முகிலே!! உன் முகவரி என்ன-4

கறவைக்கண் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் என்னும் மனுநீதி சோழனைப் போல் தவறு செய்தது தன் பேரன்புமிக்க பேரன்கள் என்றாலும், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க முடிவு செய்தார்…

“யாரு என்று சொல்லுமா… இங்கே சட்டம் எல்லாருக்கும் சமம், உன்னை ஏமாற்றியவனுக்குக் கண்டிப்பாகத் தண்டனை உண்டு… நீ தயங்காமல் உன்னை ஏமாற்றித் தவிப்பிற்கு ஆளாக்கியது யார் என்று சொல்லுமா…??” என ரத்தினவே ஊக்குவிக்க, சற்றுத் தடுமாறித்தான் போனாள் தென்றல்…

அவர் அவளின் தயக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, “இந்த ஊருக்கு என்று சில சட்டத் திட்டங்கள் உள்ளன, அதற்கு முன்னால் எல்லாரும் சமம்தான். தவறு செய்தது என் பேரன்கள் என்றாலும், அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன், நீ தைரியமாகச் சொல்லு!” என்றார்…

தென்றல் தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டு நிற்க…

“ஐயா, பெரியவக பேச்சில் குறுக்கீடுதேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க. ஒரு பக்கம் கருத்தை மட்டும் கேட்டுட்டு தீர்ப்பு வழங்கினா அது எப்படிங்க நியாயமாகும்…?? அநியாயமாகாதா…!! தராசு சரிசமமா நிக்க வேணும் இல்லைங்க….”

“நீங்க எங்கள எதுவுமே விசாரிக்கலையே…??” என விஜேந்திர பூபதி கேட்டது ரத்தினவேல் நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் இருந்தது…

ஒருவழியாக தன்னைச் சுதாரித்துக் கொண்டவருக்கு இந்த ஒரே நாளில் தான் எத்தனை தடுமாற்றம்… அருமைப் பேரன் நிச்சயதார்த்தம் நின்று, ஆசைப் பேரன்கள் குற்றவாளிகளாகக் கூண்டில் நிற்க, தன் வளர்ப்பு வீணாகி விட்டதோ என வருத்தத்தில் வந்த தடுமாற்றம் அது…

“இந்த பொண்ணு உங்க மேல வச்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துக்கும் என்ன பதில் சொல்லப் போறீங்க… ??” என்றவர் இதுவரை இருந்த திடம் குறைந்து தடுமாறித்தான் போனார்…

“ஐயா தப்பா எடுத்துக்காதீங்க, நாங்க உங்க வளர்ப்பு… நாங்க எப்படிங்க சோரம் போவோம்? இந்த பொண்ணை நாங்க மூணு பேருமே பார்த்ததில்லை!” என மூத்த தமையன் கூற இளைய சகோதரர்கள் ஆமோதித்தனர். “அப்படி இருக்கும் போது அந்த குழந்தைக்கும் எங்களுக்கும் மட்டும் எப்படி சம்பந்தம் இருக்கும்? அத்தோட நீங்க எங்களுக்கு போட்ட பரம்பரை தங்கச் சங்கிலி இன்னும் எங்க கழுத்துல இருக்கும் போது, அந்தப் பிள்ளை கைக்கு நம்ம குடும்பத் தங்கச் சங்கிலி எப்படி வந்தது? யாரோட தனிப்பட்ட விரோதத்தையோ இந்த பொண்ண வச்சு தீர்த்துக்குற மாதிரி இருக்கு… தீர விசாரிக்காமல் தீர்ப்பை கொடுக்காதீங்க!” என விஜயேந்திரன் அங்கு நின்று கொண்டு ரகுநாதனிடம் மறைமுகமாகச் சொன்னது என அனைவருக்குமே புரிந்து இருக்கும்.

