முகிலே!! உன் முகவரி என்ன-3

உதயத்தைக் காணும் பூமியைப் போல் எண்ணிலடங்கா பஞ்சாயத்துகளைப் பார்த்த பூபதி ஆஸ்தான மணிமண்டபம்… நீதியும், நேர்மையும், சத்தியமும், தருமமும் திசைக்குத் தூண்களாக நிற்க, அதன் மத்தியில் ஆயிரம் வழக்குகளைக் கண்ட சிங்க முக அரியசானம் பொன்னில் மிளிர்ந்தது…

செட்டு ரெடி..!! செம்பு ரெடி…!! அப்புறம் என்ன கூட்டுடா பஞ்சாயத்தை…?!

நீதி கேட்டு வந்தவள் இடம் நிற்க, நீதிக்குக் கட்டுப்பட்டு வலப்புரம் இரத்தினவேல் பூபதியின் பேரன் மகேந்திர பூபதி நின்றிருந்தான்… இவர்களுக்கு நடுநாயகமாக நீதிவானாக ரத்தினவேல் பூபதி சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்க… “தள்ளு தள்ளு..” என கூட்டத்தை விலக்கி முன்னே வந்தாள் அந்த ஊர் போஸ்ட் உமன் யது நந்தனி… அட, பஞ்சாயத்துக்கு போஸ்ட் மேன் ரொம்ப முக்கியம் இல்ல, அதான் ஈ… அப்புறம் என்ன, பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட வேண்டியது தான… (எல்லாம் எனக்காகத்தான் வெயிட்டிங்)

“நீ யாரு? உன் பேர் என்ன? உன் குற்றச்சாட்டு என்னன்னு தாராளமா இங்க சொல்லலாம். உனக்கான நீதி நிச்சயம் நியாயமான முறையில் கிடைக்கும். இத்தனை காலம் நீதி வழுவாது தீர்ப்பு சொல்லி வந்த என் முன்னோர்கள் மீது ஆணை! இங்க நீதிக்கு முன்னாடி சொந்த பந்தம், பாசம் எதுவும் கிடையாது. ம்ம்ம்… தாராளமா நீ சொல்லு!” என உரிய கம்பீரத்துடன் கேட்க…

அவரைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தவள்… “உங்க பேரன் ஒரு பொண்ணை ஏமாற்றி விட்டார், அதுக்கு நியாயம் கேட்டு வந்திருக்கேன்… கிடைக்குமா…?” என நக்கலாகக் கேட்க…

“ஏம்மா யாரு நீ? உன் பேர் என்ன? எந்த ஊரு? நீ உனக்கும் பூபதி ராஜா பேரனும் என்ன சம்பந்தம்? எப்படிப் பழக்கம்? அதெல்லாம் எதுவுமே சொல்லாம ஏமாத்திட்டாங்க… ஏமாத்திட்டாங்கன்னா எப்படி…?” என கூட்டத்தில் ஒரு பெரியவர் பாயிண்ட் பிடித்துக் கேட்க…

“ஐயா வணக்கம், என் பெயர் தென்றல்… எனக்கு அப்பா அம்மா கிடையாது… நான் படித்ததும் வளர்ந்ததும் எல்லாமே ஸ்காலர்ஷிப் மூலம்தான்… படிப்பை முடித்துவிட்டு பக்கத்து ஊருக்கு ட்ரைனிங் டீச்சராக வந்தேன்… அப்போ அங்க வந்த பூபதி ராஜாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மலர்ந்தது… அவர் காதல் தந்த நம்பிக்கையில் இருவரும் நெருங்கிப் பழகினோம்… நான் கர்ப்பமாகிவிட்டேன், உன்னை கடைசி வரை கை விடமாட்டேன் என்று சத்தியம் பண்ணிவிட்டுப் போனவர்… திரும்ப வரவே இல்லை… எத்தனையோ கடிதம் போட்டும் அதற்குப் பதில் இல்லை… கடைசியாக வேறு வழி இல்லாமல், குழந்தை பிறந்தது குறித்து அவர்தம் தாத்தா, அதாவது இந்த ஊர் பெரிய மனிதர் ரத்தினவேல் பூபதி ராஜாவுக்கே கடிதம் போட்டேன், அதற்கும் பதில் இல்லை; அதனால் நானே கிளம்பி வரவேண்டியதாகப் போய்விட்டது… நான் சொன்னது உண்மையா இல்லையா என்று கேளுங்கள்…!” என்றாள் திடமாக நின்று.

