் அழுத்தமாக. அவள் சரிந்த முந்தானையை இழுத்து விடுவதைச் சுட்டி காட்டி, “உனக்கு பிடிக்குதோ இல்லையோ… இனி என்னை விரும்பப் பழகிக்கோ…!!” என்றான், அதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது போல்…
தாடையைப் பிடித்த விரலால் அவள் செவ்வரளி இதழை வருடியவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைந்தான்…
கூர் நுனி மூக்கை அவள் முந்தானையை வழியே நுழைத்து, அவனுக்கு மட்டுமே தெரிந்த அவள் மார்மச்சத்தில் முகத்தை புரட்டியவன், அவன் கிட்ட மூச்சுக்காற்றால் ஏற்பட்ட வெப்பச்சலனம் அவள் மார்மத்தியில்… முன்னேறிச் செல்லத் தூண்டிய மாரன், கணையை உடைத்து எறிந்தவன் அவளை விட்டு மனமே இல்லாமல் விலகிச் சென்றான்…
கதவு வரை வந்தவன் நின்று, “அப்புறம் வீட்டு பெரிய மனுஷங்கள மதிச்சு பழகு… என் பொண்டாட்டிக்கு அது தான் அழகு, புரிஞ்சிதா…? இல்லை என் வழியில புரிய வைக்கணுமா…?” என்றவன் அவளைப் பார்த்துவிட்டுச் சென்றான். அவனது பார்வையில் இருந்த அத்தனை வீரியத்தைக் கண்டு அரண்டவள், புரிந்தது என்பது போல் தலை ஆட்டினாள். அவளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சை விடுத்துச் சென்றான்.
விஜயேந்திரன் அகன்ற பின்னே அச்சிலைக்கு உயிர் வந்ததோ? மூச்சிரைக்க, உடல் வேர்த்துக் கொட்ட, கால்கள் தள்ளாட கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்குக் கண்ணீர் ஆறாகக் கொட்டியது… கண நேர யோசனைக்குப் பின்பு கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அவள் எண்ணத்தை அவள் அன்றி வேறு யாரும் அறியார்…
அறியட்டும், அறியாம போகட்டும்! இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி, அடுத்த எபிக்கு ரோம்-க்கு போவோமா இல்லை இப்படியே கடைய சாத்திட்டு வெஜி-க்கு தவ்விடுவோமா…? எதுவாயிருந்தாலும் நேயர்கள் விருப்பம்… இப்படிக்கு ஒன்னுமே தெரியாத அப்பாவி கிரீன் சாண்ட் ரைட்டர்…