“இந்தாப்பா, இந்த ஜாடை பேசுற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! உன் மேல தப்பு இல்லன்னா அதை நிரூபிச்சு காட்டு… உன் குட்டு வெளிப்பட்டுடுச்சுன்னு பழிய என் பக்கம் திருப்பி விட்டு நாடகம் ஆடாதே…!!” எனக் கடுமையாகச் சாடினார் ரகுநாதன்…

“ஏய், யாரப் பார்த்து நாடகம் ஆடுறதா சொல்றே?” என இளையவன் வீரேந்திர பூபதி சீறிக்கொண்டு சண்டைக்குப் பாய… ரகுநாதனின் ஆட்களும் சண்டைக்கு இறங்க, வாய் வார்த்தை கை கலாப்பாக மாறி இடமே கலவரமானது…

இவர்களைப் படாதப்பாடு பட்டு விலக்கி வைத்தனர்… அப்போதும் அடங்கவில்லை பூபதி வீட்டு வாரிசுகள்…

“எப்பா, இங்க என்ன நடந்துட்டு இருக்கு? நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? பெரியவர்க்கு முன்னாடி மரியாதை எதுவும் இல்லாம என்ன இது…!!” என வழிக்குக் கொண்டு வந்தவர்கள்…

“ஏப்பா விஜயா, கடைசியா நீ என்ன தான் சொல்ல வர…?” என அவன் பதிலை எதிர்பார்த்து நிற்க…

“எனக்கு ரெண்டு நாள் தான், அதுக்குள்ள இந்த பொண்ணு யாரு, இந்த குழந்தை எப்படி வந்துச்சு, இவள் கூட இருக்கிற பிளக்கா பையன் யாரு, இவங்களுக்கு பின்னாடி இருக்கிறது யார்..? இதுங்களோட மொத்த கூட்டத்தையும் உங்க கண்ணு முன்னாடி நிறுத்துறேன்…?? ” என்றவன் வாய் வார்த்தைக்காக கூறவில்லை என்பது அவனின் தீவிர முகபாவனையில் தெரிந்தது…

“எதுக்கு ரெண்டு நாள் தரணும்? அதான் உண்மையும் சாட்சியும் உங்க கண் முன்னாடி இருக்கும்போது வேற என்ன வேணும்…?” என படபடத்தாள் தென்றல். எங்கே நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் அவளுக்கு…

“ஏன், அந்த ரெண்டு நாள்ல உன் சாயம் வெளுத்துடும் என்ற பயமோ…?” விஜயேந்திரன்

“உண்மை என் பக்கம் இருக்கும் போது எனக்கு என்ன பயம்…? ஆனால் வழக்கை தேவை இல்லாம திசை திருப்ப பார்க்கிறீர்களோன்னு நான் சந்தேகப்படுறேன்…” என கயல் கண்கள் சுருக்கி அவள் கேட்ட விதம், நிச்சயம் விஜயனை அறியாமலே அவன் மனதில் பதிந்து போனது உண்மை…

அவளிடம் தடுமாறும் இதயத்தைத் திசை திருப்ப எண்ணி, பார்வையை அவளிடம் இருந்து விலக்கி ரத்தனவேலிடம் நிலை நிறுத்தியபடி தொடர்ந்தான்…

“ஐயா, வழக்கை திசை திருப்ப வேண்டும் என்பது என் நோக்கமல்ல… நம் பரம்பரை நகை செய்யும் தங்க ஆசாரி வெளியூர் போயிருக்கிறார். அவர் திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும். அவர் வந்த பிறகு எல்லா குழப்பத்திற்கும் ஒரு பதில் கிடைக்கும், அதற்காகத்தான் இந்த இரண்டு நாள் கெடு தாங்க என்று கேட்கிறேன்…!!” கேவலம் ஒரு பெண் தன்னை ஏய்ப்பதா என்கிற கோபம்…

தீவிர யோசனைக்குப் பின்னர்… “விஜயா, உனக்கு இரண்டு நாள் தான் கெடு, அதற்குள் உங்கள் மேல் தப்பு இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், உங்களில் தப்பு செய்தவன் தானாக முன் வந்து குற்றத்தை ஒத்துக்கொள்ள வேண்டும்; அப்படி இல்லையென்றால், தப்பிற்கு முழு பொறுப்பையும் நீயே ஏற்றுக்கொண்டு தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்!” என எச்சரித்தவர்… தென்றல் புறம் திரும்பி

“இங்க பாருமா, இது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் தானே தவிர, வேற எந்த தவறான நோக்கமும் இல்லை… உண்மை உன் பக்கம் இருக்கும் போது நீ எதுக்கும் கவலைப்பட தேவையில்லை… நிச்சயம் உனக்கு நியாயம் கிடைக்கும், அதுக்கு நான் வாக்கு கொடுக்கிறேன்…!!” என தீர்ப்பைத் தள்ளி வைத்தார் நம்ம ஊர் நாட்டாமை…

அதைக் கேட்டு மற்றவர்கள் சமாதானமாகப் போக, எதையோ எதிர்பார்த்து வந்த ரகுநாதன் மட்டும் வெறுப்புடன் துண்டை உதறிக்கொண்டு, வஞ்சத்துடன் பூபதி குடும்பத்தாரை முறைத்துவிட்டுச் சென்றார்…

யாரிந்த ரகுநாதன்? அவருக்கும் ரத்தினவேல் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம் வாங்கப் பார்க்கலாம்?