“அடடே ஆமாயா, நான் தான் அந்த லெட்டரை பெரிய வீட்டுக்கு கொண்டு போய் கொடுத்தேன்..!!” என போஸ்ட் உமன் கூற, ஊரே கடுப்புடன் நந்தினியை (ஏன் இந்த வேலை உனக்கு?) பார்த்துவிட்டு, உடனே ரத்தினவேல் பூபதியை பார்க்க, அவர் “ஆம்” என்று ஆமோதிப்பாக பதிலளித்தார்…

அந்தக் கடிதத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களுக்கு வரும் எத்தனையோ போலியான மிரட்டல்களைப் போல் சாதாரணமாகக் கடந்து விட்டது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று அப்போது வருந்தினார் ரத்தினவேல் பூபதி…

“என் குழந்தைக்குத் தகப்பன் பெயரோடு அதன் தகப்பன் உறவையும் கேட்டு வந்துருக்கேன், இந்த விளக்கம் போதுமா இல்லை இன்னும் விவரமா வேணுமா..??” என விவாகரமாக நீட்டி இழுத்தாள்.

என்ன பதில் சொல்ல இயலும் அவர்களால்… அவர்களின் அபிமான பூபதி ராஜா மீது பழி சுமத்தப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

“ஏம்மா நீ சொல்ற எல்லாத்தையும் நாங்க எப்படி நம்புறது…? அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? எங்க பெரியவர் மேல நீ பழி போட்டா நாங்க உடனே நம்பிடுவோமா? எங்களுக்குத் தெரியும் எங்க ஐயா வளர்ப்பைப் பற்றி…!!” என மக்கள் அவளை நம்பாமல் அவளுக்கு எதிராகவே நின்றனர்…

ஊரே அவளுக்கு எதிராக நிற்கும் போதெல்லாம் அவளை அத்தனை துணிச்சலுடன் அவர்களை எதிர்கொள்ள வைத்தது எது…? அது அவளிடம் இருக்கும் உண்மை மட்டுமே… உண்மைக்கு மட்டுமே எதையும் எதிர்கொள்ளும் திறம் உண்டு…

நடந்த சம்பவத்துக்குச் சாட்சியா நானும் ஆதாரத்துக்கு என் பிள்ளையும் இருக்கும்போது, இதுக்கு மேல வேற என்ன பெரிய ஆதாரம் வேணும் உங்களுக்கு…!!” எனத் திடமாகக் கூறினாள்…

“அது எப்படி மா..?” என ஒருவர் ஆரம்பிக்கும் முன்பே…

“யோவ், அதான் அந்தப் பொண்ணு இவ்வளவு சொல்லுது இல்லை… இன்னும் என்னயா வேணும் உங்களுக்கு…??” எனத் தென்றலுக்கு ஆதரவாக ஒரு குரல்… கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னே வந்தார் ரகுநாதன்… இவரைப் பற்றிப் பின்னாடி சொல்றேன்… (பின்னாடினா யார் பின்னாடினு என்னை மாதிரி மொக்கையா கேட்டு வைக்காதீங்க…) கதைக்கு போவோமா…?! இவருக்கும் ரத்தினவேல் பூபதி குடும்பத்துக்கும் ஏக பொருத்தம்… அந்தப் பாசத்துல தான் எங்கேயும் ரத்தினவேல் பூபதிக்கு எதிராகவே நிற்பார், இன்றும் அப்படியே…

“நெருப்பு இல்லாம புகை வராதுனு சும்மாவா சொல்லுவாங்க… என்னமோ இவர் பேரனை உத்தம சீலனா வளர்த்த மாதிரி அவ்ளோ சீன் போட்டார், இப்போ தெரிஞ்சிடுச்சு அவன் இலட்சணம்… இப்போ இதுக்கு ஊர் பெரியவர் என்ன சொல்லப் போறாரு? அந்தப் பொண்ணுக்கு என்ன நியாயம் கிடைக்குமா இல்ல அவர் பேரன்னு பார்த்து ஊத்தி மூடிடுவாரா..??” என கிடைத்தது பெரும் வாய்ப்பு என புகுந்து விளையாடினார்…

“எந்தப் ***பயல் பத்தவச்சதுக்கு இங்க வந்து புகைதுனு தெரியாம என்னனு தீர்ப்பு சொல்லனுமாம்” என கேட்டபடி கூட்டத்தை தன் பராக்கிரம தேகத்தால் சிறியதாக்கிக் கொண்டு உள்ளே வந்தான் அவன்…?? அந்த திமிருப்பிடித்த வண்டிகாரன் அவள் பார்வையில்… அவர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியவன் ஆயிற்றே… இவன் ஏன் இங்கே…?? என அவள் சிந்தித்துக் கொண்டு இருக்கையிலே அவள் அருகில் வந்து நின்றான்…

“ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துகிட்டு ஊர கெடுக்க வந்து இருக்கியா? இன்னும் எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பி இருக்கீங்க? கூட்டா சேர்ந்து களவாணித்தனம் பண்றதுக்கு சப்போர்ட் வேற… இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்…!!” என கடுஞ்சினத்துடன் வந்தன வார்த்தைகள்…

“வார்த்தையைப் பார்த்து பேசுங்க, இங்க யாரும் பணத்துக்காக யாரையும் ஏமாத்த வரல.. நடந்தத சொல்ல எனக்கு யாரோட தயவும் தேவையில்லை, எனக்கு நீதி மேல நம்பிக்கை இருக்கு…!!” என்றாள் வெட்டிப் பார்த்த பார்வையாள தான் பா…

“ஏமாற்றுக்காரர்கள் வாயிலிருந்து எல்லாம் நீதி நேர்மைனு வார்த்தைகள் கேக்குறதுக்கே நாராசமா இருக்கு…!!” என கடித்துத் துப்பினான் அந்த வார்த்தையைத் தான் பா…

“நாங்க யாரை ஏமாத்த வரல, இங்க எல்லாத்தையும் ஏமாந்துட்டு நிக்கிறது நாங்கதான். அதுக்குத்தான் நியாயம் தேடி வந்து இருக்கோம்…!” என இவளும் பதில் கொடுக்க, என இருவருக்கும் இடையே விவாதம் காரசாரமாக நடைபெற்றது…

“நாங்க எப்படி நம்புறது…?” வண்டிக்காரன்

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…!!” தென்றல்

“அப்போ நிரூபிச்சு காட்டு…??” வண்டிக்காரன்

“இதோ…!!” என வேகமாகக் கைப்பையைத் திறந்து அதில் துழாவி கையில் எடுத்தாள்; அந்தத் தங்கச் சங்கிலியை அனைவருக்கும் காட்டினாள்…

வண்டிக்காரன் முதல் ரத்தினவேல் பூபதி உள்பட அனைவரும் திகைத்து நிற்கக் காரணம், அது பூபதி குடும்பத்து பரம்பரைச் சங்கிலி என நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை…

உறைந்து நின்ற கூட்டத்தில் முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட ரத்தினவேல் பூபதி…

ஒரு கையில் குழந்தையை, மறு கையில் பரம்பரை தங்கச் சங்கிலியுடன் நீதி தேவதை போல் நிற்பவளுக்கு நீதி அளிக்க மறுக்க இதற்கு மேல் வேறு காரணம் இருக்க முடியுமா…??

“இங்க பாருமா, இங்க எல்லாரும் நான் உட்பட நியாயத்திற்கு உட்பட்டவர்கள்தான். உன்னை ஏமாற்றியவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. சொல்லு, உன்னை ஏமாற்றியது யார்…??” என குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்க தனக்குள்ளே பெரும் போராட்டத்தைப் பட்டார்…

“இதுல என்ன கேள்வி? உங்க பேரன் தான்…?” என கேலியாகக் கூறினாள்…

“ஏம்மா, நீ என்ன சொல்ற? ஐயாவுக்கு இருக்குறது மொத்தம் மூணு பேரனுங்க, அதுல நீ யாரை சொல்றனு கேக்குறாரு…??” என ஊர் தலைக்கட்டில் நடுவர் கூற…

தென்றல் அவரை விளங்காது நோக்கிட…

“நல்லுவர் மகேந்திர பூபதியாவா…?” என நிச்சயம் நிறுத்தப்பட்டவனை கை காண்பித்தார்… “இல்ல, சின்னவர் விரேந்திர பூபதியாவா?” என கேட்க, அந்தத் திமிர் பிடித்த வண்டிக்காரனுடன் நின்று கொண்டிருந்த இளம் வயது காளை போன்ற திடகாத்திரமான ஒருவன் வந்து முன்னால் நின்றான்… “இல்ல, எங்க பெரியவர் விஜயேந்திர பூபதியாவா?” என அவர்கள் கை காட்டியவனை கண்டவள், திகைப்பால் மிதித்தது போன்ற உணர்வுற்றாள்… காரணம், பெரியவரின் மூத்த பேரனாக முன்னால் வந்து அவளைத் துளைக்கும் பார்வையுடன் நின்று கொண்டிருப்பது அவன்தான்… அந்தத் திமிர் பிடித்த வண்டிக்காரனே தான்…

அவள் போட்டு வைத்த

கணக்கோ ஒன்று…

காத்திருந்த புதிரோ மூன்று…

விடுகதையின் விடை தான் என்ன…??

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top