ரத்தினவேல் பூபதியின் தந்தைக்கு பல வீடுகள், பல பூட்டுகள்; அதில் ஒரு வீட்டுக்கு பிறந்தவர் தான் ரகுநாதனின் தந்தை… என்னதான் பல வீடுகள் வைத்து இருந்தாலும், அனைவர்க்கும் சொத்துக்களைப் பிரித்து அப்போதே கொடுத்து விட்டார். இதனால் இவரின் வாரிசுகளுக்குப் பின்னால் பிரச்சனை வரக்கூடாது என்று அப்போதே யோசித்துச் செய்து விட்டார்… ஆனால் அதுவே பின்னால் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தெரியாமல் போய்விட்டது…

ஆம், என்னதான் ரகுநாதனின் தந்தைக்குச் சொத்து கிடைத்து விட்டாலும், ரத்தினவேலு குடும்பத்திற்குரிய கௌரவமும் அந்தஸ்தும் இவர்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை… பூபதியின் அந்தஸ்தும் செல்வாக்கும் தனக்கும் வேண்டும் என அதை அடைந்திடப் பல பல குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுத்ததால், இருக்கும் பெயரையும் மதிப்பையும் இழந்து மக்களிடம் வெறுப்பையும் தன் பெயரையும் சம்பாதித்தார். அதற்கு காரணம் ரத்தினவேல் பூபதி தான் எனத் தனக்குத் தானே தப்பு அர்த்தம் கற்பித்துக்கொண்டு அவர்களை அறவே வெறுத்து வந்தார்… இதுவே நாளடைவில் பூபதி குடும்பம் பெயர் கெட்டுப் போனால் தன் செல்வாக்கும் அந்தஸ்தும் தானே அதிகரிக்கும் என எண்ணி அக்குடும்பத்திற்குப் பல பல தொல்லைகளைக் கொடுத்து வந்தார்… இன்று அவர்களை ஊர்மத்தியில் மதிப்பிழக்கச் செய்யும் அருமையான வாய்ப்பு கிடைத்தும் அதைப்பயன்படுத்த முடியாமல் போன விரக்தியில் திரும்பினார், ஆனால் முயற்சியைக் கைவிடவில்லை…

வீசிச் சென்ற புயலில் தூக்கி வீசப்பட்டது போல் அந்த நிச்சயதார்த்த வீடு களை இழந்து காணப்பட்டது… ஆசை அருமை மகளின் நிச்சயதார்த்தம் நின்று போன விரக்தியில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார் திருச்சிற்றம்பலம்… அப்பொழுது அவருக்கு ஆதரவாக ஒரு கை அவர் தோளில் விழுந்தது…

அது வேறு யாருமல்ல சாட்சாத் ரகுநாதனே தான்…” நான் தான் அப்பவே சொன்னேன்ல, கேட்டியா திரு? நம்பின பெரிய மனுஷன் புத்திய காட்டிட்டான்ல, பார்த்தியா? மேடை வரைக்கும் வந்து உன் பொண்ணு நிச்சயதார்த்தம் அம்போனு விட்டுட்டு போயிட்டான். இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், என் பையனுக்கு உன் பொண்ணு கொடுத்து இருந்தா இந்த மாதிரி ஒரு அவமானம் உனக்கு வர விட்டு இருப்பேனா…?? இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல… எழுந்து வா, இன்னும் நமக்கு நேரம் இருக்கு, ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பூபதி குடும்பத்தை ஒரு வழி பண்ணலாம்…!!” என்றபடி திருச்சிற்றம்பலத்தை நோக்கி கையை நீட்ட, அதை கெட்டியாகப் பற்றிக் கொண்டவர் கண்களில் பழிவெறி மின்னியது…

இப்படியாக பூபதி குடும்பத்தை சனி, ராகு, கேது என கோளாறு செய்யும் கோல்மால் கிரகங்கள் அனைத்தும் கோலாகலமாக கிளம்பி இருக்க, சமாளிப்பார்களா பூபதியின் காளையர்கள்…?

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top